Sunday, January 17, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தமிழக போலீசைக் கண்டித்து திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக போலீசைக் கண்டித்து திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

-

ல்லிக்கட்டு வேண்டி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மெரினா மற்றும் தமிழ்நாடு முழுவதும் வரலாறு  காணாத அளவில் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் ஏழாம் நாளான ஜனவரி 23 அன்று சென்னை மெரினா மற்றும் அலங்காநல்லூரில் போலிசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மற்றும் ,தீ வைப்பு, வாகனம் உடைப்பு போன்ற வன்முறை செயல்களை கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்ட போலிசாரை தண்டணைக்குள்ளாக்க கோரியும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருச்சி கிளையின் சார்பில் 30/01/2017 திங்களன்று மாலை 6.00 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

trichy-prpc-protestகிளையின் செயலர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் அவர்கள் தலைமை வகிக்க , கண்டன உரை திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் சீனிவாசன் B.com.,B.L அவர்களும், மூத்த வழக்கறிஞர் மருதநாயகம் B.A.,B.,L., அவர்களும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.ஆதிநாரயணமூர்த்தி B.com.,B.L அவர்களும் கிளைத் தலைவர் தோழர்.காவிரிநாடன் அவர்களும் கண்டன உரையாற்ற இறுதியாக செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சாருவாகன் நன்றி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்களும் அரங்கின் நண்பர்களும் சுமார் 100 பேர் அளவில் கலந்து கொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டம் இரவு 9.00 மணியளவில் நிறைவுற்றது. திரளான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தினை இறுதிவரை கேட்டு ஆதரவளித்தார்கள். கண்டன உரையாற்றியவர்கள் பேசியதாவது

தலைமை உரையில் வழக்கறிஞர் முருகானந்தம் பேசியதாவது: ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக்கோரிக்கைக்காக நடந்துவிடவில்லை. இதுநாள் வரையில் தான் சகித்துவந்த காவிரி பிரச்சினை, சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் தாக்கத்தினால் வெகுண்டிருந்தனர். அதன் காரணமாகவும் நமது நாட்டில் நிலவுகிற பண்பாட்டு கலாச்சாரத்தினை குலைக்கும் விதத்தில் இந்த மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு இருந்ததையும் எதிர்க்கும் விதத்தில் அதற்கு தங்களுக்குள் இருக்கும் ஆதங்கத்தினை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். அது மாணவர் போராட்டமாக துவங்கி பின் மக்கள் போராட்டமாக மாறி இருந்தது.

அத்தகைய போராட்டத்தில் வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக போலிசாராலும், ஆளும் வர்க்கத்தினராலும் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மாணவர்கள் பொதுமக்கள் போராட்டத்தினால் கிடைத்த வெற்றி என்ற பெயர் ஜல்லிக்கட்டிற்கு வந்துவிட்டால் போராட்டத்தினால் கிடைத்த வெற்றியை அவர்கள் சுவைத்துவிட்டால் அரசின் பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட்டத்தில் இறங்குவார்கள் என்று பயந்த இந்த அரசும் காவல்துறையும் இத்தகைய வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 14-ன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்திய தண்டனைச் சட்டம் போலீசுக்கும் பொருந்தும். அந்த வகையில் இந்த கலவரத்தை ஏற்படுத்திய காவல் துறையினர் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பேசினார்.

trichy-prpc-protest2வழக்கறிஞர் சங்கத் தலைவர் சீனிவாசன் பேசியது: மாணவர் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று  17/01/2017 அன்று பொதுக்குழுவை கூட்டி  மாணவர்கள் போராட்டத்திற்கு எங்களது வழக்கறிஞர் சங்கம் ஆதரவு அளிப்பதாக தீர்மானம் இயற்றினோம்.  அந்த மாணவர்களிடம் சென்று போராட்டத்திற்கு ஆதரவு அளித்தோம்.  இரண்டு நாள் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பு செய்தோம். போராடுபவர்கள்  மீது எந்த வழக்கு போட்டாலும் அதனை வழக்கறிஞர் சங்கம் இலவசமாக நடத்தி கொடுக்கும் என்றெல்லாம் தீர்மானம் இயற்றியிருந்தோம். காளை காட்டு விலங்கு அல்ல அது வீட்டு விலங்கு அதை கொடுமை படுத்துவதாக சொல்வது பொய் அப்படி ஒன்றும் நடப்பது இல்லை. ஒருநாள் அந்த காளையோடு விளையாடுவதற்காக மக்கள் வருடம் முழுவதும் பாசத்தோடு வளர்க்கிறார்கள். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்  இந்த சட்டத்திருத்தத்தை கவனிக்காமல் இருந்ததோடு எதற்காக நாம் அவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினோமோ அந்த வேலையை அவர்கள் செய்யாமல் இருந்துள்ளனர். அந்த வகையில் இந்த காவல் துறையினர் மாணவர்களை அடித்திருக்க கூடாது. அவர்கள் அடித்திருக்க வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்களைத்தான் காவல் துறையின் வன்முறைதாக்குதல் கண்டிக்க வேண்டியது என்று பேசினார்.

