Friday, February 26, 2021
முகப்பு அரசியல் ஊடகம் மோடியின் சகாரா டைரி - தி இந்துவின் சந்தர்ப்பவாத டைரி

மோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டைரி

-

க்களிடம் 500, 1000 -ஆக இருக்கும் ரொக்கப் பணம் செல்லாது என்று மோடி கும்பல் அறிவித்ததை நாம் எதன் மூலம் தெரிந்து கொண்டோம்? பத்திரிக்கைகள் மற்றும் காட்சி ஊடகங்கள் மூலமாக அல்லவா? அப்படியானால் முதலில் அதன் மாட்சிமையைத் தெரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.

பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையை கருப்புப் பண ஒழிப்பு என்று காவி வானரங்கள் போக்கு காட்டி வந்த நிலையில், சகாரா குழுமத்திடம் இருந்து மோடி 13 தவணைகளில் 55 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றிருக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதை பத்திரிக்கைகள் எப்படி கையாண்டன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மோடியின் மீதான இலஞ்சக் குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சுமத்துவதாகவும் இது வழக்கமான தேர்தல் அரசியல் (தேர்தல் அரசியலுக்கு வந்து இழிபுகழைப் பார்த்தீர்களா?!) என்றும் பத்திரிக்கைகள் படம் காட்டின. ஆனால் மோடி இலஞ்சம் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட மத்திய நீதி-பரிபாலன முறைமைகளுக்கு முன்னரே தெரியும் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது (பார்க்க: தி கேரவன் இதழ், 18-11-2016).

படம் : நன்றி நக்கீரன்
படம் : நன்றி நக்கீரன்

வருமானவரித்துறை புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர் அங்கீதா பாண்டே சகார குழுமத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். அங்கீதா பாண்டேவோடு, ஆவணங்களை சரிபார்த்த பிறவருமானவரித்துறை அதிகாரிகளின் கையெழுத்தும் இருக்கிறது.

டெல்லி தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் ஆவணங்களுக்கான துணை இயக்குநர் அனுராக் ஷர்மா 01-07-2016 அன்று கையெழுத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்திருக்கிறார்.

வருமானவரித்துறையின் இந்த ரெய்டு குறித்த தகவல் மற்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரசாந்த் பூஷண் கீழ்க்கண்ட அமைப்புகளிடம் முறையிட்டிருக்கிறார்.

  • கருப்புப் பணத்தை ஒழிப்பற்காக உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி எம்.பி.ஷா மற்றும் அர்ஜூன் பயாசத் தலமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு
  • அமலாக்கத்துறை (Enforcement Deparment),
  • மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தலைவர் (Chairman-CBDT, Central Board of Direct Taxes),
  • வருமானவரித் தீர்வை ஆணையத்தின் தலைவர் (Chairperson, Income Tax Settlement Commission )
  • மத்திய ஊழல்ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் (Central Vigilance Commissioner)

இருந்தும் என்ன பயன்? அரசை எதிர்த்து போராடாமல் அரசின் உறுப்புகளிடம் முறையிடுவதுதான் ஜனநாயகம் என்று மக்களுக்கு மூச்சிரைக்க வகுப்பெடுக்கும் பத்திரிக்கைகள் மோடி குறித்த முறையீட்டில் இதுவரை மவுனம் சாதிப்பதன் மர்மம் தான் என்ன?

prashant-bhushan
பிரசாந்த் பூஷண்

சகாரா குழுமத்தில் ரெய்டு நடத்தியது தொடர்பாக வருமானவரித்துறை தாக்கல் செய்த முன்வரைவு அறிக்கை (Appraisal Report) 16-11-2016 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்தது. 15-11-2016 அன்று தி இந்து ஆங்கில நாளிதழ் இதுபற்றிய செய்தியை மேம்போக்காக வெளியிட்டுவிட்டு மோடியின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை வெளியிடவில்லை! என்ன காரணமாக இருக்கும்?

உச்சநீதிமன்றம் இத்தகைய ஆவணங்களை ஓர் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கைவிரித்தது (நீதிமன்றத்தின் மாண்பு குறித்து பிறகு நாம் தனியே பார்போம்). நீதிமன்றங்கள் போன்றே தி இந்து  போன்ற பத்திரிக்கைகளும் ஒருவேளை இத்தகைய ஆவணங்களை நம்பத்தகுந்த ஆதாரமாக கணக்கில் கொண்டிருக்காதோ?

