privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஆபத்பாந்தவா... கருப்புப் பண இரட்சகா...!

ஆபத்பாந்தவா… கருப்புப் பண இரட்சகா…!

-

பெண்கள் ஐயப்பன் கோயிலில் நுழைவதை பகவான் அனுமதிக்க மாட்டார். பார்ப்பனரல்லாதவர்கள் கருவறைக்குள் நுழைவதையும் அவர் அனுமதிக்க மாட்டார். இருப்பினும் பணத்தைப் பொருத்தவரை பகவான் பேதம் பார்ப்பதில்லை. கருப்போ வெள்ளையோ எந்தப் பணமானாலும் அது தனது உண்டியலுக்குள் நுழைவதை அவர் தடுப்பதில்லை.

up-madura-krishnan-temple-2
பத்து இலட்ச ரூபாய் கமிசனாகக் கொடுத்தால், ஐம்பது இலட்ச ரூபாயை வெள்ளையாக மாற்றித் தரும் புரோக்கர் கூடமாக மாறிய உ.பி.- மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோவில்.

தீண்டாமையை மிகவும் கடுமையாக கடைப்பிடித்த கேரளத்து நம்பூதிரிகள் கூட, பெண்கள் விஷயத்தில் தீண்டாமையைக் பார்த்ததில்லை என்பார்கள். அது போலத்தான் இதுவும்.

ஐநூறும் ஆயிரமும் செல்லாது என்று மோடி அறிவித்த மறுகணமே நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது நமக்குத் தெரியும். கூட்டம் அலை மோதிய வேறு இரண்டு இடங்கள் உண்டு. ஒன்று கூகுள். இன்னொன்று கோயில்.

கருப்பை வெள்ளையாக்குவது எப்படி என்று கூகுளில் தேடிய தேசபக்தர்கள் குறித்த புள்ளி விவரம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்தவர்கள் குஜராத்திகள். மோடி மூன்று முறை முதல்வராக இருந்து வளர்ச்சியையும் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்டியதாக சொல்கிறார்களே, அதே குஜராத் மாநிலம்தான்.

பத்து இலட்ச ரூபாய் கமிசனாகக் கொடுத்தால், ஐம்பது இலட்ச ரூபாயை வெள்ளையாக மாற்றித் தரும் புரோக்கர் கூடமாக மாறிய உ.பி.- மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோவில்.
மதுராவில் கிருஷ்ணன் கோவிலில் கருப்புப் பண பரிமாற்றம்

இரண்டாவது இடம், மதுராவில் உள்ள கிருஷ்ணன் கோயில். பத்து லட்சம் ரூபாய் கொடுத்தால், ஐம்பது லட்சத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக அந்தக் கோயிலுடைய பார்ப்பனப் பூசாரி பேரம் பேசுவதை, ஏ.பி.பி. தொலைக்காட்சி ரகசியக் காமெராவில் படம் பிடித்து ஒளிபரப்பியது. இந்த கிருஷ்ண பரமாத்மா வேலை இந்தியா முழுவதும் நடந்திருக்கும். படம் பிடிக்கத்தான் ஆளில்லை.

கர்நாடகாவிலுள்ள எண்ணற்ற மடங்களில் “இன்று ஒரு கோடி கொடுத்தால் கொஞ்சநாள் கழித்து அது 50 லட்ச ரூபாயாகத் திருப்பித் தரப்படும்” என்று கூவி அழைக்காத குறையாக வியாபாரம் நடக்கிறதாம். கேரளாவில் சோட்டாணிக்கரை பகவதி கோயிலில், ஐநூறு – ஆயிரம் நோட்டுகளை வாங்கிக்கொண்டு அம்மனின் “திரு” உருவம் பொறித்த தங்க டாலர்கள் 8-ஆம் தேதி இரவு ஜரூராக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. விசயம் ஊர் சிரித்து விட்டதால், கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறதாம் வருமான வரித்துறை.

