Tuesday, July 23, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மகிழ்ச்சி என்பது போராட்டமே : மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை

மகிழ்ச்சி என்பது போராட்டமே : மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை

-

ருமேனியாவின் மோடி: பிரதமர் சோரின் க்ரிண்டேனு
ருமேனியாவின் மோடி – பிரதமர் சோரின் க்ரிண்டேனு

மிழகத்தின் உரிமைகளைத் தொடர்ச்சியாக நசுக்கி வரும் மத்திய அரசுக்கும், அதற்குத் துணை போகும் மாநில அரசுக்கும் எதிராக 2017 ஜனவரி மாதம்  மெரினாவிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான  போராட்டத்தைப் பெருந்திரளாக இலட்சக்கணக்கான தமிழக மக்கள் ஒன்றிணைந்து நடத்தினர். அதைப் போன்றதொரு பெருந்திரள் மக்கள் எழுச்சி ருமேனியா நாட்டிலும் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக  நடைபெற்று வருகிறது. வால்வீதி ஆக்கிரமிப்புப் போராட்டம் தொடங்கி தற்போது தமிழகம், ருமேனியா வரை, தங்களைக் காப்பாற்றுவதாக கூறிக் கொள்ளும் அரசு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையை இழந்த மக்கள், தங்களது உரிமைகளை பறித்தெடுக்க சமரசமின்றி வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஆளுங்கட்சியான சோசலிச டெமாக்ரட்டிக் கட்சி, கடந்த 2017 ஜனவரி மாதம் 31-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில்  ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியது. அந்த அவசரச்சட்டத்தின் படி ருமேனியாவில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஈடுபடும் முறைகேடுகளின் மதிப்பு 48,000 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவாக இருந்தால் அவை குற்றமாகக் கருதப்படாது. அவர்களை சிறையில் அடைக்கத் தேவையில்லை. அதே போல், ஏற்கனவே சிறையில் இருப்பவர்களின் சிறை தண்டனையை ரத்து செய்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்றும் ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது ருமேனிய அரசு.

ருமேனியாவில் இது வரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தற்போது தண்டனையை அனுபவித்து வரும் மற்றும் விசாரணையில் இருக்கின்ற அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் எண்ணிக்கை சுமார் 2,000 பேர். இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை தப்புவிப்பதற்காகவே கொண்டு வரப்படும் இச்சட்டத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் சோரின் க்ரிண்டேனு கூறியிருக்கும் காரணம் என்ன தெரியுமா ? சிறைகளில் ஏற்பட்டிருக்கும் இட நெருக்கடிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் இது என்று அறிவித்திருக்கிறார் கிரிண்டேனு.

rome-people-protest-flag
வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்

பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பல்கள் சூதாடுவதற்கு ஏதுவாக நமது கையில் ரொக்கமாக இருக்கும் ஒட்டுமொத்த பணத்தையும் வங்கிகளில் குவிப்பதற்காகச் செய்யப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என அறிவித்த மோடியிடமிருந்து தான் இந்த உபாயத்தை கிரிண்டேனு கற்றிருப்பார் போலும்.

ஊழல் அதிகாரிகள் மட்டுமல்லாமல், குறிப்பாக தமது ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான லிவியூ ட்ராக்னியாவை அதிகார துஷ்பிரயோக முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவிக்கவே இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது ருமேனிய அரசு. இதனை உணர்ந்தே ருமேனிய மக்கள் ஆத்திரமடைந்து வீதிக்கு வந்திருக்கின்றனர். ஊழல்வாதிகளுக்கு ஆதரவான இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், இத்தகைய மோசமான சட்டத்தைக் கொண்டு வந்த ஆளும் கட்சி பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தலைநகரான புச்சாரெஸ்ட்டில் 3,00,000க்கும் அதிகமான மக்கள் ஒன்று குழுமி 15 நாட்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தவிர ருமேனியாவின் 55 முக்கிய நகரங்களில், மக்கள் அரசு அலுவலகங்களின் முன்னால் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர்.

பொதுமக்களின் ஆத்திரத்தைக் கண்டு மிரண்ட ருமேனிய அரசு, கடந்த 2017 பிப்ரவரி 5, ஞாயிறன்று அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. எனினும் ஆட்சியாளர்கள் பதவி விலகினால் தான் அங்கிருந்து கலைவோம் எனப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கும் தமிழக மக்களால் நிகழ்த்தப்பட்ட மெரினா எழுச்சிக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன.

rome-people-protest-night
செல்போனின் ஒளி வெள்ளத்தில் – மெரினாவின் அதே உற்சாகம்

பாலாற்றுப் பிரச்சினை, காவிரி பிரச்சினை, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி மறுப்பு, ஜல்லிக்கட்டுக்கு சட்டதிருத்தம் கொண்டு வர மறுப்பு எனத் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சித்து வந்த மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அதிமுக அரசிற்கு எதிராக, தமிழக மக்கள் மெரினாவில் கொதித்தெழுந்தது போல், தொடர்ச்சியான ஊழல் முறைகேடுகளாலும், அதிகார துஷ்பிரயோகங்களாலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வந்த ருமேனிய மக்கள் ஒட்டுமொத்தமாக கொதித்தெழுந்து வீதிக்கு வந்து விட்டனர்.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கண் துடைப்புக்காக அவசரச் சட்டத்தை இயற்றிவிட்டு பிரச்சினை முடிந்துவிட்டது என அறிவித்த பன்னீரைப் புறக்கணித்து நிரந்தரச் சட்டம் இயற்றும் வரைப் போராடுவோம் எனத் தமிழக மக்கள் தொடர்ந்து போராடியதைப் போல ருமேனிய மக்களும் ஆளும் சோசலிஸ்ட் டெமாக்ரடிக் அரசாங்கம் பதவி விலகும் வரை களையப்போவதில்லை என தொடர்ந்து போராட்டத்தில் இருக்கின்றனர்.

