Wednesday, July 28, 2021
முகப்பு பார்ப்பன இந்து மதம் நச்சுப் பிரச்சாரம் கள்ளக்காதல் மாரிமுத்துவும் பப்பிஷேம் பாஜகவும் !

கள்ளக்காதல் மாரிமுத்துவும் பப்பிஷேம் பாஜகவும் !

-

திருப்பூர் மாரிமுத்து
இவர்தான் ‘வீரமரணம்’ அடைந்த திருப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் மாரிமுத்து!

டாடா சுமோ, ஸ்கார்பியோ, ரியல் எஸ்டேட் கட்டப் பஞ்சாயத்து, மினிஸ்டர் காட்டன் சட்டை, ராமராஜ் ’ஒட்டிக்கோ கட்டிக்கோ’ வெல்குரோவ் வேட்டி, சட்டைப் பையில் தெரியும் படி சின்னம்மா அல்லது அய்யா அல்லது தளபதி அல்லது எழுச்சித் தமிழர் மற்றும் இதர ‘தலை’களின் புகைப்படம், கூலிக் கொலைகள், சாக்கடை காண்டிராக்ட், பொதுக் கழிப்பறை காண்டிராக்டு, சைக்கிள் ஸ்டேண்ட் காண்டிராக்ட், சினிமாவுக்கு பைனான்ஸ், கமிசன், லஞ்சம், கழுத்தில் தங்கத்தில் தாம்புக்கயிறு, பத்து விரல் தங்க மோதிரங்கள், டாஸ்மாக் மதுவறை கமிசன், ஸ்கார்பியோவின் டாஷ்போர்டில் பாரின் சரக்கு பாட்டில், பியர் தொப்பை, சுற்றிலும் பத்து எடுப்புகள் மற்றும் ஊருக்கு ரெண்டு தொடுப்புகள், இரண்டு பெரிய வீடுகள், மூன்று சின்ன வீடுகள், நான்கு சின்னஞ்சிறு வீடுகள் போதாக்குறைக்கு மார்கெட் போன நடிகைகளின் தொடர்பு…..

நீங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு முழி பிதுங்குவது தெரிகிறது. ஆனால் வேறு வழியில்லை; சாக்கடையைப் புரிந்து கொள்ளாமல் அடைப்பெடுப்பது சாத்தியமா என்ன? போகட்டும் – பொது நலன் கருதி பட்டியலை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

மேற்படி வாழ்க்கையை நீங்கள் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் வட்டச் செயலாளர் வண்டு முருகன்களில் இருந்து மாவட்டங்கள் வரைக்கும் பார்க்கலாம்; தனித் திறமையைப் பொறுத்து பட்டியலில் உள்ளவை கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளில் கீழ் நிலை தொண்டனாகச் சேர்ந்து சின்னச் சின்னக் கிரிமினல் வேலைகள் பார்த்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி மேற்கண்டபடி செட்டிலாவதற்கு எப்படியும் சிலபல ஆண்டுகள் ஆகிவிடும்.

ஆனால், அரசியலில் ‘உழைக்காமலேயே’ இந்த மேன்மையை அடையும் வாய்ப்பை இந்தியாவில் ஒரு கட்சிதான் வழங்குகின்றது – அது தான் பாரதிய ஜனதா கட்சி. மற்ற கட்சிகளில் சேர்ந்து சில ஆண்டுகளில் கெட்டுச் சீரழிந்து வாழ்க்கையில் முன்னேறும் வாய்ப்பு உள்ளதென்றால் பாரதிய ஜனதாவோ நேரடியாகவே குற்றக்கும்பல்களில் இடம்பெற்றிருப்போரை மாபெரும் தகுதியாக நிர்ணயித்து சேர்த்துக் கொள்கிறது.

Muralidar rao tweets2
கள்ளக்காதலை இஸ்லாமிய பயங்கரவாதமாக மாற்றுகிறார், முரளிதர் ராவ்! அதன்படி கள்ளக்காதலர்கள் அனைவரும் பாஜகவில் சேர்ந்தால் பாதுகாப்பு கிடைக்குமோ?

தயவு செய்து இந்தக் கட்டுரை மோடியைப் பற்றியது என்று நீங்கள் தவறாக நினைக்க கூடாது – இக்கட்டுரை ஸ்ரீமான் மாரிமுத்துவைப் பற்றியது. இவரும் முன்னவரைப் போல் இந்துக்களின் போர்வாளாக இருந்து சமீபத்தில் ‘வீரமரணம்’ அடைந்துள்ளார். இருப்பினும் இக்கட்டுரையில் மோடி வருகிறார். காரணம் நாமல்ல!