இது மட்டுமல்ல, ஐநூறு, ஆயிரம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து நாடு முழுவதும் உள்ள பிரபல கோயில்களின் உண்டியல்கள் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன.

சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்.
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு அம்மனின் “திரு” உருவம் பதித்த தங்க டாலர்களை விற்று கருப்புப் பண பேர்வழிகளை இரட்சித்த சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்.

சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் உண்டியிலில் வழக்கமாக மாதம் 80 இலட்ச ரூபாய் வசூலாகுமாம். நவ. 8-க்குப் பின் பதினைந்தே நாட்களில் சுமார் 2 கோடி ரூபாய்வசூலாகியிருக்கிறது. ஒரிஜினல் திருப்பதி கோயிலில் வழக்கமாக அன்றாடம் 3 கோடி ரூபாய்வசூலாகும் இடத்தில் 6 கோடி ரூபாய் வசூலாகிறதாம். ஷிர்டி சாயிபாபா கோயில், மும்பை சித்தி விநாயகர் கோயில், குஜராத் சோம்நாத் கோயில் உள்ளிட்ட எல்லா பிரபல கோயில்களிலும் பண மழை பொழிகிறது.

”பக்தர்கள் செல்லாத ஐநூறு, ஆயிரத்தை உண்டியலில் போடுவதை கண்காணிக்குமாறு அரசு கூறவில்லை. மேலும் உண்டியலில் பணம் போடுவது என்பது ஒருவருடைய தனிப்பட்ட மத நம்பிக்கை சார்ந்த விவகாரம் என்பதால் அது ரகசியமானது. அதை நாம் தடுக்க முடியாது’’ என்று கூறியிருக்கிறார் ஒரு வருமானவரித்துறை அதிகாரி.

”உண்டியலில் போடப்பட்ட பணம் எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் அதனை வருமான வரித்துறை கண்காணிக்காது. அவற்றுக்கு சட்டரீதியாகவே விலக்களிக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார் மத்திய வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா.

1946 மற்றும் 1978-இல் 500, 1000, 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போதும், திருப்பதி உண்டியலுக்கு விலக்களிக்கப்பட்டது என்பது இன்னொரு தகவல்.

”கோயிலுக்கு பணமாக மட்டுமல்ல, காசோலையாக கொடுத்தாலும் சரி, தங்கமாக கொடுத்தாலும் சரி, அவை எதுவுமே வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் வராது’’ என்று சட்டத்தின் நிலையைத் தெளிவு படுத்துகிறார் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு.

மொத்தத்தில் பகவானின் உண்டியலில் விழுந்த மறுகணமே கருப்பு வெள்ளையாகி விடுகிறது. 500, 1000 நோட்டுகள், அவை எத்தனை கோடியாக இருந்தாலும், ”கோயில் உண்டியலில் விழுந்தவை’’ என்று சொல்லி விட்டால், மறு பேச்சு பேசாமல் வங்கிகள் அவற்றை மாற்றித் தந்து விட வேண்டும் என்பதுதான் சட்டத்தின் நிலை.

சென்னை-தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவில்
நவம்பர் 8-க்குப் பின் பதினைந்தே நாட்களில் 2 கோடி ரூபாய் அளவிற்கு உண்டியல் வசூல் அள்ளிய சென்னை-தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவில்.

“பணம் கடவுளுக்குத்தானே போகிறது” என்று பக்தர்கள் எண்ணலாம். பாவக் காசை கடவுள் வாங்கலாமா? சாராயக்கடையில் கூட ”செல்லாத’’ ரூபாய் நோட்டு கோயில் உண்டியலுக்குள் ”செல்லும்’’ என்றால் அது அயோக்கியத்தனம் இல்லையா? செல்லாத நோட்டை குப்பைத் தொட்டியில் போடுவதற்குப் பதிலாக கோயில் உண்டியலில் கொண்டு வந்து கொட்டுகிறார்களே, இது கடவுளுக்கே அசிங்கமில்லையா?

