Wednesday, January 20, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் விளையற பூமியை தரிசா போட முடியாது !

விளையற பூமியை தரிசா போட முடியாது !

-

cow-at-paddy-field
வயல் வெளிகளில் ஆடு, மாடுகள் என கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன.

நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் துவண்டு கிடந்தன. கணிசமாக ஏக்கரில் இறால் பண்ணைகளும் அமைக்கப்பட்டு அதற்கு தேவையான தண்ணீரை ராட்சத மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சேமங்கலம் என்ற கிராமத்திற்கு நாங்கள் சென்று கொண்டிருந்தோம். மேடும் பள்ளமுமாய் இருந்த அந்த சாலையில் செல்வதே பெரும் சிரமாய் இருந்தது. வழியில் ஒரு பக்கம் ஏரியும் மறு பக்கம் வயல்களும் இருந்தது. அந்த ஏரியில் இருந்த நீரை இஞ்சின் வைத்து விவசாயிகள் பாசனத்திற்காக உறிஞ்சியதால் ஏரி வறண்டு காணப்பட்டது. போதிய தண்ணீர் இல்லாததால் வயல்களும் வறண்டிருந்தன.

வயல் வெளிகளில் கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இரண்டு விவசாயிகள் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களிடத்தில் ஐயா, ராஜ்குமார் வீடு எங்க இருக்கு என்று கேட்டோம். அவர்கள், நாங்கள் எதற்காக வருகிறோம் என்பதை புரிந்து கொண்டு “நேரா போயிட்டு வடக்க திரும்புங்க என்று வழிகாட்டினார்கள்.

இறால் பண்ணைகளுக்காக தண்ணீரை உறிஞ்சும் வகையில் ராட்சத மின்மோட்டார்கள்
இறால் பண்ணைகளுக்காக தண்ணீரை உறிஞ்சும் வகையில் ராட்சத மின்மோட்டார்கள்

அந்த தெரு வெறிச்சோடி போய் இருந்தது. சற்று தூரத்தில் கீற்றுப் பந்தல் போட்ட வீடு ஒன்று தெரிந்தது. அந்த வீட்டின் முன் உள்ள திண்ணையில் அமர்ந்து   ஊர் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். எங்களை பார்த்ததும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர்.

எங்களை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். ராஜ்குமாரின் மனைவி  ஒரு மூலையில் துக்கம் தாளாமல் அழுததில்  களைப்பாக இருந்தார். வெளியில் இருந்து ஓஓஓஒ……. வென்ற அழுகுரல்  நெஞ்சை பிளக்கும் சத்தத்துடம் கேட்டது. அந்த குரல் ராஜ்குமாரின் உறவினர் வீட்டு பெண் சுபா. அவரை சமாதானப்படுத்த முயன்ற ஊர் பெரியவர்கள் தோற்றுப்போயினர்.

எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் ததும்ப கனத்த இதயத்துடன் பேசினார் அந்த இளம் பெண் சுபா.

“கேரளாவுல வேல பார்த்தாரு சார்.. அங்க இருந்து வந்து 4 ஏக்கரு குத்தகைக்கு வாங்கி தான் பயிறு வச்சாரு…. இதுக்காக    ஊர்ல எல்லார்கிட்டயும் கடன் வாங்கினாரு… தை மாசம் அறுவடையாயிடும் குடுத்துடுறேன்னு சொன்னாரு.

எங்கண்ணனுக்கு அப்துல்கலாம ரொம்ப புடிக்கும் சார்
எங்கண்ணனுக்கு அப்துல்கலாம ரொம்ப புடிக்கும் சார்

“சீட்டு கம்பனி காரன் தான் ஏமாத்துவான். கஷ்ட படுறவன்.. ஏமாத்த மாட்டான்னு எல்லாரும் அவரு மேல இருந்த மதிப்புல குடுத்தாங்க..”

வெளில வாங்கின கடன் போதாதுன்னு பொண்டாட்டியோட தாலிய கூட அடமானம் வச்சாரு என்று சொல்லும் போதே பேசமுடியாமல் குரல் விம்மியது.

இவ்வளவு கடன் வாங்கி பயிர் செய்யணுமா என்று கேட்டோம் ?

“கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்… விவசாயமாச்சே…. வெளையிர பூமின்னு தெரிஞ்சி எப்படி சார் தரிசா போடா முடியும்?”

rajkumar_mourning-poster
ராஜ்குமாரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி

“எங்கண்ணனுக்கு அப்துல்கலாம ரொம்ப புடிக்கும் சார். அவரோட நினைவு நாளுக்கு ஊர்ல மரக்கண்ணு வாங்கி வந்து நட்டு விழிப்புணர்வு செஞ்சாரு…”அப்பேற்பட்ட மனுஷன் எப்படி சார் விவசாயத்தை விட முடியும்?

சரி, அப்புறம் ஏன் தற்கொல பண்ணிக்கிட்டாரு என்று கேட்டோம்…!.

“ஊர சுத்தி கடன் வாங்கிட்டாரு”. பூமி வெளையில… தண்ணி பாய்ச்சவும்  முடிலய. கையில காசும்  இல்லை.!

அரசாங்கம் கொடுக்கிறது ஒரு லிட்டரு மண்ணெண்ணெய்.. அத வச்சிக்கிட்டு எப்படி சார் முடியும். மேற்கொண்டு மண்ணெண்ணெய் வாங்கனும்னா பணம் இல்லை. ஒரு பக்கம் பாயும். இன்னொரு பக்கம் காயும்.. இத பாக்க முடியாம தான் சார் அந்த நெலத்துலையே உசுர வுட்டுருச்சி..!

***

அழகிய நத்தம் கிராமம். பெயரில் இருக்கும் அழகு விவசாயிகள் வாழ்க்கையில் இல்லை. விவசாயி நடராஜன் வீட்டிற்கு சென்றோம். வீட்டு வாசலில் உளுந்து, தேங்காய் உலற வைத்திருந்தனர்.  உள்ளே சென்ற எங்களை எலிப்புழுக்கைகள்  தான் வரவேற்றது. அது மிகவும் பழமையான வீடு.

நடராஜன்
நடராஜன்

நடராஜனின் உறவினர் சாமிநாதன் எங்களை பார்த்ததும் யார் என்பதை புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார். இவருக்கு “விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். எதை செஞ்சாலும்  கொஞ்சம் புரட்சிகரமா தான் செய்வார். சொந்தமா ஆறு ஏக்கர் நிலம் இருக்கு சார். அதுல ரெண்டு ஏக்கர் மட்டும் தான் நெல்லு தெளிச்சாறு. மீதி எல்லாம் தரிசா கெடக்கு.

எஞ்சின் வச்சி ராவும் பகலுமா ஏறச்சாலும் கூட ரெண்டு  ஏக்கருக்கு மட்டும் தான் பாயும்.  ஒரு எறப்புக்கு பத்து  லிட்டரு டீசல்  வேணும். அதெல்லாம் வாங்கணும்னா பணம் வேணும். கையில காசு இல்ல.

ஏற்கனவே ரெண்டு லட்சம் கடன் வாங்கியிருக்காரு.  யாரு கிட்ட போயிட்டு காசு கேக்கறது? மோடி 500, 1000 செல்லாதுன்னு சொன்னதால யாரும் காசு கொடுக்க மாட்றாங்க. உரம் வாங்கவோ, ஆளுவ கூலி கொடுக்கன்னாலும் பணம் இல்ல.

ரெண்டு லட்சம் கடன் எதனால வந்தது?

பசங்கள படிக்க வெக்கவும், பயிர் செய்யவும் வாங்கின கடன் தான் சார். பையன் படிச்சி முடிச்சிட்டான். மூணு வருசமா வேல தேடறான் கெடக்கல. அடுத்து பொண்ணு இருக்கு. அத கட்டி கொடுக்கணும். எல்லாமும் இந்த நெலத்த  நம்பி தான் வாங்கினது. நெல்லும் விளைச்சல்  இல்லாம போனதால மனசு உடஞ்சி நிலத்துலையே உயிரை விட்டுட்டாரு.

இந்த முறை விளையிலனா அடுத்த முறை பாத்துக்கலாம் . அதுக்காக உயிரை விடுவதா என்று கேட்டோம்.

சாமிநாதன் மற்றும் நடராஜன் குடும்பத்தினர்
சாமிநாதன் மற்றும் நடராஜன் குடும்பத்தினர்

கடந்த அஞ்சி வருசமாவே விவசாயத்துல ஒன்னும் லாபம் இல்லங்க. நிலைத்த விக்கவும் மனசு வரல.. தரிசா போடா முடியுமா?

