பருவமழை எதிர்பார்த்த அளவிற்கும் மிகக்குறைவாக பெய்திருப்பதாலும், மற்றும் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும் நாடு முழுவதும் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களைப் போலவே பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களிலும் விவசாயிகளின் சாவு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கோதுமைக் களஞ்சியமான பஞ்சாப்பில் கடன் நெருக்கடியால் இரண்டு நாளுக்கு மூன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என பத்திரிகை செய்திகள் வெளிவரும் இச்சூழ்நிலையில் மோடி அரசு 2017-18–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்திருக்கிறது !
“விவசாயிகள் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம்” என்று சவடால் அடிக்கும் மோடி அரசு, இந்தப் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்காக மொத்தம் 51,026 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இது மொத்த பட்ஜெட்டில் வெறும் 2.3%தான்!
நீர்பாசனம் மற்றும் நீராதாரங்கள் திட்டங்களுக்காக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கிய 20,000 கோடியில் என்னென்ன திட்டங்கள் நடந்தது என்ற விளக்கமேதும் இல்லாமலே, இந்த பட்ஜெட்டிலும் 20,000 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள் ! இப்போதும் கூட இத்தொகை எப்போது, எங்கு, என்னென்ன திட்டங்களுக்காக செலவிடப்படும், எந்த அரசு அமைப்பின் கீழ் கண்காணிக்கப்படும் என்று எந்த விவரமும் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை ! இந்த லட்சணத்தில் நடுத்தர, நுன்பாசனத் திட்டங்களுக்கான நிதியம் அமைக்க தனியாக 5,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது ! இவ்வாறு ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடிகள் எங்கு போகிறது என்பது மோடி வகையறாவுக்கே வெளிச்சம்!
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு 10 லட்சம் கோடிரூபாய் இலக்கு தீர்மானித்திருப்பதாகக் கூறும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடன் மானியத்திற்கு என 15,000 கோடி ரூபாயை ஒதுக்கி மானியத்திற்கும் வரம்பு நிர்ணயித்திருக்கிறார். இதை மாநிலவாரியாகப் பிரித்தால் சராசரியாக ஒரு மாநிலத்திற்கு 460 கோடிதான் மானியமாக கிடைக்கும். அப்படியானால் எத்தனை பேருக்கு மானியக் கடன் கிடைக்கும்? இதில் சிறுகுறு விவசாயிகள் எத்தனைபேருக்கு வழங்கப்படும்? எந்தெந்த வகைக்கடனுக்கு இந்த மானியம் பொருந்தும்? அல்லது பொருந்தாது என்று எவ்வித வரையறையும் பட்ஜெட்டில் விளக்கப்படவில்லை ! மேலும், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்போவதாக சொல்லும் 10 லட்சம் கோடிரூபாய் என்பது மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையல்ல. இது வங்கிகள் வழங்கும் விவசாயக் கடனுக்கான இலக்குதான்! வங்கிகள் வழங்கும் இந்தக் கடனுக்கான மானியமாகத்தான் 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது! அதாவது இத்தொகையை அரசு நேரடியாக வங்கிகளுக்கு செலுத்திவிடும்! எனவே இந்த மானியத்தை அனுபவித்தவர்கள் சிறு குறு விவசாயிகளா அல்லது விவசாயிகள் பெயரில் செயல்படும் வேளாண் வர்த்தக நிறுவனங்களா என்ற விவரம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும்!
வங்கிகளை தனியார் மயமாக்கும் நோக்கத்தில், “பொதுத்துறை வங்கிகள் லாபகரமாக இயங்குவதை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் உத்தவாதம் செய்துகொள்ளவேண்டும்” என்று ஏற்கனவே, மத்தியஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், யாருக்கு எவ்வளவு கடன் வழங்குவது? வழங்கக்கூடாது என்பதை வங்கிகளின் கிளை மேலாளர்கள்தான் நடைமுறையில் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்! சாதாரணப் பயிர்கடன் பெறுவதற்கே “வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும்! இரண்டுவருட கணக்குப் பராமரிப்பும், குறைந்தபட்ச இருப்புத் தொகையும் கணக்கில் இருக்க வேண்டும்!” என்று கறார் காட்டுவார்கள். இதற்கும் மேலாக கிளைமேலாளரின் கடைக்கண் பார்வையும் இருந்தால்தான் கடன்பெற முடியும்!
