Wednesday, January 20, 2021
முகப்பு வாழ்க்கை பெண் பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன் !

பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன் !

-

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 6

துளசியம்மா, செருப்பு தைக்கும் தொழிலாளி, சென்னை சைதாப்பேட்டை.

“மகளிர் தெனமா? காதலர் தெனமுன்னா கேள்விப்பட்டுக்குறேன். பசங்க சொல்லிகினு கெடக்கும். இது இன்னான்னு தெரியாதும்மெ?

வயசா? தெரியாத கேள்வியா பாத்து கேளும்மே நீ. நீயே போட்டுக்கோ.

எனக்கு வெவரம் தெரியச் சொல்லோ, பொழப்புத் தேடி அப்பா கோவளத்துலேந்து சென்னைக்கி இட்டாந்தாரு. ஆளான மொதலா நானும் கட்டட வேலைக்கி போயினுருந்தேன். கல்யாணம் ஆச்சு அவரும் சித்தாளுதான். 2 பையன், ஒரு பொண்ணு. படாத பாடுபட்டு பொண்ண கட்டிக் குடுத்தேன். மருமகங்காரன் குடிபோதையில எம்பொண்ண கொளுத்தி சாவடிச்சிப்புட்டான். கேசு போட்டு ஸ்டேசனுக்கெல்லாம் அலஞ்சேன். ஒங்களுக்குள்ளேயே தீத்துகினு போங்கனானுங்க. எம் மகளா நெனச்சு பேரப் பிள்ளைய இட்டுனு வந்து வளக்கேறேன் 11 ஆச்சு. முடியலன்னாலும் பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன்.

நடந்து போகச்சொல்லா கீழ விழுந்துட்டேன். காலு எலும்பு துருத்திகினு போச்சு. கட்டட வேலைக்கி போக மிடியல. அப்பா செஞ்ச செருப்பு தக்கிற தொழில 7 வருசமா செஞ்சுனுருக்கேன். புருசங்காரன் என்னேரமும் குடிபோதையில இருக்கான். பையனுக்கு வண்டிங்களுக்கு கீரீஸ் போடற வேல. அப்பனும் மகனும் மாத்தி மாத்தி போதையில கெடப்பானுங்க.

இப்பிடியான ஆம்ளைய வச்சுகினு நான் வீட்டாண்ட குந்திகினு இருக்க முடியுமா? வீட்டு வாடக ரெண்டாயிரம். எனக்கு ஒரு நாளைக்கி 200, 300 கெடைக்கும். ஒரு நா ஒன்னுமே இருக்காது. நேத்துப் பாரு ஒரு ரூவா கூட இல்ல கை காசு போட்டு நாஸ்டா வாங்கி துன்னேண். மாசத்துக்கொருக்க பாரீசு போயி செருப்பு தைக்க ஊசி, நூலு, லெதரு பட்ட, ஆணி, பாலிசு, கொடகம்பி எல்லாம் வாங்கினு வருவேன்.

இன்னா பேசினே இருந்துட்டு பொசுக்குன்னு கெலம்புறெ காபி வாங்கினு வாரேன், ஒரு வா குடிச்சுனு போமே!

பானுமதி, ஒப்பந்த துப்புறவு தொழிலாளி.

யதை கேட்டதும் தெரியாது என்று வெட்கத்துடன் சிரித்தார்.

“மகளிர் தினம்  என்னான்னு எனக்கு தெரியாது. விடியக்குள்ள வேலைக்கி வந்துருவேன் இதெல்லாம் தெரிஞ்சுக்க நேரமும் இருக்காது.

இது அரசாங்கம் கொடுத்த வேலை கெடையாது. காண்டிராக்ட் படிதான் வேலை பாக்குறொம். 5500 ரூபா சம்பளம். காலையில 6 மணிக்குள்ள வந்துறனும் மதியம் 2.30 மணிக்கு பொறவுதான் போகனும். வீட்டுக் குப்பைங்க தெரு குப்பைங்க எடுக்கனும். பிளீச்சிங் பவுடர் போடனும். தொடப்பம், மருந்து, கைப்பிடி கம்பு எல்லாம் காண்ராக்ட்ர் வாங்கிக் குடுத்துருவாங்க. எல்லாத்தையும் பாத்து பக்குவமா வச்சுக்கனும், அடிக்கடி தேஞ்சுருச்சுனு சொல்லக் கூடாது.