வருஷம் வருஷம் பயிர் காப்பீடு கட்டிட்டு வராரு … ஆனா நஷ்ட ஈடு யாரும் தரது இல்ல.. உழவு மானியம் 500, களைக்கொல்லி மானியம் 300, சின்சல்பெட் மானியம் 200 அறிவிக்கிறாங்க.. ஆனா குடுக்கிறதே இல்ல.

இனி எதை நம்பி பயிர் செய்றது. எனக்கு 30 ஏக்கர் இருக்கு தம்பி. எல்லாத்தையும் நான் தரிசா தான் போட்டிருக்கேன்.

நலமுத்தூர், கருப்பூர் ஆகிய இடங்களிள் தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கி வைத்தால் இரண்டு மாவட்டத்திற்கு பாசன பிரச்சனை இருக்காது   என்று பல முறை மனு கொடுத்தோம், போராடினோம். எதையும் செய்து தரவில்லை. இந்த அரசாங்கத்து மேல எங்களுக்கு நம்பிக்கையே இல்ல.

இனிமே எதை  நம்பி யாரை  நம்பி எங்களை விவசாயம் பண்ண சொல்றீங்க? என்ற கேள்விக்கு நம்மால் பதில் கூற முடியவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் வேண்டும், அவர்களுக்கு பிரச்சனை என்றால் எதையும் கண்டு கொள்வதே இல்லை என்ற அவருடைய ஆதங்கம் நம்மை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.

***

ராமர்மடம்  விவசாயி பக்கிரிசாமி. ஊரில் ஓரளவுக்கு செல்வாக்கான விவசாயி. சொந்தமா எட்டு ஏக்கர் இருக்கு. அவரோட தம்பி வீராசாமி. விஞ்ஞானி வீராசாமி என்று கூப்பிடுவார்கள். அந்தளவிற்கு விவசாயத்தில் நடந்து வரும் புதிய மாற்றங்களை தெரிந்து கொண்டு விவசாயம் செய்பவர். மற்ற விவசாயிகளுக்கும் ஆலோசனை சொல்லக்கூடியவர்.

பக்கிரிசாமி அவருடைய தம்பி வீராச்சாமி
பக்கிரிசாமி அவருடைய தம்பி வீராசாமி

இப்படி விவராமாக இருப்பவருக்கு மாரடைப்பு வர என்ன காரணம்?

விவசாயம் தாம் அவரோட செல்லபிள்ளை.  சின்ன பையன் மாதிரி ஓயாமல் ஒழைச்சிகிட்ட இருப்பார். எப்பவும் வயக்காட்லயே தான் இருப்பார்.

இந்த முறை 2 ஏக்கர் மட்டும் நெல் தெளிச்சோம். தண்ணி இல்ல. பயிர் கருகிறத பார்த்ததும் மனசு உடஞ்சி போய்ட்டாரு. எந்த வருசமும் இல்லாத அளவு இந்த வருஷம் 60,000 செலவாகிடுச்சி. ஏரி, குட்டை நீரை தான் பாசுவோம். இப்ப எல்லாம் வறண்டு போய்டுச்சி.

நா.. பதினேழு வயசுல இருந்து விவசாய வேலய தான் பாக்குறேன். அப்பல்லாம்  வேளாண்மைத்துறை என்ற ஒன்று இருந்தது. விரிவாக்க பணியாளர்கள் வீடு தேடி வந்து ஆலோசனை சொல்லுவாங்க.., மண்புழு உரத்துக்கு மானியம் கொடுப்பாங்க. இப்ப யாரும் வருவதே இல்லை என்றார்.

லாபம் இல்லாத இந்த தொழிலை ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு?

“பிறந்த குழந்தை ஊனமாகிவிட்டால் விட்டுவிடுவோமா? அது போலத்தான் விவசாயம். இதுல லாப நஷ்டம் பாக்குறது இல்லை”. இத்தனை வருஷம் விவசாயம் பண்றோம். சாப்பிடுறோம். அவ்ளோ தான். இது ஒரு பண்டமாற்று மாதிரி தான் தம்பி…! என்று விவசாயத்தின் மீதான பாசத்தை வெளிப்படுத்தினார் வீராசாமி. உண்மையில் அவர் விஞ்ஞானி தான்.

