privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கேள்வி கேட்கக் கூடாத புனித ஆவி மோடி !

கேள்வி கேட்கக் கூடாத புனித ஆவி மோடி !

-

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சவுகான். இவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ்  பிரதமர் மோடி  முதன் முதலாக கடவுச் சீட்டு பெறுவதற்காக அளித்த விவரங்கள், ஆவணங்கள் மற்றும் கடவுச் சீட்டை புதுப்பிக்க அவர் அளித்த விவரங்கள், ஆவணங்கள் ஆகியவை குறித்துக் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம், மத்திய தகவல் ஆணையத்திடம் விவரங்கள் கேட்டிருந்தார். இது குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது என வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் தகவல் அலுவலகம் கைவிரித்துவிட்டது. மோடியின் வீட்டு முகவரி, குடும்பத்தினர், மனைவி, சொத்து முதலிய இன்ன பிற விவரங்கள் அனைத்தும் இராணுவ இரகசியமா என்ன?

இது குறித்து சவுகான் மத்திய தகவல் ஆணையரிடம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேல் முறையீடு செய்தார். இவ்விண்ணப்பத்தை விசாரித்த மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே. மாத்தூர், முக்கிய நபர்களின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிடும் போது பெருமளவிலான மக்கள் நலன் சார்ந்த மனுக்களுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும் எனக் கூறி , மேல்முறையீட்டை இரத்து செய்துவிட்டார். விதர்பாவில் பருத்தி விவசாயிகள் சாகும் போது மோடி போட்ட பத்து இலட்ச ரூபாய் கோட் சட்டை எங்கே யாரால் எவ்வளவு ரூபாயல் தயாரிக்கப்பட்டது என்பதை கேட்டிருந்தால் அதையும் மக்கள் நலன் சார்ந்ததில்லை என்று  குப்பையில் போட்டிருப்பார்கள். மோடி தனது மனைவி குறித்து தகவல்களை மறைக்கிறாரா, மாற்றியிருக்கிறாரா என்று தெரிந்து கொள்வதும் ஒரு அப்பாவி பெண்ணின் நலனிலிருந்து முக்கியமில்லையா?

அமித்ஷா, சதாசிவம் என மோடியின் எடுபிடிகளின் வரிசையில் புதிய வரவு – ஆர்.கே. மாத்தூர்

இதற்கு முன்னர் இதே போல, மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களுக்கு ஆகும் செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி லோகேஸ் பத்ரா கேட்டதற்கு “தேசத்தின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக் காரணங்கள் கருதி”  செலவுகள் குறித்த தகவல்களை வெளியிட முடியாது எனக் கூறி மறுத்தார் மாத்தூர். இது முன்னால் தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த மிஷ்ரா, “மிக முக்கிய நபர்களின் பயணச் செலவுகள் மக்களுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்”என அறிவித்ததற்கு எதிரானது. சவுதி மன்னரோ, அமெரிக்க அதிபரோ வெளிநாடு செல்லும் போது எவ்வளவு செலவழிக்கிறர்கள் என்பது தெரிய வந்ததால் நாம் விமரிசிக்கிறோம். அப்படி ஒரு விமரிசனம் வந்துவிடக் கூடாது என்றே இத்தகவல்களை மறுக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தேர்தல் விண்ணப்பப் படிவத்தில் தனது கல்வித் தகுதி குறித்து மோடி கொடுத்த தகவல்களை உறுதி செய்யும் பொருட்டு அதற்கான ஆவணச் சான்றுகளின் நகல்களை அளிக்கக் கோரி  நீரஜ் என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு போட்டிருந்தார். மத்திய தகவல் ஆணையர்களில் ஒருவரான ஸ்ரீதர் ஆச்சார்யலு, அதற்கான ஆவண நகல்களை வழங்கும் படி டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.

