privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்குமரி மாவட்ட பெண்கள் சாதனை : 2-ஆவது டாஸ்மாக் கடை மூடப்பட்டது !

குமரி மாவட்ட பெண்கள் சாதனை : 2-ஆவது டாஸ்மாக் கடை மூடப்பட்டது !

-

பேயன்குழி – நுள்ளிவிளை டாஸ்மாக் எதிர்ப்புப் மக்கள் போராட்டம் வெற்றி !

ன்னியாகுமாரி மாவட்டம், நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழி – நுள்ளிவிளை சந்திப்பு பகுதியில் அருகருகே செயல்பட்ட இரு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி அமைப்பின் கீழ் சுற்றுவட்டார கிராம பெண்கள் திரண்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. (இந்த பேராட்டம் குறித்த செய்திகள் ஏற்கனவே வினவில் வெளி வந்துள்ளது )

தொடார் போராட்டத்தின் பகுதியாக 04.10.2016-ம் தேதி நடந்த டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தின் போது பணிந்த அரசு அன்றைய தினமே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. சட்டம் ஒழுங்கு பாதிப்படைந்துள்ளது என்று காரணம் காட்டி உடனடியாக ஒரு கடையை மூடியது. 30 நாட்கள் கால அவகாசத்தில் மற்றுமொரு கடையை மூடிவிடுவதாக கூறியது.

அரசு கூறியபடி நடந்து கொள்ளும் என்பதை பெண்களும் தோழர்களும் நம்பத் தயாராக இல்லை. அரசு தெரிவித்த கெடு 03.11.2016 அன்று முடிவடைந்தது. 4-11-16 டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் அந்த கடையை முற்றுகையிட திட்டமிட்டு பெண்களும் தோழர்களும் கிராமம் கிராமமாக சென்று அணி திரட்டினர்.

மேலும் 4.11.2016-ம் தேதிக்குள் கடையை மூடுவோம் என்று அரசு அளித்த வாக்குறுதியை நினைவூட்டுவதற்காக சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் ஆட்சியர் அலுவலகம் சென்றனர். ஆட்சியரை 4 பேர் மட்டுமே சந்திக்க முடியும் என்று போலீசாரும், ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும் தடுக்க எடுத்த முயற்சிகளை போராடி முறியடித்து சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் சந்தித்தனர். நினைவூட்டல் கடிதத்தை பெற்றுக் கொண்ட ஆட்சியர்; கடையை மூட எனக்கு அதிகாரம் கிடையாது, உடனடியாக கடையை மூட முடியாது, அவகாசம் வேண்டும், மேலே எழுதியிருக்கின்றேன் என்று தான் கூறிய வாக்குறுதியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் கூறினார் அப்போ ஏன் சார் ஒரு மாதத்தில் கடையை மூடுவதாக போராட்டம் நடந்த அன்று கூறினீர்கள்? உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அன்றையதினமே தெரியாதா? என்று எதிர் கேள்வியை கேட்டனர் பெண்கள். ஏற்கனவே ஒரு கடையை மூட நீங்கள் தானே உத்தரவிட்டீர்கள், அப்போ மட்டும் எங்கிருந்து அதிகாரம் வந்தது? நாங்கள் போராட்டம் நடத்தும்போது எங்களிடம் இரண்டு நாட்களிள் கடையை மூடுகின்றோம், மூன்று நாட்கள் மூடுகின்றோம் என்று கூறுகின்றார்களே அதிகாரிகள் அப்போது மட்டும் எங்கிருந்து அதிகாரம் வந்தது என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர் பெண்கள்.

