privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதிருச்சி நகரெங்கும் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

திருச்சி நகரெங்கும் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

-

வம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழாவையும், சீன கலாச்சார புரட்சியின் 50-ம் ஆண்டையும், நக்சல்பாரி புரட்சியின் 50-ம் ஆண்டையும், ஆசான் மார்க்ஸின் 200-வது ஆண்டு துவக்கத்தையும் நினைவுகூறும் வகையில் திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம்,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,பெண்கள் விடுதலை முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து சிறப்பாக கொண்டாடினர்.

Gandhi puram trichy nov 7 (1)Gandhi puram trichy nov 7 (1)

பு.ஜ.தொ.மு:

பாய்லர் ப்ளாண்ட் ஒர்க்கஸ் யூனியனின் சார்பாக நவம்பர்  புரட்சி  நூற்றாண்டு விழா வாயிற்கூட்டம்  BHEL – UNIT-2  பகுதியில் 04.11.2016 மாலை 4 மணிக்கு துவங்கியது. பு.ஜ.தொ.முவின் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் மாநில பொதுச்செயலர் தோழர். K.சுந்தரராசு அவர்கள் தலைமை ஏற்றுப் பேசினார். “நவம்பர்-சோசலிசபுரட்சி தொழிலாளி வர்க்கம், அடிமைப்பட்டு, சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாள். இந்தியா விடுதலை பெறவேண்டுமானால் அத்தகையதொரு புரட்சியை  நாம் இங்கு நடத்த உறுதியேற்க வேண்டும்” எனக் கூறினார்.

அடுத்து  பேசிய ம.க.இ.கவின் மாநில இணைசெயலாளர் தோழர்.காளியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கம்யூனிசம் தோற்றுவிட்டது, ரசியா ஒரு இரும்புத்திரை நாடு என்ற அவதூறு-மோசடிக்கு பதிலளித்தார். ரசியாவை பற்றி பெரியார், N.S.கிருஷ்ணன் போன்றோரின் அனுபவங்களிலிருந்து உண்மையை விளக்கினார்.500 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு கரவொலி எழுப்பி சிறப்பித்தனர். செயற்குழு உறுப்பினர்  தோழர்.ஜேக்கப் தனபால் அவர்கள் நன்றியுரை வழங்கினார். 5/11/2016 அன்று தொழிற்சாலை வாயில்களில் 3500 பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

7/11/2016 காலை 7:30 மணியளவில் HRDC அருகில் நமது கொடியேற்று விழா நடந்தது. தலைமை தோழர்.சுந்தரராசு கொடியேற்றி  வைத்தார்.பொருளாளர் தோழர்.K.இராமசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

பு.ஜ.தொ.மு ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சர்பாக நவம்பர் தினத்தன்று காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பல்வேறு கிளைகளில் கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் சங்கத்தின் சிறப்பு தலைவர் தர்மராஜ், தோழமை புரட்சிகர அமைப்பு தோழர்களான BPWU நிர்வாகிகள் சுந்தரராஜ், நாராயணசாமி, இராமசாமி, ம.க.இ.க மையக் கலைக்குழு பாடகர் தோழர்.கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆ.ஓ.பா.ச மாவட்ட தலைவர் தோழர்.கோபி, மாவட்ட செயலர் தோழர்.மணலி மாவட்ட பொருளாளர் தோழர்.செல்வராசு மற்றும் துணை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ம.க.இ.க:

முதல் நாளே பகுதியில் தோரணம் கட்டுவது,தட்டிகள் வைப்பது,கொடிகட்டுவது,நாடகம் பாடல் பயிற்சி என தோழர்கள் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் நவம்பர்-7 காலை 10மணிக்கு திருச்சி தில்லைநகர் காந்திபுரம் ம.க.இ.க அலுவலகம் அருகில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை ம.க.இ.கவின் தோழர்.சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட செயலர் தோழர்.ஜீவா கொடி ஏற்றிவைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.சத்யா அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மத்திய பேருந்து நிலையத்தில் ம.க.இ.க- பு.மா.இ.மு- பு.ஜ.தொ.மு- பெ.வி.மு போன்ற அமைப்புகளின் சார்பாக காலை 11:30 மணியளவில் பறை முழக்கத்துடன் மார்க்சிய ஆசான்களின் பதாகைகளை உயர்த்து பிடித்தும் நூற்றுக்கணக்கில் மக்களிடம் இனிப்பு வழங்கியும், பிரசுரங்கள் விநியோகித்தும், முழக்கமிட்டும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

