Sunday, September 19, 2021
முகப்பு இதர புகைப்படக் கட்டுரை ரேசன்ல அரிசி பருப்பு போட்டான்னா அதுதான் மகளிர் தினம்

ரேசன்ல அரிசி பருப்பு போட்டான்னா அதுதான் மகளிர் தினம்

-

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 2

துணிக்கு கஞ்சி போட காய்ச்சுகிறார் ஒரு தொழிலாளி.

இவர்கள் வேறு பெண்கள். சென்னை நகரின் அழுக்கை துவைக்கும் வெள்ளை மனம் கொண்ட கடும் உழைப்பாளிகள். உழைப்பின் அழகில் தோய்ந்திருக்கும் அவர்களது முகங்கள்  வயதை கூட்டியே காண்பித்தன. அன்றாடம் அடித்து துவைத்து, குனிந்து நிமிர்ந்து உடல் என்பது இவர்களைப் பொறுத்த வரை ரப்பர் போன்றது. அத்தோடு வீட்டு வேலைகள். வழக்கமாய் குடிக்கும் ஆண்கள். ஊரைச் சுற்றி கடன். மழை வந்தால் வெள்ளாவி வேலை இல்லை. கடன் அதிகம் வேண்டும். பிள்ளைகளை படிக்க வைக்க முயன்றும் வேறு வழியின்றி சோப்பையே ஆயுதமாக எடுக்க வேண்டியிருக்கிறது. சென்னை நகரின் கூவத்திற்கு அருகே இருக்கும் திடீர் நகரின் டோபி கனா என்று அழைக்கப்படும் சலவைத் துறைக்கு வாருங்கள். இந்த மகளித் தினத்தை இவர்களோடு செலவழிப்போம்.

சிறு சிறு பகுதியாக தடுக்கப்பட்டு சிதிலமடைந்த நீளமான சிமண்ட்டு தண்ணீர் தொட்டி. அதனருகில் அடித்துத் துவைக்க இடுப்பளவு உயரமுள்ள சலவைக் கல். துவைத்தது, துவைக்காதது, நீலம், கஞ்சி போட்டது, போடாதது என பிரித்து வைக்கவும் நின்று வேலை செய்யவும் நீண்ட சிமெண்ட் களம். கார்ப்ரேசன் லாரி தண்ணீரை நம்பித்தான் சலவை என்பதால் தண்ணீர் பிடித்துவைக்க பெரிய சிறிய டிரம் மற்றும் பாத்திரங்கள். துணிகளைக் காயவைக்க கயிறு கட்டிய திறந்த வெளி. துணிகளுக்கான கஞ்சியைக் காய்ச்சும் இடம். குடித்தனமாகவும் பயன்படுத்தப்படும் சலவையர் ஓய்வறை. துவைத்த கழிவுநீர் சரியாக ஓட வழியில்லாததால் ஒரு பக்கம் சாக்கடைத் தேக்கம். இதுதான் சென்னை சைதாப்பேட்டை திடீர் நகரில் இருக்கும் டோபி கனா என்று அழைக்கப்படும் சலவைத் தொழிலாளர் துறை.

இங்கே 500-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனர். தண்ணீர் வசதியுடன் துவைப்பதற்கு ஒவ்வொரு சலவைத் தொழிலாளிக்கும் கல் பலகை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அங்கே 50  பலகைதான் இருக்கிறது. சலவைத் தொழிலுக்கு மூலதாரமான தண்ணீருக்கு இங்கு எந்த வாய்ப்பும் கிடையாது. 20 வருடங்களாக லாரி தண்ணீரை நம்பித்தான் தொழில் செய்கிறார்கள். அதற்கு அவர்களே செலவும் செய்கிறார்கள். ஆனால் அரசாங்கத்துக்கு ஒரு சலவைக் கல்லுக்கு மாதம் 12 ரூபாய் வரி கட்டுகிறார்கள். கல், தண்ணீர், துணி காயும் இடம் போன்றவற்றில் வரும் சிக்கல்களை இவர்களது சங்கத்தின் தீர்த்துக் கொண்டு தொழில் செய்கின்றனர்.

சலவை மட்டும் செய்பவர்கள், வாடகை கடை, தள்ளுவண்டி, அயனிங் என்று சிறு ஏற்ற இறக்கத்துடன் ஓடுகிறது இவர்கள் வாழ்க்கை. வாடிக்கையாளர்கள் வீடு, அரசியல்வாதி, மருத்துவமனை, அழகு நிலையம், நட்சத்திர விடுதி, சாதாரண விடுதி போன்ற இடங்களில் இருந்து இவர்களுக்கு துணிகள் சலவைக்கு வருகின்றது. இது போக வயதான சலவைத் தொழிலாளிகளுக்கு வரும் துணிகளை பிரித்தும் கொடுக்கிறார்கள். தள்ளாத வயதிலும் துவைக்கும் கரங்களை அங்கே காணலாம்.  துவைக்கவே இயலாதவர்களுக்கு மடிக்கவும், ரகம் பிரிக்கவும் வேலை உண்டு. சில இளைஞர்கள் மட்டும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அயனிங் வேலைக்கு செல்கிறார்கள்.

