Saturday, June 19, 2021
முகப்பு வாழ்க்கை பெண் திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கருத்தரங்கம் - அனைவரும் வருக !

திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கருத்தரங்கம் – அனைவரும் வருக !

-

குருதியில் மலர்ந்த அனைத்துலக உழைக்கும் பெண்கள் தினம் !

மார்ச் 8 ஆம் தேதியை அனைத்துலக மகளிர் தினமாக கடைபிடித்து வருகிறோம். வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர்தினம். ஆனால், இன்றைய சமூகத்தில் பெண்ணின் நிலையென்ன ? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணுர் ரித்திகா, பெங்களூர் விமானப்பணிப்பெண், நடிகை பாவனா…

ஒவ்வொருவருடமும் மகளிர் தினம்பற்றி பேச முற்படும்போது இப்படி ஒருபட்டியல் வரிசைகட்டிநிற்கிறது. காதலன் என்ற கயவனாலேயே கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டு அவரது பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து, கருவை உறுவி எரித்துக்கொன்று நிர்வாணமாய் பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டாள் அரியலூர் நந்தினி. காணாமல் போன அன்றே புகார் கொடுத்தும் 15 நாள் பொறுத்து பிணமாக  கண்டுபிடித்து கொடுத்தது காவல்துறை ! ஆணாதிக்க வெறியுடன் சாதி ஆதிக்க வெறி, இந்து மதவெறி தலைக்கேறிய மணிகண்டன் என்ற இந்து முன்னணி பொறுக்கிகளின் வக்கிரச்செயலின் விளைவுதான் சிறுமி நந்தினி.

நந்தினிக்கு நேர்ந்த கொடுமை இப்படியென்றால் 6 வயது பெண் ஹாசினிக்கும் 3 வயது குழந்தை ரித்திகாவுக்கும் நேர்ந்த கொடுமை நெஞ்சை பதற வைக்கிறது. தாழ்த்தப்பட்ட ஏழை குழந்தைகள் மட்டுமென்றில்லை, பெங்களூரு விமானப் பணிப்பெண்ணாக இருந்தாலும், பிரபல நடிகை பாவனாவாக இருந்தாலும்கூட பெண்ணாக பிறந்த யாரும் இந்த பொறுக்கித்தனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. வாழத் தகுதியற்றதாக மாறிவிட்ட சமூக நிலையை துலக்கமாக எடுத்துக்காட்ட பெண்கள் மீதான இந்த வன்முறைகள் போதாதா ? நிர்பயா தொடங்கி நந்தினி வரை ஒவ்வொரு சம்பவத்தின்போதும் குற்றம் சாட்டப்படுவதோ கொடுமைக்குள்ளான பெண்கள்தான். வன்முறைக்கு ஆளான பெண்ணையே ஏன் 6 மணிக்குமேல் வெளியே சென்றாய் ? ஏன் ஆண்களுடன் இயல்பாய் பேசினாய் ? ஏன் சத்தம்போட்டு சிரித்தாய் ? என்று குற்றம் சாட்டுவது அவள் மீது சமூகம் தொடுக்கும் இரண்டாவது வன்முறை !

பாலியல் வன்முறை என்பது இத்துடன் அடங்கி விடுவதில்லை. பெண்பாலாய் பிறந்தாலே பிறந்தது முதல் குடும்பத்தில் தந்தை, சகோதரன், கணவன், கடைசியாய் மகனால், அண்டி வாழ நிர்பந்திக்கப்படுகிறோம். முதலாளியால், உயர் அதிகாரிகளால், சக ஆண் ஊழியர்களால், சக மாணவனால் … என பெண்கள் வன்முறைக்கு ஆளாவது தொடர்கதையாய் உள்ளது ! தனது வாழ்க்கையையும் வாழ்க்கைத் துணையையும் கூட வயதுக்கு வந்தபெண் தானே தேர்ந்தெடுக்க குடும்பமும், சமூகமும் அனுமதிப்பதில்லை. சாதி, மதம் மாறி திருமணம் செய்யும் பெண்கள் கவுரவத்தின் பெயரில் குடும்பத்தாலேயே கொலை செய்யப்படும் வக்கிரம். பெண்ணுரிமை சமூக உரிமைபற்றி பேசும்படங்களை தடைசெய்யும் அரசு ஆணாதிக்கம் சாதி ஆதிக்கம், ஆபாசம், ஆகியவற்றை சினிமா இணையங்களில் தடை செய்ய மறுக்கிறது.

அரசின் தனியார்மயம் – தாரளமயம் – உலகமயக் கொள்கைகளால் கல்வி, மருத்துவம், குடிநீர் மின்சாரம், … அனைத்தும் காசுக்கு என்றான நிலையில் பெண்களும் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டு விட்டது. அங்கு அற்பக்கூலிக்கு கொத்தடிமைகளாக உறிஞ்சப்பட்டு எச்சில் இலைபோல வீசப்படுகிறோம். படித்த பெண்களும் கடைகளில் கால்கடுக்க, நாள் முழுக்க நின்று வேலை செய்து, வீடு திரும்பினால் அங்கும் வீட்டுவேலை அடித்து துவைக்கிறது. சமூகத்தின் மனப்போக்கு மட்டுமல்ல… போலீசு, நீதித்துறை, சட்டமன்ற, நாடாளுமன்றங்கள், செய்தி ஊடகங்கள் என அனைத்தும் ஆணாதிக்க தன்மையுடனே இயங்குகின்றன. மொத்த கட்டமைப்புமே பெண்களுக்கு எதிராக நிற்கும்போது இந்த சமூக கட்டமைப்புக்குள்ளேயே பெண் விடுதலை சாத்தியமாகுமா?

மெரினா எழுட்சியில் தமிழகமெங்கும் இரவு பகலாக, ஆண்களுக்கு நிகராக பெண்களும் போராடினோம், ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கில் குழுமியிருந்தும் ஒரே ஒரு பாலியல் சீண்டலுக்குக்கூட பெண்கள் ஆளாகவில்லை. அழுகிப்போன இந்த சமூகத்தை தாக்கி தகர்த்துவிட்டு புதிய சமூகத்தை கட்டியமைக்கும் மாற்று அரசியலுக்கான எழுச்சியே பெண் விடுதலையை சாதிக்கும் என்பதற்கான துலக்கமான எடுத்துக்காட்டு இது ! உலக மகளிர் தினத்தை கடைபிடிக்கும் நிலையில் அத்தகைய மாற்றுஅரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் !

குருதியில் மலர்ந்த மகள் தினம்

அரங்குக்கூட்டம்
புரட்சிகர பாடல்கள் | கவிதை | நாடகம்

8.3.2017 அன்று மாலை 6.00 மணி
சுமங்கலி மஹால்
ஹோட்டல் அருண்,
இரயில் நிலையம் அருகில்,
திருச்சி.

மெரினாவும் … நெடுவாசலும் உணர்த்துவது ஒன்றுதான், உரிமைகள் வேண்டுமா ? போராடு !

தலைமை :
தோழர் நிர்மலா
தலைவர், பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.

சிறப்புரை :
தோழர் சிவானந்தம்
திருச்சி.

தோழர் கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

அனைவரும் வாரீர்

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி
9750374810

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க