Wednesday, January 20, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் அருணாச்சல பிரதேச அரசியலும் கலிகோ புல்லின் மரணமும் - பாகம் 1

அருணாச்சல பிரதேச அரசியலும் கலிகோ புல்லின் மரணமும் – பாகம் 1

-

தையெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்கிற தனிப்பட்ட விருப்பமெதுவும் எனக்கில்லை. நான் யாருக்கும் அஞ்சவும் இல்லை. நான் பலவீனமானவனும் இல்லை, இந்த செயலைக் கோழைத்தனமான சரணாகதியாகவும் நான் பார்க்கவில்லை…”

”இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு எனக்கு இருக்கும் ஒரே காரணம் – மக்களைத் தட்டியெழுப்ப வேண்டும்; இந்த மாநிலத்திலும் நாட்டிலும் நடந்து கொண்டிருக்கும் அசிங்கங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே. ஊழல் என்கிற எதார்த்தம் இந்த அமைப்புமுறை எங்கும் பற்றிப் படர்ந்துள்ளது. ஆனால், மக்களுக்கோ மறதி அதிகம்; அவர்கள் விரைவில் மறந்து விடுகிறார்கள். எனவே மக்களுடைய நினைவுகளை உலுக்கி அவர்களை தட்டியெழுப்பி பிரச்சினையின் ஆழத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்பதற்காகவே இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன்…”

அருணாச்சல பிரதேச முன்னால் முதல்வர் கலிகோ புல்லின் அறுபது பக்க தற்கொலைக் குறிப்பிலிருந்து..

கலிகோ புல்
கலிகோ புல்

ருணாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் இட்டாநகரில் முதல்வருக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ம் நாள் தூக்கில் தொங்கிய நிலையில் கலிகோ புல்லின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தனது இருபத்தாறு வயதில் (1995ல்) காங்கிரசு கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கலிகோ புல். 1995 முதல் 2016 வரை 23 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், சுமார் 22 ஆண்டுகள் அமைச்சராகவும் பொறுப்பு வகித்த கலிக்கோ புல் தனது 47-வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் “என் பார்வையில்” எனத் தலைப்பிட்டு 60 பக்கங்களுக்கு தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி அனைத்து பக்கங்களிலும் கையெழுத்திட்டுள்ளார் கலிகோ புல். தன்னுடைய பால்ய காலத்திய வாழ்கைக் விவரிப்புகளோடு துவங்கும் அந்த தற்கொலைக் குறிப்பில், அவர் அரசியலில் வளர்ந்த விதம், முதல்வர் பொறுப்புக்கு வந்தது, முதல்வர் பதவியைப் பறிகொடுத்தது குறித்த விவரங்கள் அவருடைய கோணத்திலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, அரசியல் குத்துபிடி சண்டையில் பதவியை இழக்கும் கலிகோ புல், அதை மீண்டும் கைப்பற்ற எந்தெந்த கட்சித் தலைவர்கள், எத்தனை கோடிகளுக்கு தன்னிடம் பேரம் பேசினார்கள் என்பதோடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தரப்பிலிருந்து தன்னிடம் பேரம் பேசப்பட்டது குறித்தும் விவரிக்கிறார்.

அந்தக் குறிப்பு நெடுக தன்னை நேர்மையின் மறுவடிவமாக கலிகோ புல் முன்னிறுத்திக் கொள்வது மட்டுமின்றி அதற்காக அவர் அடுக்கும் வாதங்களும் தர்க்க ஓர்மையற்று அபஸ்வரமாய் ஒலிக்கிறது. இருப்பினும் அதோடு சேர்த்து நாம் கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்களும் உள்ளன. ஓட்டுக்கட்சி அரசியல் பன்றி மலத்தை விடக் கேவலமாய் நாறி வரும் நிலையில், அதையே சாதகமாக்கிக் கொண்டு இந்துத்துவ பாசிஸ்டுகளால் எப்படி அதிகாரத்தைப் புறவாசல் வழியாக சதித்தனமாக கைப்பற்ற முடிகிறது என்பதற்கு அருணாச்சல பிரதேச அரசியலும் கலிகோ புல்லின் மரணமும் ஒளிவீசும் உதாரணங்கள்.

அருணாச்சல பிரதேசத்தின் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டியது கலிகோ புல்லின் மரணத்தின் நிமித்தமோ, இந்தியாவின் இன்னொரு மூலையில் அம்பலப்பட்டுப் போன பாரதிய ஜனதாவின் நரித்தனங்களை அறிந்து கொள்வதற்கோ மட்டும் அல்ல. அருணாச்சல பிரதேசத்தில் நடந்த அதே விசயங்கள் அதே வரிசைக் கிரமத்தில் தமிழ்நாட்டிலும் ஏன் இந்தியாவெங்கும் நடந்து வருகின்றன. சில இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் ஏஜெண்டுகள் மூலமும் நடந்து வருகின்றன. இந்த அமைப்புமுறையை அம்பல்படுத்தும் ஆவணமாக இத்தற்கொலைக் குறிப்பு இருக்கின்றது.

