privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிவசாயிகளுக்கு ஆதரவாக குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர் வேலை நிறுத்தம்

விவசாயிகளுக்கு ஆதரவாக குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர் வேலை நிறுத்தம்

-

Kumbakonam Government Arts college students support farmers (5)

  • விவசாயிகள் மரணத்திற்கு தேவை நிவாரணம் மட்டுமல்ல – நீதி வேண்டும்!
  • கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இரண்டு நாள் தொடர் போராட்டம்!

ண்ணீர் இன்றி தமிழகத்தில் நிலவும் வறட்சியால் விவசாயிகள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகிறார்கள்.  தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள்  மரணத்தின் கோரப்பிடியில் உள்ளனர். இந்நிலையில் காவிரி பொய்த்து, கொள்ளிடம் பகுதியில் நடக்கும் மணற்கொள்ளையால்  தண்ணீர் மட்டம் குறைந்து  காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நெற்பயிர்கள் கருகிப்போனதையொட்டி, ஆற்றுமணலை அள்ளாதே, தண்ணீரின்றி காயவைத்து எங்கள் பெற்றோரை கொல்லாதே, விவசாயிகள் மரணத்திற்கு  நிவாரணம் மட்டுமல்ல, நீதி வேண்டும் !  என்றும் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான மோடி அரசுக்கு எதிராக – தமிழக அ.தி.மு.க மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு எதிராக அமைதி காக்காமல் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் மாணவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

வரலாறு காணாத வகையில்  தமிழகத்தில் நிலவும் வறட்சியால் அதிர்ச்சியாலும், மாரடைப்பாலும் செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள்  பிரச்சனையை திசை திருப்பும் வகையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழக ஓட்டுக்கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மல்லுகட்டுகிறார்கள். குறிப்பாக இந்த விவசாயிகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத இந்த கேடுகெட்டவர்கள் வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டை முன்னிறுத்தி மாணவர்கள், இளைஞர்களை இந்த அற்பத்தனமான, ஆபத்தான கருத்தில் மூழ்கடிக்கடிக்க முயற்சிக்கிறார்கள். கும்பகோணம் கலைக் கல்லூரியில் படிக்கும் நாம் தமிழர் கட்சியைச்  சார்ந்த  ஒரு மாணவர்  ஜல்லிக்கட்டுக்காக போராட வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தவும் முயற்சித்தார். ஆனால் பெரும்பான்மையான மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று உறுதியாக நின்றனர்.

kumbakonam rsyf posters 2விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் போது ஜல்லிக்கட்டு கொண்டாட்டம் எதற்காக வேண்டும் என்று பல மாணவர்கள்  அந்த மாணவரிடம் கேள்வி எழுப்பினர். இறுதியாக அந்த மாணவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதுதான் முதன்மையானது என்று ஏற்று தனது கருத்தை மாற்றிக் கொண்டார். பின்னர், அரசுக் கலைக்கல்லூரி மாணவர் போராட்டக் குழு  சார்பில்  மாணவர்கள் விவசாயிகள் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று முழக்கம் எழுப்பி 9 ந்தேதி காலை சுமார் 8.30 மணிமுதல் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு வெளியிலேயே நின்றனர். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்த பின்பு போலீசாரும், கல்லூரி துணை முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலரும் சேர்ந்து மாணவர்களை மிரட்டி போராட்டத்தை கலைத்தனர்.  சூழ்நிலைமைக் கருதி தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.

ஆனால்  போராட்டத்தை அடுத்தடுத்த நடத்த வேண்டும் என்ற கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. அன்றைக்கே  முன்னணி மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு பிரச்சனை இரண்டாம்பட்சமானது, விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதுதான் உடனடி அவசியமானது என்ற கருத்தின் அடிப்படையில் முடிவெடுத்து அடுத்த நாளும் போராட்டம் தொடரும் என்பதை மாணவர்களுக்கு  அறிவித்தனர்.

அடுத்த நாள் 10 ந்தேதி காலை 8 மணிமுதலே போராட்டக்குழு  மாணவர்கள் முன் நின்று மாணவர்களை ஒருங்கிணைத்தனர். சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்லூரி வாயிலுக்குள் உள்ள ஆற்று பாலத்தில் அமர வைத்து விவாசாயிகளுக்கு ஆதரவான கோரிக்கைகள் அடங்கிய முழக்க அட்டைகளை பிடித்துக்கொண்டு,

நாட்டிற்கே சோறுபோட்ட
விவசாயிகள் மடிகிறார்கள் !
மத்திய -மாநில அரசுகள் செய்யும் – இந்த
படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெழுவோம்!

காவிரியை தடுத்து நிறுத்திய
ஆற்று மணலை கொள்ளையடித்த
பி.ஜே.பி – அதிமுக – ரெட்டி –ராவ் கும்பலின்
சொத்துக்களை பறிமுதல் செய்!
அதிலிருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு!
ஆற்று மணலை அல்லாதே – எங்கள்
பெற்றோரை கொல்லாதே!

என்ற முழக்கங்களை கம்பீரமாக எழுப்பினர்.  கட்டுக்கோப்புடன் நடக்கும் மாணவர் போராட்டத்தை பார்த்த போலீசார் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து முதல் நாள் போல் மாணவர்களை மிரட்டியும், வகுப்புச் செல்ல விரும்பும் மாணவர்களை தடுக்கக்கூடாது என்று நைச்சியமாக பேசியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர்.

