Sunday, February 28, 2021
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் இந்திய இராணுவத்தின் ஊழலைப் பார்க்காதே கேட்காதே பேசாதே !

இந்திய இராணுவத்தின் ஊழலைப் பார்க்காதே கேட்காதே பேசாதே !

-

மோடி அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் பொதுமக்கள் வெறுப்பும் கோபமுமாகக் குமுறிக் கொண்டிருந்த வேளையில், “இராணுவ வீரர்கள் நாட்டு எல்லையில் நேரம் காலம் பார்க்காமல் நின்று கொண்டிருக்கும்பொழுது, உங்களால் ஒரு சில மணிநேரம் வங்கி வாசலில் காத்திருக்க முடியாதா?” என இந்து மதவெறியர்களும் தேசபக்த சிரோமணிகளும் எதிர்க்கேள்வி கேட்டு, பொதுமக்களின் வாயை அடைக்க முயன்றார்கள்.

தன்னைக் கொலை செய்ய நடந்த முயற்சியில், குண்டு துளைத்துச் சென்ற காயத் தழும்போடு சத்ருகன் சிங் சவுகான்.
தன்னைக் கொலை செய்ய நடந்த முயற்சியில், குண்டு துளைத்துச் சென்ற காயத் தழும்போடு சத்ருகன் சிங் சவுகான்.

இப்பொழுதெல்லாம் யாராவது ஒரு இராணுவ வீரன், எல்லைப் பகுதியிலோ, காஷ்மீரிலோ செத்துப் போனால், அவனது மரணமும் இறுதிச் சடங்கும் ஊரே கூடிவந்து ஒப்பாரி வைத்துவிட்டுச் செல்லும்படி நடத்தப்படுகிறது.

இப்படியெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய அளவிற்கு, இந்திய இராணுவம் தகுதியும் தரமும் மிக்கதா?

தேஜ் பகதூர் யாதவ் என்றொரு இராணுவ வீரர், தங்களுக்குக் கொடுக்கப்படும் ரொட்டிக்கு சப்ஜி தரப்படுவதில்லை என்றும், பல நேரங்களில் இராணுவ வீரர்கள் அரைப் பட்டினியாகக் கிடக்குமாறு விடப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டு, இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் நடைபெறும் ஊழலை அம்பலப்படுத்தி, வாட்ஸ் அப் வீடியோவொன்றை வெளியிட்டார்.

அரசு நடத்தும் மாணவர் விடுதிகளில்தான் இப்படியெல்லாம் கேவலமாக ஊழல் நடைபெறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

ரொட்டிக்கு குருமாகூடத் தராமல் கமிசன் பார்க்கும் இந்திய இராணுவ அதிகாரிகள், வேறெந்த பஞ்சமா பாதகம் செய்வதற்கு அஞ்சப் போகிறார்கள்?

உ.பி. மாநிலத்திலுள்ள மெயின்புரி என்ற ஊரைச் சேர்ந்தவரும், இந்திய இராணுவத்தில் இரண்டாவது லெஃப்டினண்ட் அதிகாரியாக காஷ்மீரில் பணியாற்றியவருமான சத்ருகன் சிங் சவுகானின் கதையைக் கேட்டால், இந்திய இராணுவத்தின் கேவலமான, சதித்தனங்களும் கொடூரமும் நிறைந்த பக்கம் அம்பலமாகிறது.

சத்ருகன் சிங் சவுகான், 1990 ஏப்ரலில் ஆறாவது ராஜ்புட் படைப் பிரிவில் இரண்டாவது லெஃப்டினண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, காஷ்மீரில் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டார். காஷ்மீரில் இந்திய அரசிற்கு எதிரான போராட்டங்களும் ஆயுதத் தாக்குதல்களும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. பணியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே, சிறீநகரிலுள்ள பதாமாலூ பகுதியில் வீடுவீடாகப் புகுந்து தீவிரவாதிகளைப் பிடிக்கும் தேடுதல் வேட்டைக்குச் சென்றார், சவுகான். அத்தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை என்றாலும், 27.5 கிலோகிராம் எடை கொண்ட 147 தங்கக் கட்டிகள் (தற்போதைய மதிப்பில் 9 கோடி ரூபாய் பெறுமானமுள்ளவை) அப்படைப்பிரிவால் கைப்பற்றப்பட்டது.

இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அருண்குமார்.
இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அருண்குமார்.

கைப்பற்றிய பொருட்களை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், நடந்ததோ வேறு. அப்படைப்பிரிவின் தலைமை அதிகாரியான பன்வார் அந்தத் தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்றார். மறுநாள், அவரிடம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதை சவுகான் நினைவுபடுத்தியபொழுது, “எந்தத் தங்கக் கட்டி?” எனக் கேட்டார், பன்வார். தங்கக் கட்டிகளைத் தனது உயர் அதிகாரியே அமுக்கிக் கொண்டுவிட்டார் என்ற உண்மை அப்பொழுது சவுகானுக்குப் புரிந்தது.

பன்வார் தங்கக் கட்டிகளைத் திருடிக்கொண்ட உண்மையை மற்றொரு உயர் அதிகாரியான கர்னல் சவுகானிடம் முறையிடுவதற்காக அவர் வீட்டிற்குச் சென்று திரும்பினார் சத்ருகன் சிங் சவுகான். இதனைத் தெரிந்துகொண்ட பன்வார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியும், மற்ற அதிகாரிகளின் துணையோடும் சத்ருகன் சிங் சவுகானை ஒழித்துக் கட்டும் முயற்சியில் இறங்கினார்.

