Sunday, June 4, 2023
முகப்புவாழ்க்கைபெண்பள்ளிக்கரணை சாலை விபத்து : போலீசு - அதிகாரிகளை பணிய வைத்த பெண்கள் !

பள்ளிக்கரணை சாலை விபத்து : போலீசு – அதிகாரிகளை பணிய வைத்த பெண்கள் !

-

சென்னை மாநாகராட்சியின் 188-வது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகரில் 1000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இப்பகுதியில் வாழும் மக்கள் தினசரி வேலைக்கும், பள்ளி, கல்லூரிக்கு செல்லவும் வேளச்சேரி-பள்ளிக்கரணை பிரதான சாலையையே பயன்படுத்துகின்றனர். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இச்சாலையில் போதுமான சிக்னல்கள் இல்லை. வேகத்தடைகளோ ஒன்றுகூட இல்லை. எனவே இச்சாலையில் அடிக்கடி கோரமான விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன.

நன்றி: தினகரன்
நன்றி: தினகரன்

உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் இயங்கி வரும் ‘பெண்கள் விடுதலை முன்னணி இப்பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மனுக்கொடுத்தால் மதிக்கமாட்டார்கள், வீதிக்கு வருவது தான் ஒரே தீர்வு என்று தோழர்கள் வீடுவீடாக பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு கோர விபத்து நடந்து விட்டது. குடியிருப்பு பகுதியிலிருந்து சாலையை கடப்பதற்கு ஒரு பெண் வந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தால் தூக்கி வீசப்பட்டார். விபத்துக்கு காரணமான பைக்கில் வந்த மூன்று இளைஞர்களில், பைக்கை ஓட்டிக்கொண்டு வந்த இளைஞர் சாலையில் தூக்கியெறியப்பட்டு இறந்து விட்டார். பைக்கில் வந்த மற்ற இரண்டு இளைஞர்களும், அந்த பெண்ணும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தியறிந்து உடனடியாக களத்தில் இறங்கிய பெ.வி.மு தோழர்கள் பகுதி மக்களை அணிதிரட்டி செயல்படாத அரசை செயல்பட வைக்க நாம் சாலையில் அமர வேண்டும் என்று பிரச்சாரம் செய்து மக்களை அணிதிரட்டினர். முதலில் பத்து பெண்களே வந்தனர். அவர்களை இணைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று பெண்களை அழைத்தனர். ஒவ்வொரு தெருவையும் கடக்கும் போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களிடம், தினம் தினம் உயிர்பலி கொடுக்கப் போகிறோமா? அல்லது போராடி இரண்டில் ஒன்று பார்க்கப்போகிறோமா? வண்டியில் அடிபட்டு சாவதை விட போராட்டத்தில் போலீசிடம் அடிவாங்குவது மேல். நாம அமைதியாக இருப்பதால் தான் அடுத்தடுத்து உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன என்று பேசியபோது பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக அணிதிரள துவங்கினர்.

pallikaranai-protest-wlf (1)நமக்கு எதுக்கு வம்பு என்கிற சுயநலத்தின் மீது, மவுனத்தின் மீது, அச்சத்தின் மீது பெண் தோழர்கள் ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பி, சண்டையிட்டு தான் மக்களை வீதிக்கு அழைத்து வந்தனர். கூட்டம் கூட கூட வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த பெண்கள் கூட வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அணிதிரண்டனர். பெண்கள் திரள்வதை பார்த்த ஆண்களும் இளைஞர்களும் அழைக்காமலே வந்தனர்.

திரண்டிருந்த மக்களை அழைத்துக் கொண்டு பெண்கள் விடுதலை முன்னணி செயலர் தோழர் செல்வி தலைமையில் வேளச்சேரி பள்ளிக்கரணை பிரதான சாலையை மறித்து போராட்டம் துவங்கியது.

500 க்கு மேற்பட்ட மக்கள் சாலையை மறித்துக்கொண்டு அமர்ந்தனர். காவல் துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பகுதி பெண்களோ கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினர். அவற்றை எதிர்கொள்ள முடியாத போலீசு சுற்றி இருந்தவர்களை அடித்து விரட்டத் துவங்கியது. அதுவரை தயங்கிக்கொண்டிருந்த பெண்கள் களத்திற்கு வந்ததும். தயக்கமின்றி கேள்வி கேட்டனர். சில நிமிடங்களில் அதிகாரிகள் வந்து குவிந்தனர்.

மக்கள் தன்னெழுச்சியாக தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள், நாலு சாத்து சாத்தினால் கலைந்துவிடுவார்கள் என்று எண்ணிய போலீசு, அரட்டவும் மிரட்டவும் அடிக்கவும் துவங்கியது. மக்கள் அச்சமின்றி அசராமல் நிற்பதை பார்த்து இது அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட கூட்டம் என்பதை தெரிந்து கொண்டு நைச்சியமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இந்த மாதிரி பிரச்சினைக்கெல்லாம் எந்த அதிகாரிகிட்ட போய் சொல்லனும்னு தெரியாதா உங்களுக்கு? உங்களால எவ்வளவு ட்ராபிக்க பாருங்க. எது எதுக்கு என்னென்ன பண்ணனும்னு கூட தெரியல. ஜனங்கள மட்டும் நல்லா தூண்டிவிடுறீங்க. இதை வைச்சிக்கிட்டு அரசியல் பண்ணாதீங்க என்றார் இன்ஸ்பெக்டர்.

ரோட்டுக்கு வர்றவங்க உயிரோட வீட்டுக்கு போகணும் அதுக்கு ஒரு சிக்னலோ, வேகத்தடையோ போட்டுக்கொடுங்கன்னு தான் கேக்குறோம். அதை செஞ்சு குடுத்தா நாங்க ஏன் ரோட்டுக்கு வரப்போறோம் என்றதும் உடனடியாக ட்ராபிக் போலீசாரை அழைத்து சிக்னல் அமைத்து தருவதாக கூறினர். தாசில்தாரும், வி.ஏ.ஒ வும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த பிரதான சாலையே ஸ்தம்பித்து விட்டது. அதிகாரிகள் உறுதியளித்ததன் அடிப்படையில் தற்போது கலைந்து செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, மக்களிடம் விளக்கப்பட்டது. அதனடிப்படையில் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அதிகாரிகள் உறுதியளித்தவாறு பிரச்சினையை தீர்க்க கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்தாவிட்டால் மீண்டும் ரோட்டுக்கு வருவோம் என்பதையும் கூறிவிட்டு கலைந்தோம்.

pallikaranai-protest-wlf-(6)தோழர்களும் பகுதி பெண்களோடு பகுதிக்கு சென்றுள்ளனர். அரை மணி நேரத்தில் அய்யா கூப்பிடுறாங்க வாங்க என்று  தொலைபேசியில் பேசினார் ஒருவர். மூன்று தோழர்கள் கிளம்பி மறியல் செய்த இடத்திற்க்கு வரும் வழியிலே பகுதிப் பெண்கள் எல்லாம் எங்க போறீங்க என்று கேட்டார்கள். காவல் துறை கூப்பிட்டுள்ளார்கள் என்று கூறிய உடன் நான் வருகிறேன் நான் வருகிறேன் என்று மறுபடியும் பெண்கள் திரண்டு வர ஆரம்பித்தனர். இவ்வளவு பேர் வேண்டாம் என்று கூறி பத்து பேர் கிளம்பி சென்றோம். 5, 6 வண்டிகளில் 50 மேற்ப்பட்ட காவல் துறையினர் நின்று இருந்தனர். எங்ககிட்ட சொல்லாம இப்படி பண்ணிட்டீங்களே எங்கிட்ட  சொல்லியிருந்தா நான் ஏற்பாடு பண்ணியிருப்பேனே என்றார் அப்பகுதி இன்ஸ்பெக்டர். உங்களுக்கு தெரியாதா சார் டெய்லி விபத்து நடக்குதுன்னு நேத்து கூட ஒரு பையன் இறந்து இருக்கான் என்றோம்.  தெரியுமா நானே எங்காரில் ரத்தத்தோட தூக்கிட்டு போயிருக்கேன். இங்க வேகத்தடை போடமுடியாதும்மா ரூல்ஸ்ச மீறி செய்ய முடியாதும்மா என்றார். உடனே ஒரு தோழர் மக்களுக்கு பயன்படாத ரூல்ஸ் எதுக்கு சார் ரூல்ஸ்சையே மாத்துங்க சார் என்று சொன்ன உடன் ஏற இறங்க பார்த்து விட்டு ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இப்ப நான் யாரையாவது அரஸ்டு பண்ணனுமே என்றார். அரஸ்டு பண்ணுவதாக இருந்தால் தலைவர் என்ன யாரை வேண்டுமானாலும் பண்ணுங்க சார் என்று தாமதிக்காமல் சொன்ன உடன். ஒன்றுமே பேசாமல் சரி சரி போங்க என்றார்.

போலீசையும், அதிகாரிகளையும் பணிய வைத்த இந்த போராட்ட அனுபவம் பெண்களுக்கு புதிய உற்சாகத்தையும், போராடினால் தான் உரிமைகளை பெற முடியும் என்கிற நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. போராட்டத்தை முடித்துவிட்டு கலைந்து செல்லும் போது, அடுத்து இந்த டாஸ்மாக் கடைக்கு எதிராகவும் இது போல ஒரு போராட்டத்தை நடத்தினா தான் சரிபடும் என்று பகுதி பெண்கள் பேசிக்கொண்டு சென்றனர். ஆம் அவர்கள் குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் சனியனுக்கு எதிராகவும் பெ.வி.மு தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. பகுதி பெண்களின் துணையோடு விரைவில் பாலாஜி நகரிலிருந்து அந்த டாஸ்மாக் கடை ஒழித்துக்கட்டப்படும்.

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
தொடர்புக்கு- 98416 58457

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க