privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்விதியே என்று வாழ்பவர்களே ! வீதிக்கு வாருங்கள் !! அழைக்கிறார் மோடி !!!

விதியே என்று வாழ்பவர்களே ! வீதிக்கு வாருங்கள் !! அழைக்கிறார் மோடி !!!

-

டந்த 2016 நவம்பர் எட்டாம் தேதி எட்டரை மணிக்கு “இன்று நள்ளிரவு முதல் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனி அவையெல்லாம் வெறும் காகிதங்களே” என்று பிரதமர் மோடி முழங்கினார்.

சுனாமி கூட கடற்கரையோர மக்களைத்தான் தாக்கியது. குஜராத் பூகம்பம் கூட ஒரு பகுதி மக்களைத்தான் விழுங்கியது.  மோடியின் கர்ஜனை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி பக்தர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்களை தாக்கி நடைபிணமாக்கியது. மோடி அரசின் இக் கொடூர தாக்குதலால் கருப்புபண முதலைகள் தவிர மற்ற அனைவரும் தாங்க முடியாத வேதனையில் வாடினர்.

வங்கியில் வரிசையில் நின்று களைத்துப் போய் மயங்கி விழுந்தவர்கள் ஏராளம். இறந்தவர்களின் எண்ணிக்கை  80-ஐ தொட்டு விட்டது. இருந்தாலும் கருப்புப் பணத்தையும்,கள்ள நோட்டையும் ஒழிக்கும் இத்திட்டம் தேவைதான், மக்களுக்கு இவ்வளவு நெருக்கடியைக் கொடுக்காமல் முன் ஏற்பாடுகளுடன் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.

mobile ATM GH (1)
கோப்புப் படம் : வினவு

உண்மையில் இது கருப்புப்பணத்தை,கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையா? இல்லவே இல்லை. யாரெல்லாம் கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்களோ அவர்களுக்காக மோடி அரசு மக்கள் மீது நடத்தும் மாபெரும் தாக்குதல் தான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.

விலைவாசியைக் குறைப்பேன், வேலை வாய்ப்பை உருவாக்குவேன், லஞ்ச ஊழலே இருக்காது, தூய்மை இந்தியா, வளர்ச்சி ஒன்றே தாரகமந்திரம், மன் கி பாத், மேக் இன் இண்டியா, ஸ்டாண்டு அப் இண்டியா என்று கடந்த காலங்களில் அளந்துவிட்ட பஞ்ச்டயலாக்குகள் திரைப்பட நடிகர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி விஞ்சி நிற்கிறது.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னும் மோடி மக்களுக்குச் செய்த நன்மைகள் என்று கூற எதுவும் இல்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தான் மோடி அரசின் சாதனைகள். சரிந்து கொண்டிருந்த தனது பிம்பத்தைத் தூக்கி நிறுத்தி விடலாம் என்று நம்பி மோடி எடுத்திருக்கும் அரசியல் நடவடிக்கைதான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.

கறுப்புப் பணஒழிப்பு, கள்ளநோட்டு ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு என்ற மோடி ரசிகர்களின் கூச்சல் கார்த்திகை மாத ஐய்யப்ப பக்தர்களின் சரணகோஷத்தைப் பின்னுக்குத் தள்ளி ஓங்கி ஒலிக்கிறது. கருப்புப் பணத்தைப் பறிமுதல் செய்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் ரூபாய் போடுவேன் என்ற மோடி மக்களிடம் உள்ள சேமிப்பைப் பறிமுதல் செய்கிறார். பனிரெண்டு லட்சம் கோடி வராக்கடனில் தத்தளிக்கும் வங்கிகளில் போடச்சொல்வது மூலம் அம்பானி, அதானி, டாட்டாக்கள் மீண்டும் கொள்ளையடித்து மேலும் கருப்புப் பணத்தைச் சேர்க்க வழிவகை செய்கிறார்.

செல்லா நோட்டு அறிவிப்பு கருப்புப் பணத்தை ஒழிக்கத்தான் என்றால் ஐநூறு ஆயிரம் செல்லாது என்று அறிவித்த அன்று இரவோடு இரவாக நகைக்கடைகளுக்கு வந்தவர்கள் யார்? ஏன் மோடி அரசு அவர்களை மடக்கிப் பிடிக்கவில்லை? கிராமுக்கு 1200, 1500 என்று தங்கத்தின் விலையை ஏற்றி விடிய விடிய விற்று கருப்புப் பணத்தை சம்பாதித்தார்களே அவர்கள் மீது மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிவு நாணயத்தோடு பதில் சொல் என்று மோடி இரசிகர்களையும் தொலைகாட்சி விவாத உண்மை விளம்பிகளையும் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும்.

kdr 3
பா.ஜ.க – வின் உண்மை விளம்பி கே.டி.ராகவன்

கருப்புப் பண விவகாரத்தைப் போன்றதுதான் கள்ளநோட்டு ஒழிப்பு. பாகிஸ்தானிலிருந்தும் சீனாவில் இருந்தும் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க அச்சடித்து அனுப்புகிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தை அது சீர்குலைக்கிறது. அதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்கிறார்கள். 2015-இல் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் 2005-க்கு முன்னால் அச்சிடப்பட்ட 500ரூபாய் நோட்டுக்களைக் குறிப்பிட்ட தேதிக்குள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவித்தார். கள்ள நோட்டைப் பிடிப்பது நோக்கம் என்றால் அப்படி செய்திருக்க முடியும். அப்படியே ஒழிக்கப்பட்டாலும் காந்தி சிலை நோட்டு அச்சடித்தவர்களால் மங்கள்யான் செயற்கைகோளைச் சேர்த்து அச்சிடமுடியாதா? இதை நம்ப நாம் என்ன முட்டாள்களா?

