Monday, March 1, 2021
முகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் மூடு டாஸ்மாக்கை ! போர்க்களமானது திருச்சி !

மூடு டாஸ்மாக்கை ! போர்க்களமானது திருச்சி !

-

பொன்மலை கணேசபுரம் :

ச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என அறிவிப்பு வந்தவுடன் அக்கடைகளை உடனடியாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிக வாடகை கொடுத்து வைக்க தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடைகளை முற்றுகையிட்டும்,உடைத்தும் வருகின்றனர். பொதுமக்களின் போராட்டங்களை இந்த அரசால் காவல்துறை கொண்டு ஒடுக்க முடியாமல் அம்பலப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருச்சி பொன்மலை கணேசபுரம் பிரதான சாலையில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றி மக்கள் குடியிருப்பு பகுதியான மிலிட்டரி காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் அதிகாரிகள் அக்கடையை திறப்பதற்கு அப்பகுதியில் ஒரு கடையை பிடித்து ஒருவாரத்திற்கு முன்பே கிரில் ஒர்க்ஸ் என பெயர் பலகை வைத்திருந்ததால் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் திடீரென அந்த பெயர் பலகையை நீக்கிவிட்டு டாஸ்மாக் கடை என பெயர் பலகை வைத்து விற்பனையை தொடங்கினார்கள்.

பொன்மலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் சாராயக் கடை

இதனால் அப்பகுதியில் வெளியிலிருந்து அதிகமான குடிகாரர்கள் வரத்தொடங்கினர்.அவர்கள் குடி போதையில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்வது,மிரட்டுவது,வீடுகளுக்குள் புகுந்து படுத்து கொள்வது என அவர்களது தொல்லை சில நாட்களிலேயே மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் அனைவரும் அக்கடையை முற்றுகையிட்டு போராடினர். உடனே காவல்துறை அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் மனு கொடுங்கள் அதை விடுத்து முற்றுகை செய்யக்கூடாது என கூறி அம்மக்களை கலைத்தனர். அன்றைக்கே (07.04.2017)  ஆட்சியரிடம் மனு கொடுத்து காத்திருந்தனர்.

08.04.2017 அன்று அதே கடையை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவுசெய்து அதிக அளவில் காவல் துறையினரை குவித்தது. காவல் துறையினர் அருகில் இருந்த கடைகளை மூடச்சொன்னார்கள் காவல்துறையினர். சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை துரத்திவிட்டனர். இதனால் அப்பகுதியினர்,  மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டு உடனடியாக அப்பகுதிக்கு வரச்சொன்னார்கள்.சி.பி.எம்.,வி.சி.க.,ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகளை மக்கள் அதிகாரம் சார்பில்  ஒருங்கிணைத்து கடை திறப்பதற்கு முன்பே அப்பகுதி மக்களிடையே பறையடித்து பிரச்சாரம்  செய்து அனைவரையும் கடைக்கு முன் ஒன்று திரட்டினோம்.

பிறகு CPM கட்சிக்காரர் ஒருவர் வாயில் துணிகட்டி,மாலை அணிந்து கொண்டு பிணமாக நடித்தார். அவரை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்து தங்களது எதிர்பை அரசுக்கு தெரிவித்தனர். நாம் ஊருக்கூரு சாராயம்,மூடு டாஸ்மாக்கை மூடு பாடல்களை மக்கள் முன் பாடினோம் மக்கள் மிகுந்த வரவேற்பு தந்தனர். மேலும் முழக்கங்களிட்டுக்கொண்டே மக்களுடன் அதிகாரிகள் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டோம். கடை திறக்க வந்த டாஸ்மாக் அதிகாரிகள்,ஊழியர்களை மக்கள்  திட்டி அனுப்பினார்கள். பிறகு காவல் ஆய்வாளர் நம்மிடையே பேசியும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியரின் உதவி ஆணையர் வந்து மக்களிடையே பேசினார். அவரிடம் டாஸ்மாக் கடையால் என்ன என்ன பாதிப்புகளை நாங்கள் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என மக்கள் விவரித்தனர்.

