உனது அழகான வெள்ளைத் தோல்
வெள்ளையாகஇருப்பதால்ஒதுக்கிவைக்கப்படமாட்டீர்கள்; ரசிக்கப்படுவீர்கள். சிலநேரங்களில்பலாத்காரமும்செய்யப்படுவீர்கள்
சில சமயம் பெருநகரங்களில் அது நிகழும். சில சமயம் ஆன்மீகத் தளங்களில். அல்லது, வீதியின் மத்தியில். “உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவா?” என்றவாறே தங்களுடைய கைப்பேசியைக் காட்டிச் சிலர் என்னை நிறுத்துவார்கள். என்னைப் புகைப்படமே எடுத்ததில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இந்தியாவில் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டி வாரத்தில் ஒருவராவது என்னை அணுகுவார்கள். எனது பெற்றோர் எப்போதும் பணிவாக இருக்க கற்றுக் கொடுத்துள்ளதால் நான் அந்தக் கோரிக்கைகளை புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் இந்தியர்களுக்கு என் மீதான ஆர்வம் எங்கிருந்து வருகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எனது உடைகளா? நிச்சயம் இருக்காது – என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்ட அந்த மின்னும் புடவை அணிந்த மணப்பெண் என்னை விடப் பேரழகி தான்.
எனது உடலை போர்த்திக் கொள்ள தில்லி ஜூமா மசூதியில் எனக்கு வழங்கப்பட்ட பெரிய அழுக்கு அங்கியின் கதையைக் கேளுங்கள் – அந்த உடையில் நான் படு கேவலமாக காட்சியளித்தேன். ஆனாலும், ஐந்து இளைஞர்கள் என்னை எல்லாத் திசைகளில் இருந்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பாலியல் கண்ணோட்டம் தான் எனது கேள்விகளுக்கான பதிலா? அப்படியல்ல. “மேடம் நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க” என்று அந்த எட்டு வயது அப்பாவிச் சிறுமி வாராணசியில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் வைத்து என்னிடம் சொன்னாள். அவ்வாறு சொல்லி விட்டு தனது தோழிகளுடன் வரிசையில் வந்து என்னோடு செல்பி எடுத்துக் கொண்டாள். கடைசியில் கோவா கடற்கரையில் நான் பிகினி உடையில் இருப்பதைப் பார்த்த புடவை கட்டிய அந்தப் பெண் என்னிடம் “உங்களுக்கு அழகான வெள்ளைத் தோல்” என்று சொன்னாள். “ஆனால், உனக்கும் அழகான தோல் இருக்கிறது தானே?” என்றேன் ஆச்சர்யத்துடன்.
இந்தக் நிகழ்ச்சிப் போக்குகளுக்கான பதில், இனவெறி – தலைகீழ் இனவெறி. நீங்கள் வெள்ளையாக இருப்பதால் ஒதுக்கி வைக்கப்பட மாட்டீர்கள். ஆனால், உங்களின் வெள்ளைத் தோலுக்காக ரசிக்கப்படுவீர்கள். சில சமயம் பலாத்காரமும் செய்யப்படுவீர்கள்.
நவம்பர் மாதத்தின் இறுதி நாளான அன்று நடந்ததை போல. ஆண் புகைப்படக் கலைஞர்களைக் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பெரிய காமெரா லென்சுகளைத் தூக்கிக் கொண்டு கோவாவின் பாலேலம் கடற்கரையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் எனது ஜெர்மானிய தோழிகள் உட்பட சில வெள்ளைப் பெண்மணிகளை மிக நெருக்கமாக படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
வெள்ளை தான் அழகு – மேலும் அது ஒரு வியாபார உத்தி. வெண்மையாக்கும் அழகு சாதனங்களின் சந்தை மதிப்பு சுமார் ஏழாயிரம் கோடிகள். 2010-ம் ஆண்டு அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு கோகோ கோலா மற்றும் தேனீரின் சந்தை மதிப்பைக் கடந்து விட்டதாகச் சொல்கிறது பி.பி.சி. 2012-ம் ஆண்டு 258 டன் அளவுக்கு தோலை வெள்ளையாக்கும் களிம்புகள் விற்றுத் தீர்ந்ததாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் பத்திரிகையின் செய்தி ஒன்று. ஆண்களும் கூட இவற்றைப் பூசிக் கொள்கின்றனர். பாலிவுட்டின் பாதுஷாவாக சொல்லப்படும் ஷாருக் கான் இந்தப் பொருட்களுக்கான விளம்பரதாரர்.
