Saturday, January 29, 2022
முகப்பு வாழ்க்கை பெண் ஆறு வருசத்துதல மூணு சாவு - ஆனாலும் குடும்பத்த காப்பாத்தணுமே !

ஆறு வருசத்துதல மூணு சாவு – ஆனாலும் குடும்பத்த காப்பாத்தணுமே !

-

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 5

ழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னைச் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் இளநீர் கடை வைத்திருக்கும் சத்தியவாணியைச் சந்தித்தோம்.

“மகளிர் தினமா? கேள்வி பட்டுருக்கேன். அது எங்க நடக்குதுன்னு தெரியாது. நான் போனதுமில்ல. எந்த நல்ல நாளு வந்தாலும் எனக்கு ரொம்ப சந்தோசம்தாங்க. ஏன்னு கேட்டா நாளு கெழமையில இன்னும் நாலு எழநி கூட விக்குமே!. சரி அது போகட்டும் உழைக்கும் மகளிர் தினம் கொண்டாற்றீங்கன்னா நீங்க எங்கள நெதமும் கொண்டாடனும்.பொண்ணுங்களுக்கான நல்ல நாளுன்னா சந்தோசமா எதுனாச்சும் சொல்லனும் எங்கிட்ட அப்படி ஒன்னும் இல்லையே என்னத்த சொல்ல.”

சத்தியவாணிக்கு வயது 46. திருமணம் செய்துக் கொள்ளாமல் தனி ஒருவராக ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தூக்கிச் சுமக்கும் போராட்ட மனுசி. இதே இடத்தில் 40 வருடங்களுக்கு முன் அவர் அப்பா, அம்மா ஆரம்பித்த இளநீர் கடையைக் கடந்த 17 வருடங்களாக நடத்தி வருகிறார். வெளியூரிலிருந்து லாரியில் கொண்டு வரப்படும் இளநீரை, நடு இரவிலும் தனி ஆளாக நின்று இறக்கி பத்திரப்படுத்திவிட்டு தன்னையும் பாதுகாத்துக் கொண்டு வாழும் தைரியமான பெண்.

“கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு கொள்கையெல்லாம் கெடையாதுங்க. எல்லாரப் போலவும் கல்யாண பன்னிக்கிட்டு புருசம் புள்ளையோட வாழ ஆசப்பட்டவதான் நானும். 1998-ல அப்ப எனக்கு 25 வயசு. கல்யாணம் பேசி அதுக்கான வேலைங்க சந்தோசமா நடந்துட்டு இருந்துச்சு. கல்யாணத்துக்கு நாலு நாள் இருக்கறப்ப எங்க அம்மா இதே எடத்துல அடிப்பட்டு எறந்து போச்சு. என்ன செய்ய ஏது செய்யன்னு ஒன்னும் புரியல. நாலு மாசம் தள்ளி வச்சுக்கலான்னு மாப்ள வீட்டல சொன்னோம் அவங்களும் ஒத்துக்கிட்டாங்க.”

“அம்மா அப்பா ரெண்டு பேருமே நடு ராத்திரி எழநி எறக்க வந்தாங்க. எறக்குனது அசதியாருக்குன்னு அப்பா கொஞ்சம் கண்ண மூடிருக்காரு ,அம்மா வெத்தல போட்டுட்டு காவலுக்கு உக்காந்திருக்கு. எந்தப் பாவியோ எமனப்போல எங்குட்டுருந்து வந்தானோ அடிச்சு தூக்கிட்டான். அஞ்சு நிமிசத்துல அப்பா மடியிலேயே  அம்மா உயிரு போச்சு. ஸ்டேசனுக்கு அலஞ்சு பாத்தோம் யாருன்னே கண்டுபிடிக்க முடியலன்னு சொல்லிட்டாங்க. அம்மா செத்து கல்யாணம் தள்ளிப் போயி என்ன செய்றதுன்னு முழி பிதுங்கி நிக்கிறப்ப ஆண்டவன் அடுத்த பாரங்கல்ல நடு மண்டையில நச்சுன்னு போட்டான்.”

