Friday, September 22, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் நீர்வளமும் - விவசாயத்தின் எதிர்காலமும் !

சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் நீர்வளமும் – விவசாயத்தின் எதிர்காலமும் !

-

ரு பருவமழைகள் மூலம் தமிழகத்திற்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் மழை நீரின் சராசரி அளவு 958 மி.மீ. ! அதாவது, தென்மேற்கு பருவ மழை மூலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) 332.3 மி.மீ.–ம், வடகிழக்குப் பருவமழை மூலம் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) 459.2 மி.மீ–ம் கிடைக்கிறது. குளிர் காலத்தில் 36.8 மி.மீ., கோடைகால மழையின் மூலம் 129.6 மி.மீ.-நீரும் கிடைக்கிறது ! தென்மேற்குப் பருவமழை பெரும்பாலும் கடலோர மாவட்டங்களில்தான் அதிகம் பெய்கிறது. இதில் கணிசமான அளவு கடலில் கலந்துவிடுகிறது ! கோடைகால மழையோ மேற்பரப்பின் வெப்பநிலையால் பெருமளவு நீராவியாகி விடுகிறது. வடகிழக்குப் பருவமழை ஒன்றுதான் மாநிலம் முழுக்கப் பரவலாகக் கிடைக்கும் ஒரே ஆதாரம்!

main-qimg-
136 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பான அளவில்(70% உறிஞ்சப்படும் பகுதிகள்) உள்ளன !

மேற்பரப்பு நீர்வளம் :
17 முக்கிய ஆற்றுப்படுகைகள், 61 நீர்தேக்கங்கள், மற்றும் 49,480 பாசனக்குளங்கள் (தனியார் குளங்கள் உட்பட) ஆகியவை மூலம் ஒரு ஆண்டில் கிடைக்கும் நீர்வளம் 46, 540 மில்லியன் கன மீட்டர் ! (ஒரு கன மீட்டர் நீர் =1000 லிட்டர்). இதில் சரிபாதி நீரானது (நிலத்தடி நீர் கசிவுக்கும், அதிக வெப்பத்தால் நீராவியாவது போக) நிலப்பரப்பில் வழிந்தோடி கடலில் கலந்து விடுகிறது.  எனவே நமது பயன்பாட்டுக்குக் கிடைப்பது  24,864 மில்லியன் கனமீட்டர் ! இம்மேற்பரப்பு நீரில் 90 சதவீதம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இதனால் பயன்பெறுகின்றன !

நிலத்தடி நீர்வளம் :
நிலத்தில் விழும் மழைநீர் படிப்படியாக மண்ணுள் கசிந்து ஆழமான பகுதியில் தேங்கி நிற்கும் நீரைத்தான் நிலத்தடிநீர் என்கிறோம். இயற்கையின் நீண்டகால நிகழ்ச்சிப் போக்கில் உருவாகும் இத்தகைய நிலத்தடி நீர்வளமாக தமிழகத்தில் இருப்பது 22,423 மி.க.மீ. என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! இதில் 60 சதவீத அளவு (13,558 மி.க.மீ) நீரை ஏற்கனவே உறிஞ்சியெடுத்து பயன்படுத்தி விட்டோம்! தற்போதைய கையிருப்பு 40 சதவீதம் (8875 மி.க.மீ) மட்டும் தான் !

“மொத்தமுள்ள 386 வட்டாரங்களில், 239 வட்டாரங்கள் அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றன. இதில் 139 வட்டாரங்களில் ஒரு வருடத்தில் ஊறும் நீரில் 90 சதவீத அளவுக்கு மேல் உறிஞ்சப்படுகிறது !  11 வட்டாரங்களில் குடிக்கத் தகுதியற்ற உப்புநீராக மாறிவிட்டது ! அரியலூர், சேலம், கோவை, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் உள்ள 10 வட்டாரங்களில் புதிதாக கிணறு, போர் தோண்டுவதற்கு தடைவிதித்து கருப்புப் பகுதியாக (black area) அறிவித்துள்ளது தமிழக அரசு ! 136 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பான அளவில்(70% உறிஞ்சப்படும் பகுதிகள்) உள்ளன !” என்று தமிழக மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் 2009-ம் ஆண்டு ஆவணம் கூறுகிறது !

