Monday, March 8, 2021
முகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் கடலூரில் மூன்று துப்புரவுத் தொழிலாளிகளைக் கொன்ற அரசு !

கடலூரில் மூன்று துப்புரவுத் தொழிலாளிகளைக் கொன்ற அரசு !

-

டந்த 20.03.2017 அன்று கடலூர் துறைமுகம் செல்லும் வழியில் பாதாளச் சாக்கடை தூர்வாரச் சென்ற மூன்று தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக பாதாளச் சாக்கடை குழிக்குள்ளே மாண்டு போனார்கள். உண்மையைச் சொன்னால் கொலை செய்யப்பட்டார்கள். மனித கழிவை மனிதன் அள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் மசுருக்கு சமம் என்பதற்கு சாட்சி தான் அரசு அதிகார வர்க்கத்தின் இந்த படுகொலை.

கடந்த 2008 முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் கடலூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது.  இத்திட்டம் கொண்டு வரப்படும்போதே தமிழகம் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மண்சரிந்து உயிரோடு புதைந்து பிணமாகினர்.  அப்படி கடலூரிலும் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி 8 பேர் செத்துபோனார்கள்.  இத்திட்டம் மக்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒப்பந்ததாரர்களும் கொள்ளை அடிப்பதற்கே பயன்படுகின்றன. 20-ம் தேதி இறந்துபோன 3 பேரில் அப்பாகுட்டி என்கிற ஜெயகுமார்,  காண்ட்ராக்ட்காரர்கள் எஸ்,ஆர் என்கிற ராமச்சந்திரன் (ஓபிஎஸ் உறவினர்), ராவணன் (சசிகலா உறவினர்) ஆகியோரின் நிறுவனங்களில் பலவருடமாக வேலை செய்கிறார்கள்.

இறந்து போன தொழிலாளிகள் அப்பாகுட்டி (இடது), முருகன், வேலு

சம்பவம் நடந்த இடத்தில் நீண்டகாலமாக அடைப்பு இருந்து உள்ளது.  அதை எடுக்க வேண்டுமென்று நீண்டகாலமாக வலியுறுத்தி உள்ளனர் காண்ட்ராக்ட் காரர்கள். தன்னால் உள்ளே இறங்கி வேலை செய்ய முடியாது அது மிக ஆபத்தான இடம் நவீன கருவி கொண்டு தான் வேலை செய்ய வேண்டும் என்று கடலூர் கொடிக்கால் காலனியைச் சேர்ந்த அப்பாகுட்டியும், வேலுவும் மற்றும் சோரியான்குப்பம் முருகனும் கூறி உள்ளனர்.

ஆனால் நீங்கள் இதை செய்தால் தொடர்ந்து வேலை கொடுப்போம். அரசு வேலைக்கும் ஏற்பாடு செய்வோம்.  இல்லையென்றால் இத்தோடு போய்விடுங்கள் என்று மிரட்டி இருக்கிறார்கள் கான்ட்ராக்ட்காரர்கள்.  இந்த மிரட்டலைப் பற்றி தன் தாயிடமும், அக்காவிடமும் பலமுறை வேதனையோடு புலம்பி இருக்கிறார் அப்பாகுட்டி.  இறந்துபோன 3-பேரில் முருகனுக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.  அப்பாகுட்டிக்கும், வேலுவுக்கும் திருமணம் செய்யப் பெண் பார்க்கப்பட்டு வந்த நிலையில் மணமகனாய் மேடை ஏறவேண்டியவர்கள்.  இன்று செத்த பிணங்களாய் சுடுகாட்டில் கிடக்கின்றனர்.  20-ம் தேதி காலையில் தன் பேர பிள்ளைகளை பார்க்க வந்த முருகனின் மாமனார் மருமகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் 23-ம் தேதி மாராடைப்பால் இறந்துவிட்டார்.

என் சாமியே போனபிறகு இனி நான் வாழ்ந்து என்ன செய்ய போகிறேன் என்று புலம்புகிறார் முருகனின் மனைவி.  சம்பவத்தன்று 3 பேரும் மதிய உணவுக்கு சாப்பிட வந்தவர்களை சாப்பிட கூடவிடாமல், போன் போட்டு வேலைக்கு விரட்டி இருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.  இவர்களின் மிரட்டலால் முன் ஏற்பாடு ஏதுமற்ற நிலையில் பாதாள சாக்கடை குழிக்குள்ளே முதலில் இறங்கிய வேலு நீண்டநேரமாகியும் வரவில்லையே என்று உள்ளே இறங்கினார் முருகன். அவரும் சென்ற கொஞ்ச நேரத்தில் போனில் ஒப்பந்ததாரருடன் பேசிக் கொண்டிருந்த முருகன் இதோ வேலை நடக்கிறது முடித்து விட்டோம் என்று சொல்லி கொண்டே பாதாள சாக்கடையை எட்டி பார்க்க வேலை செய்த இருவரையும் காணவில்லையே என்று அதிர்ச்சி அடைந்து இவர்களை தேடி அப்பாகுட்டியும் உள்ளே இறங்கினார் அவரையும் காணவில்லை. கொஞ்சநேரத்தில் அங்கு வந்த அவரின் நண்பர்கள் அப்பாகுட்டியின் டூவீலரில் அவரின் செல்போன் ஒலிக்க எடுத்து பேசினார்கள்.

