Sunday, December 1, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்பண்ருட்டி : உறவுகளே தடுத்தாலும் மதுக்கடையை மூடுவோம் !

பண்ருட்டி : உறவுகளே தடுத்தாலும் மதுக்கடையை மூடுவோம் !

-

டலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள அங்குசெட்டிப்பாளையத்தில் இரண்டு மதுபானக் கடைகள் இருந்தன.  அந்த இரு கடைகளும் தற்போது மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடமாக,  மக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒருவரின் கொல்லையில் டாஸ்மாக் கடை வேகமாகக் கட்டப்பட்டது. இதையறிந்த மக்கள் ஒன்று திரண்டு எப்படி இதை தடுத்து நிறுத்துவது என பேசிக்கொண்டிருக்கும் போது தோழர் சத்தியக்குமார் மக்களை சந்தித்து ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் போராடுகிறார்கள். அதே போல்  அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் இந்த பகுதியில் டாஸ்மாக்கை திறக்கவிடாமல் செய்யலாம் என்று விளக்கினார்.

பின்னர் டாஸ்மாக்கிற்காக கட்டப்படும் கடையின்  உரிமையாளரை அழைத்து இது என்ன கட்டிடம்? என கேட்டதற்கு, இது மோட்டர் கொட்டகை என்றார். இப்படித்தான் தமிழகம் முழுக்க சொல்லப்படுகிறது என்பதை  மக்களிடம் விளக்கப்பட்டது.  இது எந்த கொட்டகையாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் இதில் மதுவிற்பனை நடந்தால் கண்டிப்பாக கடை தரைமட்டமாக இடித்து நொறுக்கப்படும் என்று மக்கள் எச்சரிக்கை செய்துவிட்டு வந்தனர். பின்னர் ஒரு குழுவாக இருந்தால் தான் இந்த பிரச்னையை முறியடிக்க முடியும் என மக்கள் போராட்டத்திற்கு தயாராகினர்.

மதுபாட்டில்களை உடைக்கும் பெண்கள். (மாதிரிப் படம்) நன்றி : தி இந்து

கட்டியக் கடையை திறக்க முடியாது என்றதும் ஊரில் வசதிபடைத்த ஒருவர் தோழரை அழைத்து நம்ம இடத்துலதா மாப்ள… கடைகட்டப் போறோம் நீங்க டாஸ்மாக்கிற்கு எதிராக நிறையப் போராட்டங்களை நடத்தி இருக்கீங்க. நான் கடை கட்டுவதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என அவர் கேட்டார். அதற்கு தோழர், சாராயம் விற்பது தவறு, இதில் உறவு என்று பார்க்கமுடியாது. கடையைக் கட்டி, வைத்திருக்கும் காசை பாழாக்கிவிடாதீர்கள், என கூறிவிட்டு வந்துவிட்டார்.

அதே பகுதியில் உள்ள இருளர் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து டாஸ்மாக் கடையை  கட்ட முயற்சித்தனர். தோழர் அங்கும் சென்று அப்பகுதி மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் தொடர்ந்து இந்த பகுதிக்கு வாப்பா… அந்த கடைய இங்கு கட்டிவிட்டால் எங்களால வாழவே முடியாதுப்பா… என உரிமையுடன் கூறியுள்ளனர். அவர்களும் போராட்டத்திற்கு தயாராகினர்.

இப்படி அனைத்து இடங்களிலும் டாஸ்மாக்கை திறக்க விடாமல் தோழர் தடுத்ததை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரவர்க்கம் விழிபிதுங்கி நின்றது. புதுப்பேட்டை காவல்நிலையத்தை சார்ந்த சி.ஐ.டி. போலீஸ், தோழரை சந்தித்து என்ன சத்தியகுமார் உங்களுடைய உறவினர் இடத்தில் கடைகட்டுவதற்கு நீங்க கேட்டிங்களாம். அது கிடைக்கலன்னுதான் எல்லா இடத்திலும் டாஸ்மாக் கட்டவிடாமல் தடுக்கிறன்னு உங்கள் பகுதியில் உள்ளவங்க சில பேர் கூறுகின்றனர் என்று அவதூறை மற்றவர்கள் கூறுவதாக நோட்டம் பார்த்தார். அதற்கு  அவர்கள் சொல்வது உண்மையா சார்? என்று நம் தோழர் எதிர் கேள்வி கேட்டதற்கு உங்களைப் பற்றி எனக்கு தெரியும்பா… எவனாவது எதையாவது பேசிவிட்டுப் போகட்டும் விடுப்பா என்று நழுவிச் சென்றுவிட்டார்.

