privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஉலகம் – இந்தியா ஒரு வரிச் செய்திகள் 15/03/2017

உலகம் – இந்தியா ஒரு வரிச் செய்திகள் 15/03/2017

-

செய்தி: கோவா 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு 17, பாஜக 13, கோவா முன்னேற்றக் கட்சி 3, எம்ஜிபி 3, மற்றும் சுயேச்சைகள் மூவர், என்சிபி கட்சி 1 என வெற்றி பெற்றனர். இதில் பாஜக 13 போக மற்ற சிறிய கட்சிகளின் ஆறு உறுப்பினர்கள், இரண்டு சுயேச்சைகள் ஆகியோரின் ஆதரவை பேரம் பேசிப் பெற்று மனோகர் பாரிக்கர் ஆட்சி அமைக்கிறார். தனிப்பெரும் கட்சியான காங்கிரசு செவ்வாய்க்கிழமை வரை ஆட்சி அமைக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களை என் முன் காட்டவில்லை. ஆகவே அத்தகைய அணிவகுப்பை நடத்திய பாஜகவின் பாரிக்கரை ஆட்சி அமைப்பதற்கு அரசியல் சட்டப்படி அழைத்தேன்” என்கிறார் கவர்னர் மிருதுளா சின்ஹா.

நீதி: கூவாகத்தில் அணிவகுப்பையே தினமும் நடத்தினாலும் ஏ 2 சசிகலாவை ஒரு வாரம் அழைக்காத வித்யாசாகர் ராவும் கூட அரசியல் சட்டப்படியே நடந்திருப்பதாக  கூறுகிறார். ஒரே நாளில் முடிவெடுத்த சின்ஹாவும் அரசியல் சட்டப்படியே நடந்தேன் என்கிறார். அரசியல் சாசன சட்டத்தின் எந்தப் பிரிவில் குதிரைப் பேரம் வருகிறது?

_________

செய்தி:  உத்திரப்பிரதேசத்தில் 2014-ம் ஆண்டில் ஒரு பெண்ணையும் அவளது சிறு வயது மகளையும் கும்பல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் அமைச்சர் பிராஜபதி தற்போதுதான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நீதி: கைதிற்கே மூன்று ஆண்டுகள் ஆகியிருப்பதால் அவரது விடுதலைக்கும் நீண்ட காலம் பிடிக்கும் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள்!

_________

செய்தி: “ உங்களுடைய எண்ணிக்கை எங்கே? பாஜகவிடம் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை எனும் பிரச்சினையை வெறும் 30 விநாடிகளில் முடித்திருக்கலாம். எங்களிடம் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்கும் போது கவர்னிடம் ஏன் முட்டாள்தனமாக இப்படி இரகசியமாக நடந்து கொள்கிறீர்கள் என கேட்டிருக்கலாம். ஒரு தர்ணாவை ஏற்பாடு செய்திருக்கலாம். நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. பின் எதற்காக இங்கு வந்தீர்கள்?” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், காங்கிரசு தலைவர் மற்றும் மூத்த வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்கவியிடம் தெரிவித்தவை.

நீதி: குதிரைப் பேரத்தில் சாதனை படைத்த ஒரு பழம் பெருச்சாளிக்கு ஜனநாயக வகுப்பு எடுக்கும் கனம் கோர்ட்டார் அவர்கள், அதே பேரத்தில் வெற்றி பெற்ற புதிய பெருச்சாளியின் நடவடிக்கையையும் ஜனநாயகம் என்று விளக்குவதால் இதை நாம் பெருச்சாளிகளின் ஜனநாயகம் என அழைக்கலாமா?


செய்தி: வரி கட்டிய தொகையை வெளியிட மறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஊடகங்களில் அவரது வரி விவரம் கசிந்த பிறகு தானே முன் வந்து வெளியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது அதிபர் ஊதியத்தை அறக்கட்டளைக்கு கொடுத்து விட்டு ஒரு டாலர் மட்டுமே ஊதியமாக பெறுவேன் என்று அறிவித்த டொனால்ட் ட்ரம்பின் சொத்து மதிப்பு சுமார் 3.7 பில்லியன் டாலர். அமெரிக்க அதிபரின் ஒராண்டு வருமானம் நான்கு இலட்சம் டாலர்.

