Tuesday, May 11, 2021
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் பா.ஜ.க. வழங்கும் ''தேசியக் கொடிக்கு மரியாதை!''

பா.ஜ.க. வழங்கும் ”தேசியக் கொடிக்கு மரியாதை!”

-

ந்து மதவெறிக் கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட முகம்மது அக்லக் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதக் குற்றவாளிகளுள் ஒருவனான ரவி சிசோடியா, கடந்த அக்டோபர் மாதம் சீறுநீரகக் கோளாறு காரணமாகச் சிறையிலேயே இறந்து போனான். கட்சிக்காரன் இறந்து போனால், அவனது உடல் மீது கட்சிக் கொடியைப் போர்த்துவதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இந்து மதவெறிக் கும்பலோ கிரிமினல் குற்றவாளியான சிசோடியா உடலின் மீது தேசியக் கொடியைப் போர்த்தி, அவனைத் தேசத் தியாகி போலக் கௌரவப்படுத்தி அடக்கம் செய்திருக்கிறது.

உ.பி. மாநிலம், தாத்ரி மாவட்டத்திலுள்ள பெசாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக் படுகொலை வழக்கு பத்தோடு பதினொன்றைப் போல சாதாரண வழக்கு அல்ல. மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் முன்னெடுத்துவரும் பசு பாதுகாப்பு என்ற இந்து பயங்கரவாதத் திட்டத்தின் அங்கமாக நடத்தப்பட்ட படுகொலை அது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளும் கணக்குக் காட்டுவதற்காகச் சிறையில் தள்ளப்பட்டவர்கள் அல்ல. அக்குற்றவாளிகள் அனைவரும்முகம்மது அக்லக் குடும்பத்தினரால் அடையாளங்காட்டப்பட்டவர்கள்.

தேசியக் கொடி போர்த்தப்பட்எட நிலையில் ரவி சிசோடியாவின் சடலம். (உள்படம்) ரவி சிசோடியா.
தேசியக் கொடி போர்த்தப்பட்எட நிலையில் ரவி சிசோடியாவின் சடலம். (உள்படம்) ரவி சிசோடியா.

சிறையில் விசாரணைக் கைதிகள் இறந்து போவதும், அம்மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் பரவலாக நடந்து வருகிறது என்றாலும், இறந்து போகும் கைதிகள் தியாகியாகச் சித்தரிக்கப்படுவதில்லை. ஆனால், அசாதாரணமான சூழ்நிலையில் இறந்துபோகும் தனது கட்சிக்காரர்களைத் தியாகியாகச் சித்தரித்து, பொதுமக்களை அச்சுறுத்தக்கூடிய கலவரங்களையும் ரவுடித்தனங்களையும் நடத்துவதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.

கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார், பா.ஜ.க. மருத்துவ அணிச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடி நகர பா.ஜ.க. செயலர் முருகன், விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த சூரி உள்ளிட்ட பலர் கந்துவட்டி, ரியல் எஸ்டேட், பெண் விவகாரம் என ஏதோவொரு காரணத்தால் கொல்லப்பட்டிருப்பதை மறைத்து, அவர்களைத் தியாகியாக்கி கலவரங்களை நடத்தியதைத் தமிழகமும் கண்டிருக்கிறது.

ரவி சிசோடியா விவகாரத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், அவனது மரணத்திற்கு உ.பி. மாநில அரசு நட்ட ஈடு தரவேண்டும்எனக் கோரியதோடு, சிசோடியாவின் சடலத்தை உடனடியாக அடக்கம் செய்யாமல் போட்டு வைத்திருந்து, பதட்டச் சூழ்நிலையை உருவாக்கி, உ.பி. மாநில அரசைப் பணிய வைத்தது.

உ.பி. மாநில அரசு இந்து மதவெறிக் கும்பலின் மிரட்டலுக்குப் பணிந்து ரவி சிசோடியாவின் குடும்பத்திற்கு 20 இலட்ச ரூபாய் நட்ட ஈடு அளித்தது. மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா, உ.பி. மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் உள்ளிட்டோர் சிசோடியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். “சிசோடியாவின் மரணத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவோம்” என இந்து மதவெறிக் கும்பல் முழக்கமிட, தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட சிசோடியாவின் உடல், மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் வழியாக தேசபக்தி என்பதற்குப் புதிய பொருளைக் கற்பித்திருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

ரவி சிசோடியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மோடி அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா.
ரவி சிசோடியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மோடி அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா.