நிலத்தை ஈடுவைத்து கடன் வாங்க வேண்டுமானால், போர்வெல் இருக்கிறதா? எத்தனை அடியில் தண்ணீர் இருக்கிறது? அதில் எத்தனை மணிநேரம் பாய்ச்சல் இருக்கும்? என்ன பயிர் இருக்கிறது? அதன் ஆண்டுவருமானம் எவ்வளவு? விவசாயம் தவிர வேறு என்னென்ன வருமானங்கள் இருக்கிறது? குடும்பத்தில் எத்தனை பவுன் நகை உள்ளது? சொந்தவீடா வாடகைவீடா ஒத்தியா? சொந்தவீடு என்றால் அது யார் பெயரில் இருக்கிறது? எத்தனை சதுரஅடி? அதன் சந்தை மதிப்பு எவ்வளவு? இதுதவிர, நிலத்திற்கு 32 வருட வில்லங்க சான்றிதழ், நோட்ரிபப்ளிக் சான்று, பட்டா, சிட்டாஅடங்கல், என்று தனிப் புத்தகம் போடுமளவுக்கு உத்தரவாதம் காட்டவேண்டும்! இதற்கெல்லாம் பிறகு நிலத்தை நான்கு, ஐந்து முறையாவது வங்கி அதிகாரிகள் பார்வையிட்டுத்தான் கடன் தருவதற்கு சம்மதமே தெரிவிப்பார்கள்! இறுதியாக, விவசாயி தனது சொந்த செலவில் நிலத்தை வங்கிக்கு கிரையம் செய்து கொடுக்க வேண்டும் ! இதற்கே ஆறு மாதங்கள் ஓடிவிடும்! நடுத்தர விவசாயிகள் கூட இந்த நடைமுறை சிக்கலுக்கு பயந்தே பாதிப்பேர் வங்கிக்கடன் வாங்குவதைக் கைவிட்டுவிட்டு தனியார் பைனான்ஸ் கும்பலிடம் அடைக்கலமாகி விடுகிறார்கள்!
இந்த எதார்த்தத்தைக் கடந்து எத்தனை விவசாயிகளால், மோடி சொல்லும் 10 லட்சம் கோடியை கடனாக பெறமுடியும்? ரிலையன்ஸ் ஃபிரஷ், ருச்சி, டாபர் போன்ற ஏற்றுமதிக்கான நவீன விவசாயம் செய்பவர்களும், குளிர்பதனக் கிடங்கு நடத்துபவர்களும், வேளாண் தரகுத்தொழில் செய்பவர்களும்தான் பெருமளவில் விவசாயக் கடன் பெறுகிறார்கள் ! உண்மை என்னவென்றால் இவர்கள் யாரும் கிராமங்களில் தொழில் செய்வதில்லை. பெரு நகரங்களில்தான் செயல்படுகிறார்கள் ! “மராட்டிய மாநிலத்தில் கடந்த வருடம் வழங்கப்பட்ட வேளாண் கடனில் 40% மும்பை நகரில் உள்ள இத்தகைய நிறுவனங்களுக்குத்தான் சென்றிருக்கிறது” என்கிறார் பொருளாதார ஆய்வாளர் பிரபாட் பட்நாயக் ! ஆனால், சிறுகுறு விவசாயிகளில் 40% பேர் வங்கிக்கடன் பெற வசதியின்றி தவிப்பதாக மத்திய அரசே வெட்கமின்றி கூறிவருகிறது!
பயிற்காப்பீட்டு திட்டத்திற்காக இந்த பட்ஜெட்டில் 9,000 கோடியை ஒதுக்கியுள்ள ஜெட்லி, நாட்டின் 40% விவசாயிகளை இதில் இணைக்கப் போவதாக பெருமையுடன் கூறுகிறார் ! ஆனால் உண்மை என்ன? கடந்த 2016-17 பட்ஜெட்டில் இதே திட்டத்திற்காக 5,500 கோடி ஒதுக்கப்பட்டது. இது ஆண்டு முடிவில் (திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி) 13,500 கோடியாக உயர்ந்துவிட்டது! இதன்மூலம் நாட்டின் 26% விவசாயிகள் இணைக்கப்பட்டதாக நிதியமைச்சர் கூறுகிறார். 26% பேருக்கு 13,500 கோடி செலவாகியிருக்கும்போது நடப்பு பட்ஜெட்டில் 40% பேருக்கு 9000 கோடி ஒதுக்கீடு என்பது எந்த ‘குமாரசாமி’யின் கணக்கு என்று தெரியவில்லை!
