“हम तुम्हे मारेंगे और ज़रूर मारेंगे लेकिन हु बन्दूक हमारी होगी, गोली भी हमारी होगी, वक़्त भी हमारा होगा बस जगह तुम्हारी होगी” (hum tumhe maarenge aur zaroor maarenge lekin hu bandook hamaari hogi, goli bhi hamaari hogi, vaqt bhi hamaara hoga bas jagah tumhaari hogi)
– கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 29 அன்று ட்விட்டரில் துருவ் சக்சேனா.
இதன் பொருள் ”நாங்கள் உன்னைக் கொல்வோம்; நிச்சயம் கொல்வோம். துப்பாக்கி எங்களுடையதாக இருக்கும், தோட்டாக்களும் எங்களுடையதாக இருக்கும், நேரம் கூட எங்களுடையதாக இருக்கும் – ஆனால், இடம் மட்டும் உன்னுடையதாக இருக்கும்” – இது சாவ்தாகர் எனும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் பேசிய வசனம்.
அது இந்திய இராணுவம் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களின் மேல் ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் நடத்தியதாக பீற்றிக் கொண்ட சமயம். எனவே இந்த வீரவசனத்தை துருவ் சக்சேனா யாரைப் பார்த்து சொல்லியிருப்பார் என்பதைப் புரிந்து கொள்வதில் எந்தச் சிரமும் இருக்கப் போவதில்லை. ஆம், பாகிஸ்தானைப் பார்த்து துருவ் சக்சேனா அடித்த பல்வேறு வீர வசனங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. துருவ் சக்சேனாவின் பிற சமூக வலைத்தள பதிவுகளில் தேசியம், தேசபக்தி குறித்தெல்லாம் நாட்டு மக்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறார்.
யார் இந்த துருவ் சக்சேனா?
துருவ் சக்சேனா, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். குறிப்பாக அதன் இணையப் பிரச்சார பீரங்கிகளில் ஒருவர் – மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் தேசபக்தர்களின் சார்பாக தீவிரமாக களமாடி வந்த துருவ் சக்சேனா, தற்போது தீவிரவாத தடுப்பு போலீசாரால் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
துருவ் சக்சேனா செய்த குற்றம் – தேசதுரோகம். குறிப்பாக சொல்வதானால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு இந்திய இராணுவம் குறித்த இரகசிய தகவல்களை கள்ளத்தனமாக கொடுத்தார் என்பது தான் துருவ் சக்சேனாவின் மீதான குற்றச்சாட்டு. இந்தக் கைது நடவடிக்கையில் மேலும் சில ஆச்சரியங்கள் உள்ளன. பாகிஸ்தான் உளவாளிகளாகச் செயல்பட்டு துருவ் சக்சேனாவுடன் கைது செய்யப்பட்ட மற்ற பத்து பேரில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. மத்தியில் மட்டுமின்றி மத்திய பிரதேசத்திலும் நடப்பது பாரதிய ஜனதா ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த போலீசு உயரதிகாரி சஞ்சீவ் சமி கூறும் போது, கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே நடத்தி வந்தார்களெனவும், அந்தத் தொலைபேசி இணைப்பகத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்திய இராணுவ அதிகாரிகள் பேசுவது போல பேசி ஜம்மு காஷ்மீரில் நிலை கொண்டிருக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகளிடமிருந்து இராணுவ நடவடிக்கைகள் குறித்த இரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். துருவ் சக்சேனாவும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் பணத்துக்காகவே இந்தக் காரியங்களில் ஈடுபட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை மோடியை எதிர்ப்பதோ, மத்திய பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளை விமர்சிப்பதோ தேசதுரோகச் செயலாக சித்தரிப்பது வழக்கம். தமது தலைவரின் மேல் சொல்லப்படும் எந்தவொரு சிறிய விமர்சனத்துக்கும் சீறியெழுந்து எதிரி வினையாற்றும் பாரதிய ஜனதாவின் இணையக் கூலிப்பட்டாளம், விமர்சிப்பவர்களை மட்டுமின்றி அவர்களது ஏழேழு தலைமுறையினரையும் இந்தியாவுக்கு எதிரானவர்களாகவும் தேசதுரோகிகளாகவும் சித்தரிப்பது வழக்கம். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தேசபக்தர் துருவ் சக்சேனாவோ இந்திய நாட்டுக்கும் பாகிஸ்தான் கொடுத்த நோட்டுக்கும் ஒரே நேரத்தில் வாலாட்டியுள்ளார்.