திருப்பூர் மாரிமுத்து கொலையை மறைக்க மோடிக்கு செருப்பு மாலை
கள்ளக்காதல் தற்கொலையை முஸ்லீம்கள் செய்த கொலையாக மாற்ற மோடியின் படமும், பிஞ்ச செருப்பும் போதுமாம்!

மாரிமுத்து, பாரதிய ஜனதாவின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர். இவரது உடலை கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டிருக்கிறார்கள் உறவினர்கள். காவல்துறை வந்து பார்த்த போது பிணத்தின் வாயில் துணி திணிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்தது. பக்கத்திலேயே ஒரு அட்டையில் 1,2,3,4,5 என எண்கள் எழுதப்பட்டு அதில் 3-ம் எண் அடிக்கப்பட்டிருந்தது – அதாவது, மாரிமுத்து மூன்றாவது பலி; மேலும் சில பலிகள் இருக்கும் என போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியாம்.

முக்கியமாக பிணத்துக்கு பக்கத்திலேயே மோடியின் படம் ஒன்று வைக்கப்பட்டு அதன் மேல் செருப்பு மாலை போடப்பட்டிருந்தது – ஒரு தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டிருந்தது.

காவி கும்பலுக்கு இது போதுமே. உடனடியாக திருப்பூரில் ஒரு கலவர நிலையைத் தோற்றுவிக்கும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரமாக இருந்த அந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள் – ஜல்லிக்கட்டு பின்னுக்குப் போய் டெல்லிக்கட்டு முன்னுக்கு வந்திருந்த நாட்கள் அவை. தமிழ்ச் சமூகத்தின் மேல் பார்ப்பனியத்தின் கலாச்சாரத்தை வலிந்து திணிக்கும் இந்துத்துவ செயல்திட்டத்தை ‘ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு’ என்கிற குறியீட்டின் மூலம் தமிழர்கள் எதிர்த்தார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக வீதிகளில் எழுந்த பேரெழுச்சி இயல்பாகவே இந்துத்துவ எதிர்ப்புடன் கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நிலையில் அதை மத ரீதியில் பிளவு படுத்த ஹெச்.ராஜா மற்றும் சுப்பிரமணிய சுவாமியின் தலைமையில் இந்துத்துவ கும்பல் படாதபாடுபட்டது. என்றாலும் அவர்களின் முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிந்த தமிழ் மக்கள், அந்த முயற்சிகள் ஒவ்வொன்றையும் எள்ளி நகையாடினர்.

போட்டோஷாப்பில் உருவாக்கப்பட்ட படம் ஒன்றை பகிர்ந்த ஹெச்.ராஜா, இசுலாமியர்கள் பின்லேடன் படம் அச்சிட்ட இருசக்கர வாகனத்தில் வந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக கொளுத்திப் போட்டார். சமூக வலைத்தள மக்களோ, அந்தப் படம் மெரினாவிலேயே எடுக்கப்பட்டதில்லை என்று நிரூபித்தார்கள். பாரதிய ஜனதா மதக் கலவரங்களைத் தின்று வளரும் கட்சியென்பதும், அது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி பரந்துபட்ட மக்களுக்கே எதிரானது என்றும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கியிருந்த நிலையில் தான் மாரிமுத்து ‘வீரமரணம்’ அடைகிறார்.

இந்தப் பின்புலத்தில் இந்துத்துவ கும்பல் மாரிமுத்துவின் பிணத்தைக் காட்டி கலவரத்தைத் தூண்ட எடுத்துக் கொண்ட முயற்சிகள் அத்தனையும் கருவிலேயே சிதைந்து போயின. இதற்கிடையே விசாரணையைத் துவக்கியிருந்த போலீசாருக்கு, மாரிமுத்து மரணமும் அவரது பிணம் கிடந்த இடத்தைச் சுற்றி தூவி விடப்பட்டிருந்த ‘தடயங்களும்’ தங்களது என்கவுண்டர் திரைக்கதைகளை விட ஏராளமான பொத்தல்களோடு இருப்பது உறுத்தியிருக்க வேண்டும்.

Ponnar tweets1
பொன்னார் கண்டிப்பது யாரை? கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்தவர்களையா ?