இதைக்கேட்ட அதிகாரி அனைவரும் கலைந்து செல்லுங்கள் இங்கு இனி டாஸ்மாக் கடை வராது நான் பார்த்து கொள்கிறேன் என உத்திரவாதம் கொடுத்ததின் அடிப்படையில் நாம் மற்ற கட்சிகளிடம் விவாதித்ததில் அவர்கள் இப்போது கலைந்து செல்லலாம் கடையை திறக்க அரசு முற்பட்டால் அதை மக்களை கொண்டு அடித்து நொறுக்கிவிடலாம் என முடிவெடுக்கப்பட்டது. தோழர்களுக்கு எங்கள் பகுதி சார்பாக நன்றி என மக்கள் மனதார கூறினர். அப்பகுதி மக்கள் தற்போதுவரை கடைக்கு முன் காவல் காத்து வருகின்றனர். விரைவில் கடை அப்புறப்படுத்தப்படும் என்ற நம்மீதான நம்பிக்கையில்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

உறையூர் பேருந்து நிறுத்தம் :

திருச்சி உறையூர் சாலையில் மக்கள் அதிகமாக புழங்கும் பகுதி இவ்விடத்தில் பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே  டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இக்கடையில் காலை 6:00 மணி முதலே மது பாட்டில்கள் கள்ளத்தனமாக பார்களில் வைத்து விற்க்கப்படுவதால் அப்பகுதியில் குடிகாரர்களால் மக்களுக்கு தொடர்ந்து மிகுந்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு கடைக்கு முன் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தவர்களை மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் பிடித்து மது பாட்டில்களை உடைத்து அரசையும்,காவல் துறையினரையும்  மக்களிடையே அம்பலப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சி உறையூர் பகுதி டாஸ்மாக் கடையில் திருட்டுத் தனமாக நடத்தப்பட்ட சாராய விற்பனையை எதிர்த்து கடந்த 01-08-2016 அன்று நடந்த போராட்டம் (கோப்புப் படம்)

இந்நிலையில் அதே கடையில் காவல்துறையின் முழு பாதுகாப்போடு அ.தி.மு.க உள்ளூர் கட்சிக்காரர்கள் டாஸ்மாக் பாரில் காண்ட்டிராக்ட் எடுத்து தைரியமாக 24 மணிநேரமும் மது பாட்டில்களை விற்று வந்தனர்.90 ரூபாய்க்கு விற்க வேண்டிய பாட்டிலை 130 ரூபாய்க்கு கள்ளத்தனமாக பாரில் வைத்து விற்று வந்தனர். இதனை தடுக்க மக்கள் அதிகார தோழர்கள் 13.04.2017  அன்று காலை 11:00 மணியளவில் டாஸ்மாக் பாரின் உள்ளே நுழைந்து அங்கு குடித்து கொண்டிருந்த குடிகாரர்களை விரட்டி விட்டு அங்கு குப்பை தொட்டிக்குள் வைத்து விற்றுக்கொண்டிருந்த மது பாட்டில்களை கைப்பற்றி உடைத்தெரிந்தனர்.

இந்நிகழ்வினை நியூஸ் 7 தொலைகாட்சி நேரடியாக ஒளிபரப்பியது. பிறகு வெளியே வந்து பாட்டில்களை உடைத்து பார் நடத்திவரும் அதிமுக கைக்கூலிகளையும் அவர்களுக்கு துணை நிற்கும் காவல்துறையினரையும் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினோம். இந்நிகழ்வினை மக்கள் அதிகமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். போராட்டத்திற்க்கு வாழ்த்து கூறியதுடன்  தங்களது கருத்துக்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். இது போன்ற போராட்டங்களில் அதிகப்படியான மக்கள் கலந்து கொள்ளும் போது டாஸ்மாக் கடைகள் முற்றிலும் இல்லாமல் செய்ய முடியும் என மக்களிடம் அறைகூவல் விடுத்தோம்.

குழுமணி சாலை அரவானூர் பகுதி :

திருச்சி சத்திரம் பேருந்து அண்ணாசிலை அருகே எடுக்கப்பட்ட டாஸ்மாக் கடையை  குழுமணி சாலையில் உள்ள அரவானூர் கிராமபகுதிக்கு செல்லும் வழியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து இன்று 14.04.2017 காலை 12:00 மணிக்கு கடையை திறக்க முற்ப்பட்டபோது. அரவானூர் கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகார தோழர்கள் இணைந்து கடையின் முன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதில் பெண்கள் போர்க்குணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவானூர் கிராமபகுதிக்கு செல்லும் வழியில் அமையவுள்ள டாஸ்மாக் கடை