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, 6 வயது வளர்ப்பு குழந்தை இதுதான் சத்தியவாணியின் குடும்பம். பெற்றோர் இறந்ததால் அனாதையான மாமன் மகனை 3 வயதிலிருந்து சத்தியவாணியின் அம்மா எடுத்து வந்து வளர்த்துள்ளார். அம்மா இறப்புக்கு பிறகு தன் பிள்ளையாகவே வளர்த்துள்ளார் சத்தியவாணி. இந்தச் சூழலில் சோதனைகளும் அவரை துரத்துவதை விடவில்லை.

“பட்ட கால்லேயே படும் கெட்ட குடியே கெடுமுன்னு பழமொழி ஒன்னு சொல்லுவாங்களே அது எனக்குதாங்க பொருந்தும். சரி போனது போச்சு, ஆக வேண்டியத பாக்கலான்னு திரும்பவும் கல்யாணத்துக்கு நல்ல நாள் பாக்க ஆரம்பிச்சாங்க. அப்ப அண்ணெ லவ் பெயிலியருன்னு மண்ணன்னெய ஊத்தி கொளுத்திக்கிட்டான். தலையில இருந்து கால் வரைக்கும் சரி பாதியா வெந்துப் போச்சு. ஆறு மாசம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா நடந்து உயிரக் காப்பாத்தி கொண்டாந்தேன். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. ஆனா அங்கங்க நரம்பு சுருட்டி இழுத்துகினு பாக்க கோரமா இருப்பான். கையில வெரலெல்லாம் கோணிக்கிச்சு. எந்த வேலையும் செய்ய முடியாது.”

“வீட்டுல நான் ஒரு பொம்பள வயசான அப்பா, முடியாத அண்ணன், வெவரம் இல்லா தம்பி, வயசு கொழந்த எல்லாரையும் அம்போன்னு விட்டுட்டு கல்யாணம் செஞ்சுக்க மனசு வரல. அப்பா ஆத்தா இல்லாதப் புள்ளைய நெனச்சு பாருங்க, அம்மாவும் போச்சு நானும் கல்யாணம் பன்னிட்டு போனா எங்கன்னு போவும் அந்தக் கொழந்த. மாப்ள வீட்டுல ஒரு வருசம் போலக் காத்துருந்தாங்க வேற எடம் பாத்துக்கச் சொல்லிட்டேன்.”

“அம்மா சாவரதுக்கு முன்ன வரைக்கும் வீட்டு வேலை மட்டும் செய்வேன். எந்த வெளி வேலைக்கும் போனதில்ல. அம்மா செத்து தெவசம் முடிஞ்சுச்சு இனிமே வீட்டுல இருக்க கூடாது தொழில கத்துகனும்னு அப்பாக் கூட நானும் கொஞ்ச நேரம் கடைய பாத்துக்க ஆரம்பிச்சேன். சரியா மூனே வருசம்தான் 2001-ல அப்பா எறந்துட்டாரு. வேலையே செய்ய முடியலன்னாலும் ஆதரவா இருந்த அண்ணனும் அடுத்ததா போய் சேந்துட்டான். ஆறு வருசத்துல மூனு சாவு தாங்க முடியல. நானே ஒரு நட பொணமா மாறிட்டேன்.”

“கெட்டது நடந்த வீட்டுல ஒரு நல்லது நடந்தா கொஞ்சம் நெலம மாறுன்னு நெனச்சேன். சொந்தத்துல ஒரு பொண்ண பாத்து தம்பிக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன். சொந்தக்கார புள்ள நம்மள நல்லா பாத்துக்குமுன்னு நெனச்சேன். நெனப்பு பொய்யாப் போச்சு. எந்தம்பியும் ரொம்ப பாசக்கார பய. என்ன பாசம் இருந்தாலும் தாம்பொண்டாட்டி புள்ளன்னு வரும்போது நாம கொஞ்சம் தூரம்தான்.”