”பில் போட்டுத்தான் வியாபாரம் செய்ய வேண்டும்’’ என்று வணிகர்களுக்கு சொல்கிறது அரசு. அர்ச்சகருடைய தட்டில் காசு போடக்கூடாது, வேண்டுமானால் கார்டு ஸ்வைப் செய்யலாம் என்று விதி செய்தால் என்ன நட்டம்? உண்டியலில் பணம் போடுபவன் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்றோ, வாங்கின பணத்துக்கு கோயில் நிர்வாகம் ரசீது கொடுக்க வேண்டும் என்றோ சட்டமியற்றினால் யாருக்கு நட்டம்?

8-ஆம் தேதியன்று இரவு ஒரு சாராயக்கடையிலோ, நட்சத்திர விடுதியிலோ, விபச்சார விடுதியிலோ செலவழித்திருக்கக் கூடிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கோயில் உண்டியலில் போட்டு விட்டு, பரலோகத்தில் இடம்பிடிக்க முயற்சிக்கிறான் ஒரு பணக்காரன். கடவுளுக்கு கொடுக்கப்படும் இந்த லஞ்சத்தை மதமும் அரசும் ஏன் அனுமதிக்க வேண்டும்? அடுத்த வேளை கஞ்சிக்கில்லாத ஏழை, செல்லாத நோட்டை மாற்றுவதற்கு வரிசையில் நிற்கும்போது, எல்லாம் வல்ல இறைவனுக்கு எதற்கு செல்லாத நோட்டு?

இந்தக் கேள்விகள் எதற்கும் பக்தர்கள் பதில் சொல்ல முடியாது. பாரதிய ஜனதாக்காரர்கள் பதில் சொல்வார்கள். “கோயிலையும் மடத்தையும் மட்டும் ஏன் சொல்கிறாய்? சர்ச்சையும் மசூதியையும் ஏன் சொல்லவில்லை?” என்ற கேள்விதான், நாம் எழுப்பும் பிரச்சினைக்கு அவர்களுடைய பதிலாக இருக்கும். நாம் திருப்பதி உண்டியலை மட்டும் சொல்லவில்லை, வேளாங்கன்னி உண்டியலையும் சேர்த்துத்தான் சொல்கிறோம். கிறித்தவ, இசுலாமிய மத நிறுவனங்கள் அனைத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறோம்.

நவம்பர் 8-ஆம் தேதிக்குப் பின்னர்தான் கருப்புப் பணம் இங்கே பாய்கிறது என்று நினைக்க வேண்டாம். ஸ்விஸ் வங்கி என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னரே, பாரதத்தின் மன்னர்களும் புரோகிதர்களும் உருவாக்கிய சுவிஸ் வங்கிகள்தான் கோயில்கள். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிலவறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் – இதற்கொரு ஆதாரம்.

ரவிசங்கர், அமிருதானந்தமாயி, ஜக்கி, ராம்தேவ், பங்காரு அடிகள், நித்தியானந்தா போன்ற கார்ப்பரேட் சாமியார்கள், கர்நாடக மாநிலம் மற்றும் வட இந்தியாவின் சாதி வாரி மடங்கள், காஞ்சி-சிருங்கேரி-பூரி போன்ற பார்ப்பன மடங்கள், மற்றும் தனியார் அறங்காவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் போன்றோரின் சொத்து மதிப்பு பல இலட்சம் கோடி ரூபாய்கள்.

எந்த தொழிலதிபர், வணிகர், அரசியல்வாதி, அல்லது அதிகாரியின் கருப்புப் பணம் இங்கே புழங்குகிறது என்பதை வருமானவரித்துறை ஆராயாது. அரசியல் சட்டப்பிரிவு 25, 26 -இன் படி கடவுள் மட்டுமல்ல, உண்டியலும், அதில் செலுத்தப்படும் காணிக்கையும் கூட மத நம்பிக்கையின் ஒரு பகுதிதான்.

ஹிந்து நம்பிக்கை குறித்த விவகாரங்களில் மோடி அரசு தலையிடுமா என்ன?

– தொரட்டி
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________