Thursday, August 11, 2022
முகப்பு வாழ்க்கை பெண் பெண் விடுதலைக்கு தீர்வு என்ன ?

பெண் விடுதலைக்கு தீர்வு என்ன ?

-

ஆணும் பெண்ணும் கரம் கோர்த்து போராடினால்
பெண் விடுதலை சாத்தியம் !

மார்ச் 8 உலக மகளிர் தினத்தில் நுகர்வுவெறியை பரப்புபவர்களையும் பாலியல் வன்முறையாளர்களையும் மக்களாகிய நாமே தண்டிக்க உறுதியேற்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை கிளை சார்பில் குமணன் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை பெ.வி.மு-வின் சென்னை கிளை செயலாளர் தோழர் செல்வி தலைமை தாங்கி பேசும் போது மார்ச் 8 என்பது ஊடகங்களில் பத்திரிக்கைகளில் காட்டுவது போல் விதவிதமாக உடை அணிந்து விதவிதமாக உணவு சாப்பிட்டு கொண்டாடக் கூடிய நாள் இல்லை.

உழைக்கும் பெண்களை உழைப்பு சுரண்டலில் இருந்து விடுவிக்கவும் – அவர்களின் உண்மையான விடுதலைக்காகவும் போராடிய பெண்களின் ரத்தத்தில் மலர்ந்த போராட்ட நாள்.

பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு பெண்களின் உடை சரியில்லை – இரவு 9 மணிக்கு மேல் ஏன் வெளியில் போக வேண்டும் ? பெண்களை வளர்க்கும் முறை சரியில்லை என்று பாதிக்கப்படும் பெண்களின் மீதே பழிபோடும் காரணங்கள் தான் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் போரூர் மதனந்தபுரத்தில் 7 வயது சிறுமி ஹாசினி எந்த மாதிரி உடை போட்டிருந்தாள் – வீட்டிற்குள்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது – பாலியல் படுகொலை செய்தவன் அவளுக்கும் அவன் குடும்பதிற்கும் நன்றாக தெரிந்து பழகிய நபர்தான் இவனுக்கு வயது 22 ஐடி நிறுவனத்தில் 45 ஆயிரம் சம்பாதிக்க கூடியவன். தன்னோடு வாக்குமூலத்தில் நான் தினமும் 150-க்கும் மேல் ஆபாச படங்களை பார்ப்பதால் என்னுடைய வெறியை, அது யாராக இருந்தாலும் தீர்த்து கொள்ள வேடும் என்ற உணர்ச்சிதான் தோன்றும். அதனால்தான் அப்படி நடந்துக் கொண்டேன் என்று சொல்லியிருக்கிறான்.

இப்படி இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழிக்க லாப நோக்கத்தோடு பரப்பப்படும் ஆபாச இணையதளங்களால் ஏற்படும் வெறிதான் முதன்மை காரணம். இது ஏதோ வெளியில் நடக்க கூடிய பிரச்சினை. நமக்கு இல்லை என்று ஒதுங்கிப் போக கூடிய விசயமல்ல அல்லது போலீசு – நீதிமன்றம் – அரசியல்வாதிகள் பார்த்து கொள்வார்கள் என்று சும்மா விடக்கூடியதுமில்லை.

போலீசு – ஹாசினியோட பாலியல் படுகொலையை கண்டித்து அந்த பகுதியில் பெண்கள் போராடி கொண்டிருந்த நேரத்தில் காவல் துறை போட்டிருந்த வழக்கு குழந்தையை காணவில்லை என்பது மட்டும்தான். பிறகு போராட்டத்தில் பெ.வி.மு தோழர்கள் தலையிட்டு போராடிய போதுதான் அந்த வழக்கை ஆள் கடத்தல் – கற்பழிப்பு – கொலை – மூடி மறைத்தது போன்ற பல்வேறு வகையில் வழக்கு பதிவை மாற்றியுள்ளது. இதுதான் போலீசின் யோக்கியதை. இவர்கள் பாலியல் படுகொலைகளை தடுப்பார்களா? தண்டிப்பார்களா?

