Friday, May 7, 2021
முகப்பு கலை கவிதை நடவுப் பாட்டு அழிந்த ஊரில் உஞ்சவிருத்திக்கு என்ன உற்சவம் ?

நடவுப் பாட்டு அழிந்த ஊரில் உஞ்சவிருத்திக்கு என்ன உற்சவம் ?

-

ஞ்சம் பொழைக்க
தவிக்கும் ஊரில்
பஞ்சரத்ன கீர்த்தனை
பட்டுப்போன
ஆற்றங்கரையில்
பட்டுப்புடவைகள் வாசனை.

slideரசிக்க முடிந்தவர்
ரசிக்கலாம்
உழவர் நெஞ்சு வெடித்த
ஓசை மறந்து
உஞ்ச விருத்தி பஜனை !

காவிரியின் தாள கதி
காவியால் நிர்க்கதி
கர்நாடாகாவிடம் மல்லுக்கட்டி
கழனிகள் அதோ கதி !
இதற்கு இல்லை
உங்களிடம் ஒரு சுருதி
கூச்சமில்லாமல்
கொலைக்களத்தில்
களிப்புடன் கர்நாடக `சங்கதி’ !

வந்தவருக்கெல்லாம்
சோறு போட்ட
தஞ்சை பூமியே காலி
தியாகய்யரையும்  ஊட்டி வளர்த்த
நெற்களஞ்சியம் மூளி !

நாற்றசையும் சுவரம் இன்றி
மருதப்  பண் மரணம்
பார்த்துப் பதறாத
உங்கள் `அலங்காரம்’.
பசும் பால் காபிக்கு
கும்பகோணம்
பாடி மகிழ
ஆரோகணம், அவரோகணம்.

“கருணையிலாதது கண்ணா ?”
கேட்டார் வள்ளுவர்
கண்டும் சுரணையிலாதது
பண்ணா ?
கேட்கத் துடிப்பது உழவர்.

கார்ப்பரேட்  ஆராதனை
விளைநிலம் விழுங்கி
கொள்ளையிடுது நாட்டை.
வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல்
உங்கள் நாவில் துள்ளுது ‘நாட்டை

மதகோசை முடங்கி
பயிரோசை ஒடுங்கி
உயிரோசை அடங்கும் புல்லினம்.
இதற்கொரு உணர்ச்சியில்லாமல்
இதயம் மரத்தது இசையா !
நீங்கள்
என்ன வகை உயிரினம் ?

கழுத்து மணி இல்லாமல்
கலை இழந்து
கால்நடைகள் குரலெடுக்க  முடியாமல்
வாயில் நுரை தள்ளி.
கழுத்து ஆரம் ஆட்டி
காதணி குழையக் காட்டி
காய்ந்த ஊருக்கு நடுவே
களைகட்டும் உங்கள்
ஆரபி, வராளி

குரல், துத்தம், கைக்கிளை
உழை, இளி, விளரி, தாரம்
எனும் ஏழுவகைத் திருடி
தமிழ் தாள உறுப்புகள்
“அலகு ”  லகுவாகி
“துரிதம்”  த்ருதம்  ஆகி
‘அரைத்துரிதம்’ அனுத்ருதம்  ஆகி
களவாடி   தமிழிசையை
கர்நாடக இசையாக்கி
தமிழ் நிலம் பாடாமல்
வக்ர ராகமும்,
தமிழில் பாடினால் தீட்டு எனும்
அக்ரகாரமும்

கெளளை‘ பாடும் சத்தத்தில்
தன்மானத்தில்
தவளை சாகுது  மொத்தத்தில்.

வரப்பில்
வேலி முள்
எனத் தொட்டால்
வெளுத்து காய்ந்து கிடக்கும்
ஓணாண்.

வெங்காயச் சருகென
விலக்கினால்
வாசலில்
மக்கிக்கிடக்கும்
வண்ணத்துப் பூச்சி

தொட்டிலின் மேல்
ஒட்டடை
எனத் தட்டினால்
துருப்பிடித்து
வெகு நாளாய்
மறந்துபோன கருக்கரிவாள்

இறந்த விவசாயியின் முகத்தை
நிழற்படத்தில் வெறித்து,
வடியும் தாயின் கண்ணீரைப்   பார்த்து
விளங்காமல் பயந்து
செதும்பும் குழந்தை.

ஏன் இந்தத் துயரம்
எது இதன் அடி நாதம் ?
ஊன் உருகும்
உங்கள் புல்லாங்குழலில்
இதற்கோர் இழை உண்டா…

‍பொங்கலுக்கு வழியின்றி
உழவன் வீட்டில் கருமாதி
உங்களுக்கு என்ன ?
உறுத்தாமல்   அனுபவிக்க
காம்போதி

இந்தனைக்கும்  நடுவே
இத்தரையில் அமர்ந்து
தொடை தட்டி, சுதி கூட்டி
பஞ்சமம், சட்சம்
உங்களால் முடியும்
ஆம்
உங்களால் முடியும்
பசையற்ற நிலத்தில்
இசைக் கூத்தடித்த
உங்களால் மட்டுமே முடியும் !

– துரை. சண்முகம்

குறிப்பு: ஒற்றை மேற்கோளில் வருபவைகள் ராகங்களின் பெயர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க