மொத்த நீர்வளமும் – எதிர்காலத் தேவையும் !

நகர்ப்புறமயமாதல் அதிகரித்து வருவதால் விவசாயப் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பில்லை. குறைவான நீரே தேவைப்படும்
நகர்ப்புறமயமாதல் அதிகரித்து வருவதால் விவசாயப் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பில்லை. குறைவான நீரே தேவைப்படும்

மாநில நீர்வள ஆதார  நிறுவனங்களின் 1998-ம் ஆண்டு அறிக்கையின் படி, மேற்பரப்பு நீர் + நிலத்தடி நீர் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழகத்தின் மொத்த நீர்வளம் 46.540 மி.க.மீ.(1643 டி.எம்.சி) ! என்றும், வளர்ந்துவரும் மக்கள்தொகை மற்றும் தொழில்துறை வளர்ச்சியை கணக்கில் கொண்டால் 2001-ல்  54,395 மி.க.மீ (1921 டி.எம்.சி) –யும்,  2050-ல்  57,725 மி.க.மீ.ட்டர் நீரும் தேவைப்படும் என வேளாண் வல்லுனர்களும், நீரியல் நிபுணர்களும் மதிப்பிட்டுள்ளனர் ! 2001-லேயே 286 டி.எம்.சி. நீர் பற்றாக்குறை என்றால், தற்போது இப்பற்றாக்குறை 300 டி.எம்.சி-க்கு மேலும் அதிகரித்திருக்கும் என உறுதியாக நம்பலாம்!

2050-ல், 4% முதல்  6% வரை மக்கள் தொகை அதிகரிக்கலாம் என்ற அடிப்படையில் வீட்டு உபயோகத்திற்கான நீர்த்தேவை 55.72%-மும், தொழில்துறையின் தேவை 27.7%-மும் அதிகரிக்கும் எனவும், தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் குறைந்தபட்ச ஆற்றுநீர் வழிந்தோடுவதைப் பராமரிப்பதற்கு 1600 மி.க.மீ. நீர் தேவைப்படும் எனவும் துல்லியமாக மதிப்பிடும் அறிக்கை, விவசாயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது நகர்ப்புறமயமாதல் அதிகரித்து வருவதால் விவசாயப் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பில்லை. குறைவான நீரே தேவைப்படும் என்று அலட்சியமாகக் கூறிவிட்டு, விவசாயத்திற்கான நீர்த்தேவையை மதிப்பிடாமலே செல்கிறது ! அதாவது, எதிர்கால தமிழக விவசாயம் தற்போதுள்ள நிலைமையை விட மிக மோசமாக சீரழிந்து போகட்டும். விவசாயிகள் நிலத்தை விட்டே ஓடட்டும். என்பதை இந்த அரசு, ஏற்கனவே தீர்மானித்துவிட்டது என்பதுதான் இதன் பொருள் !

பாசனத் திட்டங்களின் அவலநிலை !

கால்வாய் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்றுவகைப் பாசனத் திட்டங்கள் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 130 லட்சம் ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் இதுவரை பாசனவசதி செய்யப்பட்டுள்ளது ! இதில், கால்வாய் பாசனம் மூலம் 29.2% , குளத்துப்பாசனம் மூலம் 21.3%, கிணற்றுப்பாசனம் மூலம் 48.9% நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

கால்வாய் பாசனத்தில், அண்டைமாநிலங்களின் இனவெறி அரசியல் ஒரு புறமிருக்க, நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை போன்ற வீரியரக களைச்செடிகளாலும், அலட்சியமான அரசின் பராமரிப்புக் குறைவாலும் பெரிய அளவில் பாசனப் பரப்பு விரிவாகவில்லை. 1960-களில் இருந்ததைவிட சற்று கூடுதலாக 21.5 லட்சம் ஏக்கர் என்ற அளவிலேயே நீடிக்கிறது !

well-waterbody
நிலத்தடி நீரே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட பிறகு கிணற்றுப் பாசனம் மட்டும் எப்படி உருப்படும்?

