Saturday, June 25, 2022
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் பாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் !

பாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் !

-

ஃபாசில் அல் அராஜ்

சுரேல் ஆக்கிரமித்திருக்கும் மேற்குக் கரையில் உள்ள அந்தப் பழைய வீட்டுச் சாளரத்தின் திரைச்சீலைச் சற்றே விலகியிருந்தது. அங்கிருந்து தான் ரமல்லாவின்(Ramallah) தெருக்களை 34 வயதான பாசில் அல்-அராஜ்(Basil al-Araj) கவனித்துக் கொண்டிருப்பார். அந்தப் பழைய வீட்டின்  சாளரத்தின் விளிம்பில் தண்ணீர் புட்டிகள் வரிசையாக இருந்தன. அங்கு தான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் தலைமறைவாகச் சென்றார்.

மேசையில், பாசில் படித்த நூல்களுக்குச் சற்றுத் தள்ளி சிகரெட் துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. அவர் கடைசியாகச் சாப்பிட்ட பீன்ஸிற்கு அருகே ஒரு கோப்பையில் காபி இன்னும் அப்படியே இருக்கிறது. வீட்டின் தரையெங்கும் உலர்ந்த இரத்தக்கறை படிந்திருக்கிறது.

பல மாதங்களாக தேடப்பட்டு வந்த பாசில் படுகொலை செய்யப்பட்டதை இசுரேலிய இராணுவம் அறிவிப்பதற்கு முன்னதாக மார்ச் 6 ஆம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு துப்பாக்கி வெடியோசைகள் ரமல்லாவின் தெருவெங்கிலும் கேட்டன.

இசுரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டதற்காக பாசில் ஒட்டுமொத்த பாலஸ்தீனிய மக்களும் மிகவும் மதிக்கும் நபராக அறியப்பட்டார். இசுரேலுடன் இயல்புநிலைக்கு திரும்புவதற்காக பாலஸ்தீன [தேசிய] ஆணையத்தால்(Palestinian Authority) எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஆபத்துக்கள் வரும் என்று நம்பிய அவர் தொடர்ந்து அதற்கெதிராக இளைஞர்களை அணிதிரட்டி ரமல்லாவில் போராட்டங்களை நடத்தினார். தேசிய அளவிலான தேர்தலுக்கும் அறைகூவல் விடுத்தார். பாலஸ்தீன தேசிய ஆணையம் – ரமல்லாவைத் தலைமையிடமாகக் கொண்டு மேற்குக் கரையை(West Bank) ஆட்சி செய்யும் ஒரு தன்னாட்சி அமைப்பு(semi-governmental body).

பாசிலையும் அவரது நண்பர்கள் பலரையும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வடக்கு ரமல்லாவில் உள்ள ஒரு கிராமமான அருராவிற்கு(Arura) அருகில் பாலஸ்தீனிய பாதுகாப்புப் படை கைது செய்தது. உரிமம் பெறாத ஆயதங்களை அந்த இளைஞர்கள் வைத்திருந்ததாகவும் இசுரேலிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே இசுரேலுடைய ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்ததைப் பாலஸ்தீன ஆணையத்தின் தலைவரான முஹம்மது அப்பாஸ் பெருமைபடக் கூறினார்.

“தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக எங்களது பாதுகாப்புப் படையினர் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு சில நாட்கள் முன்பு தான் ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த மூன்று இளைஞர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இசுரேலுடனான எங்களது பாதுகாப்பு ஒப்பந்தம் நன்றாகச் செயல்படுகிறது” என்று ஜெர்மன் செய்தி நிறுவனமான டெர் ஸ்பீகலிடம்(Der Spiegel) அப்பாஸ் தெரிவித்தார்.

சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதையும் மோசமாக நடத்தப்பட்டதையும் எதிர்த்து அந்த இளைஞர்கள் ஒன்பது நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதன் பின்னணியில் உருவான மக்கள் இயக்கம் ஒன்று அவர்களை விடுதலை செய்யச் சொல்லி பாலஸ்தீன தேசிய ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பரில் பாசில் விடுதலை செய்யப்பட்டு தலைமறைவானார். பிறகு அவர் இசுரேலிய இராணுவத்தால் தொடர்ச்சியாகத் தேடப்படுபவர் ஆனார்.

பாசில் உள்ளிட்ட அவரது நண்பர்கள் ஆறு பேரும் சிறையில் மிகவும் கடினமான காலத்தைக் கழித்ததாகவும் அவர்களுடையக் கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் பாசிலின் வக்கீலான முஹான்னத் காரியா(Muhannad Karrajeh) சிறையில் அடைக்கப்பட்ட போது அல்ஜசீராவிடம் கூறினார்.

