Saturday, July 13, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!

வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!

-

ண்டா, கைநீட்டிக் கடன வாங்கிட்டு பதினோரு வருசமா வட்டியும் முதலும் கட்டாம இருந்தா, கோவப்படாம கொஞ்சிட்டா போவான். ஒழுங்காப் போயி விவரத்தைச் சொல்லிட்டு வா….. முடியலையா…. நிலத்தை எவனுக்காவது ஒத்திவச்சு கடனைக் கட்டுற வழியப் பாரு” என்று அம்மா சொன்னதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணமும் கடன் தள்ளுபடியும் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டம்.

அன்று இருந்த குடும்பக் கடனை அடைக்க வேறு வழியில்லை. விவசாயத்திலும் பெரிய அளவில் வருமானம் இல்லை. கவுரவமாக இருந்துவிட்டு சொந்தபந்தங்களிடம் கடன் கேட்கவும் மனசு வரவில்லை. கையிலிருக்கும் ஒரே சொத்து இந்த நாலு ஏக்கர் நிலம்தான். என்ன செய்யப்போறோம்னு குடும்பமே கண்ணு முழி திருகிப்போயி நின்றபோது, ஒரு நண்பன் கொடுத்த யோசனதான் இந்த வங்கிக்கடன்.

“தென்னையிலிருந்து மாத வருமானம், சப்போட்டாவில் வருடம் முழுவதும் வருமானம், மா, நெல்லியில் ஆண்டுக்கு இருமுறை வருமானம். இதற்கிடையில் மூன்று வருடம் ஊடுபயிர் செய்தால் அந்த வருமானத்திலேயே குடும்பத்தை  ஓட்டிவிடலாம். மரப்பயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆண்டுக்கு 36,000 ரூபாய் தவணையைக் கட்ட முடியாதா?” என்று ப்ராஜெக்ட் ரிப்போர்ட் எழுதிக்கொடுத்த விவசாய அதிகாரி என்னிடம் கேட்டபோது,   மூணு லட்சம் ரூபாய் கடன் ரொம்பச் சாதாரணமாகத் தெரிந்தது. ஆனால், இன்றைக்கு வந்து குரல்வளையைப் பிடிக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நம்ம வறுமைக்கு பேங்குக்காரன் மீது ஆத்திரப்படுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?


அம்மா சொன்ன தைரியத்தில் அடுத்த நாள் காலையில் வங்கி வாசல்வரை சென்று விட்டேன். ஆனால் உள்ளே நுழைவதற்குத் தைரியம் வரவில்லை. “உள்ளே என்ன கேட்டுத் தொலைப்பானோ?” என்ற பதட்டம் தொற்றிக்கொண்டது. ஒரு டீயும் இரண்டு பீடியும் குடித்த பிறகும் தணியாத பதட்டத்துடன், மனசுக்குள் முரட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வங்கிக்குள் நுழைந்தேன்.

நீளமான அந்த ஏ.சி. அறையில், ஒரு கண்ணாடி கூண்டுக்குள் இரண்டு நாளைக்குமுன் வீட்டுக்கு வந்த அதே பெண் அதிகாரி எதையோ உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தார். நான் அறை வாசலில் போய் நின்றதுமே கவனித்துவிட்ட அவர், கையில் ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியில் வந்து, “வாங்க ..மேனேஜரைப் பார்ப்போம்” என்று கூறி, இன்னொரு கண்ணாடிக் கூண்டுக்கு அழைத்துச் சென்றார்.

நான் வணக்கம் சொன்னதைக் கண்டுகொள்ளாத மேனேஜர், பெண் அதிகாரியிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறிமாறிப் பேசிவிட்டு, என்னை கண்ணாடி இடுக்குவழியாகப் பார்த்து, ”உட்காருங்கய்யா’’ என்றார்.

இல்ல… பரவாயில்ல சார்… என்று தயக்கத்துடன் நின்றேன்.

“அட..உட்காருங்கய்யா…நானும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்தான். சும்மா உட்காருங்க” என்று சிரித்த முகத்துடன் சொன்னார்.

பெரிய அதிகாரிகளைப் போல பந்தா எதுவுமில்லாமல், ஒல்லியாக இருந்தார் மேனேஜர். ஒரு பார்வைக்கு சாதாரண வாத்தியார் மாதிரி தெரிந்ததால், உள்ளே நுழையும்போது இருந்த நடுக்கம் கொஞ்சம் குறைந்து மெதுவாக உட்கார்ந்தேன்.