குளங்கள் மூலம் பாசனவசதி பெற்றவை 1960-ல் 22.5 லட்சம் ஏக்கராக இருந்தது ! இது 2000–ல் 15.75 லட்சம் ஏக்கராகவும், தற்போது 10 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது ! சராசரியாக ஒரு குளத்தின் மூலம்  சராசரியாக 48 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த நிலையில், இன்று 30 ஏக்கருக்கும் கீழாக குறைந்துவிட்டது!

கிணற்றுப்பாசனத்தின் நிலையோ இதைவிட பரிதாபமாக கிடக்கிறது. நிலத்தடி நீர்வளம் தான் இதன் ஆணிவேர் ! நிலத்தடி நீரே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட பிறகு கிணற்றுப் பாசனம் மட்டும் எப்படி உருப்படும்? “மாநிலத்தில் சுமார் 19 லட்சம் கிணறுகள் உள்ளன. மொத்தப் பாசனப்பரப்பில் 52% நிலமான சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் கிணற்றுப்பாசனம் மூலமே பயன்பெறுகின்றன.  இதில் 30% கிணறுகள் முற்றிலும் நீரின்றி வறண்டு விட்டன ! 27% கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீராகி விட்டன ! மீதியுள்ள கிணறுகளில் தினமும் 4 முதல் 6 மணிநேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது!” என்று 2012-ல் வெளியான ‘தமிழக நீராதரங்களின் தேவையும்- அளிப்பும்’ என்ற ஆய்வறிக்கை கூறுகிறது.

“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதுதான் மாநிலத்தின் மின் பற்றாக்குறைக்குக் காரணம்” என்ற அரைவேக்காட்டு அறிவாளிகளின் கூற்று எவ்வளவு பெரிய பொய் என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் கன்னத்தில் அறைந்து நிரூபிக்கிறது ! கிணற்றுப் பாசனம் என்பது விவசாயிகள் தனது சொந்த மூலதனத்தில் உருவாக்கிக் கொண்டது ! அரசு முதலீடு இதில் எதுவுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது !

தொகுப்பாகப் பார்த்தோமானால், பசுமைப் புரட்சிக்குப் முன்பு  1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசனவசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இன்று மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் தத்தளிப்பதையும், தற்போதுள்ளதை விட மிக மோசமான நிலைக்கு நமது விவசாயம் ஆளாக இருக்கும் ஆபத்தையும் மேற்கண்ட விவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன !

irrigation-systems-of-tamilnadu-7-638

மாற்றுத் திட்டங்களா ? அழிவுத் திட்டங்களா ?

நீர்வரத்து வாய்க்காலை சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது ஆகியவை எல்லாம் குடியிருக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்குவது போன்ற ஒரு பராமரிப்பு வேலைகள்தான் ! நீர்வளத்தைப் பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும் தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் வேண்டும் !

நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் முக்கால் அடி ஆழம் வரையுள்ள மண்ணை மேல்மண்(TOPSOIL) என்று வரையறுக்கிறது அறிவியல். பெரும்பாலான தாவரங்கள் இம்மேல் மண்ணில் இருந்துதான் தங்களின் வளர்ச்சிக்கான நுண்ணூட்ட சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன. மண்வளம் என்ற சொல்லே மேல்மண்ணின் அங்ககச் சேர்க்கையைத்தான் குறிக்கிறது. ! மழைநீரை உள்வாங்கி மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவதிலும் இம்மேல்மண் தான் முக்கியப் பங்கு வகிக்கிறது! வனப்பரப்பு அழிக்கப்படும்போது வளமான மேல்மண்ணும்(TOP SOIL) வெளியே கிளறப்பட்டு, மேற்பரப்பு மண்ணும் (SURFACE SOIL) மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு நீர்த்தேக்க அணைகளில் `வண்டல் மண்ணாக மேடிட்டு நிற்கிறது. இதனால் அணைகளின் கொள்ளவு குறைகிறது. மேலும் நிலத்தடி நீர்வளம் பெருகுவதும் பெருமளவு தடைபடுகிறது ! எனவே வனத்தையும், வன அடிவாரத்திலுள்ள நீர்பிடிப்புப் பகுதியிலும் உள்ள மேல்மண்ணையும் வெளிக்கிளறாமல் தடுத்து பாதுகாப்பதன் மூலமே நீர்வளத்தைப் பெருக்கமுடியும் என்பதுதான் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான வழிமுறை !

