privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைபெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் - அறுக்கும் செங்கலுக்கு 55 காசு !

பெண்ணின் பெயர் ஐந்து இலட்சம் – அறுக்கும் செங்கலுக்கு 55 காசு !

-

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 8

கோழி கூவும் முன்னே எழுந்து இரவு படுக்கச் செல்லும் வரை கிராமப்புறப் பெண்களுக்கு ஓய்வில்லை. அப்படி இடையறாது உழைத்தும் அவர்களது வாழ்க்கை என்பது ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. வேலை செய்தே வாழவேண்டும் என்பதில் இங்கே வயது வித்தியாசம் இல்லை. ஆதிக்க சாதியானாலும், ஒடுக்கப்படும் சாதியானலும் இப்பெண்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த கட்டுரையில் இடம்பெறும் பெண்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் வாழ்பவர்கள்.

95 வயது தொழிலாளி பெரியம்மாள்.

சாலப்பாளையத்தைச் சேர்ந்த பெரியம்மாளுக்கு 95 வயதாகிறது. தள்ளாத வயதிலும் தடியூன்றி (மரவள்ளிக்கிழங்கு குச்சி) உழைக்கிறார். அவரது முதுகு கூனினாலும் சுயமரியாதைக்கு கூனில்லை. தென்ன ஓலை உரித்து ஈக்குமாறு தயாரித்து விற்பனை செய்கிறார். ஒரு நாளைக்கு நான்கைந்து செய்வார். ஒரு ஈக்குமாறுக்கு 15 ரூபா கிடைத்தால் அதிகம்.

கல்லக் கொடி (நிலக்கடலை செடி) சுமந்து வரும் செல்லம்மாள்.

சிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சிறு விவசாயியான செல்லம்மாவிற்கு 60 வயது இருக்கும். அவருக்கு இரண்டரை ஏக்கர் நிலமிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு வந்ததாகக் கூறும் அவர் இந்த ஆண்டு மழையும் காவிரியும் பொய்த்து விட்டதால் ஒரு ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிட்டவர் இந்த நிலைமையே இன்னும் நீடித்தால் அதுவும் வந்து சேராது என்கிறார். அவரது கணவர் அரசு பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது எல்.ஐ.சி ஏஜென்டாக வேலை பார்க்கிறார். விவசாயம் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை அவர்.

செல்லம்மாவின் வயலில் வேலை செய்யும் பாப்பா கூறுவது போல அதிகாலை 3-லிருந்து 4 மணிக்குள் செல்லம்மாவின் நாள் ஆரம்பிக்கிறது. வீடு, வாசல் மற்றும் கட்டுத்தாரை(மாட்டுத் தொழுவம்) பெருக்குவது, வாசலுக்கு சாணம் தெளிப்பது, எருமை மாடுகளுக்கு களநீர் காட்டுவது, பால் கறப்பது, சமையல் வேலை என்று பம்பரமாய் சுழல்வதில் எட்டு மணியாகி விடுகிறது. அதன் பின்னர் கரும்பு சோவை உரிக்க சென்று நண்பகலுக்கு தான் வருகிறார். மதிய உணவை முடித்து விட்டு எருமை மாடுகள் மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு முடுக்கி விடுகிறார். மீண்டும் பால் கறத்தல், சமையல் என்று இரவு 8 மணிக்கு அவரது அன்றைய ஒரு பகலும் இரவும் ஒருவாறாக முடிகிறது.

இருப்பினும் இங்கு ஒரு  பெண்ணை விவசாயி என்று சமூகம் அழைப்பதில்லை. அது ஆண்களுக்குரியதாகவே இருக்கிறது.

செல்லம்மாவும் (டி ஷர்ட் அணிந்திருப்பவர்) பாப்பாவும்.

பாப்பா செல்லம்மாவின் ஊரைச்சேர்ந்த ஒரு விவசாயக் கூலி. அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 7 மணிக்கு கூலி வேலைக்குச் செல்கிறார். காலை 8 மணிக்கு தொடங்கும் வேலை மாலை 5 மணிக்கு முடிகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நூறு ரூபாயாக இருந்த கூலி தற்போது 200 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டம் வந்தபிறகுதான் பாப்பா போன்ற கூலி விவசாயிகளுக்கு கூலி உயர்ந்திருக்கிறது.

நாங்கள் பார்த்த அன்று செல்லம்மாவும் பாப்பாவும் காய்ந்த நிலக்கடலைக் கொடியை சுமந்து வந்து சாலையோரத்தில் போட்டுக் கொண்டிருந்தார்கள். செல்லம்மாவின் நிலத்தில் இருந்து அவர்களது ஊர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வெள்ளாளக் கவுண்டர் எனும் ஆதிக்கச்சாதியை சேர்ந்தவர் செல்லம்மாள். அருந்ததியர் எனும் தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்தவர் பாப்பா. இன்றும் செல்லம்மாவின் தெருக்கு சென்றாலும் வீட்டிற்குள் பாப்பா போக முடியாது. இருப்பினும் இருவருமே உழைத்து கருத்தவர்கள்.