நீதி மன்றம் – கபாலி திரைப்படத்தை முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதற்காக 200 இணையத்தளங்களை முடங்கியது. ஆனால் இலவசமாக ஆயிரக்கணக்கில் உலாவரும் ஆபாச இணைய தளங்கள் அவர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை. இவர்களா தடுப்பார்கள் – தண்டிப்பார்கள்?

இவர்களை நம்பி பயனில்லை. உழைக்கும் மக்களாகிய நாம்தான் பெண்கள் – குழந்தைகளின் பாதுகாக்கவும் – சீரழிவை பரப்புபவர்களை தண்டிக்கவும் – அவர்களை அடித்து விரட்டவும் களத்தில் இறங்க வேண்டிய காலம் இது.

வீதியில் இறங்கி போராடுவதன் மூலம்தான் இந்த நிலையை மாற்ற முடியும். அதற்காக பெ.வி.மு. உங்களோடு எப்போதும் களத்தில் நிற்கும். சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வரை நம்முடைய போராட்டத்தை தொடருவோம் என்று உறுதியேற்கிறது என்று முடித்தார்.

பேராசிரியர் சாந்தி பேசுகையில் கிரண்பேடி – சிந்து – தீபிகா படுகோண் போன்றவர்களை வைத்து ஒட்டுமொத்த பெண் சமூகமே முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையான பெண்கள் படிப்பு – பொருளாதாரம் – அரசியல் ரீதியாக பின்தங்கிதான் உள்ளார்கள்.

ஆண் குழந்தைகளை வளர்க்கும் போது தன்னுடைய அக்கா, தங்கைகளை மதிக்கும் படி சொல்லி கொடுக்க வேண்டியது நமது பொறுப்பு. உனக்கு உள்ளது போன்றே அவர்களுக்கும் எல்லாவிதமாக உரிமைகளும் உள்ளது என்று சொல்லி வளர்க்கப்படும் போது பள்ளியில் – அலுவலகத்தில் தன்னுடன் இருக்கும் பெண்களை மதித்து நடக்கும் பண்பை வளர்த்துக் கொள்வார்கள். அதனால் சமூகத்தை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு வீட்டிலிருந்தே மாற்றதை கொண்டு வர வேண்டும் என்ற உறுதியை இந்த மகளில் தினத்தில் ஏற்றுக் கொள்வோம் என்றார்.

தொழிற்சாலைகளில் பெண்களின் நிலை குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சார்ந்த தோழர் திலகவதி பேசும் போது பெண்கள் படிக்க வேண்டும் – பொருளாதாரத்தை ஈட்டிவிட்டால் மட்டுமே பெண் விடுதலையை சாதித்து விட முடியுமா ?

முதலாளித்துவம் சொல்வது போல் பெண்களின் வளர்ச்சி என்பது பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதே என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் வேலைக்கு போகும் பெண்களின் சம்பளத்தை அவர்களின் அடிப்படை தேவைக்காக கூட செலவழித்துக் கொள்ளும் உரிமை இல்லாமல்தான் பெண்கள் இருக்கிறார்கள். கிராமபுறங்களில் ATM PIN கூட தெரியாது என்று கூறும் நிலையில்தான் இன்று பெண்களின் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது.

நமது நாட்டில் உற்பத்தியை பெருக்குவதற்கு ஒவ்வொரு துறைக்கும் ஒரு செக்டார் உள்ளது. ஆனால் பெண்களின் பாலியல் ரீதியாக பிரச்சினையை சொல்வதற்கு – தீர்ப்பதற்கு எந்த செக்டாரும் இல்லை என்பதுதானே உண்மை.

பெண்களின் வளர்ச்சி என்ற பேசும் மோடி அரசு முன்பு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டிற்கு செல்லும் வரைக்கும் பாதுகாப்புக்கு அந்த நிர்வாகம்தான் பொறுப்பு. ஆனால் தற்போது மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது. மேலும் மகப்பேறு காலத்தில் 6 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு தற்போது 3 மாதமாக மாற்றி கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்ட பெண்களிடமே நிர்வாகம் வற்புறுத்து வருகிறது.