மேலிடத்திலிருந்து உத்தரவு வந்த பின்பு நிரந்தரமாக மூடுங்கள் அதுவரை தற்காலிககமாக மூடி வையுங்கள் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டனர் பெண்கள். நாங்கள் ஒவ்வொரு முறை உங்களை சந்தித்து மனு கொடுக்கும் போதும், போராடும் போதும் ஏதாவது கூறி எங்களை ஏமாற்றி வந்தீர்கள். இனிமேல் ஏமாற மாட்டோம் என்று கூறிவிட்டனர். திங்கள்கிழமை மனுநீதி நாள் என்பதால் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சூழ மன்னர் போல் மேடையில் அமர்ந்திருந்த கலெக்டருக்கு கடையை மூடுமாறு பெண்கள் உத்தரவிட்டனர். இதனால் நிலை குலைந்து போனார் கலெக்டர். அதிகார தோரணையில் பேச இயலவில்லை. உட்கார்ந்திருந்த அதிகாரிகள் பலரும் பெண்களைப் பார்த்து வெளியே போங்கள், வெளியே போங்கள் ஐயாவிடம் இப்படி பேசக்கூடாது என்று கத்தி கலெக்டரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எதற்கும் அஞ்சாத பெண்கள் கடையை மூடுகிறேன் என்று கூறுங்கள் சார் நாங்கள் என்ன சொன்னாலும் கடையை மூடுறேன்னு மட்டும் சொல்ல மாட்டேங்கிறீங்களே சார் என்று கலெக்டரை கேள்வி கேட்டனர். 4-ம் தேதி கடை திறந்தால் என்னை வந்து பாருங்கள் என்று கலெக்டர் கூற, நாங்கள் ஏன் இங்கு வரவேண்டும் நாங்கள் கடையைத்தான் முற்றுகையிடுவோம் என்றனர் பெண்கள். நான் கடையை மூடுகிறேன் என்று நேரடியாகக் கூறினால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளை மூட வேண்டுமென மக்கள் கூறுவர் என கலெக்டர் கூறியதும் அவரை சுற்றியிருந்து அல்லக்கை அதிகாரிகள் ஐயா சொல்லிட்டாருல்ல நல்லது தான் நடக்கும் என்று ஜால்ரா அடித்தனர்.

அதே தினம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று காவல்துறை கண்காணிப்பாளரை நினைவூட்ட சென்ற போது அங்கேயும் 5 பேர் தான் சந்திக்க முடியும் என்று விதித்த கட்டுப்பாடுகள் எதுவும் எடுபடவில்லை. ஓரிருவர் மட்டும் காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்க பெண்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு SP (காவல்துறை கண்காணிப்பாளர் அன்றைய தினம் விடுமுறையில் சென்றிருந்தார்) இரண்டாம் தளத்தில் இருந்து கீழே இறங்கி வந்து சந்தித்தார். நான் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசிவிட்டேன். சட்டம் ஒழுங்கு பாதிக்கப் பட்டுள்ளது என்று காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை கொடுத்து விடுவார். 4.11.2016-ம் தேதி முதல் கடை திறக்காது என்று காவல்துறை கண்காணிப்பாளார் என்னிடம் கூறிவிட்டார் என்று SP கூறினார்.

Nullivillai news paper (4)04.11.2016-ம் தேதி காலை திட்டமிட்டப்படி பெரும்பான்மையாக பெண்களும், ஆண்களும் அணி திரண்டனர். காவல்துறையினர் தோழர்களை தொடர்பு கொண்டு இன்றிலிருந்து கடை திறக்காது என்று கூறினார். ஆனாலும் கடை மூடப்பட்டால் தான் நாங்கள் நம்புவோம் என்று பெண்களும், தோழர்களும் கூறிவிட்டனர். நண்பகல் 12.00 மணிக்கு கடை திறக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தபின்பு காரங்காடு ஆலய மைதானத்தில் பாயாசம் தயாரித்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பெண்கள்.

மூடப்பட்ட கடைகளுக்கு முன்பு பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினால் பேயன்குழி இந்துக்களுக்கு எதிராக காரங்காடு, நுள்ளிவிளை கிறிஸ்தவர்கள் வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள் என்று, டாஸ்மாக்கை நம்பி பிழைப்பு நடத்தும் சிலர் திரித்து கூறி ஏற்கனவே நிலவிவரும் முரண்பாட்டை பொரிதாக்கி விடுவார்கள், (பேயன்குழி – நுள்ளிவிளை எல்கை பிரச்சனை) பேராட்டத்தினால் துளிர்விட்டுள்ள ஒற்றுமையும் கெட்டுவிடும் என்று எச்சரிக்கையாக நடந்து கொண்டனர் அனைவரும். (500 கடைகள் மூடப்படுவதாக வெளி வந்த பட்டியலில் இந்த இருகடைகளின் எண்கள் இல்லாத நிலையில் சில சமூக விரோதிகள் கடைகள் முன்பு வெடி வெடித்து கேக் வெட்டி மகிழ்ந்தனர். பின்னர் பேயன்குழி ஊர்மக்கள் அவ்வாறு செய்ததாக பொய்யான செய்தியையும் பரப்பிவிட்டனர்).