புகைப்படம் எடுத்த பிறகு பாப்பா அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். இருப்பினும் “எங்க வீட்டில் நீங்கள் சாப்பிடுவீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டார். “அவர்கள் டவுனில் இருக்கிறார்கள் அதனால் வித்தியாசம் பார்க்கமாட்டார்கள்” என்று செல்லமாள் பதிலளிக்கிறார்.

மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் மோகனாம்மாள்.

மோகனாம்மாளுக்கு நான்கு வயதில் ஒரு மகன். காலையில் வீடு வாசல் பெருக்கிய பின்னர் ஆறு மணி அளவில் சமையல் வேலையில் ஈடுபடுகிறார். அவரது கணவரும் கட்டுத்தாரை பெருக்குவது, பால் கறப்பது என்று வேலைகளில் ஈடுபடுகிறார். பையனை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு கரும்புச் சோவை (தோகை) உரிக்கச் சென்று பிற்பகல் பன்னிரெண்டு மணிக்கு தான் மோகனாம்மாள் வீடு திரும்கிறார். குளித்த பின்னர் மதிய உணவை (மூன்று வேளையும் சோறு மற்றும் பருப்புக் குழம்பு) முடித்துவிட்டு எருமை மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலை 4 மணிக்கு வீட்டிற்குத் திரும்புகிறார். ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் வீட்டு வேலைகள்… மோகனாம்மாளின் உழைப்புக்கு மாத சம்பளம் கொடுப்பதாக இருந்தால் எவ்வளவு கொடுக்கலாம்?

விதைக்கரும்பு ஊன்றும் வேலையில் ரேவதி.

கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரேவதி. பறையர் சாதியைச் சேர்ந்த அவருக்கு 10-வது படிக்கும் ஒரு மகளும் 10-வது வகுப்பில் பாதியிலேயே நின்றுவிட்ட ஒரு மகனும் இருக்கிறார்கள். அவருடன் அவரது பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் கரும்பு வெட்டுவது, கரும்புக் கரணை (விதைக் கரும்பு)  ஊன்றுவது உள்ளிட்ட விவசாயம் சம்மந்தப்பட்ட வேலைகளைக் குத்தகையாக(Contract) எடுத்து செய்கிறார்கள். வெளியூர் வேலைக்கு என்றால் 10 பெண்களும் அதிகாலை 3 மணிக்கே கிளம்பி விடுகிறார்கள். வேலைக் குத்தகைக்கு வரும் வருமானத்தை பத்து பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அவரது மகள் வீட்டு வேலைகளில் உதவி செய்தாலும்  10 ஆம் வகுப்பு படிப்பதனால் வீட்டுவேலை செய்வதிலிருந்து ரேவதி தடுத்து விட்டார்.  அவரது கணவரும் கூலி வேலைக்குத்தான் செல்கிறார். உடல் வலிக்காக குடிக்கத் தொடங்கியவர் தொடர்ந்து அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறுகிறார் ரேவதி.  “பொம்பளைங்களும் தான் உடம்பு வலிக்க வேலைச் செய்யறாங்க. அவங்களும் குடிச்சா குடும்பம் என்னத்துக்கு ஆகும்? பொம்பளைங்க வேலையை எந்த ஆம்பளை மதிக்கிறாங்க? ஒரு நாள் பொம்பளைங்க வீட்டு வேலைக்கு லீவு போட்டா அன்னைக்கு தெரியும் அவுங்களுக்கு பொம்பளைங்களோட அருமை” என்கிறார்.

விளக்குமாறு தயாரிக்கும் வேலையில் இலட்சுமி.

கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்த இலட்சுமிக்கு 65 வயது. கணவர் ஓராண்டிற்கு முன்பு காலமாகி விட்டார். அவருக்கு திருமணமான 2 மகள்களும் ஒரு மகனும் இருகிறார்கள். காவிரித் தண்ணீர் வராததால் தன்னுடைய நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் மட்டுமே கரும்பு பயிரிட்டுள்ளார். 100 நாள் வேலைக்கும் செல்கிறார். கிடைக்கும் நேரத்தில் ஈக்குமாறும் உரிக்கிறார். “பொழைக்கணும்னா ஏதாச்சும் வேலை செஞ்சுகிட்டே இருக்கணும். சும்மா இருக்க முடியாதுல்ல”.

கடை விற்பனையோடு வீட்டு சமையலுக்கான காய்களையும் நறுக்குகிறார் வகிதா பீவி.

வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த வகிதா பீவிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். மதிய உணவிற்காக காய்கறியை நறுக்கிக்கொண்டே தனது சிறிய மளிகை கடையைக் கவனித்துக் கொண்டு பேசினார். கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வருவது மட்டும் தான் பாயுடைய(அவரது கணவர்) வேலை. மற்றபடி கடையைத் தானே கவனித்துக் கொள்வதாக கூறுகிறார். காலை 6 மணியில் இருந்து வீட்டு வேலைகளை பரபரப்புடன் முடித்து விட்டு கடைக்கு செல்கிறார். இரவு 9 மணிக்கெல்லாம் கடையை அடைத்து விட்டு 9 அல்லது பத்து மணிக்கு உறங்கச் செல்கிறார்.