நீதி: 90-களில் ஆட்சி செய்த ஏ 1 ஜெயாவும் இப்படித்தான் ஒரு  ரூபாய் சம்பளத்தை பெற்றார். எனினும் ஒரு டாலர் 70 ரூபாய்களுக்கு சமம் என்பதால் டிரம்பை விட ஜெயாதான் தியாகி என்பதறிக.

_________

செய்தி: 84 வயதான எஸ் எம் கிருஷ்ணா தனது சகோதரி மரணத்தால் பாஜக தலைவர்களை சந்திக்க இருந்ததை ஒத்தி வைத்தார். ஜனவரி 2017 முதல் காங்கிரசிலிருந்து விலகிய கிருஷ்ணா 5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவில் சேர இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதி: சாய்வு நாற்காலி வயதென்றாலும் சங்கரா சங்கரா என்று முடங்கிக் கிடக்காமல் மோடி மோடி என்று ‘முன்னேறுகிறார்’ பாருங்கள்! அடுத்து எந்த பட்டணத்தில் கூவத்தூர் ஃபார்முலா கவர்னர் கடமையாற்ற போகிறாரோ தெரியவில்லை!

_________

செய்தி: “கோவாவில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான நிதின் கட்காரி வேலையில் கில்லி மாதிரி நடந்து கொண்டதோடு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் துள்ளிப் பாய்ந்து வேலை செய்தார். அவரது அனுபவமும், முன்முயற்சியும் கோவாவை எங்கள் கட்சிக்கு ஆதரவாக மாற்றிவிட்டது”, ஒரு மூத்த பாஜக தலைவர்.

நீதி: மராட்டிய நீர்ப்பாசன ஊழலில் துள்ளிப் பாய்ந்தவரும் தனது குடும்ப திருமணத்திற்கு அள்ளி அள்ளி செலவழித்தவருமான கட்காரி அவர்கள் சோரம் போன குதிரைகளை உடனுக்குடன் ரேட் போட்டு வாங்கியதால் இன்று முதல் அவர் கோவாவின் சிறந்த குதிரைத் தரகர் என்று அழைக்கப்படுகிறார்.

_________

செய்தி: தெற்கு தில்லயில் உள்ள அனைத்து உணவகங்கள், விடுதிகளில் உள்ள கழிப்பறைகளை இனி 5 ரூபாய் கொடுத்து பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெற்கு தில்லி நகராட்சிக் கழகம் அறிவித்திருக்கிறது. இது தங்களது சுதந்திரத்தையும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்று ஓட்டல் சங்க தலைமை கூறியிருக்கிறது.

நீதி: அப்பாடக்கர்கள் வந்து போகும் விடுதிகளில் அய்யோ பாவங்களை ஐந்து ரூபாய்க்கு அனுமதித்தால் அல்ட்ரா மாடர்ன் உரிமையாளர்கள் என்ன செய்வார்கள்? ஓட்டல் முதலாளி கல்லாவின் நலனை விட ஒண்ணுக்கை அடக்குவது மோசமில்லையே?

_________

செய்தி: “இசுலாத்தைப் பற்றியும், நபிகள் குறித்தும் மதநிந்தனை செய்யும் பதிவுகள் சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும், தடுக்கப்பட வேண்டும், வெளியிட்டவர்கள் உறுதியாக தண்டிக்கப்படுவார்கள்” என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

நீதி: வாரத்திற்கொரு முறை சூஃபி தர்காக்களிலும், ஷியாக்களின் மசூதிகளிலும் அப்பாவி மக்களைக் கொல்லும் முசுலீம் மதவெறியர்களும் கூட தங்களை மதநிந்தனைக்கு எதிரான போராளிகள் என்றே பாராட்டிக் கொள்கிறார்கள்! பிரச்சினை மத நிந்தனையா? மதவெறியா?

_________

செய்தி: “முற்போக்கான நாடாக திகழும் பாகிஸ்தானில் யாரும் யாரையும் குறிப்பிட்ட மதத்திற்கு மாறுமாறு நிர்ப்பந்தம் செய்ய இயலாது. இந்த நாட்டை பூமியின் சொர்க்கமாற்றுவதுதான் நமது கடமையே அன்றி யார் சொர்க்கத்திற்கு போகிறார்கள், யார் நரகத்திற்கு போகிறார்கள் என்று முடிவு செய்வதல்ல!” – ஹோலி நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்.