இந்தச் சம்பளம் மட்டும் குடும்பத்துக்கு போதாது. எம் பசங்க ரெண்டு பேரும் லாரி கிளீனர் வேலை செய்றானுங்க. சாப்பாட்டுக்கு கஸ்டம் இல்லாம வண்டி ஓடுது. மாசத்துல ஒரு நாளு லீவு உண்டு, நாமா போட்டா சம்பளத்துல பிடிச்சுப்பாங்க. தீபாவளி பொங்கலுக்கு போனசெல்லாம் கெடையாது, விருப்பப்பட்டா ஏதாச்சும் கொஞ்சம் காசு தருவாங்க. வருசத்துக்கு 2 சேல தருவாங்க அம்புட்டுதான்.”

அவரிடம் பேசிக்கொண்டிருந்த இடத்தில் அதிமுக – திமுக கட்சி போஸ்டர் இருந்தது. அதை காண்பித்து பேசினார்.

“இவங்கப் போல ஆளுங்க மீட்டிங் போட்டா குப்பை இல்லாமெ சுத்தமா கூட்டி பவுடர் போடனும். கூட்டம் முடிஞ்சதும் அதேப் போல சுத்தப்படுத்தி பவுடர் போடனும். வழக்கத்துக்கு அதிகமா அன்னைக்கி மட்டும் வேலை இருக்கும் மத்தபடி எப்பவும் போலதான் வண்டி ஓடிட்டு இருக்கும்.”

லட்சுமி, வயது 58, பொதுக் கழிப்பறை  பராமரிப்பாளர்.

சென்னையில் பல இடங்களில் இலவச பொதுக் கழிப்பிடம் அரசியல் கட்சி ஆதரவோடு ஏரியா தாதாக்களுக்கு ஏலத்துக்கு விடப்படுகிறது. அதில் வரும் வசூலில் அமுக்கியத் தொகைப் போக சொற்பமாக பராமரிப்பும் நடக்கிறது. அந்த வகையில்தான் லட்சுமியம்மா வேலை செய்கிறார்.

“இங்க மூனு வருசமா வேலை செய்றேன். காலையில 9 மணிக்கெல்லாம் வந்துருவேன் ராத்திரி 9 மணிக்கிதான் போவேன். நடுவுல 3 தபா கக்கூச அலசி விடுவேன். வசுலாகுற காசுல பாதிய காண்ட்ராக்டர்ட்ட குடுத்துறனும். கக்கூசு போறவங்க 5 ருவாயும் தருவாங்க 3 ருவாயும் தருவாங்க. ஒரு நாளைக்கி 100, 150 கெடைக்கும். பெருசா ஒன்னும் வேலை இல்லையே குந்திக்கிட்டு காச வாங்கி வச்சுக்கப்போறோம். வீட்டுல குத்திருந்தா ஆருப்பா ஒத்த ருவா தருவா.

தாம்பரத்துல பேரு கூட வரமாட்டேங்குது துணி தைக்கிற கம்பெனில 7 வருசமா வேலை பாத்தேன். அங்கேயும் எல்லா எடத்தையும் கூட்டி பெருக்கி கக்கூசு கழுவனும். வேலைக்கி போயிட்டு வரச் சொல்லோ ரயிலாண்ட தடுக்கி விழுந்து கை முறிஞ்சிப் போச்சு. ஆறு மாசம் வீட்டுலதான் இருந்தேன். வேற எங்கயும் அலைய முடியாது. வீட்டாண்டயே இருக்குன்னு இங்க வேலைக்கி வந்துட்டேன்.

புருசெ புள்ள இருந்தும் இல்லாத மாதிரிதாப்பா. வாச்சுமேனு வேலைக்கி போறான் அந்தாளு. புள்ள போஸ்டர் ஒட்டப் போவான். அப்பனும் மகனும் குடிச்சே அழியிரானுங்க. மருமக ரெண்டு பிள்ளைங்கள வச்சுட்டு வதபடுறா. நானும் வீட்டுல உக்காத்துட்டு சாப்புட முடியுமா சொல்லுப்பா?

வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க