ஒருவனைக் கொன்றதோடு, சிரமப்பட்டு மரத்தில் ஏறி கயிறு கட்டி தூக்கில் தொங்குவது போல் செட்டப் செய்வதைக் கூட புரிந்து கொள்ள முடியும் – ஆனால், வேலை மெனக்கெட்டு அட்டையில் நெம்பர்களை எழுதுவதும், எங்கிருந்தோ மோடியின் படத்தைப் பீறாய்ந்து வந்து அதற்கு செருப்பு மாலை போட்டு (பிய்ந்த செருப்புகளை எத்தனை பேர், எத்தனை இடங்களில் தேடியிருக்க வேண்டும்?), தேசியக் கொடியை தலைகீழாக வேறு பறக்க விட்டுச் செல்வதென்றால் – வந்தவர்கள் கொலைகாரர்களா அல்லது சங்க பரிவாரத்திற்கு திரைக்கதை எழுதும் அறிஞர் பெருமக்களா?

இந்த அடிப்படை சந்தேகங்களெல்லாம் எலியளவு மூளை இருந்தால் எழுந்திருக்கும் – பாரதிய ஜனதா தலைவர்களுக்கு அந்தக் கொடுப்பினையும் இல்லை என்பதால் மாரிமுத்துவும் சாவுச் செய்தி கேட்டதும் இசுலாமிய ’தீவிரவாதிகளுக்கும்’ ‘தேசவிரோத சக்திகளுக்கும்’ எதிராக கம்பு சுற்றத் துவங்கி விட்டனர். தமிழ்நாட்டு பாரதிய ஜனதா பஜனை கோஸ்டியிலேயே வித்தியாசமாக கூவும் திறன் ‘அக்கா’ வானதி சீனிவாசனுக்கு இருப்பதால் அவரது கூவல் மட்டும் ஒரு தினுசாக இருந்ததை குறிப்பிட்டாக வேண்டும் – கீழே உள்ள படங்கள் ‘அக்கா’ விட்ட சவுண்டிலிருந்து சில உதாரணத்துக்காக.

மெரினா எழுச்சியையும், திருப்பூர் கள்ளக்காதல் மரணத்தையும் இணைத்து டிவிட்டரில்  பொங்கிய வானதி சீனிவாசன்!
மாரிமுத்துவுக்க்கா பொங்கிய வானதி சீனிவாசன்!

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்த செய்தி வந்துள்ளது. முதலில் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் மாரிமுத்துவின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை என்பதை உறுதி செய்தனர் போலீசார். இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மாரிமுத்துவுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக் காதல் இருந்துள்ளது; இது குடும்பத்தினருக்கு தெரியவந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக் காதல் தற்கொலையை மூடி மறைப்பதோடு, கூடவே மதவெறியைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடையவும், பாஜகவினரே மோடி படத்துக்கு செருப்பு மாலை போட்டதும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கப் போகிறது என வதந்தி பரப்பிவிட்டதும் தெரியவந்தது.

Vanathi tweets1
கள்ளக்காதல் தற்கொலைக்கு தமிழக சிறப்புக் காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்துவது எப்படி?

இதற்கிடையே தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு திருப்பூர் பகுதியில் கலவரம் நடக்காத நிலையில் ‘வீரமரணம்’ அடைந்த மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க பொன்னார்ஜி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பொன்னார்ஜி திருப்பூருக்கு வண்டியைப் பிடிக்க கிளம்பிக் கொண்டிருந்த நிலையில் போலீசாரின் விசாரணை குறித்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி விட்டதால் தட்கல் டிக்கட் காசை தேசத்துக்காக தியாகம் செய்ய முடிவெடுத்தார் என கமலாலயம் பகுதியில் வட்டமடித்துக் கொண்டிருந்த கழுகார் வாட்சப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.

சென்ற வாரத்தில் தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரும், மேகாலயா மாநில ஆளுநருமான சண்முகநாதனின் அந்தப்புற லீலைகள் வெளியாக நாடே நாறியது – அதற்குள் ஒரு கள்ளக்காதல் தற்கொலையும் அதைக் கொலையாக மாற்றி கலவரத்தைத் தூண்ட முயற்சித்த தமிழக காவிகளின் இன்னொரு முயற்சியும் அம்பலமாகியுள்ளது.

ஆனாலும் ஒரு விசயத்தை இங்கே ஒப்புக் கொள்ளவேண்டும். கள்ளக்காதல் தெரியவந்ததால் ஊருக்கும், உறவுக்கும் பிரச்சினை என்று முடிவு செய்து மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டார். அப்படி தெரிந்தாலும் நான் யோக்கியன் என்று சங்கராச்சாரி, நித்யானந்தன் போல மூடர்களை நம்ப வைக்க முடியும் என்பதோடு, அந்த நம்பிக்கைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கும் மோடி எனும் இந்துத்துவா செக்யூரிட்டி சர்வீஸ் இருப்பதால் சண்முகநாதன் தற்கொலை செய்யவில்லையோ என்னமோ!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க