“சட்ட நடைமுறைகள் என்ற பெயரில் ஒரு ஆறு மாதங்கள் அந்த இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இது குறித்து புலனாய்வு செய்வதில் பாலஸ்தீனிய அரசாங்க வக்கீல்கள் ஆர்வம் காட்டவில்லை” என்று காரியா கூறினார்.

விடுதலை செய்யப்பட்டவுடன் ரமல்லாவில் ஒரு வாடகை வீட்டில் பாசில் குடி புகுந்தார். தன்னை ஒரு சுவீடன் குடிமகன் என்று பாசில் கூறியதாகவும் ஆங்கிலத்தில் பேசியதாகவும் அந்த வாடகை வீட்டின் உரிமையாளர் கூறினார். “அவர் அந்த வீட்டை விட்டு ஒரு போதும் அகன்றது இல்லை. நான் ஒவ்வொரு முறை வாடகை வாங்க வரும் போதும் தனக்கு பாசில் காபி கொடுப்பார்” என்று அவர் அல்ஜசீராவிடம் கூறினார்.

பெத்லேகம் நகருக்கு அருகிலிருக்கும் அல்- வாலாஜ்(al-Walaja) ஊரிலிருக்கும் பாசிலுடைய வீடு அவரைக் கைது செய்வதற்காக இசுரேலின் இராணுவத்தால் பல முறை சோதனை செய்யப்பட்டது.

பாசிலுடைய இடத்தைக் கண்டறிய இசுரேலிய இராணுவம் பாலஸ்தீன ஆணையத்துடன் சேர்ந்து செயல்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் பெரும்பாலான பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீன ஆணையத்தையும் அதற்கும் இசுரேலுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தங்களையும்(security coordination)  குற்றஞ்சாட்டுகின்றனர்.

இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய பாசில் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்த நடவடிக்கையானது இசுரேல் மற்றும் பாலஸ்தீன தேசிய ஆணையத்திற்கு இடையே ஒரு ஒப்பந்தம் இருந்துள்ளதைக் காட்டுவதாக பாசிலுடைய மாமா காலித் அல்-அராஜ்(Khalid al-Araj) கூறினார்.

மகன் கொல்லப்பட்ட செய்தியறிந்த பாசிலுடைய தாய் உணர்ச்சிவயப்பட்டு மனமுடைந்ததாக காலித் கூறினார். தனக்குள்ளே அழுதபடியே இருந்தாலும் அந்த தாய் உறுதியாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டார். “பாசிலுடைய குடும்பம் அமைதியாகவும் விடாப்பிடியான நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். அவர்கள் பாசிலையும் அவர் தேர்ந்தெடுத்தப் பாதையையும் நம்புகிறார்கள்.“ என்று காலித், அல்ஜசீராவிற்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.

பாசில் தலைமறைவாக இருந்த வீட்டில் ஆயுதங்களைக் கண்டுபிடித்ததாகக் குற்றஞ்சாட்டிய இசுரேலிய இராணுவம் அதைக் குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டது. இசுரேலிய இலக்குகளுக்கு எதிராக ஷெல் தாக்குதல்களுக்குத் திட்டமிடும் குழுவிற்கு பாசில் தலைவராக இருந்தார் என்று இசுரேல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அவர் படுகொலைச் செய்யப்பட்ட உடனே அங்கு பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களும் குடும்பத்தினரும் சென்றனர். பாசிலுடைய உருவப்படங்களைத் தங்கள் கைகளில் ஏந்தியபடி கண்ணீருடன் தெருவில் அணிவகுத்து சென்றனர். “பாதுகாப்பு ஒப்பந்தத்தால் கொல்லப்பட்டத் தியாகி (martyr of security coordination)” என்று பாசிலை அவர்கள் அழைத்தனர்.

பாசிலுடையப் படுகொலையைத் தொடர்ந்து பாலஸ்தீன தேசிய ஆணையம் மற்றும் இசுரேலுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கண்டித்து காஸாவைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு எதிர்ப்பியக்கமான ஹமாஸ் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. “ஆக்கிரமிப்பு எதிர்ப்பை நசுக்குவதனாலும் மக்களுடைய உறுதிப்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதனாலும் திட்டமிட்டப் படுகொலைகளும் இசுரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தமும் வெற்றி பெறாது” என்று அது கூறியிருக்கிறது.

இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிரான துரோகம் என்று பாலஸ்தீன விடுதலைக்கான இடதுசாரி மக்கள் முன்னணி(The leftist Popular Front for the Liberation of Palestine) கருத்துத் தெரிவித்துள்ளது. “ஒரு சக மனிதனாக பாசிலை நாங்கள் இழந்து விட்டோம். ஆனால் அவரது கருத்துக்களும் மதிப்பீடுகளும் என்றென்றும் எங்களிடையே இருக்கும்” என்று பாசிலுடைய நெருங்கிய நண்பரான ஹம்சா அக்ரபவி (Hamza Aqrabawi) அல்ஜசீராவிடம் கூறினார். “பாசிலுடைய மரணம் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்திற்கும் ஒரு பேரிழப்பாகும் ஆனால் ஆக்கிரமிப்பிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அவரது போராட்ட மரபு எங்களை என்றென்றும் வழிநடத்தும்” என்றும் அவர் கூறினார்.

ஃபாசிலுக்கு நீதி கேட்டு வாஷிங்கடனில் போராட்டம்!

செவி வழி வரலாறுகளைச் சேகரிப்பதில் பாசில் குறிப்பான ஆர்வம் கொண்டிருந்ததாக அக்ராபவி குறிப்பிட்டார். “தன்னுடைய மக்கள் மற்றும் தாய்நாட்டின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள அந்த வரலாறுகள் உதவும் என்று படித்த நபரான பாசில் நம்பினார் என்று எங்களுக்குத் தெரியும். ஒரு ஆய்வாளராக எங்களது வரலாற்றையும் போராட்டத்தையும் ஆழமாக ஆய்வு செய்தார் என்பதும் எங்களுக்கு தெரியும்” என்று அவர் கூறினார்.

“இளைஞர்களின் கலங்கரை விளக்கம் பாசில். பாலஸ்தீன வரலாற்றை சேகரிக்கும் அனைவருக்கும் ஒரு அடையாளத்தை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். அவர் தான் நம்பிய அந்த உறுதியான பாதைக்காக தன்னுடைய இரத்தத்தையே தியாகம் செய்துள்ளார்” என்று அவர் கூறினார்.

எகிப்தில் மருந்தியலைக் கற்றரிந்த பாசில் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்திருக்கிறார். பாலஸ்தீனியர்களின் உடைமைகள் பறிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றிய அரசியல் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். முறைகேடான இசுரேலிய குடியிருப்பான கிலோவிற்கு(Gilo) அருகில் அவரது சொந்த நகரத்தில் இசுரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களுக்குத் தலைமை வகித்ததற்காக அவர் அறியப்பட்டார். அங்கு இசுரேல் எழுப்பிய பிரிவினைச் சுவர் அவரது குடும்ப நிலத்தின் ஒரு பகுதியை விழுங்கியிருந்தது.

எருசலேத்திற்குள் நுழைவதற்கு மேற்குக் கரையில் வாழும் பாசில் உள்ளிட்ட 30 இலட்சம் பாலஸ்தீனியர்களும் இசுரேலிடம் நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும். ஆனால் அது மிகவும் கடினமானது. ஆனால் அவர்களது நண்பர்களைப் பொறுத்தவரையில் இசுரேலிய ஆக்கிரமிப்பை மீறுவதற்கு பாசில் முடிவு செய்துவிட்டார்.

“2010 ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்பு குடியிருப்புவாசிகளை ஏற்றிக்கொண்டுச் சென்ற பேருந்தில் பாசில் பயணம் செய்து எருசலேத்திற்குள் நுழைந்தார்” என்று பெயர் சொல்ல விரும்பாத பாசிலுடைய நண்பர் ஒருவர் அல்ஜசீராவிடம் கூறினார். “எருசலேம் தன்னுடைய நகரம். என்றும் அங்கு செல்வது தன்னுடைய உரிமை என்றும் பாசில் கூறினார்” என்கிறார் அவரது நண்பர்.

பாசில் தான் இறப்பதற்கு முன் எழுதியக் கடைசிக் கடிதத்தில் பின்வருமாறுக் குறிப்பிடுகிறார். “அரபு தேசீயம்(Arab nationalism), தாய்நாடு(homeland) மற்றும் விடுதலைக்கான(liberation) வாழ்த்துக்கள்….எனக்கான விடைகளை நான் கண்டறிந்து விட்டதால் விதிக்கப்பட என்னுடைய சாவை நோக்கி மனநிறைவுடன் இப்போது நடந்து செல்கிறேன். தாய்நாட்டு விடுதலைக்காக உயிர் துறக்கும் ஒரு தியாகியுடைய வாக்குமூலத்தை விடத் தெளிவான ஒன்று ஏதேனும் இருக்கிறதா என்ன?”.

நன்றி: அல்ஜசிரா
தமிழாக்கம்: சுந்தரம்

மூலக்கட்டுரை: ‘Basil al-Araj was a beacon for Palestinian youth’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க