பெண்கள் குடும்ப சுரண்டல் – உழைப்பு சுரண்டல் – பாலியல் – நோய் என்ற நான்கு முனை சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி விட்டது.

அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கே இந்த நிலை என்றால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை என்னவென்று சொல்வது.  நுகர்வுவெறியை பரப்புவதற்கும் உற்பத்தியை பெருக்குவதற்கும் முதல் பலிக்கடா பெண்களே ! இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதற்கு பெண்கள் சமூக பணியாற்ற வெளியே வந்தால் மட்டுமே பெண்விடுதலையை சாதிக்க முடியும் என்றார்.

அடுத்ததாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சென்னை கிளை இணை செயலாளர் தோழர் சாரதி “தற்போது மாணவர்கள் – இளைஞர்கள் மறுகாலணியாக்க நுகர்வுவெறி கலாச்சாரத்தில் சிக்கி சீரழிந்து போய் இருக்கிறார்கள்.  இதனால் கல்லூரி மாணவர்கள் சிலர் திருடுவது – கொள்ளை அடிப்பது – கொலை செய்தாவது விலை உயர்ந்த மொபைல் – பைக் என்று தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம் என்ற கருத்துக்கு ஆட்பட்டுள்ளார்கள்.

இந்த சீரழிவு கலாச்சாரத்தை தற்போதைய சினிமாக்களும் தன்னுடைய நுகர்வுவெறிக்காக இதெல்லாம் தவறு இல்லை என்ற வகையிலேயே காட்சிப்படுத்துகிறது. மறுபுறம் இணையதள ஆபாச படங்களை பார்ப்பது, சிறு குழந்தை என்றும் பார்க்காமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யத் தூண்டுகிறது.

அதையெல்லாம் விட கொடுமையானது பெண்கள் தங்களுடைய கருத்துகளை சொல்லக்கூட முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் டெல்லி பல்கலைகத்தில் படிக்கும் மாணவி தன்னுடைய தந்தை இறந்த்து போரால்தான் என்று கூறியதால் அந்த மாணவி பாகிஸ்தானின் உளவாளி, இந்த கருத்தை சொன்னதற்காகவே அவளை ‘கற்பழிப்பேன்’ என்று ஆர்.எஸ்.எஸ்-சின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யை சார்ந்தவன் பகிரங்கமாக கூறியுள்ளான்.

இது போன்று பெண்களை அடிமைப்படுத்தும் – இழிவாக நடத்தும் பார்ப்பனிய இந்துத்துவ கலாச்சாரத்தை ஒழிக்காமல் பெண் விடுதலை சாத்தியப்படாது. இதற்காக போராடும் பெண்கள் விடுதலை முன்னணியோடு தோளோடு தொள் கொடுத்து போராட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி எப்போதும் முன் நிற்கும்” என்று உறுதி கூறி முடித்தார்.

இறுதியாக சிறப்புரை ஆற்றிய பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை கிளை இணை செயலாளர் தோழர் அஜிதா பேசுகையில் “அப்பாக்கள் தினம் – அம்மாக்கள் தினம் – காதலர் தினம் ஆகிய தினத்தை போல பெண்கள் தினமும் கொண்டாட்ட நாளாக பத்திரிக்கைகளிலும் – ஊடகங்களிலும் சித்தரிக்கப்படுகிறது.

மார்ச் 8 என்பது கொண்டாட்ட நாள் அல்ல. அது போராடக் கூடிய நாள் என்பதால்தான் பெ.வி.மு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

பெண்களுக்கு பிரச்சினை….. பிரச்சினை என்று சொன்னால் மட்டும் தீராது. அதனை தீர்ப்பதற்கான வழி என்ன என்பது பற்றிதான் நாம் பேச வேண்டியுள்ளது. இன்று பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது. எந்தவித தப்புமே செய்யாமல் பெண் என்ற ஒரே காரணத்திற்காக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லுகின்ற இந்த சமூகம் பெண்கள் வாழத் தகுதியானதா? என்ற கேள்வி எழும்புகிறது.