ஆனால், இது அருவெறுப்பானது. வெள்ளைத் தோல் மோகத்தின் பின் வர்க்க, சாதி மற்றும் காலனியவாதம் ஆகிய மூன்று பின்னணிகள் உள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புறங்களில் கருத்த நிறமுடையவர்கள் இன்னமும் ஒடுக்கப்படுகின்றனர். நகரங்களிலும் கூட அத்தகையவர்களை உதவியாளர்களாகவே, கூலிகளாகவோ, துப்புரவு வேலை செய்கிறவர்களாகவோ கருதுவார்கள் என்கிறார் எனது நண்பர்; அவருடைய பெற்றோர்களோ நன்கு படித்த மருத்துவர்கள்.
’ஆரிய திராவிட பிரிவினையின் காரணமாக வெள்ளையாக இருப்பவர்கள் பெரும்பாலும் மேல் சாதிக்காரர்கள்’ என்பதே தலித்துகள் இப்போதும் எதிர்கொள்ளும் பழைய கண்ணோட்டம். இடம் பெயரும் தொழிலாளர்கள் குறித்து எழுதி வரும் பத்திரிகையாளர் ஒருவர், இந்த வெண்மைப் பித்து இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் குறித்த விட்டகுறை தொட்டகுறையாக இருக்க வேண்டும் என்றார்.
அழகுக் கலை நிபுணர்கள் வெண்மையாக்கும் களிம்புகளை எந்த யோசனையும் இன்றி பூசும் அளவுக்கு அது சர்வசாதாரணமானது. எனது ஜெர்மானிய தோழி கார்லா மதுரையில் உள்ள அழகு நிலையம் ஒன்றுக்கு தனது மூன்று நண்பர்களுடன் சென்றிருந்தார். அந்த நிலையத்தை நடத்தியவர் இவரின் கால்களை பிளீச்சிங் களிம்பால் குளிப்பாட்டியதைக் கண்டு அதிர்ந்தே விட்டார்; அவரது கால்களோ ஏற்கனவே படு வெள்ளையானது.
”காகாசிய” (வெள்ளையினம் மற்றும் மாநிற மனித இனம்) மக்களைக் கண்டு வியப்பதோடு, அவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகின்றது. இந்த நான்கு நண்பர்களும் மதுரையின் அந்த அழகு நிலையத்தினுள் நுழைந்த போது அங்கே மூன்று வாடிக்கையாளர்களுக்கான இருக்கைகள் தான் இருந்துள்ளன. அங்கே வேலை செய்தவர்கள் இந்த நால்வரில் ”சுத்த” வெள்ளையாக இருந்த மூவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எங்களது இந்தோ-ஜெர்மானிய தோழி ஜூலியாவின் தோல் கருப்பாக இருந்த காரணத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்
முன்பெல்லாம் எங்கள் குழுவிலேயே ஜூலியா தான் அழகானவரென்றும், அவரையெல்லாம் அழகுபடுத்தவே தேவையில்லை எனவும் சொல்லியிருக்கிறேன். இனி அப்படிச் சொல்ல முடியாது.
