காஷ்மீர் இளைஞர் ஒருவர் மீது இந்திய இராணுவம் காட்டுமிராண்டித தனமாகத் தாக்கிய வீடியோப் பதிவு ஒன்று, காஷ்மீர் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. அதற்கு கண்டனம் தெரிவித்து போராடிய பல்வாமா அரசு கல்லூரி மாணவர்களுக்கும் காஷ்மீர் போலீசுக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அரசுக்கல்லூரி வாயிலில் சோதனைச் சாவடி அமைத்துப் போராடிய மாணவர்களைக் கைது செய்ய இராணுவத்துடன் காத்திருந்தது போலீசு. அதற்கு எதிராக ஒட்டு மொத்த கல்லூரி மாணவர்களும் போலீசு கும்பலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாணவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியும், பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டும் மாணவர்களை ஒடுக்க நினைத்தது இராணுவம். இதில் சுமார் 20-க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வாமா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலானவர்கள் பெல்லட் குண்டுகளால் தனது கண் பார்வை இழந்த மாணவர்களே.
இதனைத் தொடந்து ஏப்ரல் 17 அன்று காஷ்மீரில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியரும் இந்திய இராணுவத்திற்கு எதிராகவும், காஷ்மீர் போலீசுக்கு எதிராகவும் பெருந்திரளாகக் களத்தில் இறங்கிப் போராடினர். மாணவர்களின் உணர்ச்சிமிகு போராட்டமும், பல்வேறு இடங்களில் போலீசு மற்றும் இராணுவத்துடனான மோதலும் ஏப்ரல் 17 முழுவதும் நீடித்தது. இப்போராட்டத்தில் காஷ்மீர் மாநில கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் களத்தில் இறங்கி அதிகாரத் திமிர் பிடித்த போலீசு மற்றும் இராணுவத்திற்குத் தக்க பதிலடி கொடுத்தனர்.













– நந்தன்
நன்றி அல்ஜசிரா
மூலக்கட்டுரை: Female Kashmiri students lead anti-India protests