நடக்கும் சம்பவங்களை பார்த்தால் பல நாட்கள் தூக்கம் வருவதில்லை. அந்த அளவிற்கு கொடூரமாக பாலியன் கொலை நடத்தேறுகிறது. ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து, இரண்டு மார்பகங்களை அறுத்து, பிறப்புறுப்பில் ஈட்டியை சொருகி  கொலை செய்கின்ற அளவுக்கு மனிதத் தன்மையற்றவனாக கொடூரமாக மாற்றியது எது? சமூகத்தின் பெண்களின் நிலையை மாற்ற போராடக் கூடிய பெண்கள் அமைப்பை சார்ந்தவர்கள் உட்பட பெண்கள் அனைவரும் அச்சத்தோடுதான் வாழ்கிறோம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் இப்போது நிலவும் சூழலில் அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதாக் வாழ்கிறோம்.

ஒரு மூன்று வயது குழந்தை பேசுவதை – நடப்பதை – ரசிக்க வேண்டிய மனிதன் எப்படி இந்த குழந்தையை எது பாலியல்ரீதியில் துன்புறுத்தி கொலை செய்து குப்பை தொட்டியில் தூக்கிப் போடும் மனநிலைமை உருவாக்கியது என்பதை சிந்திக்க வேண்டும்? சிறுவயதில் இருந்தே பெண்ணடிமை தனத்தை புகுத்தி வளர்க்கப்படுவதில் தொடங்கி – கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற அடிமைத்தனத்தை பெண் தானாகவே ஏற்று கொள்ளும் தன்மையில் பழக்கப்படுதியுள்ளது இந்த சமூகம்.

பெண் என்பவள் ஆணுக்கு அடிமை. அவள் ஆணுக்காகவே படைக்கப்பட்டவள் என்ற சிந்தனை ஊட்டப்பட்டவர்கள் ஆண்கள். இந்த சிந்தனைதான் பெண் என்பவள் தன்னுடைய விருப்பத்திற்கு ஆட்பட வேண்டியவள் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. பெண்கள் விண்வெளிக்கே சென்று ஆய்வு செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக சொன்னாலும் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் நிலை மாறிவிட்டதா?

பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் போது பெண்களின் மீதே பழி போடும் நிலைதான் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. நிர்பயா பாலியல் படுகொலைக்கு பிறகு சட்டங்களை கடுமையாக்க வெண்டும் – பொது இடங்களில் CCTV கேமிரா பொறுத்த வேண்டும் – கடுமையாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கருத்து பல கூறப்பட்டது. சட்டங்கள் போட்டாகிவிட்டது – CCTV கேமிரா பொருத்தப்பட்டுவிட்டது – குற்றங்கள் குறைத்துள்ளதா? காவல்துறை தடுத்துள்ளதா?

ஆந்திராவின் சட்டமன்ற அவை தலைவர் “காரை ஷெட்டில் வைத்து பூட்டி வைப்பது போல் பெண்களை வீட்டில் வைத்து பூட்டி வைத்தால் குற்றங்கள் நடக்காது” என்று கூறியுள்ளார். இந்த கெடுகேட்ட அரசியல்வாதிகளா குற்றங்கள் அதிகரிக்காமல் தடுப்பார்கள்? பெண் நீதிபதியின் இடுப்பை கிள்ளிப் பார்க்கும் ஆண் நீதிபதியால் குற்றங்களை தடுக்க முடியுமா ? கடந்த 20 நாட்களில் தொடர்ச்சியாக நடந்த பாலியல் படுகொலைகளை இவர்கள் போட்ட சட்டமோ – CCTV கேமிராவோ – ஓட்டுக் கட்சிகளோ – போலீசோ – நீதிமன்றமோ தடுத்ததா?

பெண்களை பாதுகாக்கும் அரண்கள் என்று சொல்லும் இவர்கள்தான் முதன்மையான குற்றவாளிகள் என்று நாங்கள் சொல்கிறோம். குறிப்பாக இன்று பெண் என்பவள் செண்டிற்காகவும் – டிஸ்கவர் பைக்கிற்காகவும் சோரம் போகிறவளாக சித்திரிக்கும் TV விளம்பரங்களை நாம் கண்டுக் கொள்ளாமல் கடந்து செல்கிறோம். நமக்கு ஏன் எந்த உறுத்தலும் வருவதில்லை?