பேயன்குழி ஊர் நிர்வாகமும், ஊர்மக்களும் இது நியாயமான போராட்டம் என்று கூறி இந்த பேராட்டத்தினை ஆதரித்ததோடு, தங்கள் ஊர் பெயரை பயன்படுத்தி யாரும் டாஸ்மாக் போராட்டத்தை சீர்குலைக்காதவாறும் கவனித்துக் கொண்டனர்.

கடைகள் மூடப்பட்டதை அறிந்ததும் காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிர்யரும், ஆசிரியர்களும் பேராட்டக்காரர்கள் குழுமியிருந்த காரங்காடு ஆலய மைதானத்திற்கு வந்து தாங்களும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் தான் இந்த பள்ளியில் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்த இரு டாஸ்மாக் கடைகளால் பள்ளி மாணவர்கள் எதிர்காலம் என்னவாகுமோ என்று கவலைப்பட்டு வந்ததாகவும், இன்று தனக்கு நிம்மதியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் தான் எங்கும் கேள்விப்படாதவாறு இங்கு இருகடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும் போராட்டத்தில் பாதிரியாராக இல்லாமல் மக்களோடு மக்களாக முழுமூச்சாக பங்கு கொண்ட பங்கு தந்தை எடிசனுக்கும், மக்கள் அதிகார தோழர். சிவராஜ பூபதிக்கும், வாள்வீச்சு வீரர் டேவிட் ராஜிக்கும் தலைமை ஆசிரியர் சால்வை அணிவித்தார். மேலும் மக்களோடு மக்களாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பங்குத்தந்தை டென்சிங்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Nullivillai proteset (1)

போராட்டத்தின் மூலம் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாகவும், வெற்றியின் அனுபவத்தை மற்றவர்களுக்கு பரப்பவும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதியளிக்காமல் இழுத்தடித்தது. இதே காவல்துறைதான் முற்றுகை போராட்டம் நடத்தும் போது நீங்கள் ஏன் அனுமதியின்றி போராட்டம் நடத்துகின்றீர்கள், எங்களிடம் அனுமதி கேட்டால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்திருப்போம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தந்திருப்போம் என்றனர்.

காவல்துறை அனுமதியளிக்காததையடுத்து 26.11.2016-ம் தேதி நாகர்கோவிலில் கருத்தரங்கம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட சுமார் 220 பேர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் போராட்ட அனுபவத்தைப் பேசிய மக்கள் அதிகாரம் நாகர்கோவில் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர். சிவராஜபூபதி,

“இந்த இரு டாஸ்மாக்கையும் மூட இந்த பகுதி மக்கள் ஏராளமான மனுக்கள் கொடுத்து காத்திருந்தனர் பலனில்லை. ஆர்ப்பாட்டமும் எழுச்சியுடன் நடத்தியுள்ளனர், பலனில்லை. டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியும் என்னும் அமைப்பை உருவாக்கினோம். சாதி, மதம், ஊர் வேற்றுமையின்றி பெண்கள் அதில் இணைந்து கொண்டனர். மக்கள் அதிகாரம் தலைமையில் சாதி, மதம், ஊர் வேற்றுமைகளை கடந்து பெண்களையும், ஆண்களையும் திரட்டினோம். வாரம் இரண்டு முறை, மூன்றுமுறை கூடி திட்டமிட்டும், திட்டமிட்டபடி கிராமம் கிராமமாக சென்றும் நாள் முழுவதும் வாரம் முழுவதும் பிரச்சாரம் செய்தோம். பிரச்சாரம் செல்லும்போது சில இடங்களில் கிராமத்திலேயே உணவும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். மேலும் பேயன்குழி ஊருக்கு சென்று மக்களை போராட்டத்திற்கு அழைத்தபோது அங்குள்ள இந்து கோவிலில் பிரச்சாரத்திற்கு சென்ற கிறிஸ்த மதத்தை சேர்ந்த பெண்கள் அந்த ஊர் பெண்களோடு சேர்ந்து சாமியும் கும்பிட்டனர்.

Nullivillai proteset (4)மேலும் போலீசார் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர்களின் வீட்டருகே உள்ள கடைகளில் வேண்டுமென்றே விசாரித்தனர். சகோதரர் பெயர் குற்ற வழக்கில் இருந்ததை காரணம் காட்டி நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து குற்றவாளியை தேடுவது போல் போராட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண்ணை மிரட்டியது போலீசு. ஊர் முழுக்க, வழி நெடுக போலீசை போட்டு, தடுப்பரண் அமைத்து மிரட்டியும் பார்த்தது, இவற்றுக்கெல்லாம் அஞ்சாத பெண்களால் நடந்தது தான் இந்த போராட்டம். கணவனையும், மகனையும் குடிக்காமல் தடுக்கத் தெரியாத பெண்கள் ஊரை திருத்த கிளம்பிட்டாளுக, கணவனுக்கு அடங்காதவளுக, இதுமட்டுமல்ல இன்னும் பல அவதூறுகள். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே பெண்கள் காதுபட போலீசும் பேசியது.

