Tuesday, January 19, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறோம் ! திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்

விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறோம் ! திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்

-

கீழ்க்கண்ட பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: விரிவாக படிக்க:

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி என்ன செய்யப் போகிறோம் ! பொதுக்கூட்டம்

நாள் : 26.02.2017 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 5.00 மணி.
இடம் : புதிய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி.

ன்பார்ந்த விவசாயிகளே, பொதுமக்களே !

எடப்பாடி நீடிப்பாரா? மாட்டாரா? மறு தேர்தல் வருமா? வராதா? அடுத்த முதல்வர் யார்? என்பதல்ல தமிழக மக்களின் முக்கியப்பிரச்சினை. நமது வாழ்வாதரங்களும், வாழ்வுரிமைகளும் நாளுக்கு நாள் பறிபோகின்றன. கலாச்சாரம், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக சிந்தனை ஆகியவை காட்சிப் பொருளாக்கப்பட்டு, காடுகளில் வாழும் மிருகம் போல் ஒருவரை ஒருவர் அடித்துத் தின்னும், பேரவலம் நம்மை எதிர் நோக்கியிருக்கிறது. பெண்குழந்தைகள் மீதான பாலியல் வண்கொடுமைகள், கொலை, கொள்ளை இவை அபாயகரமாக அதிகரித்திருக்கின்றன. இது தான் தமிழகத்தின் இன்றைய அசாதரனமான பிரச்சினை.

தமிழக விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலையாலும் செத்துமடிகின்றனர், வங்கி கடனும், கந்துவட்டி கடனும் அவர்களுக்கு தொடர்ந்து எமனாக நிற்கிறது. கருகிய பயிற்களுக்கும், இறந்த உயிர்களுக்கும், அறிவித்த தமிழக அரசின் நிவாரணம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிறது.

விவசாயம் செய்வது குற்றமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது. தப்பிக்க வழிதெரியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். சிறைச்சாலையில் கூட கைதிகளுக்கு உணவு, உடை, மருத்துவம், என குறைந்த பட்சம் அரசு பொறுப்பேற்றுக் கொள்கிறது. விவசாயியோ, எந்தவித உத்திரவாதமும் இல்லாமல், திறந்த வெளிச்சிறைச் சாலையில் சிக்கிய கைதியாக செத்துமடிகின்றான். அழிந்துவரும் டெல்டா விவசாயத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், எந்த உருப்படியான திட்டமும் மத்திய மாநில அரசுகளிடம் இல்லை.

விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கும், சொசைட்டியில் வாங்கிய பாலுக்கு பணம் தராத அரசு. நூறு நாள் வேலைத்திட்டத்தில் செய்த வேலைக்கு சம்பளம் தராத அரசு. செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை. முழுமையான நிவாரணம் இல்லை. ஆனால் அம்பானி, அதானி, போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 37 லட்சம்கோடி வரி தள்ளுபடியும், இரண்டுலட்சம் கோடி கடன்தள்ளுபடியும் செய்துள்ளது.

மேலும் பல லட்சம் கோடி கடனும் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்த அரசு விவசாயிகளை காப்பாற்றும் என்று எப்படி நம்புவது? ஏழு கோடி தமிழர்களை ஆள்வதற்கு, இந்த ஜனநாயக அமைப்பு முறையில் சசி-ஓபிஎஸ் போன்றவர்களைத் தான் முன்னிறுத்த முடிகிறது. இது அதிமுக-வின் நெருக்கடி மட்டுமல்ல. அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி. நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் எல்லா நிறுவனங்களும் இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வுகாண முடியாத நிலைக்கு வந்துள்ளன.