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும்,பொருளாதார ஆய்வார்களும் கள்ள நோட்டு 400 கோடிதான் உள்ளது என்கிறார்கள். ஒருசதவீதம் கூட இல்லாத கள்ள நோட்டைப் பிடிக்க இவ்வளவு கொடுமையா? எலியைப் பிடிக்க மலைக்கு வேட்டுவைக்க வேண்டுமா?

இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் கம்யூட்டர்சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. கள்ள நோட்டு அச்சடிக்க முடியாது என்று சிலர் நம் காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கும் போதே சாயம் வெளுத்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வழக்கு ஒன்றுவந்து மோடிகளின் சாயத்தை வெளுக்கச் செய்தது. “உலகத்தில் இதுவரை இப்படி ஒரு தொழில் நுட்பத்தில் நோட்டு அச்சடிக்கப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்” என்று ரிசர்வ் வங்கியே சொன்ன பிறகும் தொலைகாட்சிகளில் ஆர்.எஸ்.எஸ்,பி.ஜே.பி கோயபல்சுகள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது என்று துணிந்து தெரிந்தே பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

கருப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பது மூலம் தீவரவாதத்தை ஒழிக்கலாம் என்ற நச்சுப் பிரச்சாரத்தை சிலர் நம்புகின்றனர். வாஜ்பாய் ஆட்சி செய்த 1998-2004 இடைப்பட்ட காலத்தில் தான் கருப்புப் பணம் அதிகரித்துள்ளது என்று  உலக வங்கி அறிக்கை சாட்சி சொல்கிறது. ஆயுதக் கடத்தல் பேர்வழிகள், பாகிஸ்தான் அமெரிக்க உளவாளிகள் யார் வேண்டுமானாலும் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க வழிவகை செய்தார், யோக்கியசிகாமணி வாஜ்பாய். ‘பார்ட்டிசிபேட்டரி நோட்(P-N நோட்)  என்ற வழிமுறை தான் அது. யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து இந்தியாவில் ஊடுறுவலாம். அதை அரசாங்கம் சோதிக்க முடியாது.

கடைசியாக எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல வங்கி மூலம் வரவு செலவு, ரொக்கமில்லா பொருளாதாரம் (கேஷ்லெஸ் எக்கானமி)  என்கிறார் திருவாளர் மோடி.அதன் பொருள் என்ன? குப்பம்மாளையும்,சுப்பனையும் டிஜிட்டல்மயமாக்கி இரத்தத்தை உறிஞ்சிக்குடிப்போம் என்பதுதான்.

ரொக்கமில்லா பொருளாதாரத்தால் கல்விக் கடன் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்களை காப்பாற்ற முடியுமா? விவசாயம்  நாசமாகி கடன் தொல்லையால் மாண்டு கொண்டிருக்கும் விவசாயிகளின் சாவை தடுத்து நிறுத்த முடியுமா? ஒருபோதும் முடியாது.

மாறாக இது அனைவருக்கும் வரிவிதிப்பை கட்டாயமாக்கும். தரகு முதலாளிகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்யும்,வங்கி வருமானத்தை பெருக்கி முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்யும்.சில்லரை வணிகத்தை ஒழித்து ரிலையன்ஸ்,வால்மார்ட்,பிக்பஜார் போன்ற கார்பரேட்டுகளின் பகல் கொள்ளைக்கு உறுதுணையாகும். உணவு மானியத்தை வங்கி கணக்குக்கு அனுப்பி உணவு பாதுகாப்பை (பொது வினியோக முறையை) தகர்க்கும்,அழிவுகள் தொடரும்.

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கையால் பாராளுமன்றம் முடங்கியும்,கல்லுளிமங்கன் மன்மோகன்சிங்கின் கதறலையும் கூட  நரேந்திர மோடி கண்டு கொள்ள தயாராக இல்லை.

 விதியே என்று வாழ்பவர்களை வீதிக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் மோடி. சேமநல நிதியை (PF-ஐ) முடக்குவதாக மோடி கூறியவுடன் பெங்களுரு நகரமே முடங்கியது. படிப்பறிவு இல்லாத எளிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் எழுச்சி மோடியை அடுத்த கணமே பின்வாங்கச் செய்தது. பணத்திற்காக நம்மை வீதிகளில் அலையவிட்ட மோடி அரசுக்கு வீதியில்தான் பாடம் கற்பிக்க முடியும். வீதிக்கு வாருங்கள் என்று மோடி அழைக்கிறார். வாருங்கள் விடை காண்போம் !

