Tuesday, February 25, 2020
முகப்பு கட்சிகள் பா.ஜ.க கடன் வாங்கிய விவசாயிகளை இழிவுபடுத்தும் அதானிகளின் அரசு !

கடன் வாங்கிய விவசாயிகளை இழிவுபடுத்தும் அதானிகளின் அரசு !

-

வாங்கியக் கடனைக் கட்டாததால் உத்திரப்பிரதேசம், சித்ரகூட் மாவட்டத்தின் மணிக்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏழை விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி வங்கி மற்றும் வட்டாட்சி நிர்வாகங்கள் அவமானப்படுத்தியிருக்கின்றன. வறட்சியும், கடனும், ஏழ்மையும் விவசாயிகளை சுழற்றியடித்துத் துன்பத்தில் ஆழ்த்துகின்ற அதே நேரத்தில் இந்த இழி செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்கிறது.

up-farmer
நான் என்ன செய்தேன்? திருடினேனா? இல்லை, ஏமாற்றினேனா? நான் செய்தது நேர்மையாக தொழில் செய்யலாம் என்று கடன் வாங்கியது தான் என்கிறார்.

மணிக்பூர் கிராமம் இருக்கும் பண்டல்கண்ட் பகுதி உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 மாவட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது.

2003-லிருந்து வறட்சியின் கொடுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் கொந்தளிப்பான சூழலில், வங்கிகள் கடன் வசூலிப்பதை நிறுத்தச் சொல்லி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உ.பி அரசு விவசாயிகளிடம் கடன் வசூல் செய்வதைத் தடைச் செய்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியும் கடனாளிகளின் புகைப்படங்களைப் பொதுவிடத்தில் வெளியிடுவதை நிறுத்தச் சொல்லி வங்கிகளுக்கு சுற்றறிக்கை அளித்திருந்தது.

மத்தியப்பிரதேசத்தில் வரும் 2017-ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதையொட்டி பா.ஜ.க, காங்கிரசு, சமாஜ்வாடிக் கட்சிகள் கடந்த 10 மாதங்களாக கடனைப் பற்றியும், சாதகமான திட்டங்களைப் பற்றியும் பண்டல் கண்ட் பகுதி விவசாயிகளிடம் விதவிதமான வெற்று சவடால்களை அள்ளிவீசத் தொடங்கிவிட்டன.

ஆனால் தொடர்ச்சியான வறட்சியால், போட்ட முட்டூலியைக் (விவசாயத்தின் அடக்கச் செலவு) கூட எடுக்கவியலாமல் அப்பகுதி விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் கடன் சுமையானது ஆண்டாண்டுக்கும் அதிகரிக்கிறது. “ஒட்டுமொத்த மாநிலத்தின் 45%  கடன்சுமையை ஒப்பிடும் போது பண்டல்கண்ட் பகுதி விவசாயிகளின் கடன்சுமை 80%” இருப்பதாக பண்டல்கன்ட் விவசாய சங்கத் தலைவரான அணில் பிரதான் கூறுகிறார்.

‘’2015-ல் வழங்கப்பட்ட 818 கோடி ரூபாய் கடனில் 664 கோடி நிலுவையில் இருப்பதாக’’ சித்ரகூட் மாவட்ட வங்கிகளின் கடன் திட்டங்களை நிர்வகிக்கும் மேலாளரான அபிநந்தன் மிஸ்ரா கூறுகிறார். அதே நேரத்தில் தரகு முதலாளி அதானி பொதுத்துறை வங்கிகளிடம் பெற்றக் கடன் தொகையான 72,000 கோடி ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் கடன் தொகைக்குச் சமமாகும்.

நய சந்திரா கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான விவசாயி ராம் லோச்சனின் பெயர் அந்த சுவரில் இரண்டு ஆண்டுகளாக இருக்கிறது. மணிக்பூர் அலகாபாத் வங்கியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டருக்காக அவர் வாங்கிருந்த 2.5 இலட்சம் கடன் இன்று 4 இலட்சத்து 90 ஆயிரமாக ஆகிவிட்டது. வறட்சி மட்டுமல்ல கடுமையான மழையும் அவரது பயிர்களை ஆகஸ்டு மாதத்தில் நாசம் செய்துவிட்டது. வேறு வழியில்லாமல் அவரது இரண்டு மகன்கள் விவசாயத்தையும் தந்தையையம் விட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.