இதன் அடிப்படையில்தான் நிபுணர்கள் திட்டங்களை வகுக்கிறார்கள். 2050-ம் ஆண்டில், தற்போதுள்ளதை விடக் கூடுதலாக 57,725 மி.க.மீ. நீர் தேவைப்படும் என 1998-ல் மதிப்பீடு செய்யப்பட்டதை நிறைவேற்ற அறிவியல் பூர்வமான பல்வேறு திட்டங்களை நிபுணர்கள் அரசிடம் முன்மொழிந்து அறிக்கையாகக் கொடுத்துள்ளனர்.

நீர்-மாசு-படுதலால்-வரும்-நோய்கள்
நீர்-மாசு-படுதலால்-வரும்-நோய்கள்

நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிப்பதற்காக, முக்கிய நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மலையடிவார சாய்வு நிலப்பகுதிகளில், சிறு அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்குவது, நீரோடைகளில் தடுப்பணை கட்டுவது, மேலும் வாய்ப்புள்ள இடங்களில் கசிவுநீர் குட்டைகள், சம மட்டக்கரைகளை அமைப்பது,

  • நீர்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானப் பணிகளையும், சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளையும் முற்றாகத் தடை செய்வது
  • விவசாயப் பயன்பாடற்ற நிலங்களில் புதிய குளங்களை உருவாக்குவது,
  • நீண்டகால அடிப்படையில், சேதமடைந்த வனக்காடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது
  • விவசாய நிலங்களில் உரம் – பூச்சி மருந்து பயன்பாட்டைக் குறைப்பது
  • ஆற்றுநீரில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது,

என்றும் தமிழக நிபுணர்கள் குழு வழிகாட்டியது !

இதற்காக வறட்சிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (DPAP), ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம்(IWOP) தேசிய நீர்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம்(NWDPRA),ஆகிய மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழக அரசு தன் பங்கிற்கு தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி ஆணையம் (TAWDEV) ஒன்றை அமைத்தது, இவற்றின் வாயிலாக தமிழகத்தில் சிறியதும்,பெரியதுமாக 19,330 நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலானவை இன்று பராமரிப்பின்றி சேதமடைந்து பல்லிளித்துக் கிடப்பதோடு, சிறு மழை நீரோட்டத்தையும் தாங்கும் திறனின்றி இருக்கின்றன. கிணற்றுத் தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணங்களை சமாளிப்பதற்காக விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் சிறு குளங்களை, ‘புதிதாக வெட்டப்பட்ட குளங்கள்’ என கணக்குக் காட்டி பல இடங்களில் கொள்ளையடித்துள்ளனர் வேளாண் அதிகாரிகள் !

1960-களில் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக இருந்த வனப்பரப்பு இன்று 16%–ஆக அழிக்கப்பட்டு விட்டது ! பெரும் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக சந்தனம், தேக்கு, ஈட்டி, மஞ்சள்கடம்பு, செம்மரம் போன்ற வணிக மதிப்புமிக்க மரங்களை வன அதிகாரிகளின் துணையோடு வெட்டிக் கடத்தியது, கல்குவாரிகளை சட்ட விரோதமாக அனுமதிப்பது, வனச் சுற்றுலாத் தளங்கள் அமைப்பது ஆகியவைதான் வனக்காடுகள் அழிப்புக்கு முக்கிய காரணம் !