கடையில் உள்ளே வைத்திருக்கும் மது பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். டாஸ்மாக் கடையை இப்பகுதியில் வைக்கக்கூடாது என அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடமும் மக்கள் முறையிட்டனர். காவல்துறையினர் காலம் தாழ்த்தி மக்களை கலைத்து டாஸ்மாக் அதிகாரிகளை வைத்து இன்றே கடையை திறந்து விடலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் நாம் முழக்கமிட்டவாரே கடையை நோக்கி முற்றுகையிட ஆரம்பித்த பின்னர் தான் காவல்துறையினர் மக்களிடம் ½ மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் மக்கள் இரவு 10:00 மணிக்கு மேல் பேருந்துகள் அப்பகுதியில் இயங்காததால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் நடந்தே வீட்டிற்க்கு செல்கிறார்கள் இந்த அரவானூர் செல்லும் சாலை பகுதியில் இயல்பாகவே வெளியில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி  குடித்து விட்டு கொலை,கொள்ளைகள் நடந்துள்ளது இன்று வரை எவரையும் காவல்துறையினர் பிடிக்கவில்லை,.

இந்நிலையில் இங்கே டாஸ்மாக் கடையை திறந்தால் என்ன வெல்லாம் நடக்கும் என திருவரங்கம் AC ஸ்ரீதரிடம் மக்கள் முறையிட டாஸ்மாக் அதிகாரிகளை உடனே அனுப்பிவிடுவதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி திங்கள் கிழமை காலை இக்கடையில் உள்ள மது பாட்டில்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி விடுகிறேன். இனி இங்கு டாஸ்மாக் கடை இயங்காது நடக்காவிடில் நீங்கள் போராட்டத்தை தொடருங்கள் என மக்களிடையே உத்திரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் கடையை திறந்தால் நாங்களே அடித்து நொருக்குவோம் என மக்கள் காவல்துறையினரிடமும், டாஸ்மாக் அதிகாரிகளிடையே எச்சரித்து விட்டு கலைந்து சென்றனர். திங்கள்கிழமை நம்மையும் கட்டாயம் வருமாறு கோரியுள்ளனர்.

இத்தொடர் போராட்டங்களில் மக்கள் அதிகாரம் முன் நின்று செயல்படுவதால் மக்களை கலைக்க முடியாமலும், டாஸ்மாக் கடைகளை பகுதிக்குள் வைக்க முடியாமலும் திருச்சி காவல்துறையினர் திணறிவருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.


கோவை – சோமனூர் பகுதி :

கோவை-சோமனூரை ஒட்டியுள்ள திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் செவ்வாயன்று (11-04-2017) புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க முயற்சித்ததை எதிர்த்து ஏற்கனவே பல வருடங்களாக இதே பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளாலும் சொந்தவாழ்வில் பல துயரங்களை அனுபவித்த பெண்கள் ஒன்று திரண்டு நின்றனர். அவ்வழியே வந்த அவிநாசி தொகுதி MLA வை நிறுத்தி டாஸ்மாக் கடை வருவதை தடுத்து நிறுத்துமாறும் அதற்கான உத்திரவாதம் தருமாறும் உரிமையோடு பேசிய மக்களை சமாளித்து வெளியேறி சென்ற, சிறிது நேரத்தில் திருப்பூர் ADSP பாண்டியராஜன் அங்கு விரைந்து வந்து அமைதியாக போராடிக்கொண்டிருந்த பெண்களை ஏற்கனவே நின்று கொண்டிருந்த போலீசை ஏவி வெறி கொண்டவனை போல் தானே பெண்களை நேரடியாக தாக்கி விரட்டியுள்ளார்.

அதோடல்லாமல் காக்கி ரௌடிகள், அங்கிருந்த ஆண்களையும் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர் இதில் சாமளாபுரம் பகுதியே கலவரமானது மறுநாள் (12-04-2017) புதன் அதிகாலை 3 மணிக்கு வீடுவீடாக சென்று ஆண்கள் பெண்கள் என 22 பேரை பிடித்து பல்லடம் ரைஸ் மில்லில் அடைத்துள்ளனர். அதில் ஆண்கள் 7 பேரை கோவை மத்திய சிறைசாலையில் பொய் வழக்கு தொடுத்து அடைத்துள்ளனர். எஞ்சிய 20 பேரையும் சட்ட விரோதமாக ரைஸ் மில்லிலேயே அடைத்து வைத்ததோடு குடும்பத்தினர் உட்பட யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