“ஏன் இவ்வளவு ஏற விட்டீங்க? 3.5 லட்சம் கடன் வாங்கியிருக்கீங்க. இப்போ அசலும் வட்டியும் சேர்ந்து 6.5 லட்சமாகி நிக்குது. ஏன் இப்படி ஆச்சு?” என்ற மேனேஜரின் கேள்வியில் ஒரு அப்பாவின் அக்கறை தெரிந்தது.

“விவசாயத்துல எதிர்பார்த்த வருமானம் இல்ல. குடும்பத்துல அடுத்தடுத்து கஷ்டமான சூழ்நிலை, அதனாலதான் சார், ஒண்ணும் பண்ண முடியாம போச்சு.” என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மனதில் தோன்றியதைச் சொன்னேன்.

“சரி..தோட்டத்துல வருமானத்துக்கு என்ன பண்ணி வச்சிருக்கீங்க?” என்று மீண்டும் அதே அக்கறையுடன் கேட்டார் மேனேஜர்.

“மா, நெல்லி, சப்போட்டா, மரம் வச்சோம். எல்லாம் வருமானத்துக்கு வரும் நேரத்தில் யானைத் தொந்தரவு அதிகமாயிருச்சு சார். அதனால எல்லா மரத்தையும் வெட்டிட்டு  இப்போ தென்னை மட்டும்தான் வச்சிருக்கோம். ரெண்டு வருசமாதான் மகசூல் ஆரம்பிச்சிருக்கு சார்”

“பதினோரு வருசமாச்சு. இப்பதான் மகசூல் எடுக்கிறேன்றீங்க. மா மரத்தை வெட்டுற வரைக்கும் வருமானம் எடுத்திருப்பீங்கள்ல… அதிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயாவது கட்டியிருக்கலாமே” என்ற மேனேஜரின் அடுத்த கேள்விக்கு என்னால் பதிலே பேசமுடியவில்லை.

“கதை சொல்றத விட்டுட்டு, வாங்குன கடனுக்கு வழி சொல்லுடா”ன்னு நாசூக்கா கேட்குறான். இவன்கிட்ட, அப்பாவின் ஆஸ்பத்திரி செலவு, தம்பியின் திருமணம், தங்கச்சியின் மகளுக்குச் செய்த சீர், என் மகளின் கல்லூரி படிப்புச் செலவு என்று நம் குடும்பத்தின் கஷ்டங்களை எல்லாம் வரிசையா சொன்னா கேட்கவா போறான். என்ன காரணம் சொல்லி இவன்கிட்ட இருந்து தப்பிக்கிறது? என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே,

“என்னங்கய்யா பேச்சக் காணோம்… நீங்க யோசிக்கிறதப் பார்த்தா என்ன பொய் சொல்லலாம்னு நினைக்கிற மாதிரி இருக்கு! நான் சொல்றது கரெக்ட்டா” என்ற மேனேஜரின் பேச்சில் நக்கல் தெரிந்தது.

கல்விக் கடன் தவணையைக் கட்டத் தவறிய மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவமானப்படுத்தியது, போடிநாயக்கனூர் ஸ்டேட் பாங்க். (கோப்புப் படம்)

“நூறுநாள் வேலைக்குப் போற பொம்பளைங்க லோன் வாங்கி மாதம் 460 ரூபா கட்டுறாங்க. உங்களால மட்டும் ஏன் முடியல? வாங்குன கடன திருப்பிக் கட்டணும்னு மனசுல நினைக்கணும்யா. கவர்மென்ட் பணத்தை வாங்குனா, எவனாவது வந்து தள்ளுபடி பண்ணிருவானு நினைச்சா எப்படிக் கட்டுவீங்க? எதையாவது பொய் சொல்லி சமாளிக்கனும்னுதான் தோணும்.”

மேனேஜரின் ஏளனமான வார்த்தைகள் குத்தூசியாக தெறித்துவந்தது. நம்மைக் களவாணிப் பட்டம் கட்டப் பார்க்கும் மேனேஜரை விடக்கூடாது என்று மனசுக்குள் கோபம் கொப்பளித்தாலும், கொஞ்சம் அடக்கியே வாசித்தேன்.

