மோடி வித்தை: மக்களின் சேமிப்பை உறிஞ்சவரும் பிளாஸ்டிக் “அட்டைகள்!”
1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடியின் துக்ளக் தர்பார் நடவடிக்கை கருப்புப் பணத்தை மட்டுமல்ல, கள்ளப் பணப் புழக்கத்தைக்கூட ஒழித்துவிடாது என்பதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வங்கி வாசலில் காத்துக்கிடக்கும் பாமரன் வரை பலரும் கூறிவிட்டனர். இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும், முதலீடு குறையும், வேலையிழப்புகள் ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படத் தொடங்கிவிட்டதை விவசாயிகளும், சிறு வணிகர்களும், தினக்கூலித் தொழிலாளர்களும் படும்பாடு எடுத்துக் காட்டுகிறது.

இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு மோசடி என்றால், இதனின் நோக்கம்தான் என்ன? இந்த இரண்டரை வருட ஆட்சியில் பலமுனைகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ள மோடியும் அவரது அரசும், தமது பிம்பத்தைத் தூக்கிநிறுத்திக் கொள்ளவா? அல்லது, எதிர்வரவுள்ள உ.பி., பஞ்சாப் மாநிலத் தேர்தல்களில் வலுமிக்க எதிர்க்கட்சிகளை முடக்கிப் போடும் நோக்கத்திற்காகவா? அல்லது இந்த அரசியல் காரணங்களுக்கு அப்பால் வேறு எதுவும் மறைமுகத் திட்டம் மோடிக்கு இருக்கிறதா?
இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஆம் எனப் பதில் கூறலாம். பீற்றிக் கொள்ளப்படும் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னே மோடியின் சுயநல அரசியல் கணக்குகளும், மோடியைப் பெருஞ்செலவில் பிரதமராக அமர்த்தியிருக்கும் தரகு முதலாளிகளின் நலன்களும் மறைந்திருக்கின்றன.
பிரதமர் நரேந்தர மோடி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை நவம்பர் 8 அன்று இரவில் வெளியிட்டார். மறுநாள் காலை நாளிதழிலேயே, இந்த அறிவிப்பை வரவேற்று மோடியின் படத்தைப் போட்டு முழுப் பக்க விளம்பரத்தை வெளியிட்டது பேடீம் என்ற நிறுவனம் பேடீம், கைபேசி வழியாக பணப் பரிமாற்ற வர்த்தகத்தை நடத்தி வரும் நிறுவனம்.

பேடீம் போன்ற தனியார் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுத்துறை வங்கிகளும்கூட பணப் பரிமாற்றத்திற்குத் தங்களின் செயலிகளைப் பயன்படுத்துமாறும், அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்ற விளக்கத்தோடும் நவம்பர் 8-க்குப் பிறகு விளம்பரங்களை வெளியிட்டன.
இதே நேரத்தில்தான் மைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ”இந்தக் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை இந்தியாவைப் பணமற்ற பொருளாதாரத்திற்கு உந்திக்கொண்டு போகும் முதல் அடி” எனத் தெரிவித்தார்.
பணத்திற்குப் பதிலாக, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற அட்டைகளையும், பணப் பரிமாற்ற செயலிகளையும் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதும் விற்பதுமான வர்த்தக நடவடிக்கைகளைத்தான் பணமற்ற பொருளாதாரம் எனக் குறிப்பிடுகிறார்கள். கறுப்புப் பணம் உருவாவதற்கும், அதனைப் பதுக்கி வைப்பதற்கும் பணப் பொருளாதாரம்தான் காரணமாக இருப்பதாகவும், பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறிச் செல்லுவதன் மூலம் கறுப்புப் பணத்தையும் இலஞ்சத்தையும் அறவே ஒழித்துக்கட்டிவிட முடியுமென்றும்; பண வீக்கத்தை, அதாவது விலைவாசியைக் கட்டுப்படுத்தி, கடனுக்கான வட்டியையும் குறைத்துவிட முடியுமென்றும் பணமற்ற பொருளாதாரம் குறித்துக் கவர்ச்சிகரமான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது, பா.ஜ.க.