நவம்பர் 26-ம் தேதி தில்லி ஹாவ்ஸ் காஸ் கிராமத்திலிருக்கும் ‘இம்பெர்பெக்டோ’ என்கிற மதுக்கூடத்திற்கு எனது ஜெர்மானிய தோழி கரோலா மற்றும் இரண்டு இந்திய நண்பர்களோடு சென்றேன். அங்கிருக்கும் திறந்த மாடிக் கூடத்தில் எங்களில் மூவர் உணவுக்குச் சொல்லியிருந்தோம். எங்களில் நான்காமவரான பிரேன் வருவதற்குக் கொஞ்சம் தாமதமாகி விட்டது. வரவேற்பில் இருந்த பெண்மணி “தனியாக வரும் ஆண்கள் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்” எனக் கேட்டுத் தடுத்துள்ளார். கரோலா உடனே கீழே சென்று தாங்கள் வரும் போது நுழைவுக் கட்டணம் கேட்கப்படாத போது பிரேனிடம் மட்டும் ஏன் வசூலிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
”இரண்டு அமெரிக்கப் பெண்களான நீங்கள் இந்தியன் ஒருவனுடன் உள்ளே போவதைப் பார்த்தேன்” என்றுள்ளார் அந்தப் பணிப்பெண். ”நாங்கள் அமெரிக்கர்கள் அல்ல, ஜெர்மானியர்கள்” என்று கார்லா குறுக்கிட்டுச் சொல்லியிருக்கிறார். “அதெல்லாம் சரி.. நீங்கள் வெள்ளையர்கள் என்பதால் கட்டணம் வாங்கவில்லை; இவர் இந்தியன் தானே? எனவே காசு கொடுக்க வேண்டும்” என்று அவர் பதிலளித்துள்ளார்.
இது எங்களுக்குக் கொஞ்சம் புதிய விசயம். ‘வெள்ளையர்களான எங்களுக்கு நுழைவுக்கட்டணம் இலவசம் – அதே நேரம் இந்தியர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா?’ தங்களது சொந்த குடிமக்களையே பாகுபாட்டுடன் நடத்தும் என்னவொரு விசித்திரமான நாடு!
அந்த இரவில், அந்த மதுக்கூடத்தில் மேலாளர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டுமே அங்கே இருந்தனர். ”இது தான் நிறுவனத்தின் கொள்கை. நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று அந்தப் பணிப்பெண் கூறியுள்ளார். பின்னர் நான் அந்த மதுக்கூடத்தின் பொது மேலாளரான மெர்வினிடம் பேசிய போது நடந்த விசயத்திற்கு தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிழையே காரணமென்றும், தனியாக ஆண்கள் வருவதைத் தவிர்க்கவே அப்படி ஒரு விதியைத் தாங்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஹாவ்ஸ் காவ்ஸில் மதுவருந்த பெரும் கும்பலே வரும் என்பதால் என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு சொன்ன அவர், தனது ஊழியர் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நேர்வதைத் தவிர்க்கவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள “தேவையான நடவடிக்கைகளை” தான் எடுக்கவுள்ளதாகவும் மெர்வின் என்னிடம் தெரிவித்தார்.
வெளிப்படையாகச் சொன்னால், வெள்ளைத் தோல் மட்டும் இந்தியாவில் இருக்கும் வெள்ளைக்காரப் பெண்களின் பிரச்சினையில்லை. நாங்கள் ஜெர்மனிக்குத் திரும்பிய பின் பிரான்க்பார்ட் விமான நிலையத்தில் என்னுடன் வேலை பார்க்கும் பேபியனை இரண்டு பெண்கள் வெறித்துப் பார்த்தனர். ”வாவ், உனக்கு மிக அழகான பழுப்புத் தோல்” என்றனர் அவர்கள்.
– பெட்ரா சோஜெய்
இந்தியாவுக்கு படிப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பாக சுற்றுப்பயணம் வந்த ஜெர்மன் பத்திரிகையாளர்.
தமிழாக்கம்: முகில்
செய்தி ஆதாரம்:
‘You have so beautiful white skin’: India and its problems with skin colour -indian express
We were slaves for centuries. Slavery is in our blood. It will take another few centuries to become clean.
வெள்ளைத்தோல் மோகம் ஆங்கில ஆதிக்கத்தின் விட்டகுறை தொட்டகுறை அல்ல. பெரும்பாலும் உடல் உழைப்பு இல்லாத காரணத்தினால் வெள்ளைத்தோல் (இதுவும் ஆங்கிலேயர் பார்வையில் பழுப்புத்தோல் தான்) போலப் பெற்றிருக்கும் பார்ப்பனர்களை மதிக்கவேண்டிவந்ததால் நேர்ந்த நிலை இது. இந்தப் பார்ப்பன மதிப்புதான், இந்தியர்கள் வெள்ளைக்கார “துரை”களையும் ஆரம்பத்திலேயே அதிகமாக மதிக்கத் தூண்டியது.