வடகிழக்குக் குரங்காட்டம் :

மோடியுடன் கலிகோ புல்

அருணாச்சல பிரதேசத்தின் ஓட்டுக்கட்சி அரசியல் இந்திய அரசியலின் துலக்கமான உதாரணம் – எனவே, அம்மாநிலத்தின் கட்சித்தாவல் அரசியல் என்பது கிறுக்குப் பிடித்த பத்துக் குரங்குகள் மரக் கிளைகளில் மாறி மாறித் தாவுவதைக் கண்டதைப் போல் தலைசுற்ற வைக்கும். முடிந்த வரை அந்தக் காட்சிகளைப் புரிந்து கொள்வோம்.

இந்தியாவின் மேல் பீடை கவிந்த அதே 2014 ஏப்ரல் மாதம் தான் அருணாச்சல பிரதேசத்தின் அரசியல் வானில் இருள் சூழ்ந்தது. அந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரசு 42 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற, பாரதிய ஜனதா கட்சிக்கு வெறும் 11 இடங்களே கிடைத்தன. நாடெங்கும் அடித்ததாக சொல்லப்பட்ட மோடி அலையில் அடித்துச் செல்லப்படாத வெகுசில மாநிலங்களில் அருணாச்சல பிரதேசமும் ஒன்று. அப்போதே அம்மாநிலத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் திட்டத்துடன் பாரதிய ஜனதா களமிறங்கியது.

தேர்தலில் வென்று காங்கிரசின் சார்பாக முதல்வரானார் நபாம் டுக்கி. நபாம் டுக்கியின் மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கலிகோ புல் அளித்தாரென 2015 ஏப்ரல் மாதத்தில் கட்சியிலிருந்து விலக்கப்படுகிறார். பாரதிய ஜனதா உடனடியாக கலிகோ புல்லை தத்தெடுத்துக் கொண்டு தமது விசுவாசியான ஜோதி பிரசாத் ராஜ்கோவாவை கவர்னராக அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்புகிறது.

கவர்னர் ராஜ்கோவாவின் துணையோடு கட்சி கலைப்பு வேலைகளில் இறங்கிய பாரதிய ஜனதா, கலிகோ புல்லின் தலைமையில் பதினாறு சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்கிறது. குதிரை பேரத்துக்கு தோதான சூழல் ஏற்பட்டவுடன் ஜனவரி 2016-ல் கூடவிருந்த சட்டசபையை டிசம்பர் 2015-லேயே கூடச் செய்கிறார் கவர்னர். துணை சபாநாயகரை விலைக்கு வாங்கி, சபாநாயகரின் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு, காங்கிரசால் சட்டமன்றம் பூட்டபட்ட நிலையில் ஒரு சமூக நலக்கூடத்தில் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுகிறது கலிகோ புல் – பாரதிய ஜனதா கூட்டணி.

நடந்த பேரத்தில் புதிதாக வாங்கிய குதிரைகளோடு வெறும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த அருணாச்சல மக்கள் மக்கள் கட்சியில் இணையும் கலிகோ புல், பாரதிய ஜனதாவின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் அவர்களின் ஆதரவுடன் ஒரு ‘காங்கிரசு’ அரசை அமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கிறார். அதன்படி டிசம்பர் 17-ம் தேதி ஒரு ஓட்டலில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலிகோ புல்லை முதல்வராக தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதற்கிடையே சட்டமன்றத்தை கலைத்து மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்புகிறார் ராஜ்கோவா – அதனை உடனே அமல்படுத்துகிறது மத்திய பாரதிய ஜனதா அரசு. பாரதிய ஜனதா உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் கலிகோ புல் பிப்ரவரி 19 தேதி முதல்வராக பதவியேற்கிறார். பாரதிய ஜனதா நடத்திய உள்குத்து விளையாட்டில் ஆட்சியை கலிகோ புல்லிடம் இழக்கும் நபாம் டுக்கி, உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ’காங்கிரசு இல்லாத’ என்கிற பாரதி ஜனதாவின் செயல்திட்டத்திற்காக கழுதையாக உழைக்கிறார்
வடகிழக்கு மாநிலங்களில் ’காங்கிரசு இல்லாத’ என்கிற பாரதி ஜனதாவின் செயல்திட்டத்திற்காக கழுதையாக உழைக்கிறார்

இதற்கிடையே பாரதிய ஜனதாவின் ஆதரவுடன் ‘காங்கிரசு’ அரசை அமைத்து முதல்வராக பொறுப்பேற்கும் கலிகோ புல், வடகிழக்கு மாநிலங்களில் ’காங்கிரசு இல்லாத’ (Congress mukth North East) என்கிற பாரதி ஜனதாவின் செயல் திட்டத்திற்காக கழுதையாக உழைக்கிறார். வட கிழக்கில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்களையும், அதற்கு முகமூடிகளாகச் செயல்பட்டு வரும் மற்ற மாநில தலைவர்களையும் சந்தித்து ”வடகிழக்கு தேசிய கூட்டணி” (பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்காளி அமைப்பு) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார்.