* * *
நாட்டிலுள்ள 1,34,000 வங்கிக் கிளைகளில் 84,000 வங்கிக் கிளைகள் பெரு நகரங்களிலும், நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே இயங்கி வருகின்றன. அதாவது, ஒவ்வொரு ஐந்து கிராமங்களுள் நான்கு கிராமங்களில் வங்கிக் கிளைகளே என்பதுதான் இதிலிருந்து கிடைக்கும் உண்மை. ஒவ்வொரு ஐயாயிரம் பேரில் ஒருவரிடம் மட்டுமே கிரெடிட் கார்டு உள்ளது. ஒவ்வொரு ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டுமே டெபிட் கார்டு உள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு அட்டை வைத்திருப்பவர்களுள் பெரும்பாலோர் அதனைப் பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துவதில்லை. இந்த பிளாஸ்டிக் பண அட்டைகளை வைத்திருப்போரில் 90 சதவீதப் பேர், அவற்றை ஏ.டி.எம். மிஷின்களிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டிலுள்ள 1.4 கோடி வர்த்தக நிறுவனங்களில் வெறும் 14 இலட்சம் கடைகளில் மட்டுமே பண அட்டைகளைப் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. நாட்டின் மொத்த தொழிலாளர்களுள் 33 சதவீதம் பேர் – ஏறத்தாழ 15 கோடி தொழிலாளர்கள் பணக் காகிதத்தை மட்டுமே நம்பியிருக்கும் அமைப்புசாரா தினக்கூலி தொழிலாளர்கள். இவை அனைத்திற்கு மேலாக ஒவ்வொரு நாளும் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளுள் 87 சதவீதம் பணப் பரிமாற்றம் வழியாகத் தான் நடைபெறுகிறது.
இந்தியாவின் வர்த்தக, பொருளாதார நிலவரம் இவ்வாறிருக்க, வங்கிக் கணக்கும், ஸ்மார்ட் போனும், ஆதார் அட்டையும், பண அட்டைகளைத் தேய்க்கும் இயந்திரங்களும் இருந்துவிட்டால் பணமற்ற பொருளாதாரத்திற்குக் கைசொடுக்கும் நேரத்தில் மாறிச் சென்றுவிடலாம் என பா.ஜ.க. தலைவர்கள் கதைப்பது கதைகளுக்குக்கூட ஒத்துவராத கற்பனை. இன்னொருபுறமோ, பா.ஜ.க.வின் இந்த விபரீதக் கற்பனை சாதாரண மக்கள் மீது ஏவிவிடப்படும் பொருளாதார வன்முறையாகும்.
இரண்டாவதாக, பணமற்ற பொருளாதாரத்தின் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியும் என்ற பா.ஜ.க.வின் வாதம் மாபெரும் பொய். முதலாளித்துவ பொருளாதாரத்தின் கீழ் பணத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட முடியாது என்பது ஒருபுறமிருக்க, இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக பிளாஸ்டிக் பணத்தைப் பயன்படுத்தும் ஏகாதிபத்திய நாடுகளில்கூட கருப்புப் பொருளாதாரம் ஒழிந்துவிடவில்லை. அமெரிக்காவில் 1,60,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கும், ஜப்பானில் 48,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கும் கருப்புப் பொருளாதாரம் கோலோச்சுவதாகக் குறிப்பிடுகிறது, உலக வங்கியின் அறிக்கை.
உலகிலேயே பிரேசில்தான் பணப்புழக்கம் குறைவாகவும், பிளாஸ்டிக் அட்டை புழக்கம் அதிகமாகவும் உள்ள நாடு. ஆனால், பிரேசிலில்தான், பணப்புழக்கம் அதிகமாக உள்ள நாடுகளைக் காட்டிலும் இலஞ்சமும் கருப்புப் பணமும் பிசாசுத்தனமாகத் தலைவிரித்தாடுவதைப் பல்வேறு புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் மூலம்தான் பெருமளவில் கருப்புப் பணம் திரள்கிறது. இந்த வர்த்தகத்திற்குரிய பில்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாகத்தான் சென்று வருகின்றன. இப்படிச் சட்டபூர்வமாக மட்டுமின்றி, சட்டவிரோத வழிகளிலும் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு வங்கிகள் புரோக்கர்களைப் போலச் செயல்பட்டுவருவதும் அம்பலமாகியிருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி. என்ற தனியார் வங்கி போதை மருந்து கடத்தல் பணத்தைக் கைமாற்றிய விவகாரமும், டெல்லியிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையொன்றின் வழியாகப் போலியான ஏற்றுமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, கருப்புப் பணம் கடத்தப்பட்ட விவகாரமும் வங்கிகளின் குற்றப் பின்னணியை எடுத்துக்காட்டும் சமீபத்திய உதாரணங்கள்.
உண்மை இவ்வாறிருக்க, மோடியும் பா.ஜ.க. கும்பலும் வங்கிகளின் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள்தான் வெளிப்படையானவை என்றும், பணப் பரிமாற்றம் மூலம் நடைபெறும் வர்த்தகம் அனைத்தும் கருப்பென்றும் அபாண்டமாகப் பழி போடுகின்றன. குறிப்பாக, வரி கட்டாமல் ஏய்க்கும் நோக்கில்தான் சிறு வணிகர்கள் பணமற்ற பொருளாதாரத்திற்கு மாற மறுக்கிறார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள். பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கும் பொதுமக்களை அக்குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதாக அவமதிக்கிறார்கள்.