“சார் உங்ககிட்ட பொய் சொல்லனும்னு எனக்கு அவசியமில்ல. மரக் கன்றுகள் நட்டது, சொட்டுநீர் போட்டது, எல்லாத்தையும் போட்டோ எடுத்து பேங்குல கொடுத்திருக்கேன். யானைத் தொந்தரவுனாலதான் அஞ்சு வருசம் வளர்ந்த மரத்தை வெட்டினோம். நான் சொல்றது பொய்யினா நேரில் வந்து, ஏன் வெட்டினோம்னு அக்கம்பக்கத்துல விசாரிச்சு பாருங்க சார்”

“சரிங்கய்யா, நீங்க சொல்றதை ஒத்துக்கிறேன். இதுவரைக்கும் ஒரு ரூபாய்கூட நீங்க கட்டலையே, ஏன்? அதுக்கு பதில் சொல்லுங்க.”

“தோட்டக்கலைத் துறையிலிருந்து 60,000 ரூபாய் மானியம் வாங்கிக் கொடுத்திருக்கேன். 2007-இல் பயிர்க்கடன் 54,000 ரூபாய் தள்ளுபடியாகி இருக்கிறது.”

“இதெல்லாம் அரசாங்கம் கொடுத்தது. விவசாய வருமானத்துல இருந்து நீங்க ஒரு பைசா கூட கட்டலையே…. ஏன் வருமானமே வரலையா?”

“வர்ற வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு சார். பிள்ளைகள் படிப்புச் செலவு, ஆஸ்பத்திரி செலவு எல்லாத்தையும் பாக்கணும்ல சார். எங்களுக்கு வேற வருமானமும் இல்ல. இந்த நிலத்தை நம்பித்தான் குடும்பமே இருக்கு.”

“ஓஹோ…உங்க பிரச்னையை எல்லாம் தீர்த்துட்டுத்தான் கடன் கட்டுவீங்களோ? கந்துவட்டிக்காரன்கிட்ட இப்படிக் காரணம் சொல்லுவீங்களா, சொல்ல முடியுமா?”

மேனேஜரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பாம்பு படம் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. இனி நம்மளும் கம்பைத் தூக்கிற வேண்டியதுதான் என்று முடிவு பண்ணிவிட்டேன்.

“சார் கடன் வாங்குனவன் கஞ்சி குடிக்கிறதே தப்புங்குறீங்களா? இப்படி வந்து பதில் சொல்றதுக்காவது நாங்க உயிரோட இருக்கனும்ல சார்! கந்துவட்டிக்கு வாங்கினா, உள்ளூருல நாலு பேரை வச்சுப் பேசி வட்டியைக் குறைச்சு கணக்கு முடிச்சுறலாம். அல்லது அவனையே விவசாயம் செய்யச் சொல்லிட்டு, வட்டியே இல்லாமக்கூட கணக்கு முடிக்கலாம். இதெல்லாம் உங்ககிட்ட நடக்குமா சார்?”

பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெற்ற 9,000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம் விட்டுவிட்டு, இலண்டனுக்குத் தப்பியோடிவிட்ட தரகு முதலாளி விஜய் மல்லையா. (கோப்புப் படம்)

“என்னய்யா திடீர்னு இவ்வளவு எமோசன் ஆயிட்டீங்க! நீங்க வாங்கியிருக்குறது கவர்மென்ட் பணம். என்னோட பணம் கிடையாது. கொடுத்த கடனை வசூலிக்கிறதுக்குதான் எனக்குச் சம்பளம் கொடுக்குறாங்க. நீங்க கடன் கட்டலைனா நான்தான் மேலதிகாரிக்குப் பதில் சொல்லணும். நான் என்ன பதில் சொல்றதுன்னு நீங்களே சொல்லுங்க!”

“என்னை இப்படிக் கேட்குற மாதிரி 15,000 கோடி கடனை வாங்கிக்கிட்டு ஓடிப்போன மல்லையாவை உங்களால கேட்கமுடியுமா சார்? என் கஷ்டத்தைச் சொல்லி இதுவரைக்கும் கட்டமுடியலை சார்….. இனிமேல் கட்டுறேன், எனக்கு அவகாசம் கொடுங்கன்னு கேட்குறேன். என்னைய களவாணிப்பய மாதிரி பேசுறீங்க. நான் என்ன பதில் சொல்றது?”

“அய்யா நீங்க விவரமான ஆளா இருக்கீங்க. உங்ககிட்ட நான் அதிகமா பேச விரும்பல. இந்தக் கடனை எப்போ கட்டப் போறீங்க? அதை மட்டும் சொல்லுங்க.”