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தஞ்சை மாவட்டம்.

__________________________________

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி நவம்பர் -8 அன்று அறிவித்த கணத்தில் இருந்து இன்றுவரை மக்கள் கூட்டம் தங்கள் சேமிப்பையும், சம்பளத்தையும் மாற்றவும், வங்கியில் பணம் செலுத்தி எடுக்கவும் தினந்தோறும் ATM  வங்கி வாசலில் அல்லாடுகின்றனர். இருந்தாலும் கருப்பு பணத்திலேயே உருவான, கருப்பு பண முதலைகளின் விளம்பரங்களினால் வாழ்கின்ற அச்சு, காட்சி ஊடகங்கள் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் மோடியின் நோக்கத்தை அம்பலப்படுத்தாமல் இந்த நடவடிக்கை எடுத்த விதம் தவறு என்று கூறி போராடி வருகிறார்கள். மக்கள் சிரமப்படும்போதும் இந்நடவடிக்கை கருப்பு பணத்தை குறைந்தபட்சமாவது ஒழிக்கும் என்று தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது வேறு வழி இல்லை என சகித்துக்கொள்கிறார்கள்.

இவ்விதமான கருத்துக்களை உடைக்கும் வகையில் விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக மோடியின் நோக்கம் கடுகு டப்பா சேமிப்பையும் கொள்ளையடித்து கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு தாரைவார்ப்பதே என்பதை அம்பலப்படுத்தியும். “நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கு ஏன் தடை? வங்கிப் பணம் எடுப்போம், வங்கி கணக்கு முடிப்போம்!” என்பதை முழக்கமாக வைத்து கடந்த 2.12.2016 அன்று மக்களிடம் பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

Viruthachalam (1)
விருதை பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். ( கோப்புப்படம்)

அதேபோல் விருதை பாலக்கரை, கருவேப்பிலங்குறிச்சி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தெருமுனை பிரச்சாரங்களும் நடத்தப்பட்டது. இவற்றில் மக்கள் அதிகாரம் விருதை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பு.மா.இ.மு விருதை செயலாளர் தோழர் மணிவாசகம், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.ராஜு மற்றும் பகுதியில் உள்ள ஆதரவாளர்கள் மோடி அரசை அம்பலப்படுத்தியும், மேலும் இந்த பாசிச நடவடிக்கையை எதிர்கொள்ள போராடியாக வேண்டும் என வலியுறுத்தியும் பேசினர். இக்கூட்டங்களில் ஆங்காங்கே நின்றிருந்த  திரளான மக்கள் தோழர்களின் பேச்சை கேட்டு அருகில் வந்து நின்று முழுமையாக கவனித்தனர், கைதட்டி வரவேற்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம்- 9791286994

__________________________________

 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பற்றி பேசாதே ! கோவை போலீசின் ஜனநாயக மறுப்பு !

கடந்த ஞாயிற்றுக்கிழமை 04.12.2016 கோவை ஒண்டிப்புதூரில் உள்ள சுங்கம் மைதானத்தில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு சரியா? தவறா? என்ற தலைப்பின் கீழ் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தெருமுனைக்கூட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் கூட்டத்தின் தலைப்பு மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானதாக உள்ளது எனக் கூறி அனுமதி மறுத்துள்ளது காவல் துறை.

 

Covai_police

ஒரு புறம் மக்களின் மனநிலையை அறிய செல்பேசி ‘ஆப்-பில்’ கருத்து கேட்பதாக நாடகமாடுகிறது மோடி அரசு. கேள்விகளே கேட்காத மன்கீபாத் நிகழ்ச்சியிலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமும், பொதுக்கூட்டங்களிலும் மட்டுமே  வாய் கிழிய சவடால் அடிக்கிறார் மோடி. மவுன மோகன் சிங் என மோடியும், பா.ஜ.க-வினரும் கேலி செய்த மன்மோகன் சிங்கின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்காமல் பாராளுமன்ற அவையை விட்டு ஓடுகிறார் பிரதமர். எல்லையில் வீரர்கள் கஷ்ட்டப்படும் போது ஏ.டி.எம் வரிசையில் நிற்க உனக்கு என்ன கேடு எனக் கேட்கிறது காவி வானரப்படை.

ஆனால் மக்களிடம் நேரடி கருத்தை கேட்கவோ அல்லது விவாத்திக்கவோ அனுமதி கேட்டால் மறுக்கிறது காவிமயமான காவல் துறை. ஆனால் இதே காவல் துறை தான் இந்துமுன்னணி சசிகுமார் என்ற சமூக விரோதியின் எழவு ஊர்வலத்தின் போது கடைகளை சூறையாடியவர்களுக்கு பாதுகாப்புக்கு நின்றது. ஆனால் இவற்றியெல்லாம் தாண்டி தொடர்ந்து மக்களிடம் பல்வேறு வகைகளில் போராட்டங்களை எடுத்துச் செல்வோம்.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
கோவை மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க