***

கடிநெல்வயல் விவசாயி வேதையன் வீட்டிற்கு சென்றோம்.  காரியம் நடந்து கொண்டிருந்தது. நம்மை பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்றவர்கள் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர வைத்துவிட்டு பேச ஆரம்பித்தார்கள் ஊர் பெரியவர்கள்.

“ஒரு ஏக்கர் நெலம் இருக்கு அதுல தான்  நெல் தெளிச்சோம். வெளச்சல் ஒன்னும் இல்லாம பயிர் எல்லாம் கருகிடுச்சி. இத நம்பி  கடன் வாங்கியாச்சி. அரசு சலுகை எதுவும் தரது இல்ல. கேட்டா சிறு விவசாயிங்களுக்கு இல்லன்னு சொல்றாங்க.

நாங்க  சம்பா மட்டும் தான் பயிர் செய்வோம். குறுவை, தாளடி எல்லாம் கிடையாது. மற்ற நேரம் கட்டிட வேலைக்கு, உப்பளத்துக்கு தான் வேலைக்கு போவோம்.

இப்ப யாருக்குமே வேலை இல்லை. என்ன பண்றது. இதே மாதிரி நெலமை இருந்தா ஊரை விட்டு தான் போகணும். கூலி வேலையும் இல்லை. சம்பாவும் கை வுட்டுடுச்சி என்றார் வேதனையுடன் கூறுகிறார் வேதியன் மகன்.

சாம்பல் ஆறு, மனங்கொண்டாறு இரண்டு ஆத்துலயும் தடுப்பணை கட்ட பலமுறை மனு கொடுத்துட்டோம். இந்த அதிகாரிங்க கண்டுக்கவே இல்ல. இத செஞ்சு கொடுத்திருந்தாங்கன்னா இந்த இழப்பு வந்திருக்காது.

எத்தனை முறை அதிகாரிங்களை சந்திச்சி மனு கொடுத்திங்கன்னு கேட்டோம்.

25 வருசமா மனு கொடுக்குறோம். எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.

ஏறக்குறைய  நாங்கள் சந்தித்த விவசாயிகள் அனைவரும் விவரமானவர்கள். விவசாயத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள் தான். எல்லோருக்கும் பொதுவான பிரச்சனை கடன். ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்குவது, அந்த கடனை அடைக்க முடியாமல் மேலும் கடன் வாங்கி  பயிர் செய்வது  என்ற சுழற்சி முறையில் தான் தங்களது வாழ்கையை  கழித்திருக்கிறார்கள்.

ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் கூறுவது போல் “வறட்சி” என்ற காரணம் மட்டும் விவசாயிகளுக்கு பிரச்சனை இல்லை. இது முற்றிலும் பத்திரிகைகள் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக எழுதுவது. கடைந்தெடுத்த பொய்.

நெல்லிற்கு தகுந்த விலையை அரசு கொடுக்கவில்லை, உரங்களின் விலையேற்றம், மின்வசதி இல்லை. தனியார் கொள்முதல் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு சென்ற ஆண்டு நெல்லை விவசாயிகளிடம் இருந்து பெற்றார்கள். அன்று முதலே கடனில் தத்தளித்திருக்கிரார்கள்.

இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டு தவிக்கும்   வெள்ளந்தியான விவசாயிகளை ஏமாற்றியது யார்? இயற்கையா? அரசா?

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

 1. நேற்று மட்டும் பெண் விவசாயிகள் உட்பட 9 விவசாயிகள் இறந்து போயிருக்காங்க. இவ்வளவு நடந்தும் இதற்கு காரணமான விசயங்களை சரி செய்யாமல் மீண்டும் மீண்டும் நிவாரணம் கொடுத்து வாயடைக்காறங்க. இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன?

  • இந்த பிரச்சனை வரும் காலங்களில் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் அதற்கு இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதுமே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் பிரச்சனையின் தீவிரத்தை புரிந்துகொள்ளாமல் பல நாடுகளும் இன்றும் Greenhouse gas பற்றிய ஒரு அலட்சிய மனப்பான்மையோடு மற்ற நாடுகள் தியாகம் செய்யட்டுமே என்று தான் செயல்படுகிறார்கள்.