ஒரு செங்கல் அறுத்தால் 55 காசு என்கிறார் ஐந்து இலட்சம்!

விழுப்புரத்தைச் சேர்ந்த கலகலப்பான பெண் “ஐந்து இலட்சம்”. அவரது பெயரே அதுதான். கொக்கராயன்பேட்டையில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலைச் செய்கிறார். தனக்கு முன் பிறந்த 5 குழந்தைகளும் இறந்து விட்டதால் அரிய பொக்கிஷமாக பிறந்த தனக்கு ஐந்து இலட்சம் என்ற பெயரை பெற்றோர்கள் வைத்ததாக பெயரின் பின்னணியை விளக்குகிறார். ஒரு செங்கல்லிற்கு 55 காசுகள் கிடைக்கும் என்று கூறுபவர் தனது கணவருடன் சேர்ந்து ஒரு நாளைக்கு 1500 செங்கற்கள் வரை அறுக்கிறார். அதன்படி இவர்களுக்கு ரூ 855 கிடைக்கும். சூளை முதலாளியிடம் பெற்ற முன்பணம் 70 ஆயிரம் ரூபாயில் மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கழித்து வருகிறார்கள். ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் செல்கிறார்.

அவரது மகன் விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு படிக்கிறார். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அரசு வேலை கிடைத்தும் தன்னுடைய மகளை அவரது கணவர் வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டதாக கூறுகிறார். தனது மருமகனை விட தனது மகள் நன்கு படித்திருந்ததாகவும் ஆனால் தன குடும்பத்திற்கு சமையல் செய்து கொண்டு வீட்டை கவனித்து கொண்டாலே போதுமானது என்று மகளின் கணவர் கூறி விட்டாராம். தனது மகள் தன்னைப் பார்க்க வருவதற்கு அவரது மருமகன் மறுப்பதை நினைத்து மனம் வெதும்புகிறார். விடைபெறும் போது “அடுத்த முறை நீங்க கண்டிப்பாக வரணும். நான் நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வெச்சு போடுறேன்” என்று அன்புடன் அழைக்கிறார்.

செங்கல் அறுக்கும் பச்சியம்மாள்.

பச்சியம்மாள் ஓமலூரைச் சேர்ந்தவர். வயது 60 ஆகிறது. தனது கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் குடும்பமாக கொக்கராயன்பேட்டை செங்கல் சூளையில் வேலைச் செய்கிறார். தினமும் காலை 4 மணிக்கு செங்கல் அறுக்கும் வேலையைத் தொடங்குகிறார். அறுக்கும் செங்கலின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூலி கிடைக்கும். ஆயினும் பொதுவாக பெண்கள் 500 செங்கல்கள் வரையும் ஆண்கள் 1000 வரைக்கும் அறுக்க முடியும் என்கிறார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன்கிழைமைகள் செங்கல் சூளைக்கு விடுமுறை” என்கிறார். ஆனால் அந்த இரு நாட்களிலும் கிடைக்கும் விவசாய கூலி வேலைகளுக்குச் செல்வதாக கூறுகிறார்.

கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பச்சியம்மாள்.

ச்சியம்மாளின் மருமகள் மல்லிகாவிற்கு ஐந்தாவது படிக்கும் ஒரு மகளும் 3 வது படிக்கும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சமையல் வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவரும் செங்கல் அறுக்கும் வேலையில் ஈடுபடுகிறார். அவரது குழந்தைகள் கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.

மணத்தக்காளி விற்கும் தங்கம்மாள்.

ணவனை இழந்த கூலி விவசாயியான தங்கம்மாளுக்கு 60 வயதாகிறது. தொட்டிக்காரப்பாளையத்தைச் சேர்ந்த அவருக்கு திருமணமான மூன்று மகன்கள் இருந்தாலும் தனியேதான் வாழ்கிறார். முதன்முதலாக கீரை விற்க (மிளகு தக்காளி கீரை அல்லது மணத்தக்காளிக் கீரை) கொக்கராயன்பேட்டைக்கு வந்தாராம்.  “பொண்ணுன்னு ஒன்னு இருந்தா ஒடம்பு சரியில்லேன்னா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க” என்று தனது இயலாமையை நினைத்து கண் கலங்குகிறார். இருந்தும் தம்முடைய உடலில் வலு இருக்கும் வரை தன்னால் தனித்து வாழ முடியும், பின்னாடி கடவுள் விட்ட வழிதான் என்கிறார்.

வேங்கிபாளையத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பெண்கள்.

பொதுவாக நீர்வளம் குறைந்த பகுதியாக இருந்தாலும் இந்த ஆண்டு வேங்கிபாளையத்தை வறட்சி கடுமையாக தாக்கியிருக்கிறது.  ஆடு மாடுகளை வைத்து சமாளிப்பது மிகவும் சிரமம் என்கிறார்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள். நிலங்கள் தரிசானதால் நிலமுள்ளவர்கள் நிலமற்றவர்கள் என்ற பேதமில்லாமல் அனைத்து பெண்களும் 100 நாள் வேலைக்கு செல்கிறார்கள்.

வினவு செய்தியாளர்கள்