மூத்த வழக்கறிஞர் மருதநாயகம் பேசியதாவது: இந்த மோடி அரசு தொடர்ந்து மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. போராட்டத்தில் வன்முறையாளர்கள் என்று கூறுவது மோடியுடைய மோசடி இந்த மாநில அரசு மத்திய அரசின் காவிக்கொள்கையை பற்றியிருக்ககூடிய ஒன்றாக இருக்கிறது. அது மத்திய அரசின் கைப்பாவையாக முற்றிலுமாக மாறிவிட்ட ஒன்றாக உள்ளது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றம் மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. அது தொடர்ந்து மக்களுக்கு எதிரான போக்கை கொண்டிருக்கிறது.

trichy-prpc-protest3ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக விளங்க வேண்டிய பத்திரிக்கை, தொலைக்காட்சியெல்லாம் மக்களுடைய நம்பிக்கையை இழந்து நிற்கிறது. அந்த வகையில் இந்த மாணவர்களின் போராட்டம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்க கூடிய புரட்சியின் தொடக்கம் என்று பேசினார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி பேசியது: திருச்சியை பொருத்தவரை போலிசார் சாதுர்யமாக கையாண்டதாக சொல்கிறார்கள். கடந்த 23/01/2017 அன்று மாணவர்கள் போலிசாரால் துரத்தப்பட்டபோது அவர்கள் நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். காவல் துறையினர் நீதிமன்ற வளாக கதவுகளை அடைத்தனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள் யாரும் செல்ல முடியாத நிலையில் அராஜகமாக நடந்து கொண்டனர். போராடும் மாணவர்களுக்கு உணவு செல்ல முடியாதபடி தடுத்தனர். வழக்கறிஞர்கள் சென்று காவல்துறையினரை தடுத்தோம். நீதிமன்ற கதவை திறக்க வைத்தோம். மாணவர்கள் மீது தாக்குதல் எதுவும் நடந்துவிடாதபடி பாதுகாத்தோம். அதோடு தமிழகம் முழுவதும் போராடிய மாணவர்களை தாக்கியது அராஜகமானது. அமைதியாக போராடும் மாணவர்களை எந்த சட்டமும் தாக்க சொல்லவில்லை. காவல் துறையினர் நடந்து கொண்டது சட்டவிரோதமானது. காவல் துறையினர் திடிரென இந்த தாக்குதலை நடத்தவில்லை. அவர்கள் திட்டமிட்டே வெண்பாஸ்பரஸ் கொண்டு வந்து சொத்துக்களை கொளுத்தியிருக்கிறார்கள். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சொந்த பணத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேசினார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர் காவிரிநாடன் பேசியது:

trichy-prpc-protest4உலகில் பல நாடுகளில் மக்கள் புரட்சிகள் வெடித்திருக்கிறது. ஒருசில நாடுகளில் தொழிலாளி வர்க்கம் புரட்சிகர சக்திகளாக இருக்கிறது. சில நாடுகளில் விவசாயிகள் புரட்சிகர சக்திகளாக இருந்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தமிழகத்தில் மாணவர்களும் இளைஞர்களுமே புரட்சிகர சக்திகளாக இருக்கிறார்கள். இந்த போராட்டங்களுக்கு முன்பு மாணவர்களை சமூகமும் ஊடகங்களும் சமுக அக்கறை அற்றவர்களாக பொறுப்பற்றவர்களாகவே சித்தரித்து வந்ததன. மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் மோசடி பொய்யான அரசியலால் துரோகத் தனத்தால் புழுங்கி கொண்டிருந்த மாணவர் சமுதாயம் வெடித்து கிளம்பி இருக்கிறது.

இந்த ஜல்லிகட்டு பிரச்சினையில் பீட்டாவை மட்டுமே எதிரியாக காட்டுவது சரியல்ல. மொத்த பாரதிய ஜனதா அரசே தேசிய இனங்களின் அடையாளத்தை அழிப்பது என்பதை குறிப்பாக தமிழர் பண்பாட்டு அடையாளத்தை அழிப்பதை கொள்கையாக கொண்டுள்ளது. போராட்டத்தின் தேசவிரோதிகளும் சமுக விரோதிகளும் ஊடுறுவினார்கள் அதனால்தான் கலவரம் நடந்தது என்கிறார்கள். நடைமுறையில் பி.ஜே.பி. தான் தேசவிரோத சமூக விரோத சக்தியாக உள்ளது என்று பேசினார்.

இறுதியாக நன்றி தெரிவித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சாருவாகன் பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க