எது வீடு, எது கழிவறை என இனம் காண முடியாத நெருக்கடியான குடியிருப்பு. துவைத்த துணிகளுக்கும் கழுவிய பாத்திரத்துக்கும் நடுவில் மீன் அலசும் பெண். தெரு முழுவதும் வழிந்தோடும் சாக்கடையில் விழுந்து விடாமல்  சாமார்த்தியமாக விளையாடும் குழந்தைகள். அன்னக்கூடை, தண்ணீர் கேன், தண்ணீர் குடம், அழுக்குத் துணி மூட்டைகள், அழுக்கு பாத்திரமும் அதை கழுவ தண்ணீர் வாளியும், தக்காளி வைக்கப்படும் மரப்பெட்டியில் பலதரப்பட்ட பொருட்கள் என வறண்டு போன ஒரு தோற்றம் தெருமுழுதும். வீட்டுக்கு வெளியேயும் வரிசைகட்டி நிற்கும் பொருட்களைப் பார்க்கும்போது எதுவரை அவர்கள் வீட்டு எல்லை, எந்த பொருள் யாருடையது எனப் பிரித்து பார்க்க முடியாத குழப்பம் நமக்கு.

உச்சிப் பொழுது வெயில் உடலை சுட்டெரிக்கும் வரை துணிகளைத் துவைத்துவிட்டு காய வைப்பதும் மடிப்பதும் சலவை செய்வதும் என அன்றாடம் மூச்சு முட்ட ஓடிக் கொண்டிருக்கிறது இவர்களது வேலை. இவர்கள் குடியிருப்பில் யாரேனும் இறந்து விட்டால் அன்று மட்டும் விடுமுறை. அந்நாள்தான் இவர்களுக்கு கிடைக்கும் அரிதான ஓய்வு. வேலை செய்துகொண்டே பாட்டுக் கேட்பதும் டிவி பார்ப்பதும்தான் இவர்களுக்கிருக்கும் ஒரே பொழுது போக்கு. தலைமுறை தலைமுறையாக இத்தொழிலோடு போராடும் இவர்களுக்கு உடுத்திக் கொள்ள ஒரு நல்ல துணி கிடையாது. வெள்ளுடையாளர்கள் வேண்டாமென்று ஒதுக்கும் உடைகள்தான் இவர்களுக்கு பல சமயம் புத்தாடை.

நகம் வெட்டும் நேரம் கூட இல்லாது சிலர் உழைப்பதாகச் சொல்வார்கள். ஆனால் சலவை தொழிலாளிக்கு நகம் வெட்டும் தேவையே இருப்பதில்லை. சோப்பு மற்றும் பல்வேறு வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதாலும், அதிக நேரம் நீரிலையே நனைக்க வேண்டியிருப்பதாலும் பலருடைய கை நகக்கண்கள் பாதிக்கும் மேல் மென்று கரைக்கப்பட்டு ரத்தம் சொறிந்திருந்தது. அதேபோல் துணிக்கு மருந்து போடும் வேலையை அக்குடும்பத்தின் ஆண்கள் மட்டுமே செய்வார்கள். காரணம் மருந்து பட்டால் கை தார் போல் கருத்து போய்விடும். ஆனால் பல பெண்களின் கையும் அங்கே அப்படி இருந்ததைப் பார்க்க முடிந்தது.

குழந்தைப் பருவம் முதல் இத்தொழிலில் ஈடுபட்டதால் கல்யாண வயதில் உள்ள ஒரு பெண்ணுக்கு உடல் முழுதும் மாநிறமும் கைகளின் நிறம் மட்டும் தாரின் கருப்பாகவும் இருந்தது.  அந்த பெண் எட்டாவது மட்டும் படித்திருந்தார். “எட்டாவது படிச்சா போதும் கலக்டர் வேலை தர்ரேன்னு சொன்னாங்க அதான் வீணா எதுக்கு படிச்சுகிட்டுன்னு நிறுத்திட்டோம்.” என்று அருகில் துவைத்துக் கொண்டிருந்த ரத்தினம் கேலியாகச் சொன்னார்.

“முடி வெட்றவனுக்கும் துணி வெளுக்குறவனுக்கும் தகுதி தராதரம் ஒன்னும் கூடிடலங்க. ஆத்துக்கறையில, குளக்கறையில செஞ்ச தொழில அந்தஸ்தா அழகு நிலையத்துலயும் அயனிங்க கடையிலயும் கூலிக்கு செய்யிறோம். இதைத் தாண்டி சாதித் தொழில் பாக்குற யாரும் மேல வர முடியாது. பிள்ளைங்களும் விரும்பியோ விரும்பாமலோ இந்த தொழில செஞ்சுதான் ஆகவேண்டிருக்கு. என்ன படிச்சாலும் தலைமுறை பல தாண்டியும் இந்தக் குலத்தொழில விட்டு மீள முடியலையே” என்றார்.

