privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஒவ்வொரு நாளும் தனியே அழுது கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு நாளும் தனியே அழுது கொண்டிருக்கிறேன்

-

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள்  – பாகம் 2

நந்த கிஷோர், (22 வயது, தற்போது வேலையின்றி இருக்கும் முன்னால் ஆலைத் தொழிலாளி) – இது தான் அரசு கொள்கைகளை வகுக்கும் முறையா?

நான்கு வருடங்களுக்கு முன் பீகாரின் கயாவிலிருந்து வேலை தேடி லூதியானா வந்தவர் நந்த கிஷோர். கம்பளித் தொழிற்சாலை ஒன்றில் 7,500 ரூபாய் மாதச் சம்பளத்தில் அவருக்கு வேலை கிடைத்தது – தற்போது அதை இழந்து விட்டு வேறு வேலை தேடி வருகிறார். தொழிலாளிகள் அடர்த்தியாக வசிக்கும் சுந்தர் நகரில் தனது நாட்களை கழித்து வருகிறார்.

அவருக்கு வேறு வேலைகள் ஏதும் கிடைக்கவில்லை – கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவரது துன்பத்தை அதிகரித்துச் செல்கின்றன. “நான் சொந்த ஊரிலிருக்கும் வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை. அங்கே எனது வயதான பெற்றோர் இருக்கின்றனர். நான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நானே வேலையற்று இருப்பதைக் காண அவர்களுக்கு வருத்தமாக இருக்கும்” என்கிறார் நந்த கிஷோர்.

இப்போதைக்கு அவரது சொந்த ஊரிலிருந்து வந்து இங்கே தங்கியிருக்கும் வேறு நான்கு பேரின் அறையில் தங்கிக் கொள்ளும் முடிவில் இருக்கிறார். ஊரிலிருக்கும் பெற்றோருக்கு மாதா மாதம் பணம் அனுப்பி வந்தார் நந்தா. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஏதும் அனுப்ப முடியவில்லை. “அவர்களது ஒரே மகனான எனக்கு இது பெரும் மனவலியை அளிக்கிறது” என்கிறார் அவர்.

தொழிலாளிகளை ஆலை முதலாளிகள் சுரண்டினார்களென ஆத்திரப்படுகிறார் – “இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு நாங்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்ததற்கு பாதி சம்பளத்தில் வேலை தருவோம் என்கிறார்கள். வேறு வழியில்லாத பலரும் அப்படி வேலைகளை ஏற்றுக் கொண்டனர், வேறு சிலர் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டார்கள்” என்கிறார்.

ஆனால், அரசைத் தான் அறுதியிட்டு குற்றம் சாட்டுகிறார் – ”ஏ.டி.எம் வாசலில் நிற்கும் துன்பம் மட்டும் என்றால் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், எனது வேலையைப் பறித்து விட்டார்கள்” வானத்தை வெறித்தபடி பேசுகிறார் கிஷோர். “இப்படித் தான் அரசு முடிவுகளை எடுக்குமா? எனக்கு அரசாங்கம் எப்படி இயங்குகின்றது என்பது தெரியாது. ஆனால் எனது வாழ்க்கையை சீரழிவுக்குள் தள்ளிவிட்டார்கள் என்பது மட்டும் தான் புரிகின்றது”

***

பர்மிந்தர் சிங், (30 வயது. தொழிற்சாலை சூப்பர்வைசர்) – ”பணமதிப்பழிப்பினால் எனது தாயார் இறந்து விட்டார்”

னது தாயைக் குறித்து பேசும் போது பர்மிந்தரின் கண்களில் கண்ணீர் வழிகின்றது. ஏ.டி.எம் இயந்திரத்தின் முன் வரிசையில் நின்று கொண்டிருந்த போது பர்மிந்தர் சிங்கின் தாயார் இறந்துள்ளார். அவரது மகளின் திருமணத்திற்கு பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் சென்ற பர்மிந்தர் சிங்கின் தாயாருக்கு வயது 50.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக வங்கி வரிசையில் காத்திருக்கும் போதோ அல்லது ரூபாய்த் தாள் கட்டுப்பாட்டின் விளைவாக போதிய பணம் கட்டமுடியததால் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டோ சுமார் 80 பேர் வரை இறந்துள்ளார்கள் என அறியப்பட்டுள்ளது.

”பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாகவே எனது தாயார் இறந்தார். இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அவரைத் திரும்ப கொண்டு வர முடியாது” என்கிறார் பர்மிந்தர்.

ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரியும் பர்மிந்தருக்கு மாதச் சம்பளம் 13,000. தனது மனைவி, மகள் மற்றும் தங்கையுடன் நடுத்தரவர்க்க குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார். இருபத்தைந்து வயதான சகோதரி தனது தாயின் மரணத்துக்கு தன்னையே பழித்துக் கொள்வதாக கூறுகிறார் பர்மிந்தர் – “எனது தங்கையை இந்த நிலையில் பார்ப்பதற்கு இதயமே நொறுங்குகிறது. அவளுக்கு முன் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறேன்; ஆனால், ஒவ்வொரு நாளும் எனது அறையில் தனியே அழுது கொண்டிருக்கிறேன்” என்கிறார் பர்மிந்தர்.

பர்மிந்தர் அரசின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் – “அது எனது தாயின் பணம். தன்னுடைய பணத்தை எடுப்பதற்காக எனது தாய் இறந்திருக்க கூடாது. எந்த இடையூறும் இன்றி தனது பணத்தை எடுக்கும் உரிமை அவருக்கு உண்டு”

***

யமுனா பிரசாத் (29 வயது, ஆலைத் தொழிலாளி) – ”ஒரு பணக்காரனால் தனது தாயை மருத்துவமனையில் சேர்க்க வங்கிக் கடனட்டையைத் தேய்க்க முடியும். என்னைப் போன்றவர்கள் என்ன செய்ய முடியும்?

முனா பிரசாத் உடைந்து போயிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் 70 வயதான தனது தாயை இழந்ததில் இருந்து இதே நிலையில் தான் இருக்கிறார் அவர் – “ இறந்து போன எனது தாயை இரண்டு நாட்களாக அடக்கம் செய்யக் கூட முடியவில்லை. அந்த சமயம் கையில் காசில்லை”

டிசம்பர் 25ம் தேதி வயிற்று வலி என்று சொன்ன தனது தாயாரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் யமுனா பிரசாத் – “அரசு மருத்துவமனைகள் எவ்வளவு கேவலமான முறையில் நடத்தப்படுகின்றன என்பது இங்கே எல்லோருக்கும் தெரியும்”

தனியார் மருத்துவமனைக்கு தனது தாயாரை அழைத்துச் சென்றிருந்தார் சிறப்பான மருத்துவம் கிடைத்திருக்கும் என்று யமுனா பிரசாத் நம்புகிறார். தனியார் மருத்துவமனை என்றால் நிறைய பணம் செலவாகும் – அந்த சமயத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தின் முன் பணத்திற்காக காத்திருக்கும் அளவுக்கு அவருக்கு நேரமில்லை.

பணமில்லாத நிலையில் தனது தாயின் இறுதிச் சடங்கைக் கூட அவரால் உரிய நேரத்தில் செய்ய முடியவில்லை – “இப்போது எல்லாம் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், எனது அம்மாவுக்கு ஒரு கௌரவமான இறுதிச் சடங்கைக் கூட செய்ய முடியாமல் தவித்ததை என்னால் எப்படி மறக்க முடியும்?” என்கிறார் யமுனா பிரசாத்.

உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இவருடைய தாயின் இறுதிச் சடங்கிற்காக பத்தாயிரம் ரூபாய்கள் கொடுத்து உதவியுள்ளார். அருகிலிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் 12 மணி நேர ஷிப்டில் வேலை செய்யும் யமுனா பிரசாத்துக்கு மாதச் சம்பளம் வெறும் எட்டாயிரம் ரூபாய் தான். இந்தச் சம்பளத்தில் அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பிழைப்பு நடத்தியாக வேண்டும். எந்தச் சேமிப்புக்கும் வழியில்லாததால் தன்னுடைய குழந்தைகளும் தன்னைப் போலவே தொழிலாளியாகவே ஆவார்கள் என கவலைப்படுகிறார் யமுனா பிரசாத்.

அரசாங்கம் பணக்காரர்களுக்கு பயன்படும் திட்டங்களைத் திணிப்பதாகவும், தன்னைப் போன்ற ஏழைகளைக் கண்டு கொள்வதில்லை எனவும் சொல்கிறார் யமுனா பிரசாத் – “ஏழைகளின் மீது ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிக் கவலையே படாமல் ஏன் திட்டங்களை வகுக்கிறார்கள்? ஒரு பணக்காரன் தன்னுடைய அம்மாவை மருத்துவமனையில் சேர்க்க வங்கிக் கடனட்டையைத் தேய்க்க முடியும். என்னைப் போன்றவர்கள் என்ன செய்வார்கள்?”

***

அனிஷா கத்தூன், (48 வயது இல்லத்தரசி) – ”அந்தப் பணத்தைச் சேமிக்க பல வருடங்களானது எனக்கு”

த்தாயிரம் ரூபாயைச் சேமிக்க தனக்கு பல ஆண்டுகள் ஆனதாகச் சொல்கிறார் அனிஷா கத்தூன். தனது கணவருக்குத் தெரியாமல் சேமித்து வந்த அந்தப் பணத்தைக் கொண்டு எப்படியாவது தனது மகளின் திருமணத்தை நடத்தி விடும் திட்டத்தில் இருந்திருக்கிறார் அனிஷா.

அனிஷா கத்தூனின் கணவர் புது தில்லியை அடுத்துள்ள நோய்டாவில் ரிக்சா இழுக்கிறார். அவர்கள் நோய்டாவின் செக்டார் 16-ல் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள குடிசை ஒன்றில் வசிக்கிறார்கள். அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அனிஷா சேமித்திருந்த பத்தாயிரமும் செல்லாக்காசுகளாகி விட்டன. வேறு வழியின்றி தனது கணவரிடம் சொல்லியிருக்கிறார். தனக்கே தெரியாமல் தனது மனைவி காசு சேர்த்திருப்பதை அறிந்த அந்தக் கணவன் ஆத்திரப்பட்டுள்ளார் – தன்னால் வங்கியின் முன் வரிசையில் நிற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

“இதே பகுதியில் இருந்த ஒரு பையனின் உதவியோடு தான் பணத்தை மாற்ற முடிந்தது – மாற்றித் தருவதற்கு அவன் இரண்டாயிம் ரூபாயை கமிஷனாக எடுத்துக் கொண்டான்” என்ற அனிஷா, ”பலருக்கும் நான் சேர்த்திருந்த தொகை பெரியதாகத் தெரியாது. ஆனால் அது மட்டும் தான் எனது சேமிப்பு. கமிஷனுக்காக நான் இழந்த இரண்டாயிரம் ரூபாய் எனக்குப் பெரிய தொகை” எனக் குறிப்பிட்டார்.

கணவர் சம்பாதிக்கும் ஒன்பதாயிரம் ரூபாயில் குடும்பத்தை நடத்தி வரும் அவர், அரசாங்கம் தன்னை ஏமாற்றி விட்டதாக குறிப்பிடுகிறார் – “பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏழைகளுக்கு நல்லது நடக்கும் என்று அரசாங்கம் சொன்னது. எனக்கோ அந்தப் பணத்தை சேர்க்க வருடக்கணக்கானது. அதில் கொஞ்சத்தை இழந்ததை நினைத்தால் எனது இதயமே நொறுங்கிப் போகிறது”

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

தமிழாக்கம்: முகில்
நன்றி : அல்ஜசிரா
100 days of demonetisation: Stories of hardship