இவற்றுக்கெல்லாம் தகுந்த பதிலடி கொடுத்து முன்னேறினர் பெண்கள். இரவு 10.00 மணிக்கு தனியாக சென்றும், பகலில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்றும் தாங்கள் வாழும் பகுதிகளில் பெண்களே சுவரொட்டி ஒட்டினர். மேலும் குடிக்கு ஆட்பட்ட தனது கணவரிடம் கொடுத்தும் சுவரொட்டியை ஒட்டினார் ஒரு பெண். நள்ளிரவு சுவரொட்டி ஒட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டதை தெரியப்படுத்த நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் போன் பண்ணியதும் போனை எடுத்தது பேசியது மட்டுமல்ல தனது கணவனோடு நள்ளிரவே காவல் நிலையம் வந்தது, நள்ளிரவே பெண்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறி காவல் நிலையம் செல்ல அணிதிரட்டியது என்று தோழமை உணர்வோடு வேலை செய்தனர். சுவரொட்டிய ஒட்டியதில் ஒருவர் வழக்கறிஞர் என்று தெரிந்தும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் உறுதியையும், தைரியத்தையும் போராட்ட களத்தில் பார்த்த போலீசு அவர்கள் காவல் நிலையம் வந்ததை பார்த்ததும் அஞ்சினர். அதிகமான பெண்கள் கூடிவிடுவதற்குள் கைது செய்யப்பட்ட தோழர்களை வீட்டிற்கு அனுப்ப முனைப்பு காட்டினர் போலீசார்.

போராட்டம் நடைபெற்ற தினத்தில் நள்ளிரவில் பெண்களை சவாரி ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் டாஸ்மாக் போராட்டத்தில் கலந்து விடுதலையாகி வரும் பெண்கள் என்பதை தெரிந்ததும் வாடகை வாங்காமல் இறக்கி விட்டுள்ளார். அது மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வாழ்த்தியும் அனுப்பியுள்ளார். போராட்டம் தொடங்கிய நேரம் முதல் நள்ளிரவு போராட்டம் முடியும் வரை ஒவ்வொரு போராட்டத்திலும் பத்திரிக்கை நண்பர்கள் சிலர் உணர்வுப்பூர்வமாக காத்திருந்து போராட்ட செய்திகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தனர்.

Nullivillai proteset (3)சாதி, மதம், ஊர் வேற்றுமைகளை கடந்து பொதுவான கோரிக்கையின் கீழ் சரியான அரசியல் கண்ணோட்டத்துடன் அமைப்பாக திரண்டு போரடியதால் கிடைத்த வெற்றி இது . மதப்பிரச்சனை, எல்லைப் பிரச்சனை, மக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பு, அமெரிக்காவிடம் பணம் வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள். கிறிஸ்தவர்கள் மட்டும் போராடுகிறார்கள், வீட்டுக்கு அடங்காத பெண்கள் போராடுகிறார்கள் என்று எண்ணற்ற அவதூறுகளை அமைப்பாக திரண்டதால் மட்டுமே முறியடித்து முன்னேற முடிந்தது.

இந்த வெற்றியை நாம் தக்க வைக்க வேண்டும், நம்மோடு வைத்துக் கொள்ளாமல் ஏனைய மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்” என்று போராட்ட அனுபவத்தை பேசினார்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் அமலநாதன் வரலாற்றில் பெண்களின் பங்கு குறித்து பேசினார்.
இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ மோடியின் கறுப்புப் பண மோசடி குறித்துப் பேசினார். டாஸ்மாக்கை மூடுவதற்கு மட்டுமல்ல பறிக்கப்படும் தங்கள் உரிமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஒன்றே தீர்வு என்ற நிலமை நிலவுவதையும் அதற்கு மக்கள் அமைப்பாக திரள வேண்டும் என்ற தேவை நிலவுவதையும் இந்த பேராட்டம் பெண்களுக்கு உணர்த்தியுள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
நாகர்கோவில் பகுதி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க