இந்துத்துவ கும்பலுக்கு இந்திய சுதந்திரப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த துரோக வரலாறு இருக்கும் நிலையில், எங்கே விவாதமென்றாலும் அங்கெல்லாம் ஆஜராகி தேசபக்த கூச்சலை ஓங்கி ஒலிப்பதும், இந்திய தேசியத்தின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தம்மைக் காட்டிக் கொள்வதும் வழக்கம். கூட்டமாக உள்ள பேருந்தில் குசு விட்டவன் எவனோ அவனே எல்லோரையும் முந்திக் கொண்டு “என்னய்யா நாத்தம்” என மூக்கைச் சுளிப்பது போல அடிவயிற்றிலிருந்து ‘பாரத் மாதாகீ ஜேய்’ என்று கூவிக் கொண்டே தேசத்தை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளார் துருவ் சக்சேனா.
பெரும்பாலான முதலாளிய ஊடகங்கள் இந்த விவகாரம் குறித்து பேசாமல் கள்ள மௌனம் சாதித்தாலும், ஓரிரு ஊடகங்களில் செய்தியாக வெளியாகி நாற்றமெடுக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் துருவ் சக்சேனாவுக்கும் தமது கட்சிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படையாக மறுத்துள்ள மத்திய பிரதேச பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகர்கள், தனிப்பட்ட முறையில் தமது கட்சியினுள் அந்நிய தேசத்தின் உளவாளிகள் ஊடுருவியுள்ளதாக இந்தியா டுடே பத்திரிகையின் செய்தியாளரிடம் புலம்பியுள்ளனர்.
அரசியல் ரீதியில் உருத்திரண்டுள்ள இந்துத்துவ சித்தாந்தம் அதன் பிறப்பிலேயே ஏகாதிபத்திய சேவையையும், தேச துரோகத்தையும் அடித்தளமாக கொண்டதாகும். ‘சுதந்திர’ இந்தியாவில் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க தனி அமைச்சகம் அமைத்து சேவை புரிந்த ஒரே ஆட்சி பாரதிய ஜனதாவினுடையது என்பதும், இராணுவத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அதற்கான சமீப கால நிரூபணங்கள். விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?
தேசத்தின் மேல் பற்றுக் கொண்டவர்கள் பாரதிய ஜனதாவையும் இந்துத்துவ கும்பலையும் வேரோடு ஒழித்துக் கட்டுவது ஒன்றே தலையாய தேசபக்த நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்வதோடு உடனடியாக அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும்.
மேலும் படிக்க
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் தேசபக்க்க்க்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.ஒருவேளை இது வினவு-கம்யூனிஸ்டு கயவாளிகளின் கூட்டுச்சதியாக இருக்கலாம்.தேசியத் தலைவர் ஆமித் ஷாவிடம் சொல்லி இந்த துரோகிகளை என்கவுண்டர் செய்யச் சொல்லலாம்.அரியலூர் சிறுகடம்பூர் சிறுமி நந்தினியைப் படுகொலை செய்த இந்து முன்னணி மணிகண்டனையும் உடனே நீக்கிவிட்டார்கள்.அதுபோலத்தன் துருவ்வும் நீக்கப்பட்டுவிட்டார்.என்னன்ற இப்ப.போவியா வேலையைப் பாத்துக்கிட்டு.எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்..என்ன இண்டியன் மணிகண்டா?
துருவ் கண்ணா….பேஷ்…பேஷ் சமத்துப்புள்ளடா அம்பி நீ…..
யாருக்காக வேலை பார்க்கிறோம் என்பது தான் முக்கியம்….பாரத மாதா சுய நினைவிழந்து பல நூறு வருடங்கள் ஆகிவிட்டன…..இனி கூட்டிக்கொடுக்கவோ, காட்டிக்கொடுக்கவோ ஒன்றும் இல்லை….நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும்…
துருவ் சக்சேனா பாஜக தேசிய செயலாளர் ஆகும் நாள் தொலைவில் இல்லை….