போட்டிகள்:

Nov -7 Trichy (6)இதனை தொடர்ந்து அன்று மதியம் 3 மணியளவில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட கலச்சாரப் போட்டிகள் சண்முகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நவம்பர் புரட்சிக்கு தோழர்களின் குழந்தைகள் விடுமுறை எடுத்துக் கொண்டு குடும்பதுடன் போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொண்டனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இசை நாற்காலி போட்டியில் கலந்துகொண்டனர். வயதான தோழர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நவம்பர் புரட்சி தின விழா:

மாலை 6:30 மணிக்கு துவங்கிய நவம்பர் புரட்சி தின அரங்கு கூட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலாளர் தொழர் ஜீவா அவர்கள் தலைமை தாங்கினார். அவரது உரையில் “இம்முறை மார்க்சிய ஆசான் காரல் மார்க்சின் 200 வது பிறந்த ஆண்டு, ரசியபுரட்சியின் 100 வது ஆண்டு துவக்கம், சீனக்கலாச்சாரப் புரட்சி மற்றும் உழுபவனுக்கே நிலம் சொந்தமென ஆக்கிய நக்சல்பாரி புரட்சியின் 50 வது ஆண்டு என நான்கு நிகழ்வுகளை ஒட்டி இந்நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அனைவரும் இதை நெஞ்சில் ஏந்தி உணர்வோடு புரட்சிக்காக பணிசெய்யவே இந்நிகழ்வு” என கூறினார்.

அடுத்து பேசிய பு.ஜ.தொ.மு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலர் தோழர் சுந்தரராஜ் அவர்கள் “பஞ்சை பராரிகளாய் தொழிலாளி வர்க்கம், கார்ப்ரேட் முதலாளிகளின் கையில் மோடி” என்ற தலைப்பில் உறையாற்றினார். அவர் “சாதி, மத ரீதியாக பிளவுபட்டு கிடக்கும் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டி போரட வேண்டியது மிக அவசரம். கொலைகார மோடி பிரதமராக இருப்பதும் இங்குதான். ரசிய புரட்சியின் நூற்றாண்டை கொண்டாட்டமாக நடத்தும் இந்த வேளையில் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒன்றுபட்ட கம்யூனிச கட்சியை இந்திய அளவில் நிறுவிக்கொள்ள முடியாத நிலை இன்னும் நீடிக்கிறது. நவீன கொத்தடிமைகளாய் தொழிலாளி வர்க்கம் தவிக்கும் வேலையில், வல்லரசு கனவில் கார்ப்ரேட்களின் கைக்கூலியாக இருக்கின்ற மோடி அரசை வீழ்த்த வேண்டுமானால் ஒன்றுபட்ட கட்சியை உருவாக்கி மக்கள் அதிகாரத்தை படைக்கவேண்டும்” என பேசினார்.

அடுத்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர்.விக்கி அவர்கள் “புதிய கல்விக் கொள்கையையும் காவி பயங்கர வாதமும்” என்ற தலைப்பில் பேசினார். அவர் “இப்போது உள்ள கல்விமுறையில் மனப்பாட கல்வி முறை படித்த குமாஸ்தாக்களை உருவாக்குகிறது. பண்டைய காலத்தில் வேதக்கல்வியான குலக் கல்விமுறை மனுதர்ம அடிப்படையில் இருந்தது. பலருக்கும் கல்வி மறுக்கப்பட்டு பார்ப்பனர்கள் மட்டுமே படித்தனர். மோடி அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி மாணவர்களை கொத்தடிமைகளாக மாற்றி கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு கல்வியை திறந்துவிடுகிறது” என பேசினார்.