தோழருடைய நெருங்கிய நண்பர்தான் அங்குசெட்டிபாளயத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். அவருக்கு எப்படியாவது கடை இங்கேயே திறந்து விட்டால் நல்லது என்பது எண்ணம், அதற்கு தோழர் தடையாக உள்ளார் என்பதால் அவர் தோழரிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டார். என்னுடைய வாழ்க்கையை அழிப்பதில் இவன்தான் முதல் ஆளாக இருக்கிறான் என பார்ப்பவர்களிடத்தில் புலம்புகிறார். அதற்கு தோழர் என்னுடைய நண்பர் உள்ளிட்டு அனைத்து மக்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்று தான் நாங்கள் அரசியல் பணி செய்கிறோம். நாட்டை சுடுகாடாய் மாற்றிவிட்டு யாரும் நிம்மதியாக வாழமுடியாது  அதை அவர்தான் புரிந்துகொள்ள வேண்டும், டாஸ்மாக்கினால் ஊரே கெடும் போது அதை தனிப்பட்ட நபரின் வாழ்க்கை நலனோடு பார்க்க முடியாது என்றார்.

குடிவெறி கொண்டு அரசே ஆடுகிறது என்ற சுவரொட்டியை தோழர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஓட்டினார். அதைக் கண்ட மக்கள் புதிதாக கட்டப்பட்ட வீடாக இருந்தாலும் எங்கள் சுவற்றில் ஒட்டுங்கள் என விருப்பத்தோடு கேட்டுக் கொண்டனர்.

கடந்த 28.04.2017 அன்று டாஸ்மாக்கை எங்கும் திறக்க விடாமல் மக்களைக் கொண்டு, விரட்டியடித்ததால் சாராயப்பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு ஊரைவிட்டே டாஸ்மாக் ஓடி விட்டது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக நுழைந்திருக்கும் தமிழக மக்களிடத்தில் இத்தகைய ஊர், உறவு, சாதி, நட்புக்களை வைத்தும் கூட கடை திறக்க முனைகிறார்கள் என்பதற்கு இந்த ஊர் ஒரு சான்று. ஆயினும் இங்கே அதை ஒரு தோழரே முன்னின்று மறுக்கும் போது மக்களின் போராட்டத்திற்கு புதிய உற்சாகம் பிறக்கிறது.

பொது வாழ்க்கையில் அரசியல் பணி செய்வது, போராடுவது என்பது இத்தகைய அம்சங்களையும் கொண்டிருக்கிறது. பொது வாழ்க்கையில் எதைப் பேசுகிறோமோ எதைக் கடை பிடிக்கிறோமோ அதை சொந்த வாழ்க்கையிலும் கடை பிடிக்க வேண்டும் என்பது புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்களுக்கு அத்தியாவசியமான ஒரு பண்பு.  அனைத்துப் போராட்டங்களும் இப்படித்தான் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி புதிய பண்புகளை மக்களுக்கும், தோழர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றன. தொடர்ந்து போராடுவோம்.

தகவல் :
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
கடலூர் பகுதி.

  1. தற்போதைய செய்தி :திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மலையாம்பட்டு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். பின்னர் கடைக்குள் புகுந்து சூறையாடினர்

  2. திமுகவும், அதிமுகவும் இருக்கும் வரை மது தொடரும். எத்தனை போராட்டங்கள் செய்தாலும் இதை தடுக்க முடியாது

    தனி மனித ஒழுக்கம் மட்டுமே ‘மது’ விற்பனையை குறைக்க முடியும். மனமாற்றம் மக்களிடம் தான் வர வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க