ரசீதுகளே இல்லாமல் சிறு வணிகம் நடந்துவருகிறது என்ற குற்றச்சாட்டில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு அளவிற்கு கம்ப்யூட்டர் மூலம் ரசீதுகளைத் தயாரித்து வியாபாரம் நடத்தும் மால்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன என்பதும் உண்மை. வரி ஏய்ப்பைத் தடுத்து நிறுத்தி, வரி வருமானத்தை அதிகரிப்பதுதான் மோடி அரசின் உண்மையான நோக்கமென்றால், அவர்கள் வோடாஃபோன் மீதும், நோக்கியா மீதும்தான் முதலில் பாய வேண்டும். ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வாரி வழங்குவதை நிறுத்த வேண்டும்.
அதனைச் செய்வதற்கு விருப்பமோ, துணிச்சலோ இல்லாத மோடி கும்பல், தனது வரி வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கு சிறு வணிகர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினரைக் குறி வைக்கிறது. ஏற்கெனவே 28 சதவீத அளவிற்கு மறைமுக வரிகளும், அதற்கும் மேலே செஸ் வரிகளும் சுமத்தப்பட்டுச் சுரண்டப்பட்டு வரும் இவர்களை நேரடி வரியான வருமான வரி வலைக்குள்ளும் சிக்க வைப்பதுதான் மோடியின் திட்டம். ஒருபுறம் வரி விதிப்புகள் மூலமும், இன்னொருபுறம் பொதுமக்களின் கைகளிலுள்ள ரொக்கப் பணத்தையும், சேமிப்புகளையும் வங்கிகளின் கஜானாவிற்குக் கொண்டுவருவதன் மூலமும் அரசின் பற்றாக்குறையை ஈடுகட்டிக் கொள்வதோடு, இந்தியத் தரகு முதலாளிகளுக்குத் தேவைப்படும் மூலதனத்தையும் திரட்டிக் கொடுக்கும் திட்டத்தோடுதான் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது; பணமற்ற பொருளாதாரம் குறித்து ஆரவாரம் செய்யப்படுகிறது.
2015-16 ஆம் நிதியாண்டில் நாட்டிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுள் ஆறு பொதுத்துறை வங்கிகள் மட்டும்தான் இலாபம் ஈட்டியுள்ளன. ஸ்டேட் பாங்க் குழுமம் உள்ளிட்ட அந்த ஆறு வங்கிகளின் இலாபமும் அதற்கு முந்தைய நிதியாண்டைவிடக் கணிசமாகக் குறைந்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் இப்படி நட்டத்தில் சிக்கி, திவாலாகும் நிலை நோக்கிச் செல்லத் தொடங்கியிருப்பதற்குக் காரணமே வங்கிகளின் வாராக் கடன்தான்.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபொழுது, 2014-15 ஆம் நிதியாண்டில் 2.67 இலட்சம் கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், 2015-16 ஆம் நிதியாண்டின் இறுதியில் 4.76 இலட்சம் கோடியாகவும், ஜூன் 2016 இறுதியில் 6.50 இலட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. வாராக் கடன் என வரையறுக்கும் நிலையில் உள்ள 3.30 இலட்சம் கோடி ரூபாய்களையும் இதோடு சேர்த்தால், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், அதனின் மொத்தக் கடனில் 16 சதவீதமாகும் எனக் குறிப்பிடுகிறது கிரெடிட் சுயிஸ் நிறுவனம்.
ரிசர்வ் வங்கி மார்ச் 2015-இல் வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 100 நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை ஏறத்தாழ 20 சதவீதமாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. அவற்றுள் ஒரு பத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொகை மட்டும் 56,467 கோடி ரூபாய்.
இந்தத் தரகு முதலாளிகளிடமிருந்து கடனை வசூலித்து பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலையைச் சீராக்க அரசு தயாராக இல்லை. ஸ்டேட் வங்கிக் குழுமத்தின் இலாபம் 67 சதவீதம் சரிந்துவிட்ட நிலையில்கூட, அவ்வங்கிக் குழுமம் 60 முக்கிய நிறுவனங்கள், பிரமுகர்கள் செலுத்த வேண்டிய ஏழாயிரம் கோடி ரூபாய் பெறுமான கடன்களைச் சமீபத்தில் தயங்காமல் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் மோடி அரசால் இலண்டனில் வைத்துப் பாதுகாக்கப்படும் தரகு முதலாளி விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகை 1,201 கோடி ரூபாய். அரசு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்படும் வாராக் கடன்கள் அனைத்தும் தரகு முதலாளிகளிடம் கருப்புப் பணமாகத் திரள்கிறது என்பதே உண்மை.