இப்பகுதியில் ஆண் பெண் பேதமில்லாமல் அனைத்து வேலைகளையும் இருபாலரும் கலந்தே செய்கின்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் ஒரு ஏரில் பூட்டிய இரு மாடுகளாக பாரம் சுமக்கின்றனர். வீட்டில்  துணிகளைத் துவைக்க எந்திரத்தின் உதவியை பலர் நாடும் போது ஊர் அழுக்கை அடித்துத் துவைக்கும் இப்பெண் தொழிலாளிகள் என்ன சொல்கிறார்கள்?


ரமணி வயசு 70. மகன் மனைவியுடன் சித்தாள் வேலை செய்து வேறு இடத்தில் வசித்து வருகிறார். தள்ளாத வயதில் தனிக் குடித்தனம் செய்யும் ரமணியம்மா மற்ற தொழிலாளிகள் பிரித்து தரும் துணிகளை துவைத்து கொடுக்கிறார். “வயசாகி போச்சுன்னு சும்மா உக்காந்திருந்தா வயிறு பசிக்காம இருக்குமா? எங்க போரது? யாரு குடுப்பா?  நேரத்துக்கு பசிக்கும் வயித்துக்காக வேலை செஞ்சுதானே ஆகனும்.”

சுமதி வயசு 50. தள்ளுவண்டி, அயன் கடையும் வைத்துள்ளனர். “நாங்க சாதியிலயே வண்ணான். எங்களப் போயி எத்தன வருசமா தொவைக்கிறீங்கன்னு கேட்டா என்னத்த சொல்ல. எங்க அப்பன், பாட்டன் காலத்துல ஆரம்பிச்சு எனக்கு கருத்து தெரிஞ்ச நாள்லேருந்து துணி வெளுக்குறேன். எம்பிள்ளைங்களாவது வேற வேலைக்கு போகாதான்னு ஏக்கமா இருக்கு”

உஷா வயது 55. பெண்கள் தினமா? துணிக்கு போட்ற சோப்பு பேரே எனக்கு ஒழுக்கா சொல்லத் தெரியாது. இதுல்லாம் எனக்கு எங்க தெரிய போகுது.  நீங்க எதுக்காக வந்திருந்தாலும் சரி, எனக்கு இந்த உதவிய மட்டும் பண்னுங்க மேடம். எனக்கு ரேசன்ல சர்க்கரை அட்டை (அதிக வருமானம் உள்ள குடும்பத்துக்கான ரேசன் அட்டை) போட்டு குடுத்துருக்காக. அரிசி பருப்பு எதுவும் வாங்க முடியல அதை மாத்தி குடுத்திங்கன்னா புண்ணியமா போகும்.”

அமுதா. வயது 26 “எப்படியாவது ஒரு அயனிங்க கட போடனுன்னு ஆசை. ஆசைய மட்டும் வச்சுட்டு என்ன செய்ய முடியும். ரெண்டு லட்சம் மூனு லட்சம் பணம் வேணுமே? எங்களப் போல உள்ளவங்களுக்கு பேங்குல கடன் தரதா சொல்றதெல்லாம் டிவில பாக்குறதோட சரி. அதை யாரப் புடிச்சி எப்படி வாங்குறதுன்னு எந்த வழிமுறையும் தெரியல.”

பூவம்மாள் வயது 50 வயதை கடந்திருப்பார். “நெனவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து அப்பங்கிட்ட, பொறவு புருசங்கிட்ட வெள்ளாவி வெளுப்புதான் எம்பொழப்பு. மிச்சமுன்னு எதுவும் வேண்டாம் கடன் இல்லாம இருக்கவிடுன்னு இந்த படித்தொற அம்மாட்டதான் வேண்டிக்கிறேன்.”

கங்கம்மா. சலவை தொழிலாளி. “ரெண்டு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்து பேரப்பிள்ள எடுத்து பாட்டியாயிட்டேன். அத வெச்சு வயசு பாத்துக்கோ.  3 மாசமா ரேசன்ல எந்த பொருளும் குடுக்க மாட்றான். இன்னைக்கி சண்ட வலிச்சதுல சக்கர மட்டும்தான் இருக்கு வாங்கினு போன்னான். அவன விடாம டார்சர் பன்னி அரிசி, பருப்பு வாங்கினாதான் எனக்கு மகளிர் தினம்னு போடுங்க.”

லட்சுமி வயது 48. “எங்களுக்கு பொழுது விடியறதே கல்லாண்டதான். ஓய்வு பொழுது போக்கு எதுவும் இல்லாமத்தான் உழைக்குறோம். ஒரு வார காலம் வேலை இல்ல, தவணக்காரன் தயவு இல்லாமெ உயிர் வாழவே முடியாது..”

ஜீவா. வயது 25. பத்தாவது வரைப் படித்தவர். “நான் பொறந்ததும் கல்யாணம் செஞ்சதும் இங்கேதான். எங்க வீட்டுக்காருக்குப் பேச்சு வராது, காதும் கேக்காது. ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. அவருக்கு உள்ள குறைய விட  மத்த ஆம்பளங்களைப் போல குடிக்காம இருக்குறது எனக்குப் பெரிய விசயமா தோணுச்சு.”

– வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க