இந்திய தேசியக் கொடியைப் புனிதப் பசுவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதிலும், அதனின் புனிதத்தை மீறுவது மன்னிக்க முடியாத குற்றமாகஊருக்கு உபதேசிப்பதிலும்மற்ற கட்சிகளைவிட, இந்து மதவெறிக் கும்பல்தான் முந்திக் கொண்டு நிற்கும். இப்படி ஊருக்குப் பொருத்தப்படும் நியாயம் தனக்குப் பொருந்தாது என்பதை கிரிமினல் குற்றவாளி சிசோடியாவின் உடல் மீது தேசியக் கொடியைப் போர்த்திக் காட்டியிருக்கிறது, அக்கும்பல்.

சிசோடியாவைத் தியாகியாகச் சித்தரிப்பதன் வழியாக, உ.பி.யில் முகம்மது அக்லக்கைப் படுகொலை செய்தது; குஜராத் மாநிலம், உனாவில் பசுவைக் கொன்று அதன் தோலை உரித்தார்கள் எனப் பழிபோட்டுத் தாழ்த்தப்பட்டோரைத் தாக்கியது; அரியானாவில் மாட்டுக் கறியைச் சாப்பிட்டதாக ஊதிவிட்டு, ஒரு ஏழை முசுலீமின் வீடு புகுந்து, அவரது குடும்பத்தாரைக் கொலைவெறியோடு தாக்கி, அக்குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்தது எனத் தொடரும்  சட்டவிரோத அட்டூழியங்கள் அனைத்தையும் நாட்டிற்குத் தேவையான நியாயமான நடவடிக்கைகள் எனக் காட்டிவிட முயலுகிறது, ஆர்.எஸ்.எஸ்.

தனதுஇந்துமதவெறி பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்தையும் தேசியத்தோடு முடிச்சுப்போடுவது ஆர்.எஸ்.எஸ்.-க்குக் கைவந்த கலை. பாபர்மசூதியைத் தரைமட்டமாக்கிய குற்றத்தை, தேசிய அவமானச் சின்னத்தை இடித்துத்தள்ளியதாக நியாயப்படுத்தியது. குஜராத்தில் நடந்த போலி மோதல் கொலைகள் அனைத்தும் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட முசுலீம் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசபக்த நடவடிக்கைகளாகச் சித்தரிக்கப்பட்டன.

சோராபுதீன் போலி மோதல் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமித் ஷா விடுவிக்கப்பட்டு, தேசியத் தலைவராக்கப்பட்டார். குஜராத்தில் போலி மோதல் கொலைகளை நடத்திய போலீசு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அதிகாரமிக்க பதவிகளில் மீண்டும் அமர்த்தப்பட்டனர். உ.பி. முசாஃபர் நகர் கலவரத்திற்குத் தலைமை தாங்கிய மகேஷ் ஷர்மா கலாச்சாரத் துறை அமைச்சர்; சங்கீத் சோம் உ.பி. சட்டமன்ற உறுப்பினர். ரவி சிசோடியாவின் உடலுக்குத் தேசியக் கொடி.

குஜராத் மாநிலம் உனாவில் இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்.
குஜராத் மாநிலம் உனாவில் இந்து மதவெறிக் கும்பலால் தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்.

அக்லக் படுகொலை வழக்கும்கூட இந்து மதவெறிக் கும்பலுக்குச் சாதகமாக வளைக்கப்படுகிறது. அக்லக் படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அவர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கறியைப் பரிசோதித்து, அது ஆட்டுக் கறிதான் என விரிவான ஆய்வறிக்கையை அளித்தது, தாத்ரியில் உள்ள ஆய்வகம். ஆனால், இந்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டு, மதுராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, அந்தக் கறி மாட்டுக் கறி என எந்தவிதமான ஆதாரமும் இன்றி ஒற்றை வரி அறிக்கையைப் பெற்றிருக்கிறது, உ.பி. மாநில சமாஜ்வாதி அரசு. இதன் அடிப்படையில் அக்லக் குடும்பத்தினர் மீது பசுவதைத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென உ.பி. மாநில போலீசு வாதாடியதை ஏற்றுக்கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதியுமாறு உத்தரவிட்டிருக்கிறது, உ.பி. கீழமை நீதிமன்றம்.