திருச்சி நவ 7 (10)அடுத்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கவிஞர் தோழர்.துரை-சண்முகம் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் “புரட்சியின் தருணங்கள் வலிகள் நிறைந்தது. தாயின் பிரசவகால வலியை போல கடுமையானது. 1917 புரட்சி முடிந்து சோசலிச ரசியாவில் புதிய சமூகம் பிறந்ததைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட தலைவன் தோழர்.லெனின்”. அதேபோல் “பெண்களுக்கான சமத்துவத்தை ஏற்படுத்தி வீட்டுக்கு வீடு சமையற்கூடங்கள் என்பதை ஒழித்து பொது சமையற்கூடங்களை உருவாக்கி 40,000 பேருக்கு 900 பேர் சமையல் செய்தது சாதனை, வளர்ச்சியின் புதிய வடிவம். அதுதான் பெண்களின் குடும்ப முறையிலான அடிமை உழைப்பை ஒழித்து சமூக உழைப்பிற்கு வழிகாட்டியது” என்றார். மேலும் “சோசலிச ரசியாவை நேரில் பார்த்த பிற நாட்டுத் தலைவர்கள் அதன் அசாத்தியமான வளர்ச்சியையும், பண்பாட்டு நெறியையும் கண்டு வியந்தோதும் போது, முதலாளித்துவ ஒநாய்களோ இரும்பு திரை கொண்ட நாடு என அவதூறு பரப்பி கூச்சலிட்டார்கள்” என முதலாளித்துவத்தை எள்ளி நகையாடினார்.

அடுத்ததாக, பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் நாடகம் நடத்தினர். அதில் பெண்கள் அமைப்பாக திரள வேண்டும், சமூகத்தில் நடக்கும் அநியாங்களை கண்டு ஒதுங்கி போகாமல், எதிர்த்து போராட வேண்டும் என்பதை உணரவைத்தார்கள். வந்த பல தோழர்களுக்கு குடும்பத்தை அமைப்பு நிகழ்ச்சிகளுக்கும், போரட்டத்திற்கும் அழைத்து வரவேண்டும் என்பதை உணர்த்தியது.

கலைநிகழ்சிகள்:

திருச்சி நவ 7 (13)ம.க.இ.க தோழர்கள் பாடிய நான் உலகம் தொழிலாளி நானே உலகம் பாடலும் புதிதாக தயாரித்த செத்தவனெல்லாம் உத்தமனில்ல இந்து முன்னணியிலே என்ற பாடல் BJP-RSS ன் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் அமைந்தது மேலும்  ’சத்தான மாட்டுக்கறி சுவையான மாட்டுகறி’ என்ற புதிய பாடல் அனைவரையும் பாடவைத்தது. பார்ப்பனிய தீண்டாமைக்கு எதிராக அனைவரும் மாட்டுகறி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் நடத்திய நாடகம் ‘மாணவன் லெனினின்’ மரணத்தை மையக்கருவாக கொண்டிருந்தது. சமூக பிரச்சினைகள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் முதலாளித்துவத்தின் நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி இருக்கக்கூடிய மாணவர்கள் தங்களுக்கான பிரச்சினைகளாக அது வெடிக்கும்போது எதிகொள்ள முடியாமல் தற்கொலை முடிவிற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை விளக்கி நடத்தப்பட்டது. இதற்கு தீர்வு மாணவர்கள் புரட்சிகர அமைப்புகளில் அணி திரள்வதுதான் என உணர்த்தப்பட்டது. லெனினின் மரணக்காட்சி பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இறுதியாக கலாச்சார போட்டிகளில் பங்குகொண்ட, வெற்றி பெற்ற தோழர்கள், குழந்தைகள் அனைவருக்கும் முன்னணி தோழர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினர்.

பெண்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட தலைவர் தோழர்.நிர்மலா நன்றியுரை வழங்கினார்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க