இரவிலும் அதே உற்சாகத்துடன் போராட்டக்காரர்கள்.
இரவிலும் அதே உற்சாகத்துடன் போராட்டக்காரர்கள்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அவசரச் சட்டத்தை ஏற்காமல் நிரந்தரச் சட்டத்திற்காகத் தொடர்ந்து போராடிய இளைஞர்களையும், மாணவர்களையும், பாஜக, அதிமுக மற்றும் அவர்களின் அடிவருடிக் கும்பல்கள் எவ்வாறு சமூக விரோதிகள் எனச் சாடினார்களோ அதைப் போலவே, ருமேனியாவிலும் போராட்டத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் மக்களை சமூகவிரோதிகள் பின் இருந்து இயக்குவதாக ஆளும் கட்சியின் மூத்த தலைவரான லிவியூ ட்ராக்னியாவும் கூறியுள்ளார். மக்கள் எழுச்சியை ஒடுக்க ஆளும்வர்க்கங்கள் ஆர்வத்தோடு உபயோகிக்கும் மூன்று சொற்கள் –” சமூகவிரோதிகள் – தேசவிரோதிகள் – தீவிரவாதிகள் ” உலகம் முழுவதும் போராடும் மக்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரிப்பது தான் ஆளும்வர்க்கங்களின் ஒருமித்த சித்தாந்தக் கோட்பாடாக இருக்கும் போலிருக்கிறது.

தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை
தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை

ருமேனிய மக்களின் எழுச்சி குறித்துப் பேசும் போது, மற்றொரு விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்று ருமேனிய மக்கள் எந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்களோ, அத்தகையதொரு சட்டம் , தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் முதல் ஜெயலலிதாவால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர் தொடங்கி, உயரதிகாரிகள் வரை, யார் மீதாவது லஞ்ச ஊழல் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனில், தமிழக அரசிடம் அனுமதி பெற்றுத் தான் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று ஜெயா அரசு ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. மக்களைச் சுரண்டி அரசு அதிகாரிகள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பங்கை முழுங்கிக் கொழுத்த ஜெயா, தனக்கு சம்பாதித்துத் தரும் தனது அடிமைகளைப் பாதுகாக்க இந்த அரசாணையைப் பிறப்பித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் தமது உரிமைகளை மீட்க சிலிர்த்தெழுந்த இதே தமிழக மக்கள் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட  இந்த அரசாணை குறித்து எவ்வித எதிர்ப்புமின்றி அமைதியாயிருந்தனர். ஒரு வருடத்தில் மக்கள் எழுச்சி நிகழும் அளவிற்கு அப்படி என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன ? மேலே நாம் குறிப்பிட்ட பல்வேறு காரணங்களோடு மற்றுமொரு முக்கியக் காரணமும் உண்டு. அது ஜெயலலிதா என்னும் தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை ஒழிந்தது தான்.

rome-people-protest
ஏகாதிபத்தியத்திற்கு சவக்குழி தோண்டும் மக்கள்

உலகம் முழுவதிலும், மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி இவ்வாறு பெருந்திரளாகத் திரண்டு நின்று போராடுவது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. வால்வீதி போராட்டம் தொடங்கி, தற்போது மெரினா, ருமேனியா என்று தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய மக்கள் போராட்டங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களாகவே இருந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

பெருந்திரளாகக் கூடி ஒரு திருவிழாவைப் போல தமது போராட்டத்தை நடத்திய தமிழகத்தை நாம் மெரினாவில் கண்டோம். இதோ ருமேனியாவின் புச்சாரெஸ்ட்டிலும் அதைப் போன்றதொரு திருவிழாவாக இப்பெருந்திரள் மக்கள் எழுச்சியை மக்கள் கொண்டாடுகின்றனர். அவர்களின் போராட்டம் வெல்கிறதோ, தோற்கிறதோ ஆனால், இது உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கங்களின் அடிவயிற்றைக் கலங்கச் செய்து கொண்டிருக்கிறது. சட்ட வரையறைகளைத் தாண்டி நடைபெறும் இத்தகைய மக்கள் போராட்டங்கள், தோற்றுவிக்கும் போராட்ட உணர்வு, உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களின் பெருங்கனவிற்கு சவக்குழி தோண்டத் தொடங்கியிருக்கின்றன. ஆசான் மார்க்சின் சொல் உழைக்கும் வர்க்கத்தின் சொல்லாகவே என்றென்றும் இருந்து வந்திருக்கிறது என்பதற்கான நிரூபனம் தான் மெரினாவும், புச்சாரெஸ்ட்டும்.

marina-protest
மெரினாவில் திரண்ட தமிழ் மக்கள்

”மகிழ்ச்சி என்பது போராட்டமே ” – மார்க்ஸ்

– கதிர்

செய்தி ஆதாரம்:
Bucharest: Thousands protest decriminalising corruption
Protesters in Romania denounce plan to decriminalise misconduct offences
Romania protests continue despite repeal of corruption decree

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க