வாங்கியக் கடனைக் கட்டாததால் உத்திரப்பிரதேசம், சித்ரகூட் மாவட்டத்தின் மணிக்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏழை விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி அவமானப்படுத்தியுள்ளனர்
வாங்கியக் கடனைக் கட்டாததால் உத்திரப்பிரதேசம், சித்ரகூட் மாவட்டத்தின் மணிக்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏழை விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி அவமானப்படுத்தியுள்ளனர்

ராம் லோச்சனின் மூன்றாவது மகனான ஜகத்பால் தந்தையின் 5.6 ஏக்கர் நிலத்துடன் அவரது கடனையும் உரிமையாகப் பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டில் ஒருநாள் வீட்டையும் டிராக்டரையும் பறிமுதல் செய்யப் போவதாகக் கடன் வசூலிப்பவர்கள் மிரட்டியிருக்கின்றனர். சுவரில் எங்களது பெயர் எழுதப்பட்ட நாளிலிருந்து கடனுடன் அவப்பெயரையும் சேர்த்துச் சுமக்கிறோம் என்று குமுறுகிறார் ஜகத்பால். ஆனால் அதே இந்திய ஜனநாயகம் தான் சுற்றுச்சூழலை நாசம் செய்ததற்காக அதானிக்கு விதிக்கப்பட்ட 200 கோடி அபராதத்தைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி லோச்சன் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேருக்கு ஒரே குடும்ப அட்டை தான் வழங்கப்பட்டிருக்கிறது. எதை நாங்கள் சாப்பிடுவது?. “சில நேரங்களில் உப்பையும் ரொட்டியையும் சாப்பிடுகிறோம், பல நேரங்களில் அதுவும் இல்லை” என்கிறார் லோக்சன்.

ஏற்கனவே பசியால் துடித்துக் கொண்டிருக்கு ஜகத்பால் போன்ற ஏழைகளை, பழைய ரூவாய் நோட்டுக்களைச் செல்லாதாக்கியதன் மூலம் கிட்டத்தட்ட முடக்இ போட்டுவிட்டார் திருவாளர் மோடி. இதுதான் நாட்டின் வளர்ச்சிக்கான தியாகமென கூறுகிறார்.

அணில்குமாருக்கு அந்தச் சுவரில் மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் டிராக்டர் வாங்குவதற்காக வாங்கியக் கடன் 3 இலட்சம், தற்போது 6.1 இலட்சமாக எகிறிவிட்டது. எப்படிக் கடன் அதிகமானது என்பது அவருக்குத் தெரியவில்லை. கடனை வாங்கும் போது 9 % ஆக இருந்த வட்டிவீதம் தற்போது 14% ஆகிவிட்டது என்கிறார் அவர்.

ஆனால் அம்பானி கட்ட வேண்டிய 8299 கோடி வட்டியைக் கூட வங்கிகள் கேட்பதில்லை அல்லது கேட்க முடியாது. மாறாக அம்பானிக்கான புதியக் கடனில் அதைக் கழித்துக் கொள்கிறது அரசு.

2014 -ல் இன்டியாஸ்பென்டின் ஆய்வின்படி ஒரு பண்டல்கான்ட் விவசாயி வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடன் நான்கே ஆண்டுகளில் 18,704 ரூபாயாக அதிகரித்துவிடுகிறது. முதல் ஆறு மாதங்களில் 4 விழுக்காடாக இருந்த வட்டிவீதம் சில ஆண்டுகளில் 22 விழுக்காடாக எகிறி வீட்டுக்கடனை விடக் கொடுமையானதாக மாறிவிட்டது.