நீதி: வாழ்த்துக்கள் பிரதமரே! ஆனாலும் இதையும் கூட இசுலாம் இப்படிக் கூறுவதை அனுமதிக்கிறது என்றே உங்களால் பேச முடிகிறது. எனில் பாகிஸ்தானை முற்போக்கான நாடாக எப்படி ஐயா பார்க்க முடியும்?

_________

செய்தி: உத்திரப் பிரதேசம் 2014 பாராளுமன்றத் தேர்தலில் முசுலீம் வாக்குகள் அதிகம் உள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் பாஜக 43%, சமாஜ்வாதிக் கட்சி 27%, பிஎஸ்பி 16%, காங்கிரசு 9% பெற்றன. இதே தொகுதிகளில் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 39%, சமாஜ்வாதி 29%, பிஎஸ்பி 18%, காங்கிரசு 7% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன.

நீதி: ஆக சென்ற தேர்தலை விட முசுலீம் வாக்குகள் பாஜகவிற்கு குறைந்தும் சமாஜ்வாதி, பிஎஸ்பிக்கு அதிகமாகவும் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில் சேனல்களில் கூவும் பாஜக பொய்யர்கள் முசுலீம்கள் எங்களைத்தான் ஆதரித்தனர் என்று வெட்கத்துடன் சொல்வதை இனியாவது நிறுத்துவார்களா?

_________

செய்தி: உத்திரப்பிரதேசத்தின் 85 சட்டமன்ற ரிசர்வ் தொகுதிகளில் 2014 பாராளுமன்றத் தேர்தல்  வாக்குகள் அடிப்படையில் பாஜக 41% சமாஜ்வாதி 21%, பிஎஸ்பி 24%, காங்கிரசு 7% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. தற்போதைய 2017 சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சிகள் முறையே 40, 19, 24, 7 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்கின்றன.

நீதி: இந்த அட்டவணைப்படியும் கூட பாஜகவினர் தலித் வாக்குகளில் ஒரு சதவீதத்தை இழந்திருப்பதையும், பிஎஸ்பி ஒரு சதவீதத்தை அதிகம் பெற்றிருப்பதையும் பார்க்கிறோம். இதில் உபி தலித் மக்கள் பாஜகவை கூண்டோடு ஆதரிப்பதாக ஏன் பாஜக லவுடு ஸ்பீக்கர்கள் பொய்யுரைக்க வேண்டும்?

________

செய்தி: அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்பை சந்தித்த சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரும், இளவரசருமான மொகமது பின் சல்மான் அவர்கள், டிரம்பை முசுலீம் மக்களின் உண்மையான நண்பன் என்று பாராட்டியுள்ளார்.

நீதி: ஆகவே நாமும் அதிபர் டிரம்போடு சேர்த்து சவுதி மன்னர் கூட்டத்தை முசுலீம் மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கே எதிரிகள் என்று எச்சரிக்கை செய்வோம்.

_________

செய்தி: “எங்களை தார்மீகரீதியாக விமரிசிப்பதற்கு காங்கிரசிற்கு அருகதை இல்லை. அரசியல்சாசனத்திற்கு விசுவாசமாகத்தான் கோவா கவர்னர் நடந்து கொண்டிருக்கிறார். எங்களிடம் எண்ணிக்கை இருக்கிறது. அவர்களோ சட்டமன்ற தலைவரைக் கூட தெரிவு செய்யவில்லை, போதுமான எண்ணிக்கையும் அவர்களிடம் இல்லை. இருப்பினும் அவர்கள் இதை எதிர்க்கிறார்கள்” – வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர்.

நீதி: அப்பல்லோவில் உயிரோடு இருந்த போதும், ராஜாஜி ஹாலில் பிணமாக கிடந்த போதும் மந்தைகள் வழிதவறக்கூடாது என்ற திருட்டு மேய்ப்பருக்கே உரிய கடமையோடு ஜெயாவின் அடிமைகளைச் சுற்றி சுற்றி வந்த வெங்கய்யாவெல்லாம் அரசியல் சாசனத்தைப் போற்றுகிறார் என்றால் அந்த அரசியல் சாசனத்தின் யோக்கியதை என்ன?

_________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க