“தமிழ்நாடு வன வளர்ப்புத் திட்டம்” என்ற பெயரில் ஜப்பான் அரசிடம் 586 கோடி ரூபாய் கடன் வாங்கியது தமிழக அரசு ! 2005 முதல் 2013 வரை அமுலான இத்திட்டத்தின் படி “1.77 ஹெக்டேர் பரப்பளவில் மரங்களை நடவு செய்ததாக” அரசு கூறுகிறது ! , ஆனால், மலைப் பகுதிகளில் நடவு செய்ய ஆகும் கூடுதல் செலவைத் தவிர்ப்பதற்காக, “உயரமான இடங்களில் நட்டிருக்கிறோம்” எனக் கணக்குக் காட்டிவிட்டு, ஒரு பாதியை நாற்றுக்களை தனியார் நர்சரிக்கு விற்றுவிட்டு, மீதியை பெரிய பள்ளங்களில் கொட்டி விட்ட கதைகள் எல்லாம் தினசரிகளில் படங்களுடன் செய்தியாக வந்து நாறியது ! கடைசியில், ஜெயாவின் 64–வது பிறந்தநாளுக்கு 64 லட்சம், 65–வது பிறந்த நாளுக்கு 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டமாக இது சீரழிந்து போய்விட்டது என்பதுதான் உண்மை !

தொழிற்சாலைக் கழிவுகளால் ஆற்றுநீர் மாசுபடுவது மற்றுமொரு ஆபத்தாகும்.“குடிநீர், மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ஆறுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள் அமைக்கத் தடை ! தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு செய்வதை தங்கள் சொந்த செலவில் செய்துகொள்ள வேண்டும் !” என்ற அரசின் சட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது ! 300க்கும் மேற்பட்ட ஆலைகள் அதிக மாசுபடுத்துபவை (RED CATEGORY) என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி வைத்துள்ளது ! ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது என்பதையும் இதே அரசுதான் கூறுகிறது !!

ஆலைக்கழிவுகளால் ஆற்றுநீர் விஷமாவது மட்டுமல்ல, நீர்தேக்கங்களில் ஆகாயத்தாமரை போன்ற வீரியரகக் களைகள் பரவுவதற்கும் காரணமாக உள்ளது. “தண்ணீரில் இயல்பாக உள்ள நைட்ரஜன், பாஸ்பேட் உடன், இக்கழிவுகளில் உள்ள நைட்ரஜன் பாஸ்பேட்டும் கூடுதலாக சேர்வதால் நீர்வாழ் தாவரக் களைகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவாக தண்ணீரிலுள்ள ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்துவிடும். ஆக்சிஜன் குறைந்த நீர் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தகுதியற்றது” என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்! சாத்தான்களிடம் வேதம் ஓதி என்ன பயன்?

இவ்வாறு மாற்றுத்திட்டங்கள் எல்லாம் ஒப்பந்ததாரர்கள், கிரிமினல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளைக்குத்தான் இத்திட்டங்கள் பயன்பட்டதே தவிர மேல்மண் அரிமானத்தை தடுக்கவோ, நீர்வளத்தைப் பெருக்கவோ, விவசாயத்தை வளப்படுத்தவோ உதவவில்லை !

கரடியிடம் தப்பித்து சிங்கத்திடம் சிக்கிய கதையாக !

வாழிடத்தை அழித்தால் காட்டுயிர்கள் எங்கே போகும்.
வாழிடத்தை அழித்தால் காட்டுயிர்கள் எங்கே போகும்.

நடைமுறையில் தோல்வியடைந்த மேற்கண்ட திட்டங்களுக்கு மாற்றாக, இன்று உலகவங்கியின் கடனுதவியுடன் ‘உயர் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களை’ நாடுமுழுவதும் மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன !

“நீர்பிடிப்புப் பகுதியின் மேல்மண் இழப்பைத் தடுப்பது, அணைகளின் மண்மேடிடுவதைத் தடுப்பது, நிலத்தின் செயல்திறன் இழப்பைத் தடுப்பது, நிலப்பயன்பாட்டை மேம்படுத்துவது” ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுதான் மேற்கண்ட நீர்வளப் பாதுகாப்புத் திட்டங்கள் நம் உள்நாட்டு நிபுணர்களால் வகுக்கப்பட்டது. ஆனால் உலகவங்கியோ

“பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட் தண்ணீருக்கும் அறுவடையாகும் பொருள்களின் வர்த்தக மதிப்பின் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்” என்ற கறாரான நிபந்தனையின் பேரில் கடன் வழங்குகிறது ! உதாரணமாக, தான் கடன் வழங்கும் ‘தாமிரபரணி கால்வாய் மேம்பாட்டுத் திட்டத்தில்’ “திசு வளர்ப்பு வாழை உற்பத்திக்கும், சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனக் கருவிகளின் பயன்பாட்டுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்” என்று மிரட்டுகிறது ! உதவி என்ற பெயரில் தனது எஜமானர்களின் பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறது உலகவங்கி !