ஆனால் தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் விசயத்தில் அப்படி நடக்கவில்லை.

வருமானவரித்துறையினர் ராம்மோகன் ராவ் வீட்டில் நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக 24-12-2016 அன்று தி இந்து பத்திரிக்கை “சிக்கியது டைரி” எனும் உட்தலைப்பில் கீழ்க்கண்ட செய்தியை பிரசுரித்திருந்தது.

ராமமோகன ராவின் அண்ணா நகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர் பாதுகாப்பாக வைத்திருந்த ரகசிய டைரி ஒன்று சிக்கியுள்ளது. அதில் பல முக்கிய தகவல்களை அவர் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கியப் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பல பிரமுகர்களின் பெயர்கள் அந்த டைரியில் உள்ளதாக தகவல் பரவிவருகிறது.

அவர்கள் அனைவரும் ராம மோகன ராவுடன் ஒரு வலைப் பின்னல் போல செயல்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் அதில் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எந்த வகையில் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது? பரஸ்பரம் அவர்கள் எவ்வளவு லாபம் அடைந்தார்கள் என்ற விவரங்களையும் ராமமோகன ராவ் விளக்கமாக அதில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக அவர்களிடையே ஏற்கெனவே நடந்துள்ள தொலைபேசி உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.”

மோடி இலஞ்சம் வாங்கியதாக கூறப்படும் சகாரா குழுமத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தி இந்து பத்திரிக்கைக்கு முக்கியமான ஆதாரமாக தெரியாத பொழுது ராம மோகன ராவின் டைரி மட்டும் தி இந்துவிற்கு முக்கிய ஆதாரமாக தெரிவதற்கு என்ன காரணம்?

Samas
சமஸ்

தமிழ்நாட்டில் பா.ஜ.க கும்பல் வேரூன்றுவதற்கு பார்ப்பனியப் பத்திரிக்கைகள் மன்னார்குடி மாஃபியா கும்பலின் ஊழலை மட்டும் தொட்டு நக்கும் ஊறுகாயாக பயன்படுத்துவதற்கான முகாந்திரம் இதில் தெளிவாக தெரிகிறது. ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ராம்மோகன ராவ் ஜெயா ஆசியுடனேயே தமிழகத்தில் வலம் வந்தார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை மன்னார்குடி கும்பலின் ஊழலை மக்களிடம் இருந்து மறைத்தவர்கள் இதே பத்திரிக்கைகள் தான். அப்பொழுது பார்ப்பன ஜெ-வின் பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக் கொண்டார்கள். இப்பொழுது ஜெயலலிதா செத்தபிறகு, ‘சிக்கியது டைரி’ என்று சீறுகிறார்கள்!

இதை வேறு ஒரு கோணத்தில் இருந்தும் பரிசீலிக்க முடியும். தி இந்து (தமிழ்) நடுப்பக்க கட்டுரைகளுக்கான ஆசிரியர் சமஸ் அவர்கள், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் சுதந்திரமாக காற்று கூட விட்டதில்லை! ஆனால் ஜெயலலிதா செத்தபிறகு ஜெயலலிதாயிசம் என்று எழுதுமளவிற்கு துணிந்திருக்கிறார்! மேலும் மன்னார்குடி கும்பலின் அட்டூழியங்களை சாடுவதிலும் முதன்மையாக இருக்கிறார்! அரசின் எந்த உறுப்பையும் சாராதவர்கள் அதிகாரத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பாத எதிர்கட்சிகளை காறித்துப்பாத குறையாக கடுமையாக சாடுகிறார்.

ஆனால் மாண்புமிகு சமஸின் மானமிகு முயற்சிகளை தி இந்து பத்திரிக்கையாளர் இரா.வினோத்தின் கட்டுரை தவிடு பொடியாக்கிவிடுகிறது. 24-12-2016 அன்று “கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழகத்தின் புதிய ஆளுநர்” எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை இப்படிக் கூறுகிறது;

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஆனந்திபென் படேல் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்நிலையில் கர்நாடகா மாநில பாஜக மூத்த‌ தலைவரும், சட்டமேலவை உறுப்பினருமான டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக நியமிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பு பரிந்துரை செய்தது. எனவே டி.ஹெச்.சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக‌ நியமிக்க பாஜக மேலிடம் முடிவெடுத்தது.(அழுத்தம் எம்முடையது)

இரா. வினோத் தன் கட்டுரையில், அரசு உறுப்புகளில் அங்கம் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் பா.ஜ.க மேலிடம் முடிவெடுத்தது என்று சனநாயகத்தின் சீரிய மாண்பை போட்டு உடைக்கிறார்.