மோடியின் சான்றிதழை காட்ட உத்திரவிட்ட ஸ்ரீதர் ஆச்சார்யலு

டெல்லி பல்கலைக்கழகம், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில், டெல்லி பல்கலைக்கழகத்தின் மனுவை தள்ளுபடி செய்த ஆச்சார்யலு, கண்டிப்பாக ஆவணங்களைத் தரவேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம், டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. டில்லி உயர்நீதிமன்றமும் வழக்கை விசாரனைக்கு எடுத்துக் கொண்டு மத்திய தகவல் ஆணையரின் உத்தரவிற்குத் தடையுத்தரவு பிறப்பித்தது. இன்று வரை அவ்வழக்கு நிலுவையிலேயே உள்ளது. மோடியின் படிப்பு  குறித்த அந்த இருக்கும் அல்லது இல்லாத சான்றிதழைக் கூட ஏதோ அணு குண்டை தயாரிக்கும் தொழிற்சாலையின் வரைபடம் போல ஏன் பாதுகாக்க வேண்டும்?

மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழைச் சரி பார்ப்பதற்கு டெல்லி பல்கலைக்கு உத்தரவிட்ட  ஸ்ரீதர் ஆச்சார்யலுவிடமிருந்து மனித வள மேம்பாட்டுத்துறை தகவல் அலுவலக பொறுப்புக்கள் பறித்துவிட்டு, மற்றொரு அதிகாரியான மஞ்சுளா பரஷாரிடம் அத்துறையை ஒப்படைத்தார் தலைமை தகவல் ஆணையர் மாத்தூர். அடுத்து மோடி குறித்து கேள்வி கேட்டாலே வாயைத் தைப்பார்களோ தெரியவில்லை.

மத்திய தகவல் உரிமை ஆணையகத்தின் தலைமைப் பதவியான ‘தலைமைத் தகவல் ஆணையர்’ பதவி என்பது தலைமைத் தேர்தல் கமிசனர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவிக்கு நிகரானது, இப்பதவிக்கு பொதுவாக செயல்பாட்டில் இருக்கும் மத்திய தகவல் ஆணையர்களுள் ஒருவரை பதவி மூப்பு அடிப்படையில் பிரதமர் தலைமையிலான குழு தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரிடம் சிபாரிசு செய்யும். குடியரசுத் தலைவர் அவரை பதவியமர்த்துவார்.

ஆனால் மோடி தலைமையிலான பணி நியமனக் குழு, நடைமுறை மரபை மீறி தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்குத் துளி கூட சம்பந்தம் இல்லாத, முன்னாள் இராணுவச் செயலாளரான ஆர்.கே. மாத்தூரை நியமித்தது. ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கி இன்று வரையிலும், முன்னாள் நீதிபதி சதாசிவம் போன்று தமக்கு சாதகமானவர்களையும், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களையும் அரசின் அனைத்து உறுப்புகளின் நிர்வாகத் தலைமையில் நியமித்து வரும் மோடி கும்பல், ஆர்.கே. மாத்தூரை அப்பதவிக்கு அமர்த்தியுள்ளதன் நோக்கம் ஆர்.கே. மாத்தூரின் செயல்பாடுகளிலிருந்தே நமக்குப் புரியவரும்.

பாஜக காட்டிய பட்டமும் சந்தேகத்திற்குரியதே – அம்பலப்படுத்தும் ஆம் ஆத்மி

ஒரு இளம் பெண்ணை வேவுபார்த்தது, குஜராத்தில் மோடியின் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் உள்ளிட்ட  வேலைகளை  நிறைவேற்ற மோடிக்கு எப்படி ஒரு அமித்ஷா கிடைத்தாரோ, மோடியின் திருவிளையாடல்களின் மீதான வழக்குகள் விசாரணைக்கு வரும் போது அதனை இலாவகமாகக் கையாள எப்படி ஒரு சதாசிவம் கிடைத்தாரோ, அதே போல, மோடியின் கடந்த கால மோசடிகள் மற்றும் அயோக்கியத்தனங்கள் குறித்த  தகவல்களை வெளியிடாமல் கமுக்கமாக மூடி மறைக்க ஒரு ஆர்.கே. மாத்தூர் கிடைத்திருக்கிறார்.

மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பார்கள். கடந்தகாலம், நிகழ்காலம் என முழுக்க முழுக்க அயோக்கியத்தனங்களையே வரலாறாகக் கொண்டுள்ள மோடிக்கு, இன்னும் நூறு அமித்ஷாக்களும், சதாசிவங்களும், மாத்தூர்களும் தேவை. இருப்பினும் இன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கேடாக தடை செய்யும் மோடியின் நடவடிக்கைகள் மக்களிடையே வலம் வருவதையோ அம்பலப்படுத்துவதையோ எவர் தடுக்க முடியும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க