எள் அறுவடைக்குப் பிறகு கடனைக் கட்டிவிடலாம் என்ற அவரது கனவு, விளைச்சல் பொய்த்து விட்டதால் நொறுங்கிவிட்டது. கடனாக வாங்கிய டிராக்டரும் துன்பத்தைத் தவிர வேறேதும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவரது டிராக்டரைப் போலீஸ் பலமுறைப் பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் ஒரு வழிபறிக் கொள்ளைக்காரனைப் போல அவர் மீது வழக்குப் போட்டுள்ளது. சொத்தைப் பறிமுதல் செய்துச் சிறையில் தள்ளிவிடுவோம் என்ற மிரட்டலால் பயந்து போன அனில்குமார் அலகாபாத் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியிருக்கிறார். பொதுத்துறை வங்கிகளின் 9000 கோடியை ஏப்பம் விட்ட மல்லையாவைப் பிடிக்க வக்கில்லாத இந்திய அதிகார வர்க்கம் ஒரு ஏழை விவசாயின் மீது தனது வீரத்தைக் காட்டியிருக்கிறது.

adani40 வயதாகும் யோகேந்திர குமார் சிங்கிற்கு கடன் வாங்கியவர்களின் பட்டியலில் 9 வது இடம் கிடைத்திருக்கிறது. எட்டு ஆண்டுகளாக அவருக்கு நிலையான வேலை ஒன்றுமில்லை. 2008 ஆம் ஆண்டு பால் பண்ணைத் தொடங்குவதற்காக அவர் வாங்கிய 1.9 இலட்சம் கடன் தந்தையின் கல்லீரல் புற்றுநோயைச் சரி செய்யப் போதாததால் தனது 6 ஏக்கரில் 80% நிலத்தை விற்று விட்டார்.

ஆகஸ்டில் பெய்த கனமழையால் சேதமான அவரது வீட்டை ஏலம் விடுவதற்கானத் தேதியையும் வட்டாட்சியர் அறிவித்து விட்டார். கடனைத் திருப்பி கட்டவில்லையெனில் மீதமுள்ள அவரது நிலத்தையும் இந்த ஆண்டிற்குள் இழந்து விடுவார்.

அதுமட்டுமல்லாமல் சகோதரருக்கு சிறுநீரகக் குறைபாடு, மனைவிக்கு இதய நோய்க்கான மருத்துவ செலவுகள் எனக் கடன் 2.6 இலட்சமாக எகிறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக நிலம் படைத்த விவசாயியாக இருந்த அவர் தற்போது ஒரு உதிரிப் பாட்டாளியாய் கிடைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்.

கடனையும், பூப்படைய இருக்கும் மகளையும் எண்ணியேத் தனக்கு நெஞ்சு வலி வருவதாகக் கூறுகிறார் சிங்கின் மனைவி. ஒரு நாளில் குறைந்தது மூன்று முறையாவது அவர் மயக்கமடைவதாக கூறுகிறார் சிங்கின் தமக்கை.

நான் என்ன செய்தேன்? திருடினேனா? இல்லை, ஏமாற்றினேனா? நான் செய்தது நேர்மையாக தொழில் செய்யலாம் என்று கடன் வாங்கியது தான் என்கிறார். நம்முடைய வசதியான வாழ்க்கைக்காக மேம்பாலங்களையும் கட்டிடங்களையும் கட்டும் அந்தத் தொழிலாளர்களின் ஆகப் பெரும்பான்மையாவர்களில் யோகேந்திர குமாரைக் காணலாம்.

இளைஞர்கள் வேலைத் தேடுபவர்களாக இருக்க கூடாது மாறாக வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என்று ஆரவாரமான மந்திர உச்சாடனத்துடன் மோடி பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தைத் தொடங்கியிருந்தார். ஆனால் ஏற்கனவே கடனாளியான சிங் போன்ற ஏழை மக்களால் அத்திட்டத்தின் குறைந்தபட்சக் கடனான 50 ஆயிரம் கூட வாங்க இயலவில்லை. ஆனால் அம்பானி, அதானிகளுக்கு பொதுத்துறை வங்களில் சில இலட்சம் கோடி ருபாய்களே வழங்கப்பட்டிருக்கின்றன.

கடன் வாங்கிய விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். உயிரோடு இருந்தால் சுவற்றில் திருடர்கள் போன்று இழிவுபடுத்துகின்றன வங்கிகள்! மல்லையா தப்பி ஓடுகிறார். அதானி சிரிக்கிறார். மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் மோடி.

செய்தி ஆதாரம்:
Named and shamed: In Uttar Pradesh, debt-ridden farmers have their backs to the wall
‘Adani’s debt equals to entire farm debt’

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க