அரசு உறுப்புகளில் அங்கம் வகிக்காத ஆர்.எஸ்.எஸ், மத்திய அரசுக்கு உத்தரவு போடுவதை அமைதியாக ஆமோதிக்கிறவர்கள், அதற்காக குறைந்தபட்சம் இம்மியளவும் முணுமுணுக்காதவர்கள் அதிகாரத்தில் இல்லாத மன்னார்குடி கும்பல், தமிழ்நாட்டு அரசை ஆட்டுவிப்பதாக முக்கி முணுகுவது ஏன்?

Sasikala - AIADMKஇது என்னவகையான அரசியல் என்பதை புரியாதவர்கள் 02-01-2017 அன்று தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த கருத்துப்படத்தைப் பாருங்கள். ஓ.பி.எஸ்ஸின் தலையில் சசிகலா அமர்ந்திருப்பது கச்சிதமாக வரையப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் தலையில் ஆர்.எஸ்.எஸ் உட்கார்ந்திருப்பதை தி இந்து பத்திரிக்கை திட்டமிட்டு மறைத்து ஒற்றைக்கண் ஒட்டகமாக தமிழகத்தில் உலா வருகிறது.

இதில் தி இந்து பத்திரிக்கை புரோமோட் செய்யும் இன்னொரு செய்தியும் கவனிக்கப்படவேண்டும். தலைமைச்செயலகத்திலும் தலைமைச் செயலாளர் வீட்டிலும் வருமானவரித்துறை மத்திய காவல் படையைக் கொண்டு சோதனையை நடத்தியது அரசு நெறிமுறைகளுக்கு எதிரானது என்று குரல் எழுந்தது (தி இந்துவும் கூட குரல் எழுப்பியது!!!).

அப்பொழுது வருமானவரித்துறையே விளக்க அறிக்கை கொடுத்திருப்பது செய்தியாக்கப்பட்டது (பார்க்க: ராம மோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையில் விதி மீறல்கள் இல்லை: வருமான வரித்துறை விளக்கம், தி இந்து தமிழ், 28-12-2016).

ஆனால் மோடி இலஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டிருக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்ட வருமானவரித்துறை (புலனாய்வு) இணை இயக்குநர் அங்கீதா பாண்டே தற்பொழுது நீண்ட தொடர் விடுப்பில் இருக்கிறார். மேலும் பத்திரிக்கையாளர்கள் அங்கீதாவிடம் கருத்து கேட்க முயன்ற பொழுது, அரசு பணியாளர் இதுபோன்று பேட்டியளிப்பது கூடாது என்று விதியை நினைவுறுத்தியிருக்கிறார்.

இப்பொழுது மட்டும் வருமானவரித்துறைக்கு எங்கிருந்து விதி வந்தது? அல்லது தி இந்து போன்ற பத்திரிக்கைகள் இதைக் கண்டும் காணாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

தி இந்து போன்ற ஆளும் வர்க்க ஊடகங்களின் செயல்திட்டத்தின் பின்னணியை தோழர் லெனின் இப்படி அம்பலப்படுத்துவதோடு இதை முறியடிப்பதற்கு தீர்வொன்றையும் சொல்கிறார்;

“நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லா விதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு  கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டுவருகிறது.——

இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து, அந்த சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.”

(லெனின்-மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும்).

– தமிழ்வேல்

  1. வெறும் டைரியில் இருந்த பெயரையும் எண்ணையும் வைத்து விகாஸ் என்ஜினின் வடிவைமைப்பாளர் நம்பியூர் நாராயணன் என்ன பாடு படுத்தப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே ! இந்தியாவில் வலியோருக்கும் எளியோருக்கு இரண்டு விதமான நடைமுறைகள் என்பது சாபக்கேடு

  2. அப்ப கல்கத்தா-வில் நடைபெற்ற நிதி நிறுவன ஊழலில் சிபிஐ யால் திருணாமுல் காங்கிரஸ் எம்பிகள் கைது செய்யபடுவது போன்று இவரும் கைது செய்ப்டுவாரா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க