   எல்லா நாடுகளிலும் மரம் வளர்ப்பது (மரக்கன்றுகளை நடுவதோடு நம் கடமை முடியவில்லை, அதை வளர்க்க வேண்டும்), சுற்று சூழல் மாசை கட்டுப்படுத்துவது, அனல் (நிலக்கரி) மின் நிலையங்களை மூடுவது என்று பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

   நம் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த வருடம் சுத்தமாக மழை இல்லை (கர்நாடகாவிலும் மழை இல்லை) இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஏறி குளங்களை எல்லாம் தூர் வார வேண்டும், 100 வேலை திட்டத்தை இந்த விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும் அதேபோல் கிராமங்களில் உள்ள மக்களும் தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும். இதை எல்லாம் செய்தால் ஓரளவுக்கு நிலைமையை சமாளிக்கலாம்

   • அய்யா மணிகண்டரே,

    விவசாயி தற்கொலை செய்வதற்கு காரணமே தண்ணியில்லாம பயிர் கருகிறது தான். அதுக்கு ஒரே வழி காவிரிய தொறந்து விடுவது தான்.

    உச்சா நீதிமன்றம், அகண்ட மார்பழகன் மோடி முதல் ஓ.பி.எஸ், மணல் கொள்ளையர்கள் வரை அனைவருக்குமே காவிரி நீர் கிடைக்காததில் பங்குண்டு.

    அப்படி இருக்கும் போது இந்த பிரச்சினையைப் பற்றி பேசாமல் இன்டர்நேஷனல் குப்பையை ஏனய்யா கிண்டி கொண்டிருக்கிறீர்கள்? காவிரிய தொறந்து விடாம தடுக்கிறது யாரு அந்த “பல நாடுகளா” ?

    நூறு நாள் வேலைத் திட்டத்தை பயன்படுத்துவது பற்றி வக்கணையாக பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். நிலம் தரிசாக கிடப்பதை பற்றி பேசாமல் ஏனய்யா அங்கும் இங்கும் ஓடுகிறீர்கள். ஏற்கனவே அங்கெ விவசாய பெருமக்கள் அதை தான் செய்யுறாங்க. அப்புறம் கடந்த ஆறு மாசமா நூறு நாள் வேலைக்கும் கூலி குடுக்கறது இல்லை.

    ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது என்பது போல இங்க வந்து ஏதாச்சும் உளற வேண்டியது.

    • காவேரியில் எப்படி சார் தண்ணீர் வருகிறது ? மழையால் தானே ? இந்த வருடம் கர்நாடகாவில் ஒழுங்காக மழை பொழியாதார்க்கு காரணம் என்ன ? இன்று ஏற்பட்டு இருக்கும் சுற்றுசூழல் கேட்டால் ஒன்று மிக அதிக மழை பெய்யும் அல்லது நீண்ட வறட்சியை கொண்டு வரும். இப்போது இருக்கும் சுற்றுசூழல் கேட்டால் இந்தியா பாலைவனமாகவும் ஆப்பிரிக்காவில் உள்ள பாலைவனங்கள் சோலையாகவும் மாறும் என்று சொல்கிறார்கள் அதை நிரூபிப்பதை போல் சென்ற வருடம் துபாய் போன்ற நாடுகளில் பெரும் மழை பெய்தது. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சனை உலக அளவில் உள்ள பிரச்சனை அதை உங்களை போன்றவர்கள் எல்லாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

     இன்று மனித இனம் தேசங்களை கடந்து ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் பிரச்சனை கைமீறி போவதற்கு முன் சரி செய்ய முடியும்

     உங்களை போல் அனைத்தையும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு

     • The crux of the Cauvery problem is the ulterior increase of acres under cultivation by Karnataka and use of water from the dams from January to May by that State.Karnataka neither follows the clauses under the Inter-State Agreement nor the court orders.At the cost of fall in agriculture in TN,the national integration can not be brought about.You can not accuse people who fight for the rights of TN as having narrow mentality.

      • நீங்கள் ஒரே அடியாக கர்நாடகாவை குறை சொல்ல முடியாது, நீதிமன்றம் உத்தரவு கொடுத்த பிறகு கர்நாடக நீரை திறந்து விட்டார்கள் அதற்காக கர்நாடகாவில் பெரும் கலவரம் எல்லாம் வெடித்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

       சென்ற வருடம் காவேரி நீர் பிடிப்பு பகுதியில் 30 சதவீதத்திற்கு மேல் மழை குறைந்து இருக்கிறது… சென்ற வருடம் 30 சதவீதம் என்பது வருங்காலத்தில் இன்னும் அதிகம் ஆகலாம், அதற்கு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இப்போதே ஈடுபட வேண்டும் என்று சொல்கிறேன்.