மங்காத்தா ஆட்டம் போல் தேர்தல் சூதாட்டத்தில் ஆளை மாற்றுவது தொடர்ந்தால் இன்று ஓபிஎஸ் – சசி நாளை சிம்பு தனுஷ் தான் கதி. காவிரி உரிமை, நீட்தேர்வு, சமஸ்கிருதத் திணிப்பு, என தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை நசுக்கி வரும் மோடி அரசு, அதிமுகவை பிளந்து தமிழகத்தை அடக்கியாள முயல்கிறது. மறைந்த ஜெயா தலைமையிலான மன்னார்குடி சசி கொள்ளைக்கும்பலுக்கு 10 ஆண்டுகளாக வருவாய் துறை, பொதுப்பணி, நிதி அமைச்சர் என வசூலை அள்ளிக்கொடுத்த ஊழல் தளபதிதான் ஓபிஎஸ் வகையறா. சேகர் ரெட்டியோடு சிறைக்கு அனுப்பப்படவேண்டிய பன்னீர் செல்வத்தை மோடி அரசு ஆதரிப்பதில் இருந்து பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் ஊழல் எதிர்ப்பு யோக்கியதைதெரிந்துகொள்ளலாம்.

இந்நிலையில் தமிழகத்தில் நடப்பது என்ன? ஆறுகள், ஓடைகள், நீர்நிலைகளில் ஆலைக்கழிவுகள், பெருநகரகழிவுகள் கொட்டப்படுகின்றன. வரன்முறையில்லாத மணற் கொள்ளையால் ஆறுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர்தர மறுக்கும், கேரளத்திற்கும், ஆந்திரத்திற்கும் கர்நாடகத்திற்கும், தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் இங்கிருந்து மணல் கடத்தப்படுகிறது. சாக்கடைக் கழிவுகளால், முள்காடுகளால் நமது ஆறுகள் மூடிக்கிடக்கின்றன. நீர் நிலைகள், புறம்போக்கு நீர்பிடிப்பு பகுதிகள் பெருமளவில் தனியார் கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் மாஃபியாவினாலும் அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இந்த அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதோ, நிவாரணத்தொகையைக் கூடுதலாகக்கேட்டு மன்றாடுவதோ பொருளற்றது. உணவுப்பொருள் இறக்குமதி மானியம் ரத்து, கொள்முதல் நிறுத்தம், நீர்நிலை பராமரிக்காமல் கைவிடுவது என திட்டமிட்டு விவசாயத்தை இந்த அரசு அழிக்கிறது. விவசாயிகள் தானாக விவசாயத்தை விட்டு ஓடட்டும் என்றுதான் அரசு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்?

இத்தகைய பேரழிவுகளுக்கு காரணம் ஏற்கனவே ஆண்ட – ஆளும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்தான். தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, ஒட்டுமொத்த கட்டமைப்பும் மக்களுக்கெதிரானதாக மாறிவிட்டது.

தீப்பிடித்து எரியும் வீட்டைப் போன்ற நிலையில் இருக்கிறது நாடு. எரிகிற வீட்டுக்கு உள்ளேயிருந்து தீயை அணைக்க முடியாது. இந்த அரசுக்குகட்டமைப்புக்கு உள்ளேயிருந்து கோரிக்கை வைத்தோ, மன்றாடியோ விவசாயத்தைக் காப்பாற்றமுடியாது. அப்படி மட்டுமே சிந்தித்து சிந்தித்துதான் இந்தநிலைக்கு வந்திருக்கிறோம்.

மத்திய மாநில அரசுகளை பணிய வைத்த தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு மெரினா போராட்டம், எப்படி போராட வேண்டும் என அனைவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாததை ஐந்து நாட்களில் செய்யவைத்தது தமிழக மக்கள் போராட்டம்.

டெல்டாவில் மட்டுமல்ல ஒட்டு மொத்த விவசாயிகளையும் காப்பாற்ற அத்தகைய போராட்டங்களை தமிழகம் கோருகிறது. காவிரி, ஜல்லிக்கட்டு, கல்வி, மருத்துவம், மீத்தேன், கெயில், கரும்பு, நெல்லுக்கு விலை என ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனி தனிப் போராட்டம் என்பதை மாற்றி மக்கள் அதிகாரத்திற்கான போராட்டமாக மாற்றுவதைதவிர வேறுவழியில்லை.

இந்த அரசுக் கட்டமைப்பில் விவசாயிகளின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. நமக்கு தேவை மக்கள் அதிகாரம் என்பதை விளக்கும், இந்த பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகை தாருங்கள். உங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள்.

தகவல் :
மக்கள் அதிகாரம்.
திருச்சி – தஞ்சை -திருவாரூர் – நாகை மாவட்டங்கள்.
94454 75157, 94431 88285, 96263 52829, 89037 36020.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க