முருகன் அவர்களின் குடும்பம்

எதிர்முனையில் வடிகால் வாரிய அதிகாரிகள் என்ன முடிச்சிட்டியா என அதிகார தொனியில் கேட்க போனில் பேசிய அப்பாகுட்டியின் செல்லங்குப்பம் நண்பர்கள் சார் 3 பேரும் குழிக்குள் இறங்கி செத்துட்டாங்க சார் தயவு செய்து உடனே வாங்க என்று கதறியிருக்கின்றனர்.  அப்படியா என்று கேட்ட அதிகாரி நீண்டநேரமாகியும் வரவில்லை.  பிற அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் தொடர்பு கொண்டபோது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் அப்பாகுட்டியின் நண்பர்களே 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தந்தனர்.  இறந்துபோன அப்பாகுட்டி மற்றும் வேலுவின் உறவினர்கள் அங்கு கூடிவிட்டனர்.

ஒவ்வொருவராக தூக்கும்போது வேலுவும், முருகனும் முன்பே இறந்துவிட அப்பாகுட்டி மயக்கநிலையில் இருந்துள்ளார்.  அப்பாகுட்டியின் மண்டையிலும், கழுத்திலும் தீயணைப்பு துறை ஊக்குபோட்டு தூக்கும்போது தான் இறந்துவிட்டார் என்று அதிகாரிகளை குற்றம்சாட்டுகிறார் அப்பாகுட்டியின் அண்ணனும், அம்மாவும். மூன்று பேரின் உடல்களும் பிணவறையில் கிடக்க எந்த அதிகாரிகளும் வராத நிலையில் மருத்துவமனையின் எதிரில் பொதுமக்களும், உறவினர்களும் மக்கள் அதிகார தோழர்கள், விசிக, சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களும் சாலை மறியல் போராட்டம் செய்தனர் 2 மணி நேரம் போராட்டம் தொடர்ந்தது.  இறுதியாக பேச்சுவார்த்தைக்கு வந்தார் ஆர்.டி.ஓ வர்க்கிஸ். பேச்சுவார்த்தை அன்று இரவும், மறுநாள் காலையும் நீண்டநேரம் நடந்தது.  முடிவில் ஈமச்சடங்கிற்கு ஐம்பது ஆயிரமும், நிவாரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவு படி 10 லட்சமும் தருவதாக மாவட்ட நிர்வாகம் ஒப்பு கொண்டபின் அதோடு முடித்து கொள்ளலாம் என்று இருந்த நிலையில் அதிகாரிகளை வேலைநீக்கம் செய்து கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும், கான்ட்ராக்டர்களை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டுமென்று முழக்கமிட்டு போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அழுத்தம் கொடுத்தது.

அப்பாகுட்டியின் தாயார்

மக்களும் இதை விடாமல் அழுத்தம் கொடுத்து பேசினார்கள்.  இதன் இறுதியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்ட் செய்வதாகவும், கான்ட்ராக்டட்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாகவும் உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம்.  இந்நிலையில் அதிகாரவர்க்கத்தின் இந்த சதிச்செயலை கண்டித்து மக்கள் அதிகார அமைப்பும், பல்வேறு அமைப்புகள், கட்சிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை நடத்துவதுடன் தொடர்ச்சியாக வரும் 6-ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தை பூட்டி முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

வேற்று கிரகங்களுக்கு பாயும் செயற்கை கோள்களை தயாரித்து அனுப்புகிறார்கள் விஞ்ஞானிகள். கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை கண்டுபிடிக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். ஆனால் மனித மலக்கழிவுகளை அள்ளுவதற்கு பல நவீன கருவிகளை கண்டுபிடித்தாலும் பணம் சம்பாதிப்பதே எங்கள் நோக்கம் என்ற வெறியாலும், ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே இதில் ஈடுபடுத்துவது என்ற பார்ப்பனியக் கொடுங்கோன்மையாலும், இந்த படுகொலைகள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவருகிறது.

நாம் சட்டபூர்வமான போராட்டங்களை நம்பி கொண்டு இருந்தால் இந்த ஆளும் அருகதையிழந்த தோற்றுபோன இந்த அரசமைப்பு முறையில் எதையும் பெறமுடியாது.  பாதாள சாக்கடையை விட அழுகி நாறும் இந்த அரசு கட்டமைப்பை தூர்வாறி மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவது தான் நமது உடனடி கடமை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர், தொடர்புக்கு – 81108 15963

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க