அடுத்து சினிமா – அன்றைய சினிமாவில் பெண் காதலிக்க மறுத்தால் தாடி வளர்த்து கொண்டு ஆண் தன்னை வருத்தி கொள்வதாக காட்சிப்படுத்தப்பட்டது. தற்கால சினிமா தன்னை விரும்பவில்லை என்றால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சிந்தனையை இளைஞர்களுக்கு ஊட்டி வளர்கிறது.

அடுத்து பத்திரிக்கை – ஆயிரக்கணக்கில் மக்கள் புழங்கக் கூடிய பொது இடங்களில் டைம்பாஸ் போன்ற பத்திரிக்கையில் ஆபாசமாக பெண்களின் படங்களை போஸ்டர் போட்டு விளம்பரப்படுத்தி – 8-வது படிக்கக் கூடிய மாணவர்களையும் பள்ளி புத்தகத்திற்குள் ஒளித்து வைத்து பார்க்க கூடிய விதமாக விற்பனை செய்ததை நாம் ஏன் பாதிப்பு என்று உணரவில்லை?

அடுத்து இணையதளங்கள். படுக்கை அறை காட்சிகளையும் கையடக்க செல்லில் நடுக்கூடத்திற்கு கொண்டு வந்து 10 வயது சிறுவன் கூட பார்க்கும் வகையில் உலாவருவதை ஏன் தடுக்க முடியவில்லை? அரசு சொல்லும் புள்ளி விவரப்படி இணையத்தில் அதிகமாக பாலியல் காட்சிகள்தான் பார்க்கப்படுகிறது – பகிரப்படுகிறது என்று தகவல் சொல்லப்படுகிறது.

ஒரு பக்கம் பெண் என்பவள் வீட்டிற்கு அடங்கி ஒடுங்கி போக வேண்டியவள் – இன்னொருபுறம் நுகர்ந்து பார்க்க கூடிய ஒரு பொருள் என்ற இரட்டை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து போராடினால் மட்டுமே சாத்தியம். இதற்கு மெரினா போராட்டம் நம் கண்முன்னே உள்ள சிறந்த உதாரணம். போராட்ட களத்தில் முகம் தெரியாத ஆணும் பெண்ணும் கைகோர்த்து நின்ற அந்த நிலையில் தான் ஒரு ஆணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற அச்சமோ – தான் ஒரு பெண்ணின் கையை  பிடித்து இருக்கிறோம் என்ற எண்ணமோ இருவருக்கும் ஏற்படவில்லை. காரணம் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இதை சாத்தியப்படுத்திது.

அதுபோல இந்த சமூக மாற்றத்திற்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து போராட வேண்டியது அவசியம். அதற்காக இங்கு வந்துள்ள ஆண்கள் அனைவரும் தங்களுடைய வீட்டு பெண்களோடு கரம் கோர்த்து களத்தில் இறங்கி போராடி சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையை சாதிக்க முடியும். அதற்காக பெண்கள் விடுதலை முன்னணி உங்களை அறைகூவி அழைக்கிறது” என்று கூறி முடித்தார்.

பிறகு நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம்  முடிந்தது.

இதில் பெண்கள் – ஆண்கள் – குழந்தைகள் உட்பட 250 மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். பேருந்திற்காக காத்து நின்றவர்களும் – பகுதியில் உள்ள வியாபாரிகளிடமும் இந்த ஆர்ப்பாட்டம் நல்ல வரவேற்பை பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி

சென்னை கிளை – 98416 58457

  1. //பேராசிரியர் சாந்தி பேசுகையில் கிரண்பேடி – சிந்து – தீபிகா படுகோண் போன்றவர்களை வைத்து ஒட்டுமொத்த பெண் சமூகமே முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிற//

    Do you know Kiran bedi got her posting to Mehalaya as DGP only get docile status for her.
    And thereby she got admission to her daughter in the Shilong Government medical college.
    Than by local people agitation and protest the College administration cancelled her admission.
    This is the status(BJP figure) of our Great LADY- KIRAN BEDI.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க