இதை கண்டித்து சாமளாபுரம் முழுவதும் கடையடைப்பு செய்து போராடும் நிலையில் யாரையும் வெளியில் ஒன்று சேர விடாமல் அந்த பகுதி முழுவதும் போலிசு குவிக்கப்பட்டது. ஊரின் மையத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டில் ஒன்று கூடிய மக்களை அங்கிருந்து வெளியே வரவிடாமல் அந்த வீட்டு வாசலின் முன்பு போலிசு வேன்-களை நிறுத்தி அச்சுறுத்தினர். இந்த சூழலில் கோவையை சேர்ந்த திரைப்பட நடிகர் ரஞ்சித் அவ்வீட்டிற்கு வந்து பெண்களுக்கு நடுவே அமர்ந்து சினிமா பாணியிலான பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார். இதனால் அங்கு வந்த பா.ம.க., தி.மு.க போன்ற அரசியல் கட்சி பிரமுகர்களை கூட மக்கள் கண்டுகொள்ளவில்லை. மக்கள் அதிகார தோழர்கள் காலையிலேயே அந்த பகுதிக்கு சென்று விவரங்களை கேட்டறிந்து மூடு டாஸ்மாக்கை எனும் நமது நீண்ட நெடிய போராட்டம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி எடுத்து கூறும் பொழுது அத்தகைய செய்தி மற்றும் நிகழ்வுகளை அறிந்து இருந்த சிலர்  நடந்த சம்பவங்களை கூடுதலாக கூறினர்.

மூடு டாஸ்மாக்கை”போதையும் போலிசும் ஒழிக” மற்றும் “போலிசு ராஜ்ஜியம்” போன்ற துண்டறிக்கைகள் நூற்றுகணக்கில் கூடி இருந்தோரிடம் விநியோகிக்கப்பட்டது. டாஸ்மாக்கு எதிரான ம.க.இ.க கோவன் பாடல் சி.டி.-களையும் காண்பித்து பேசி அப்பகுதயில் “குடிவெறி கொண்டு அரசே ஆடுகிறது”  தற்போதைய சுவரொட்டிகளையும் ஒட்டினோம்.

வியாழன் 13-04-2017 அன்று மாலை 5.30 மணிக்கு கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக தடையை மீறி சாமளாபுரம் மக்கள் மீதான போலிசு தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்திற்கு முன்னதாகவே போலிசுக்கு தகவல் கொடுத்து அனுமதி கேட்கப்பட்டது அவர்கள் வழக்கம் போல தெற்கு வட்டசியர் அலுவலக இடத்தில் நடத்திக்கொள்ள கூறினர்.

நாம் அதை மறுத்து மக்கள் கூடும் இடமாகிய கோவை நகரின் மையமான காந்திபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம் அவர்கள் மறுத்ததால், மறுப்பை மீறி மக்கள் அதிகார சீருடை அணிந்து ப்ளெக்ஸ் பதாகைகள் மற்றும் கொடிகள் பிடித்து மிதமாக விழுந்த மழையிலும், முழக்கங்கள் உயர போலிசு தடுப்புகளையும் மீறி எண்ணற்ற மக்கள் பார்வையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக நகர பேருந்து நிலையர்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கண்டன ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய மக்களை தாக்கிய ADSP பாண்டியராஜனை டிஸ்மிஸ் செய்! கைது செய்!! மக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறு!!! என்ற முழக்கங்கள் முழங்கப்பட்டன்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத போலீசு தோழர்களை கைது செய்தது. டாஸ்மாக்குக்கு எதிராகவும் ADSP க்கு எதிராகவும் கொடுக்கப்பட்ட முழக்கங்கள் மக்களை திரும்பி பார்க்க செய்தது. குழந்தைகள் பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே மண்டபத்தில் தோழர்கள் சுற்றி அமர்ந்து ஆர்பாட்டத்தின் அவசியம் குறித்து கூடுதலான விவரங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். போலிசோ ஆதாரங்களுக்காக ப்ளெக்சையும் முழக்க அட்டையையும் வாங்கி சுமந்து சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை

  1. Ellam saridhan, aaanal orey orey oru kelvi? tasmaac i moodachcholvadharku inaiyaha nangal yaarum kudikkamattom endrum kudippavarhalai veettil serkamattam endrum avarhaludan podhu makkalahiya nangal endhavidha thodarbum vaiththukkollamattowm endru sabadhameduthal idhaivida nandraha irukkum allava.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க