“ஒரு வருசத்துக்குள்ள குடும்பத்துல எண்ணிப் பாக்க முடியாத பிரச்சன. தனியா போய்ட்டான். கொஞ்சமா குடிச்சவன் முழு நேர குடிகாரனாயிட்டான். அரிசி, பருப்பு அத்தனையும் நான் கொடுக்கனும். மொளகா, மல்லியக் கூட அரச்சு கொடுக்கனும். தம்பி நல்லாருந்தா போதுமுன்னு அத்தனையும் செஞ்சேன். 2 வருசமாச்சு அவனும் என்ன விட்டுட்டு போய்டாங்க. அவன நெனச்சு நெனச்சு உருகொலஞ்சு போய்டேன். கழுத்தே தெரியாது அந்த அளவு குண்டா இருந்தேன். வேல செய்ய முடியல ஒடம்ப கொறையனுமுன்னு என்னான்னாவோ செஞ்சு பாத்தேன். எந்தம்பி செத்தான் தானா உடம்பு எறங்கிப்போச்சு.”

உறவினர் ஒருவர் இரட்டை பெண் குழந்தைகளை வைத்து பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டார்.  அந்தக் குழந்தையை அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார். தம்பி தனி குடித்தனம் சென்றதில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் குழந்தையை வைத்து சரிசெய்ய நினைத்தார்.  பெண் குழந்தை என்பதால் தான் அம்மாவாக பாவித்து ஆசையாக வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

“கல்யாணம் தான் ஆகல ஆனா ரெண்டு பிள்ளைங்களுக்கு தாயாயிட்டேன். மனசார சொல்றேன் இந்தக் கொடுப்பன யாருக்கு வரும் சொல்லுங்க. (பெருமையோடுஅழகாக சிரிக்கிறார்) எம்பொண்ணும் என்ன அம்மான்னுதான் கூப்பிடுவா. மாமா பையனும் என்ன அம்மான்னுதான் கூப்பிடுவான். இப்ப அவனும் ஒரு குடும்பமாயிட்டான். தம்பி எறந்ததால தம்பி பொண்டாட்டியும் எங்கூடத்தான் இருக்கா ஆனா நாங்க இருக்கும் போது இந்தப் பொண்ணு எதுக்கு வளக்குறேன்னு அப்பப்ப வம்பு பன்னுவா. யாருக்காகவும் எம்பொண்ண நான் விட்டுத் தர மாட்டேன்.”

எம் பொண்ண ஒரு வயசுலேருந்து வளத்துகினு இருக்கேன். நாலு கட தள்ளிதான் அவளப் பெத்த அப்பா கட போட்ருக்கான். அவனாண்ட ஒர்ரூவா எனக்கு வேணுன்னு போய் நிக்க மாட்டா. எல்லா நல்லது கெட்டதும் நானே பாத்துப்பேன். படிப்பு வரல எத்தனேயோ சொல்லிப் பாத்துட்டேன் படிக்க மாட்டேன்னுட்டா. இப்ப ஒரு கடைக்கி வேலைக்கிப் போறா சம்பளத்த அப்படியே எங்கிட்ட குடுத்ருவா. அவளுக்கு நல்லபடியா ஒரு கல்யாணத்த பன்னிப் பாக்கனும் அதுதான் என் கடைசி ஆசை.”

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏரோபிக் அண்ட் ஃபிட்னஸ் அசோசியேசன் ஆப் அமெரிக்கா என்ற அமைப்பு அங்கீகரித்த ‘பெல்லேடி’ என்ற நடனத்தை சென்னை ஜூம்பா நடன அமைப்பு தமிழகத்தில் பல இடங்களில் அறிமுகம் செய்திருக்கிறதாம். இந்த நடனம் ஆடினால் பெண்களின் மன அழுத்தம் குறைந்து இலகுவாக காணப்படுவார்களாம். சத்தியவாணி போன்ற உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு உள்ள மன அழுத்தத்தைக் குறைக்க எங்கு செல்வது?

– வினவு செய்தியாளர்கள்.

  1. அருமையான பதிவு வினவு. இது போன்று பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க