       ஏறி, குளங்கள், ஆறுகளை தூர்வாருவது, மழை காலங்களில் பெய்யும் மழையை சேமிப்பது, மரங்கள் நட்டு வளர்ப்பது, நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் தடுப்பது, சுற்றுசூழல் மாசை கட்டுப்படுத்துவது போன்றவைகள் எல்லாம், இதன் மூலம் பிரச்னையை ஓரளவுக்கு தமிழக நிலையை சமாளிக்கலாம் ஆனால் தீர்வு இது மட்டும் அல்ல.

       நீங்கள் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு சென்று இருக்கிறீர்களா என்று தெரியவில்லை, அந்த பகுதிகள் பெரும் காடுகள் உள்ள பகுதி, அந்த பகுதியிலேயே 30 சதவீதம் மழை குறைவாக பெய்து இருக்கிறது என்றால் இது இந்திய பிரச்சனை மட்டும் அல்ல இது உலகளாவிய பிரச்சனை. இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதுமே போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் ஆனால் உங்களை போன்றவர்கள் பிரச்சனையின் தீவிரத்தை புரிந்துகொள்ளாமல் பேசி கொண்டு இருக்கிறீர்கள்.
       ____________இந்த பிரச்னையை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது இந்த பிரச்னையை மனித இனம் சார்ந்த பிரச்சனை என்றே பார்க்க வேண்டும்.

   • சும்மா வியாகியானம் பேசாதிங்க மணி! விசத்துக்கு வாங்க! காவேரி நடுவர் மையம் காவேரி நீர் பகிர்விர்ற்கு வறட்சி காலத்தில் பற்றாகுறையை பகிர்ந்து கொள்ள தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிடம் கூறுகின்றது. அதன் அடிபடையில் மத்திய அரசு கார்நாடகா தன் பயன் பாட்டுக்கு பயன்படுத்தும் முழுமையான நீர் அளவை குறைத்துக்கொண்டு பற்றாகுறையை தமிழ் நாட்டுடன் பகிர்ந்து கொள்ள ஆணை இட வேண்டும்….. (என்ன கூறுகின்றேன் என்று புரிகின்றதா மணி? ) காவேரி நதி நீர் ஆணையம் அமைக்க உச்ச நீதி மன்றம் முனைந்தால் அதுக்கும் இந்த மத்திய அரசு இது நீதி மன்ற வரம்புக்கு வராது என்று முட்டுகட்டை போடுகின்றது… தானும் ஆணையத்தை அமைக்காமல் நீலிக்கண்ணீர் வடிகின்றது இந்த மத்திய அரசு! என்ன போங்க மணி…! மோடிக்கு கருநாடகாவில் உள்ள அளவுக்கு தமிழ் நாட்டில் ஓட்டுகள் இல்ல போல… (உடனே அப்ப காங்கிரஸ் என்று குதிகாதிங்க ! அந்த வெண்ணைகளும் அப்படி தான். )

 2. செல்வம் சார் மணிகன்டன் சொல்வதும் ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதே காவேரி திறந்து விடலனா டெல்டா மாவட்டம் மட்டுமே பாதிப்படைந்து இருக்கும் ஆனால் ஒட்டு மொத்த தமிழகமே வறச்சியின் பிடியில் அல்லவா சிக்கி இருக்கிறது என்னதான் காவிரிய திறந்தே விட்டு இருந்தாலும் பயிரை காப்பாற்றி இருக்கலாம் அனா மழை இல்லனா விளைச்சல் குறைவுதான்

  எங்க ஊரு பக்கமெல்லாம் கிணறு தண்னிதான் விவசாயத்துக்கு இப்ப பருவ மழை பெய்யாததால கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது அதனால கிணறு கள ஆழப்படுத்தும் வேலையை விவசாயிகள் செய்து வருகிறார்கள் நானே அந்த வேலைக்கு போயிருக்கேன் இப்ப கிணறு வெட்டுற வேலைய கூட பார்க்க முடியல விவசாயியால மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க