அன்றிரவே சவுகானைக் கொல்லும் சதித் திட்டம் தீட்டப்பட்டாலும், அத்திட்டம் சவுகானின் முன்னெச்சரிக்கையின் காரணமாக நிறைவேறாமல் போனது. அதனையடுத்து, முட்டிபோட்டு மைதானத்தைச் சுற்றிவரும் தண்டனை சவுகானுக்குத் தரப்பட்டது. இதன் பிறகு, சொந்த ஊருக்குச் சென்று வருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. சொந்த ஊருக்கு வந்த சவுகான், மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பன்வார், சத்ருகன் சிங் சவுகான் முறையான அனுமதி பெறாமல் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக குற்றப் பத்திரிகையைத் தயாரித்தார். போரில் இருந்து விலகி ஓடுவதற்கு இணையான இந்தக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனைகூட அளிக்க முடியுமாம். இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியதோடு, சத்ருகன் சிங் சவுகான் மனப் பிறழ்வு நோய்க்கு ஆளாகிவிட்டதாகவும் கூறி, அவருக்குச் சிகிச்சை அளிக்க உதம்பூருக்குக் கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரொட்டிக்குக் குருமாகூடத் தரப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்திய "ஒழுங்கீனத்திற்காக"த் தண்டிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ்.
ரொட்டிக்குக் குருமாகூடத் தரப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்திய “ஒழுங்கீனத்திற்காக”த் தண்டிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ்.

உதம்பூரில் வைத்து சவுகானுக்குச் சிகிச்சையளிப்பது என்ற பெயரில் இரண்டு முறை அவரைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டது. முதல் முயற்சியில் மற்றொரு அதிகாரியால் சவுகான் காப்பாற்றப்பட்டார். இரண்டாவது முயற்சியில் அவர் கடுமையான குண்டுக் காயங்களோடு சாவின் விளிம்பிற்குச் சென்று திரும்பினார்.

இன்னொருபுறம், இராணுவ விசாரணை என்ற பெயரில் உண்மையைக் குழிதோண்டி புதைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சவுகான் மீது நடத்தப்பட்ட கொலைத் தாக்குதல், அவர் தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சியாகச் சித்தரிக்கப்பட்டது. சவுகான் தங்கத்தைத் திருடியதாக யார் மீதெல்லாம் குற்றஞ்சுமத்தினாரோ, அவர்களெல்லாம் சவுகானுக்கு எதிரான சாட்சியங்களாக நிறுத்தப்பட்டனர். இறுதியாக, உண்மைக்காகப் போராடத் துணிந்த சவுகான் இராணுவத்திலிருந்து விலக்கப்பட்டார். விசாரணையின்போது அவர் சிறையில் இருந்த எட்டுமாத காலம் தண்டனைக் காலமாக அறிவிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து, 1993-இல் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார், சவுகான். அந்நீதிமன்றம், 19 ஆண்டுகள் கழித்து அவ்வழக்கை, லக்னோவிலுள்ள இராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றியது. லக்னோ இராணுவ நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சவுகான் நிரபராதியென்றும் தங்கக் கட்டிகள் திருடப்பட்டது குறித்தும், சவுகான் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி குறித்தும் விசாரிக்க வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து இராணுவ அமைச்சகம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தான் நிரபராதி என நிரூபிப்பதற்காகச் சலிப்படையாமல் இருபத்தாறு ஆண்டு காலமாகப் போராடிய சவுகானை, மேலும் அலைக்கழிக்கும் குரூரம்தான் இராணுவ அமைச்சகத்தின் முடிவு.

உண்மையைச் சொல்ல முயன்ற தனது சக ஊழியனைக் கொலை செய்யவும், பைத்தியக்கார பட்டம் கட்டவும் தயங்காத இந்திய இராணுவம், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ள காஷ்மீரிலும், மணிப்பூரிலும், தன்னை எதிர்த்து நிற்கும் மக்களை என்னவெல்லாம் செய்யும் ? இந்தக் காலனிய காலச் சட்டம் பொதுமக்களைக் கொல்லவும், அவர்களது உடைமைகளைக் கொள்ளையடிக்கவும் இராணுவத்திற்குச் சட்டபூர்வ உரிமையை அல்லவா வழங்கியிருக்கிறது.

தங்கக் கட்டிகளைத் திருடிய பன்வார், எந்தத் தங்கக் கட்டி எனக் கேட்ட அந்த நிமிடத்தில், தனது இலட்சிய வேட்கையெல்லாம் செத்துப் போனதாக நினைவு கூர்கிறார், சவுகான்.

இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதால் பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அருண்குமார், “இலட்சிய வேட்கையோடு இராணுவத்தில் சேரும் இளைஞர்களை, ஊழல் நிறைந்த இராணுவ அமைப்பு சீரழித்துவிடுவதாக”க் கூறுகிறார்.

ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க நிறுவனமாகவும், தேச பக்தியின் அத்தாரிட்டியாகவும் முன்நிறுத்தப்படும் இந்திய இராணுவம், அதற்கு நேர் எதிராகச் செயல்பட்டு வரும் ஒட்டுண்ணி அமைப்பு என்பதை நிறுவும் ஒப்புதல் வாக்குமூலங்கள் இவை.

– ஆதவன்
புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க