Sunday, January 17, 2021
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் டெல்டா மாவட்டங்களில் பிரம்மாண்டமான பிரச்சாரம் - உங்களையும் அழைக்கிறது மக்கள் அதிகாரம்

டெல்டா மாவட்டங்களில் பிரம்மாண்டமான பிரச்சாரம் – உங்களையும் அழைக்கிறது மக்கள் அதிகாரம்

-

comrades-propaganda-at-tanjoreமிழக வரலாற்றில் இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத சம்பவம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் நெஞ்சு வெடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். கருகிய பயிரைக் கையில் பிடித்தபடி செத்துக்கிடக்கிறார்கள், வயல்வெளிகளில்.டெல்டா மாவட்டமே இப்போது சுடுகாடாக காட்சியளிக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் வறட்சியும் அதன் பாதிப்புக்களுமே எதிரொலிக்கின்றன. என்ன செய்வது என்று ஆத்திரத்துடன் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகள் என்றுதானில்லை. டெல்டாவில் எங்கு திரும்பினாலும் யாரிடம் பேசினாலும் விவசாயிகளின் மரணங்களும் கருகிய பயிர்களும் பேசிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கல்லூரி மாணவனிடம்  “ எப்படி கல்லூரி படிப்பு போகிறது” என பேசினால் கூட விவசாயிகளின் சாவைப்பற்றி பேசுகிறான்.  ஒரு ஓட்டல் உரிமையாளரிடம்  “பொங்கல் எப்படி கொண்டாடப் போறீங்க?” என்று கேட்டால் “தம்பி நீங்க வெளியூரா? விவசாயி சாவுறான் எப்படி பொங்கல் கொண்டாட முடியும்?” என்கிறார்.

comrades-propaganda-at-tanjore1ஒவ்வொரு நாளும் எத்தனை விவசாயிகள் செத்துப் போவார்கள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால்  வயல்வெளிக்குச் சென்றாலே தாங்கள் செத்துப்போய் விடுவோம் என்கிறார்கள் விவசாயிகள். ஜெயலலிதா  மறைவை தாங்க முடியாமல் செத்துப்போனார்கள் என்று 3 லட்ச ரூபாய் கொடுத்த அதிமுகவோ விவசாயிகள் சாவை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ஏளனம் செய்கிறது. கரும்பு காய்ந்து போனதை பார்க்க மாட்டாமல் நெஞ்சு வெடித்து செத்துப் போன விவசாயி குடும்பத்துக்கு பொங்கலை முன்னிட்டு 2 அடி கரும்பு கொடுக்கிறோம் என்கிறது தமிழக அரசு. பணமதிப்பிழப்பிற்கு பின்னர் கடன்கூட வாங்க முடியாத நிலையில் விவசாயிகள் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இத்தனை விவசாயிகளைக் கொன்றது காவிரியைத் தடுத்த மோடி அரசும்  ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக – ராவ் – ரெட்டி கும்பல்தான். கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு என்ற முழக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு  செல்கிறது மக்கள் அதிகாரம். இனியும் ஒரு விவசாயி கூட சாகக்கூடாது. பொங்கல் நமக்கு இல்லை. உழவர்கள் சாகும் போது உழவர்திருநாள் எப்படி நடத்த முடியும்? விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் போது ஜல்லிக்கட்டின் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பதையும் சசிகலா ஆட்சியைப்பிடிக்க தகிடுதத்தங்கள் ஆடிக்கொண்டிருப்பதையும் மோடியின் உளறல்களையும்  எப்படி சகிக்க முடியும். நமது இதயம் கல்லால் செய்யப்பட்டிருக்கிறதா என்ன?

comrades-propaganda-at-tanjore2விவசாயிகளுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும். அதை முன்வைத்து மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளிகளும் இதோ தஞ்சை டெல்டாவில் விவசாயிகளை சந்திக்கிறார்கள். நம்முடைய வாழ்வை அழித்த இந்த அரசை அழிக்காமல் தீர்வு இல்லை என்பதை முழங்குகிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன  என்று பேசுவோர்களை நீ வயிற்றுக்கு சோற்றை தின்கிறாயா இல்லையா என்று சவுக்கால் அடித்து சொரணையை வரவழைக்கிறார்கள். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் சொல்லுகிறார்கள்   ஆறு  குளங்களைத் தூர்வாராமல் நம் வாழ்வை அழித்த அரசை தூர்வாருவதுதான்  போகி.

சோழநாடு சோறுடைத்தது என்பார்கள் இன்றோ சோழநாடு சுடுகாடாகிவிட்டது. இதைப்பற்றி பேசாமல் இருப்பது அவமானம் மட்டுமல்ல; மனிதனாக வாழ்வதற்கே தகுதியற்றதற்கான அடையாளம். உலகிற்கே சோறு போட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க ஆதரவுக் கரம் நீட்ட நாங்கள் இருக்கிறோம் என மக்கள் அதிகாரம் தோழர்கள் கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து வருவோம் என நம்பிக்கை ஊட்ட டெல்டாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள்.

உரிமையோடு அழைக்கிறது மக்கள் அதிகாரம்.

(படங்களைப் பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

மக்கள் அதிகாரம்
திருவாரூர் நாகை தஞ்சை  மாவட்டங்கள்
தொடர்புக்கு – 99623 66321

  1. போராடும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் ! வெல்லட்டும் நமது போரட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க