privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?

மரணத்திற்காக இந்த அம்மாவை மன்னிக்க முடியுமா ?

-

மனித குலம் உருவான காலத்திலிருந்து மனிதனுக்கு அச்சத்தை தந்த ஒரு விடயம் மரணம். மரணம் பற்றிய பயத்தினால் தான் கடவுள் கூட இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதே மரணம் தந்த அச்சமே இப்போது தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மீது கட்டமைக்கப்படும் புனித பிம்பத்திற்கு காரணம்.

பெண் என்பதால் , அல்லது ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் புனிதமடைந்து விடுவாராயின் நமது அரசியல் நிலைப்பாட்டில் தடுமாற்றம் இருக்கிறது என்றே அர்த்தம். பெண் என்பதால் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வர்க்கம் சார்ந்து வேறுபடும்.

aiswarya-poor-woman
ஒரு தாயாக என் குழந்தையை வளர்க்க நான் மிகவும் கஸ்டப்பட்டேன் என்று ஐஸ்வர்யா ராய் சொல்வதற்கும் , தினக்கூலிவேலை செய்யும் ஒரு பெண் சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா?

ஒரு தாயாக என் குழந்தையை வளர்க்க நான் மிகவும் கஸ்டப்பட்டேன் என்று ஐஸ்வர்யா ராய் சொல்வதற்கும் , தினக்கூலிவேலை செய்யும் ஒரு பெண் சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா?

இவ்விருவரும் பட்ட கஸ்டங்களை பெண் என்பதற்காகவே சமப் படுத்தி விடமுடியுமா? சாதி , இனம் , நிறம் சார்ந்து ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றது.

ஒரு பார்ப்பன பெண்ணும் ஒரு தலித் பெண்ணும் ஆணாதிக்கத்தை எதிர்கொள்ள நேர்வது ஒரே அளவுகளில் அல்ல. ஆதிக்க சாதிவெறியுடன் கூடிய ஆணாதிக்கத்தை எதிர்கொள்ளும் தலித் பெண்களையும் ஜெயலலிதா எதிர்கொண்ட ஆணாதிக்கத்தையும் இந்த மரணத்தின் மூலம் சமப்படுத்திவிடுகின்றனர் முற்போக்குவாதிகள்.

#ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்கொண்டு வெற்றியீட்டிய ஆளுமையைக் கண்டு பிரமிப்பதாக பல பதிவுகள். இதில் பெண்களின் பதிவுகளும்.அடக்கம்.

ஒரு அரசியல் ஆளுமையை விமர்சனம் செய்வது அவரின் அரசியல் சமூக செயற்பாடுகளின் விளைவுகளை பரிசீலனை செய்வதன் மூலமாகவா? அல்லது அவர் என்ன பாலினம் சார்ந்தா?

சரி, ஒர் பெண்ணாக தான் பட்ட கஸ்டங்களினூடாக கற்ற பாடங்களினூடாக ஒடுக்கப்படும் பெண் இனத்திற்காக ஜெயலலிதா என்ன செய்துவிட்டார்?

கூடங்குளத்தில் தம் வாழ்வுரிமைக்காக போராடிய பெண்களுக்கும் டாஸ்மார்க்கினால் தம் தாலியை பறிகொடுத்த பெண்களுக்கும் , போலீஸ் மிருகங்களை ஏவி அவர்களின் பிறப்புறுப்பில் உதைத்து விரட்டினாரே ஜெ , இதுவா ஆளுமை?

jaya-and-tasmac-protestபெண் என்றால் பேயும் இரங்குமாம். ஜெ இரக்கம் கொள்ள வில்லையே…. ம.க.இ.க. வின் டாஸ்மார்க் எதிர்ப்பு பிரசாரத்தில் ஐந்து வயது சிறுமிக்கும் அதே தண்டனையை வழங்கவில்லையா? அவர் ஆட்சியில் இருந்த போது பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு தனது அரசியல் லாபத்தில் அக்கறை கொள்ளாமல் பாரபட்சமற்ற நீதியைப் பெற்றுத் தந்தாரா?

போலீஸ் அதிகாரியான விஷ்ணுப்பிரியாவே ‘தற்கொலை’ செய்து கொள்ளும் நிலைமை தானே ஏற்பட்டது. தமது அரசியல் , சாதீய , வர்க்க நலனைத் தாண்டி பெண்களுக்காக என்ன செய்து விட்டார் ஜெயலலிதா? டாஸ்மார்க் மூலம் பல பெண்களின் தாலியை பறித்ததை தவிற அவர் பெண்களுக்காக செய்தது எதுவுமில்லை.

கடைசியாக மரணப்படுக்கையில், மருத்துவமனையில் வேதனையை அனுபவித்தாராம். டாஸ்மார்க் இனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட கணவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, பிள்ளைகளுக்காக கல்லுடைக்கவும் , களை பிடுங்கவும் , வீட்டு வேலைக்கும் செல்கிறாளே ஏழைத்தாய், அந்தத் தாயைவிட இந்த மாண்புமிகு அம்மாவின் வேதனை பெரிதா?

ஆத்மா சாந்தியடையட்டும் என்று சொல்ல ஆத்மாவில் நம்பிக்கையில்லாததால் , மரணத்தின் மூலமும் மன்னிக்க முடியாதவராகவே இந்த ” அம்மாவிற்கு” விடை கொடுக்க வேண்டியிருக்கிறது.

நன்றி :  மோகனா தர்ஷினி