வாராக் கடன்களால் திவாலாகும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுப்பதற்கும், அவை புதிய கடன்களை வழங்குவதற்கும், ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் விதித்துள்ள பாஸல் 3 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் மார்ச் 2019-க்குள் பொதுத்துறை வங்கிகளுக்கு 2,40,000 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை ஒரே மூச்சில் வங்கிகளில் திரட்டிக் கொள்ளும் மறைமுக நோக்கத்தோடுதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பணமதிப்பு நீக்கப்பட்ட 14 இலட்சம் கோடி ரூபாயில் பொதுமக்கள் கியூவில் நின்று மாற்றிக் கொண்டது போக, வங்கிகளில் சேமிப்பாகச் சேரும் தொகை ஒன்பது இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பது இலட்சம் கோடி ரூபாயில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயச் சேமிப்பாக செலுத்த வேண்டிய தொகை 2.25 இலட்சம் கோடி ரூபாயாகும். இந்தத் தொகை மிகக் குறைந்த வட்டியில் அரசுக்குக் கடனாக அளிக்கப்படும். மேலும், வங்கிகளில் செலுத்தப்பட்ட ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் மூலம் அரசுக்கு 90,000 கோடி ரூபாய் வருமான வரியாகக் கிடைக்கும். இவை போக, வங்கிகளில் செலுத்தப்படாமல் கைவிடப்படும் கருப்புப் பணம் 2.5 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என அரசு மதிப்பிட்டிருக்கிறது. இதுவும் அரசின் நிதி அறிக்கையில் வரவாகக் காட்டப்பட்டு, இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் மட்டும் அரசிற்கு நோகாமல் கிடைக்கும் வருமானம் 5.5 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்படுகிறது. அரசிற்குக் கிட்டும் வருமானத்திற்கு அப்பால், வங்கிகளிடம் பொதுமக்களின் சேமிப்பாக 6.75 இலட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றும், இந்தப் பணத்தைத் திரும்ப எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளால் இந்தச் சேமிப்பின் பெரும்பகுதி வங்கிகளின் புழக்கத்திலேயே இருத்தப்படும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
இந்தப் பணத்தைக் கொண்டு பொதுமக்களுக்குத் தேவையான சாலை வசதி, சுகாதார வசதிகளைச் செய்து தரப் போவதாகக் கூறுகிறது, மோடி அரசு. இது காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் பொய். பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கல்வி போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யப் போவதாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறியிருக்கிறதா? கல்வி, சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு என்ற பெயர்களில் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வரும் செஸ் வரிகள், அவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டதுண்டா? பொதுமக்களின் பணம் வங்கிகளில் கோடிக்கணக்கில் குவியத் தொடங்கியவுடனேயே, பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டித் தொகையைக் குறைத்துவிட்ட மோடி அரசு, பொதுமக்களின் நலனுக்காக இந்தப் பணத்தைச் செலவிடும் எனக் காதில் பூ முடிந்தவன்கூட நம்ப மாட்டான்.
மாறாக, இந்தப் பணம் முழுவதும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடனாகத் தரப்படும். அரசு-தனியார் கூட்டுத் (பி.பி.பி.) திட்டங்களில் அரசின் முதலீடாகக் கொட்டப்படும். அரசின் பற்றாக்குறையும், வாராக் கடனால் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நட்டமும் ஈடு செய்யப்படும்.
சுருக்கமாகச் சொன்னால், கருப்புப் பணத்திற்கு எதிராக மோடி தொடங்கியிருக்கும் இந்தப் புனிதப் போர், பொது மக்களின் கைகளில் இருந்த சேமிப்புகளை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருக்கிறது. சில்லறைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறும்படியான நிர்பந்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிர்பந்தம் வாயிலாக, பேடீம் உள்ளிட்ட பணப் பரிமாற்ற நிறுவனங்கள், ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட தரகு முதலாளிகள் தொடங்கவுள்ள பேமண்ட் வங்கிகளின் வர்த்தகத்திற்கும் இலாபத்திற்கு உத்தரவாதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது இந்தியாவிற்கு நல்ல நாள் பிறக்கப் போவதாக உடுக்கை அடித்தார். பொது மக்கள் தமக்குச் சொந்தமான பணத்தை எடுக்க வங்கி வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். இந்தியத் தரகு முதலாளிகள் வங்கிகளில் முடக்கப்பட்டிருக்கும் மக்களின் பணத்தில் மஞ்சக் குளிக்கப் போகிறார்கள். மோடியும் பா.ஜ.க.வும் பிரச்சாரம் செய்ய நல்ல நாள் இப்படித்தான் விடிந்திருக்கிறது.
– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________