9000 கோடி, 13,500 கோடி என்பதெல்லாம், தாங்கள் காப்பீடு செய்துள்ள தொகைக்கு விவசாயிகள் செலுத்தும் பிரிமியத் தொகைக்கு, மத்தியஅரசு கொடுக்கம் மானியத் தொகைகள். இத்தொகை முழுவதும் பயிர் காப்பிட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசால் நேரடியாக வழங்கப்பட்டுவிடும் என்பதே உண்மை! ஏற்கனவே அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டுவந்த இடத்தில், ICICI LAMBARD, IFFCO-TOKIYO, HDFC போன்ற 16 அன்னிய தனியார் காப்பீட்டு நிறுவனங்களை பயிர் காப்பீட்டுத் துறையில் செயல்பட மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது ! விவசாயிகளின் நலனுக்காக அல்ல, இந்நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காகவே ஒவ்வொரு ஆண்டும் இத்தொகையை அதிகரித்து வருகிறது மத்திய அரசு!
“விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவுடன், 50% லாபமும் சேர்த்து விலை நிர்ணயம் செய்யவேண்டும்” என்ற M.S.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்தக் கோரும் விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை, இன்றுவரை கிடப்பில் போட்டுவைத்துள்ள மோடி அரசு, ரிலையன்ஸ் ஃபிரஸ் போன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான டிஜிட்டல் வேளாண் சந்தைகளை 585 ஆக உயர்த்தப்போவதாக அறிவித்திருக்கிறது! மேலும் பால்பொருள்கள் பதப்படுத்தும் தொழில் வளர்ச்சிக்காக நபார்டு வங்கிமூலம் நிதியம் அமைப்பதற்காக 8,000 கோடியை ஒதுக்கியுள்ளனர்! ஆவின் போன்ற உள்நாட்டு பால்நிறுவனங் களை ஒழித்துக்கட்டிவிட்டு அன்னிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கே இந்த நிதியம் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில், விவசாயத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களை வரையறையின்றி அனுமதித்து, விவசாயத்தை அவர்களின் வேட்டைக் காடாக்குவதே மத்திய மாநில அரசுகளின் திட்டமாக இருந்து வருகிறது. இதையே தனது பட்ஜெட்டிலும் உறுதி செய்திருக்கிறார்கள் மோடியும், ஜெட்லியும்!
இந்த வேசித்தனத்தை மூடிமறைப்பதற்காக , “2019-க்குள் ஒருகோடி ஏழைகளை வறுமையிலிருந்து மீட்கப்படும், வீடில்லாத ஒருகோடி ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும், வறட்சியை சமாளிக்க 10 லட்சம் குளங்கள் வெட்டப்படும்” என்று சில வாசனைத் திரவியங்களைத் தெளித்து விட்டிருக்கிறார்கள்!
“இந்தியா விவசாயக் குடும்பங்களின் சராசரி மாதவருமானம் 3,800 ரூபாய்! விவசாயிகளின் சராசரி கடன்அளவோ 47,000 ரூபாய்! (சில மாநிலங்களில் இது ஒரு லட்சத்திற்கும் மேல் !) நாட்டின் 52% விவசாயக் குடும்பங்கள் கடனில் சிக்கித்தவிக்கின்றன !” என்று பல்வேறு அரசுக் குறிப்புகளே கூறுகிறது!
“தினமும் 2000 விவசாயிகள் தனது விவசாய அடையாளத்தை இழந்து வெளியேறுகிறார்கள். ஒவ்வொரு மணிநேரமும் சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்!” என்கிறார் பிரபல வேளாண் ஆய்வாளர் திரு.சாய்நாத்!
மோடி கூறுவதுபோல, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகவில்லை! மாறாக, விவசாயிகளின் வறுமையும், கடனும், விவசாயத்தின் அழிவும், தற்கொலைச் சாவுகளுமே இரட்டிப்பாகி வருகிறது! விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தைக் கேட்கவில்லை. கண்ணியமாக வாழ்வதற்கான வருமானத்திற்கு உத்தரவாதம் தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள்! பன்னாட்டுக் கம்பெனிகளின் பாதுகாவலனான மோடியின் காதுகளில் விவசாயிகளின் குரல் ஒலிக்கும் என நம்புவது அப்பாவித் தனமல்லவா!
– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.