ஒருவாறாக ஆட்களைப் பீறாய்ந்து தலைகளைத் தேற்றிய பின், 2016 ஜூலை 13-ம் தேதி அமித் ஷாவின் தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் “வடகிழக்கு தேசிய கூட்டணியின்” துவக்க விழா ஏற்பாடானது. கலிகோ புல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அதே நேரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசு தொடுத்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது. ராஜ்கோவாவின் நடவடிக்கையை ‘சட்டவிரோதமானது’ எனச் சாடிய உச்சநீதிமன்றம், டிசம்பர் 15 2015-க்கு முன் நபாம் டுக்கியின் தலைமையிலான ஆட்சி சட்டப்பூர்வமானது என்றும் அதுவே தொடர வேண்டுமெனவும் தீர்ப்பளித்து உத்தரவிடுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கலிகோ புல் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், ஜூலை 16-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு (உச்ச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் மீண்டும்) முதல்வரான நபாம் டுக்கியைப் பணிக்கிறார் பொறுப்பு கவர்னர் டதாகதா ராய். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு பதவியை ராஜினாமா செய்கிறார் நபாம் டுக்கி. அடுத்து கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் அருணாச்சல பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி கந்துவின் மகனும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினருமான பெமா கந்து முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டு தனது பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.

ஆட்சியை இழந்த கலிகோ புல் ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கிடையே காங்கிரசு சார்பாக ஆட்சியமைத்த பெமா கந்து, 2016-ம் ஆண்டு செப்டெம்பர் 16-ம் நாள் தன்னுடன் (நபாம் டுக்கியைத் தவிற மீதமுள்ள) 41 சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திக் கொண்டு அருணாச்சல் மக்கள் கட்சியில் ஐக்கியமாகிறார். மீண்டும் 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தன்னுடன் 33 உறுப்பினர்களைக் கடத்திக் கொண்டு நேரடியாக பாரதிய ஜனதாவிலேயே ஐக்கியமாகிறார். தற்போதைய நிலவரப்படி சுமார் 47 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பெமா கந்து முதல்வராகத் தொடர்ந்து வருகிறார். கடந்த தேர்தலில் வெறும் பதினோரு இடங்களை மட்டும் வென்ற பாரதிய ஜனதாவுக்கு தற்போது 47 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். தேர்தல் ஜனநாயகம் வடகிழக்கு மாநிலங்களின் தெருக்களில் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறது.

கலிகோ புல்லுடன் முன்னாள் கவர்னர் ராஜ்கோவா

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட நிலையில் பதவி விலக மறுத்து வந்த ராஜ்கோவாவை கடந்த ஆண்டு செப்டெம்பர் 12-ம் தேதி பதவி நீக்கம் செய்கிறார் ஜனாதிபதி. ராஜ்கோவாவுக்கு பதில் பொறுப்பு கவர்னராக வந்து சேர்ந்த ‘அந்தப்புரம்’ புகழ் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன், மைனர்தனங்களில் ஈடுபட்டதாக புகார் வரவே பதவி 2017 ஜனவரி 26-ம் தேதி பதவி விலகுகிறார். சண்முகநாதனைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களின் பாரதிய ஜனதா பொறுப்பாளராக இருந்த பத்மநாப ஆச்சார்யா அருணாச்சல பிரதேசத்தின் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியா முழுவதையும் கபளீகரம் செய்து விட வேண்டுமென்கிற தொலைநோக்குத் திட்டம் பாரதிய ஜனதாவுக்கு உள்ளதென்றாலும், உடனடியாக வடகிழக்கில் கால் பதித்து விட வேண்டுமென்கிற வெறி கொஞ்சம் அதிகம். விசுவ இந்து பரிசத்தில் துவங்கி சேவா பாரதி வரை ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் மொத்த வானரப் படைகளையும் வெவ்வேறு பெயர்களில் இதற்கென களமிறக்கியிருக்கிறார்கள். வடகிழக்கு மாநில மக்களுக்கு “இந்திய தேசிய” உணர்வு குறைவு என்பதால் அங்கிருந்து பெண் குழந்தைகளைக் கடத்தி வந்து பிற மாநிலங்களில் வைத்து மூளைச்சலவை செய்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது நினைவிருக்கும்.

ஒருபுறம் பரிவார அமைப்புகளின் வலைப்பின்னல் களத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் பாரதிய ஜனதாவைக் களமிறக்கி அதற்குத் தெரிந்த அரசியல் தரகு வேலைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்து பாசிச அரசியலின் மிக நீண்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு சிறிய அத்தியாயம் தான் கலிகோ புல். அந்தத் தற்கொலைக் குறிப்பு நெடுக தன்னை ஒரு மக்கள் தலைவராகவும், நேர்மையின் உறைவிடமாகவும் கலிகோ புல்லினால் எவ்வாறு முன்வைக்க முடிந்தது? அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? பாரதிய ஜனதா கலிகோ புல்லை ஏன் கைவிட்டது?

(தொடரும்)

– சாக்கியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க