அந்த தருணத்தில் அங்கு மக்கள் உரிமைப்பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தமிழ்.ஜெயப்பாண்டியன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் த. கணேசன் ஆகியோர் வந்தனர்.  பு. மா.இ. மு மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் போலீசின் சதித்தனத்தை முறியடிக்கும் வகையில்  மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்தும், அச்சமின்றி தொடர்ந்து போராட வலுவூட்டியும் பேசினார். இதைப்பார்த்த பெரியசாமி என்ற போலீசு ஆய்வாளர் முதலில் வெளியில் இருந்து அமைப்பு தலைவர்கள் வந்து பேசக்கூடாது என்றார்  . இது மாணவர் அமைப்பின் உரிமை என்றதும்,  மாணவர்கள் போலீசாரை எதிர்த்ததும் பின்னர் அமையாகிவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர். அப்போது கல்லூரி மாணவர்கள் போரட்டக்குழு வினரிடம் இப்போராட்டத்தை கல்லூரியை விட்டு  வெளியில் பொதுமக்களிடமும் கொண்டு செல்ல வலியுறுத்தினோம். அதன்படி அம்மாணவர்கள்.

  • Ø  தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் விவசாயிகளின் மரணத்தை தடுத்த நிறுத்த தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
  • Ø  கடன் வாங்கி வைத்த நெற்பயிர் கண்முன்னே காய்ந்துபோனதை பார்த்து அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ள விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
  • Ø  அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
  • Ø  கொள்ளிடம் பகுதியில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை தயாரித்துக்கொண்டு அருகில் உள்ள மாவட்ட துணை ஆட்சியரை சந்திக்கப்போகிறோம் என்று மாணவர்களிடம் அறிவித்து விட்டு கிளம்பினர். அரண்டு போன போலீசார் கும்பகோணம் நகர தாசில்தாரை வரவழைத்தார். சில அதிகாரிகளுடன் அங்கு வந்த தாசில்தாரும், போலீசாருடன் கூட்டு சேர்ந்து ஊர்வலம் செல்ல அனுமதியில்லை என்று கூறி மாணவர்களை மிரட்டினர். உங்கள் கோரிக்கை நியாயமானதுதான் வேண்டுமென்றால் 5 பேர் சென்று கொடுங்கள் என்றனர். அதோடு கூட்டத்தை நைச்சியமாக கலைக்கவும் செய்தனர். இதை முறியடிக்கும் வகையில் மாணவர்கள் கல்லூரிக்குள் தற்காலிகமாக போராட்டத்தை   நிறுத்திக்கொண்டு, கல்லூரிக்கு அருகில் இருந்த நீதிமன்ற வாயில் ஒன்று கூடி மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகம் செல்லும் வகையில் ஐந்து ஐந்து பேராக வெளியில் வர வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட துணை ஆட்சியரை சந்தித்து மனுவும் கொடுத்துவிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றும் அரிவித்தனர்.

போலீசார், தாசில்தார், கல்லூரி பேராசியர்கள் கூட்டு சேர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவான மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் விவசாய பின்னணி கொண்ட டெல்டா மாவட்ட மாணவர்கள் தன்மானம், சுயமரியாதை கொண்டவர்கள் என்பதை தங்கள் உறுதியான இரண்டுநாட்கள் தொடர்ந்த போராட்டத்தின் மூலம் நிரூபித்து விட்டனர். நாட்டிற்கே சோறு போட்ட விவசாயிகள் செத்து மடிகிறார்கள் நமக்கென்ன பொங்கல் கொண்டாட்டம். விவசாயிகள் ஆதரவாக போரட்டம் நடத்திய முன்னுதாரமிக்க கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்  வழியைப் பின்பற்றி கும்பகோணத்தில் உள்ள பிற கல்லூரி மாணவர்களும் போரட்டக்களத்தில் இறங்க வேண்டும்  என்று அறைகூவல்விடுத்து பு.மா.இ.மு கும்பகோணம் நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. போரட்டம் தொடரும்.

தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.

___________________

அனுப்புநர்: அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்,
கும்பகோணம்.

பெறுநர்:   துணை ஆட்சியர் அவர்கள்,
கும்பகோணம்.

பொருள்: வறட்சியால் உயிர்நீத்த விவசாயிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி….

ஐயா,

மேற்கண்ட கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் விவசாய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள். விவசாயிகள் வறட்சியாலும், கடன் நெருக்கடிகளாலும் தினம் தினம் உயிரிழந்து வருகின்றனர். பலி எண்ணக்கை 170-க்கும் மேல் சென்றிருப்பது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. மணற்கொள்ளை, தண்ணீர் கொள்ளை, போன்றவற்றால் விவசாயம் அழிந்து வருகிறது. வைத்த பயிர் கண்முன்னே காய்ந்து போன துயரம் தாங்காமல் விவசாயிகள் மாரடைத்து சாவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அரசுக்குள்ளது. மேலும் ஏற்கனவே உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை காக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை எமது கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி சார்பில் உங்களிடம் வைக்கிறோம். அதனை பரிசீலனை செய்து உரிய முறையில் உடனடியாக நிறைவேற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேம்.

இப்படிக்கு,
அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், கும்பகோணம்.
(மாணவர்களின் கையெழுத்து படிவம் இணைக்கப்பட்டுள்ளது.)

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்: