இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள் !

5
20

காஷ்மீரின், ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 9, 2017 அன்று நடைபெற்றது. முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக காஷ்மீர் மக்கள் அறிவித்தனர். இதனையடுத்து இத்தேர்தல் பணிக்கு பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். வாக்குச் சாவடிகளைச் சுற்றி பல அடுக்குப் பாதுகாப்பு, வாகனச் சோதனை என இந்திய இராணுவத்தின் கடுமையான கெடுபிடிகளைச் சந்தித்தது காஷ்மீர்.

இராணுவத்தின் கெடுபிடிகளுக்கும் மிரட்டல்களுக்கும் காஷ்மீர் இளைஞர்கள் கற்களால் பதிலடி தந்தனர்.
இராணுவத்தின் கெடுபிடிகளுக்கும் மிரட்டல்களுக்கும் காஷ்மீர் இளைஞர்கள் கற்களால் பதிலடி தந்தனர்.

தேர்தல் நடந்த ஏப்ரல் 9 – ஞாயிற்றுக் கிழமை அன்று  காலை முதல் பல்வேறு இடங்களில் காஷ்மீர் இளைஞர்களுக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இராணுவத்தின் கெடுபிடிகளுக்கும் மிரட்டல்களுக்கும் காஷ்மீர் இளைஞர்கள் கற்களால் பதிலடி தந்தனர். பட்காம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இத்தகைய மோதல்கள் நடைபெற்றன.

கற்களைக் கொண்டு தங்களை எதிர்கொண்ட காஷ்மீர் இளைஞர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்று குவித்தது இராணுவம். இதில் பட்காம் மாவட்டத்தில் மட்டும் 8 இளைஞர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். இது குறித்துப் பேசியுள்ள அதிகாரி, ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு பெல்லட் துப்பாக்கிகள் கொடுக்கப்படாததால் தான் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாக மிகச் சாதாரணமாகக் கூறியுள்ளார். அதோடு அப்போது நடந்த மற்றொரு சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தனது தம்பியோடு சென்று தேர்தலில் வாக்களித்து விட்டு தனது தமக்கையின் வீட்டில் நிகழ்ந்த துஸ்டிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ’ஃபரூக் அகமத் தர்’ என்ற இளைஞரை இடைமறித்தது இராணுவ வாகனம் ஒன்று. ஃபரூக்கின் தம்பி அரசுத் துறை ஊழியர் என்பதால் அவரை விடுவித்து விட்டு, ஃபரூக்கை மட்டும் தமது வாகனத்தின் பேனட்டில் கயிரால் கட்டி அமர வைத்து அவரது சட்டையில் அவரது பெயரையும் “ நான் ஒரு கல் எறிபவன்” என்ற வாசகத்தையும் எழுதி ஒட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கிராமங்களுக்கும் பவனி வந்தது இராணுவ வாகனம். கல் எறிபவர்களுக்கு இது தான் கதி என ஒவ்வொரு கிராமத்திலும் எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றது இராணுவம்.

கல் எறிபவர்களுக்கு இது தான் கதி என ஒவ்வொரு கிராமத்திலும் எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றது இராணுவம்.
கல் எறிபவர்களுக்கு இது தான் கதி என ஒவ்வொரு கிராமத்திலும் எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றது இராணுவம்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பல்வேறு ஜனநாயகவாதிகளின் கண்டனங்களைப் பெற்ற பின்னும், இந்திய  அரசின் அட்டர்னி ஜெனரல் முக்குல் ரகோத்கி இச்சம்பவம் குறித்துத் திமிராக பதிலளித்துள்ளார். இது குறித்து “தேர்தல் அதிகாரிகளை கல் எறிபவர்களிடம் இருந்து பாதுகாக்கவே கல் எறிபவர் ஒருவரை வாகனத்தில் கட்டி வைத்துச் சென்றுள்ளனர் இராணுவத்தினர். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதற்காக ஏன் மற்றவர்கள் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு எளிதாகப் பேசி விடலாம். நடைமுறையில் இராணுவத்தினரின் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

இத்தனை கொலைகளுக்கும், மனித்தன்மையற்ற செயல்களுக்கும் மத்தியில் ஏப்ரல் 9 அன்று நடத்தப்பட்ட வாக்குப்பதிவில்  வெறும் 6.5% வாக்குகளே பதிவாகின. இது காஷ்மீர் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வாக்குப் பதிவு ஆகும்.