இதே பாணியில்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பேசிக்கொண்டே, ஒருபுறம் வனக்காடுகளை சுற்றுலாப் பயணிகளின் விபச்சார விடுதியாகவும், கனிமவளக் கொள்ளைக்காகவும் சூறையாடப்படுகிறது ! மறுபுறமோ, “மரம் நடுவோம் ! மழை பெறுவோம் !” என்று விவசாயப் பட்டா நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களிலும், மரம் வளர்ப்புத் திட்டத்தை அமுல்படுத்துகிறார்கள். இது, வர்த்தக மதிப்புடைய மரங்களை வளர்ப்பதற்கு மறைமுகமாக விவசாயிகளைப் பயன்படுத்தும் தந்திரமே ! (“தனிமரங்கள் மழையை ஈர்க்காது. அடர்ந்த வனக்காடுகள் தான் மழைநீரை ஈர்க்கும்!: என்ற அறிவியல் உண்மையை மூடி மறைத்துவிட்டு, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சாலையோரங்களில் மரம் நடுவதையே பெரிய வாழ்க்கை லட்சியமாக நடுத்தர வர்க்க இளைஞர்களிடம் பறைசாற்றி திசை திருப்பி  வருகின்றனர்.!)

எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல, இருக்கும் நீர்வளத்தை தக்க வைப்பதற்கான திட்டங்களும் அரசிடம் இல்லை! ஆனால் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயத்தை ஒழித்துக்கட்டும் வேலைகள் மட்டும் வேகமாக அரங்கேறி வருகின்றன!

விவசாயிகளே விவசாயத்தை தீர்மானிப்போம்!

“இயற்கை வளங்களை, முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை!” “நீண்டகாலம் நீர் தேங்காமல் இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக் கூடாது!” “தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன் மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்!” “நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புக் களையும் உடனே அகற்றவேண்டும்!” “நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார் கையகப்படுத்தாமல் இருப்பதை கலெக்டர் தலைமையிலான மாவட்டக் கமிட்டி உத்திரவாதம் செய்ய வேண்டும்!” என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஏராளமாக வந்துவிட்டன! காவிரியில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக கர்நாடகா அரசு செய்யும் அதே சண்டித்தனத்தை, தமிழக நீர் நிலைகள் மீதான தீர்ப்புகளில் தமிழக அரசும் பின்பற்றிவருகிறது! தனது உத்தரவை மதிக்காத கர்நாடக அரசிடம் மட்டுமல்ல, தமிழக அரசிடமும் மண்டியிடுகிறது நீதிமன்றங்கள்!

தமிழக நில ஆக்கிரமிப்புச்சட்டம்-1965, 1975, 1996 , தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்-2007 என பல பல அரசுச் சட்டங்களும் இருக்கின்றன!

மழை நீரை அளவிடுவதில் துவங்கி, நீர்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாக்க, நீர்த்தேக்கங்கள்-தடுப்பணைகள் கட்ட- அணைகளைப் பராமரிக்க, ஆற்றுநீரைப் பாதுகாக்க, ஆற்றுநீர் மாசுபடுவதைத் தடுக்க- குளங்கள், கால்வாய்களை பராமரிக்க, பாதுகாக்க, எதிர்காலத் திட்டங்களை வகுக்க- விவசாயிகளை முன்னேற்றுவதற்கு வழிகாட்டும் பல்கலைக்கழகம், அரசின் வேளாண் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் வேளாண் அதிகாரிகள், புதுப்புது பயிர்களைக் கண்டுபிடித்து,, நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், இவர்களை எல்லாம் வழிநடத்தும் அரசின் வேளாண்மைத்துறை, என ஒரு பெரிய பட்டாளமே விவசாயத்தின் பெயரால் சொகுசாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது! இவர்கள்தான் விவசாயத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசின் நிர்வாகக் கட்டமைப்புகள்!