“என்னால இப்போதைக்கு ஒரு பைசாகூட கட்ட முடியாது சார். வட்டியைக் குறைச்சு சலுகை கொடுத்தா ரெண்டு மாசத்துல எப்படியாவது கட்டுறேன். இதுதான் என்னோட நிலைமை. இதுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியாது சார்.”

“வட்டியைக் குறைக்கிறதெல்லாம் என்னால முடியாது. மேலதிகாரிகள்தான் முடிவு செய்யணும்” என்றவர், ஏதேதோ கணக்குப் போட்டுவிட்டு “வட்டியில நீங்க எவ்வளவு கட்டுவீங்க?” என்று கேட்டார்.

“ஒரு 50,000 ரூபாய்தான் கட்ட முடியும் சார்.” என்றதுமே உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டிவிட்டு, “மேடம் இது கதைக்கு ஆகாது. இவர் கணக்கை வாராக்கடன் லிஸ்ட்டில் போட்டுருங்க. இவரு கோர்ட்டுல போயி பணத்தைக் கட்டட்டும்” என்று பெண் அதிகாரிக்கு உத்தரவு போட்டார்.

என்னை தன் ஆபீசுக்கு கூட்டிச்சென்ற பெண் அதிகாரி, “அய்யா உங்க கணக்கை வாராக் கடன் லிஸ்ட்டில் சேர்த்துட்டோம்னா, நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்குச் சலுகை கிடைக்கும். ஆனால், உங்கள் பெயரை ‘பிரச்னைக்கு உரியவர்’ என்று முத்திரை குத்தி கம்ப்யூட்டரில் போட்டுருவாங்க. அப்புறம் நீங்க தமிழ்நாட்டுல கூட்டுறவு பேங்குல கூட கடன்வாங்க முடியாது. பிள்ளைகளுக்கு கல்விக் கடனும் வாங்க முடியாது. நீங்க எங்க அப்பா மாதிரி இருக்கீங்க, அப்படின்றதால இதைச் சொல்றேன்.” என்றார்.

“அப்போ முழுசா வட்டியும் முதலும் கட்டச் சொல்றீங்களா மேடம்”

“கட்டுனா உங்களுக்குதான் நல்லது. இப்போல்லாம் தினம் ஒரு ரூல்ஸ் போடுறாங்க. நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளுங்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல. உங்கள மாதிரி சம்சாரிகளுக்குதான் சிக்கல்வருது.”

“இவ்வளவு பெரிய தொகையைக் கட்டுற அளவுக்கு என் சூழ்நிலை இல்ல, வேற வழியே இல்லையா, மேடம்”

“நான் சொல்றது உண்மையானு மற்ற பேங்க்குலயும் விசாரிச்சுக்கங்க. ஒன்னும் அவசரமில்ல. பொறுமையா யோசிச்சு சொல்லுங்க. உங்களுக்கு இன்னும் ஏழு மாத தவணை இருக்குது. வருசக் கடைசிங்குறதால மேனேஜர் கோபப்படுறார். நீங்க போயிட்டு வாங்க, நான் சொல்லிக்கிறேன்.” என்று சற்று ஆறுதலாக வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்திற்கு முன்னாள் மேனேஜரிடம் காட்டிய வீராப்பெல்லாம் சட்டென்று மறைந்து, மீண்டும் என் மனதிற்குள் பயம் தொற்றிக்கொண்டது. அம்மா சொல்லி அனுப்பியதுபோல கொஞ்சம் பொறுமையாகப் பேசியிருந்தால், இந்தப் பிரச்சனை வந்திருக்காதோ என்றுகூடத் தோன்றியது.

கடைசியாக எனக்கு முன்னாள் இருப்பது இரண்டே வாய்ப்புகள். ஒன்று, வட்டியும் முதலும் பைசா குறையாமல் கட்டி ‘நான் யோக்கியன்’ என்பதை நிரூபிக்கணும். அல்லது அசலோடு வட்டியைக் குறைத்துக் கட்டி ‘நாணயமற்றவன்’ என்ற பட்டத்தைச் சுமக்கணும்.

இப்படியும் சொல்லலாம். நான் யோக்கியனாகணும்னா நிலத்தை முழுசா விக்கணும்! நிலத்தை காப்பாத்தணும்னு நினைச்சா  நாணயமற்றவனாகனும்! நான் என்ன செய்யட்டும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க