பிரச்சினைக்குள்ளான பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்த தேர்தல் ஆணையம், ஏப்ரல் 13 அன்று மறுவாக்குப் பதிவு நடத்தியது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பெருமளவிலான இராணுவத்தையும் போலீசையும் குவித்தது.

மொத்த வாக்காளர்களான சுமார் 35,000 பேரில் வெறும் 709 பேர் மட்டுமே வாக்களித்தனர். இவர்களும் கூட தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் தீவிரமாக  இயங்கக் கூடியவர்களும் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களே. ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற வாக்குப் பதிவிலாவது 6.5% வாக்குகள் பதிவாகின. ஆனால் 13ம் தேதி நடத்தப்பட்ட மறுவாக்குப்பதிவில் வெறும் 2% வாக்குகளே பதிவாகின. இதுவரை எந்த மக்களும் செய்திராத வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தல் புறக்கணிப்பை  காஷ்மீர் மக்கள் செய்துள்ளனர்.

நடைபெற்ற வாக்குப்பதிவிலும், மறு வாக்குப்பதிவிலும் பங்கேற்ற மக்களில் பெரும்பான்மையானவர்கள் பி.டி.பி- பாஜக கூட்டணிக்கு எதிரான தங்களது கோபத்தைக் காட்டவே வாக்களித்ததாகவும், தங்கள் பகுதிக்கு வளர்ச்சி வேண்டும் என்பதற்காகவும், தங்களது குரல் பாராளுமன்றத்தில் கேட்க வேண்டும் என்பதற்காகவும் தான் வாக்களித்ததாகவும் கூறியுள்ளனர்.

அட்டர்னி ஜெனரல் முக்குல் ரகோத்கி
அட்டர்னி ஜெனரல் முக்குல் ரகோத்கி

தேர்தலில் வாக்களித்த ரியாஸ் அகமது (36) என்பவர் கூறுகையில், ”ஏதேனும் வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையிலேயே நான் வாக்களிக்க வநதேன். ஆனால் எங்கள் மக்கள் ஏன் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ளவில்லை. காஷ்மீரிகளின் இரத்தமும் இந்தியர்களின் இரத்தத்தின் நிறத்தில் தான் இருக்கும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஒன்றும் மஞ்சள் நிறத்திலோ, ஆரஞ்சு நிறத்திலோ இரத்தம் இல்லை. எனது ஓட்டு பி.ஜே.பி – பி.டி.பி கூட்டணிக்கு எதிரானது தான். மக்கள் தங்களது அடிப்படை உரிமைக்காகப் போராடும் பொழுது அவர்கள் பெல்லட் குண்டுகளையும், தோட்டாக்களையும் பதிலாகத் தருகிறார்கள்” என்றார்.

இந்தத் தேர்தலாவது ஏதேனும் ஒரு மாற்றத்தைத் தந்து விடாதா என்ற துளி ஆசையின் விளைவாக வாக்குப் பதிவுச் செய்ய வந்தவரின் உள்ளக் குமுறல் இது. மீதமுள்ள பெரும்பான்மை மக்களோ இது போலி ஜனநாயகம் என்பதையும், இதனை நம்பி இனி துளியும் பலனில்லை என்பதையும் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

காஷ்மீர் மக்களின் இந்த தேர்தல் புறக்கணிப்பு, ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகும். மீத்தேன் எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, விவசாயிகள் பிரச்சினைக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, இந்தக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளும் சாதாரண மக்களுக்கு எதிராகவே வேலை செய்கின்றன. இதில் தேர்தலில் ஒரு யோக்கியனைத் தேர்வு செய்தால் மட்டும் விடிவு ஏற்பட்டு விடும் என்பது மூடநம்பிக்கையாகும்.

தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் மக்களைக் காப்பாற்ற வக்கற்ற இந்த அரசுக் கட்டமைப்புக்குச் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் தன்மானமிக்க காஷ்மீர் மக்கள்.

மேலும் படிக்க
Two per cent turnout in Srinagar repoll, zero in 20 booths: ‘I voted but govt must understand the anger’
Why so much noise over Kashmir video, can’t criticise army sitting in AC rooms: Mukul Rohatgi

சந்தா