நீராதாரத்தை-அழித்துவிட்டு--சொட்டுநீர்--உபதேசம்.
நீராதாரத்தை-அழித்துவிட்டு–சொட்டுநீர்–உபதேசம்.

ஆனால், இவர்கள் எந்த நோக்கத்திற்காக வேலை செய்கிறார்களோ, எதற்காக நம் வரிப்பணத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்களோ அதுமட்டும் நடக்க வில்லை! அதாவது, நம் வாழ்வாதாரமான விவசாயம் பாதுகாக்கப்படவில்லை! விவசாயிகள் வாழ்வும் முன்னேறவில்லை! விவசாயம் நாட்டில் பொய்த்துப் போனதற்கும், விவசாயிகள் விவசாயத்தை வெறுத்து நிலத்தை விட்டும், ஊரை விட்டும் ஓடுவதற்கும் இவர்கள்தான் பொறுப்பாளர்கள்!

நம்மை வாழவைப்பார்கள் என்று நம்பித்தான் இவர்கள் சொல்வதையெல்லாம் பயிரிட்டோம்! உணவுப் பொருள்களை கைவிட்டு பணப்பயிர்களை, வீரிய ரகங்களை பயிரிடச் சொன்னார்கள்! அதற்குப் பிறகுதான் நம் நிலத்தடி நீர் வற்றிப்போனது!

முன்பு மானியம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர்கள் திடீரென்று உரமானியத்தை நிறுத்தினார்கள்! அரசுக் கொள்முதலை குறைத்தார்கள்! அதன்பிறகுதான் இடுபொருள் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமலும், வியாபாரிகளிடம் சிக்கி சீரழிவதும் தீவிரமானது!

இனியும் விவசாயத்தை நம்பி வாழ முடியாது என்ற விரக்தி நிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் வந்துவிட்ட நிலையில், தற்போது “ஏற்றுமதிக்கான விவசாயம் செய்யுங்கள். மானியம் தருகிறோம். அதிக லாபம் கிடைக்கும்” என்று வழி காட்டுகிறார்கள்! வாழும் வழிதேடி ஏங்கி நிற்கும் விவசாயிகளுக்கு சுடுகாடு செல்லும் திசையைக் காட்டுகிறார்கள்!

இது நமக்கு ஒத்துவராது, நான் மரபுவழி விவசாயம் செய்யப்போகிறேன்! இயற்கை விவசாயத்திற்கு திரும்புகிறேன்! என்று நம்மாழ்வார் வழியில் செல்லும் நவீன விவசாயியா நீங்கள்! அவ்வளவு எளிதாக நீங்கள் தப்பிச் சென்றுவிட முடியாது!

தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் (TAMILNADU STATE AGRICULTURAL COUNCIL ACT) ஒன்றை கடந்த 2009-ஜுன்- 24-ல் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. மருத்துவர்களுக்கு இருக்கும் மருத்துவக் கவுன்சில் போல இது விவசாயத்திற்கானது. “அங்கீகாரம் பெற்ற வேளாண் பட்டாதாரிகள் மட்டுமே விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்” என்கிறது இச்சட்டம்! இதன்படி மாற்று விவசாயம் பற்றி பிரச்சாரம் செய்வதே குற்றமா விடும்! சுருங்கச் சொன்னால், நம்மாழ்வாரை “தீவிரவாதி” என்று குற்றம் சாட்டுகிறது இந்தச் சட்டம்!

இதற்கு மேலும், இந்த அரசுக் கட்டமைப்பு நம் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் என்று நம்புவதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? தோளின் மீதேறி உட்கார்ந்துகொண்டு நம் குரல்வளையை நசுக்கிவரும் இந்தச் சனியனை இனியும் சுமந்துகொண்டு திரிய வேண்டுமா? இதை உதறி எறிந்துவிட்டு விவசாயிகளே ஏன் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது? விவசாயத்தை விவசாயிகளை விட யாரால் திறமையாக நிர்வகிக்க முடியும்? விவசாயிகளும், விவசாயத்தை நேசிப்பவர்களும் இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க