தன்னை மதச்சார்பற்ற கட்சியாகக் கூறிக்கொள்ளும் சமாஜ்வாதிக் கட்சி ஆட்சியின் இலட்சணமே இப்படி இருக்கும்பொழுது, உ.பி.யில் பா.ஜ.க. அதிகாரத்தில் இருந்திருந்தால், சிசோடியாவை அரசு மரியாதையோடு அடக்கம் செய்திருப்பார்கள்.

அக்லக் குடும்பத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை அம்பலப்படுத்தியும் கண்டித்தும் உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்குக் கடிதம் எழுதினார், உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு. அதன் பிறகும்கூட அக்லக் குடும்பம் பழி வாங்கப்படும் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் தலையிடவில்லை. இந்து மதவெறியின் சோதனைச் சாலையாக உள்ள குஜராத்தான் இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் எனச் சான்றளிக்கிறார், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தாக்கூர். இப்படி பொது அறம், நீதிக்கு எதிராகப் பேசும் நீதிபதிகள் இருக்கையில், அக்லக் குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும் என நம்புவது மூடநம்பிக்கையைவிடக் கேடானது.

இந்து மதவெறிக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட முகம்மது அக்லக் (இடது) மற்றும் அக்கொலை வழக்கு இந்து மதவெறிக் கும்பலுக்குச் சாதகமாக நடத்தப்படுவதை அம்பலப்படுத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு
இந்து மதவெறிக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட முகம்மது அக்லக் (இடது) மற்றும் அக்கொலை வழக்கு இந்து மதவெறிக் கும்பலுக்குச் சாதகமாக நடத்தப்படுவதை அம்பலப்படுத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு, போலீசால் சோடிக்கப்பட்ட தீவிரவாத வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, பத்து பதினைந்து ஆண்டுகள் சிறையில் கழிந்த நிலையில், நீதிமன்றங்களால் சாவகாசமாக நிரபராதிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அப்படியான நிரபராதிகளுக்கு, அவர்கள் முசுலீம்கள் என்பதாலேயே உரிய நட்ட ஈடு வழங்க அரசும், நீதிமன்றங்களும் மறுத்து வருகின்றன. அப்படி வழங்கினால், போலீசின் செயல்திறன் வீழ்ந்து போகும் என அநியாயமாகச் சப்பைக் கட்டுகின்றன. ஆனால், அக்லக் படுகொலை வழக்கிலிருந்து ரவி சிசோடியா விடுவிக்கப்படும் முன்பே, அவனது குடும்பத்திற்கு இருபது இலட்ச ரூபாய் நட்ட ஈடாக அரசால் வழங்கப்படுகிறது.

ravi-sisodia-caption-1“தேசம், தேசியக் கொடி, தேசிய ஒருமைப்பாடு, தேச பக்தி” என்றாலே சாமியாடும் நிலைக்குச் சென்றுவிடும் நடுத்தர வர்க்கம், இவையெல்லாம் நாட்டின் நலன், வளர்ச்சி, பாதுகாப்போடு சம்பந்தப்பட்டவையாகக் கற்பிதம் செய்து வைத்திருக்கிறது. ஆனால்,தேச பக்திக்கு அத்தாரிட்டியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலோ, இந்து மதவெறியே தேச பக்தி, இந்திய தேசியம் என்பதே இந்து தேசியம்தான் எனக் காட்டுகிறது. அந்த வகையில் இந்திய தேசியக் கொடி தனக்கு உரிய இடத்தில் – சிசோடியாவின் உடல் மீது போர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது யாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்த வேண்டுமோ, அவர்கள், வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

– குப்பன்
___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க