privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மதுரை டாஸ்மாக் கடைகளை மூடிய பெண்கள் போராட்டம் !

மதுரை டாஸ்மாக் கடைகளை மூடிய பெண்கள் போராட்டம் !

-

திருமங்கலம் அருகில் கண்டுகுளம் கிராமத்திற்குள் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க 7.5.2017- ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள சில பெண்கள் முன்முயற்சி எடுத்து எங்கள் ஊருக்குள் டாஸ்மாக் கடை வரக்கூடாது, மீறி திறந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். என எழுதி சம்மந்தப்பட்ட எல்லா அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தார்கள். அந்த மனுவிற்கு அதிகாரிகள் மயிரளவும் மரியாதை கொடுக்கவில்லை.

இன்று கடை திறக்கப் போவதாக தகவலறிந்து அப்பகுதி பெண்கள், மக்கள் அதிகார தோழர் பரமனின் வீட்டைத் தேடி வந்து எங்கள் போராட்டத்திற்கு உதவுங்கள் எனக் கேட்டனர். கட்டாயம்  உதவுவோம், இன்று மாலை மக்களைக் கூட்டிவையுங்கள், நாங்கள் வந்து பேசுகிறோம், என்று கூறி அனுப்பி வைத்தோம். கூறியபடி மாலை 6 மணிக்கே அவர்கள் ஆட்களைக் கூட்டி வைத்துள்ளோம், வாருங்கள் என்று நமக்கு போன் செய்தார்கள், அங்கு ஒரு தெருமுனைக்கூட்டமாகவே நடத்தி, காலையில் அனைவரும் 9:00 மணிக்கு திரண்டு கடை திறக்கவிடாமல் மறிப்போம் என முடிவெடுத்தோம்.

அதன்படி 7.5.2017 காலை 9:00 மணிக்கு மக்கள் தாங்களாகவே ஒன்றுதிரண்டு வீதி வீதியாக சென்று 150 பெண்கள் 50 இளைஞர்கள், பெரியவர்கள் என திரண்டு திறக்கவிருக்கும் கடையை முற்றுகையிட்டார்கள். டாஸ்மாக்குக்கு இடம் கொடுத்தவர்களையும் பெண்கள் சரமாரியாக திட்டித்தீர்த்தார்கள். தகவலறிந்து வந்த 50-க்கும் மேற்பட்ட போலீசும், வி.ஏ.ஓ-வும் மக்களை சமாதானப்படுத்தி அனுப்ப முயற்சித்தார்கள். அந்த வீட்டுக்காரரை எழுதித்தர சொல்லுகிறோம் என்று திசை திருப்பினார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரி வந்து கடையைத் திறக்க மாட்டோம் என எழுதித் தரச்சொல் என்று மக்கள் உறுதியாக நின்றவுடன் எழுதித் தராமல் காலதாமதப்படுத்தினார்கள்.

3-மணி நேரம் மறியல் செய்தும் உரிய அதிகாரி வராததால் சாலை மறியல் செய்வோம் என முடிவெடுத்து உசிலை – திருமங்கலம் மெயின்ரோட்டை மறித்து 1-மணி நேரம் உட்கார்ந்தார்கள். அதன் பிறகு தான் மக்களின் உறுதியான போராட்டத்தால் மிரண்டு போன தாசில்தார் இங்கு கடை திறக்க அனுமதி தரமாட்டோம் என எழுதிக் கொடுத்த பின்தான் போராட்டம் முடிவுற்றது. மக்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது மக்கள் அதிகார அமைப்பாளர்களின் உதவியால்தான் எங்களால் வெற்றிகரமாக போராட முடிந்தது என வெளிப்படையாகப் பேசினார்கள்.

ஒரு பெரியவர் கம்யூனிஸ்ட் கட்சி முன்னமாதிரி இப்ப இல்ல… என்று ஏங்கியிருந்தேன், உங்களைப் பார்த்த பின் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி உதித்தெழுவதைக் காண முடிகிறது என்றார். பெண்கள் நமது தோழர்களுக்கு நன்றி கூறியதோடு கட்டாயம் சாப்பிட்டு விட்டு போகனும் என அழைத்தனர்.

இறுதியாக மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி அவர்கள்,  கண்டுகுளம் கிராம மக்களுக்கும் மக்கள் அதிகார அமைப்பிற்கும் இடையே டாஸ்மாக் போராட்டத்தில் ஏற்பட்ட இந்த ஒற்றுமை குடிநீர், ரேஷன்கடை ஒழுங்குபடுத்துதல் என தொடர வேண்டும். இனி இந்த ஆளும் அருகதை இழந்த அரசிடம் கெஞ்சியது போதும், ஒன்றுபட்டு போராடுவோம். தொடர்ந்து வெற்றி பெறுவோம் என பேசிய போது பெண்கள் கைதட்டி குரலெழுப்பி வரவேற்றார்கள்.

சென்ற ஆண்டு 2016 மே மாதம் மக்கள் அதிகாரத் தோழர்கள் டாஸ்மாக் கடையை அடைக்க பெண்களைப் போராட்டத்திற்கு வாருங்கள் என வீடு வீடாக சென்று அழைத்துள்ளனர். ஆனால் இன்று 2017  மே மாதம் பெண்களே மக்கள் அதிகாரத் தோழர்களை வீடு தேடி வந்து போராட்டத்திற்கு உதவுங்கள் என அழைக்கிறார்கள். காலம் மாறிப்போனது. இது வேறு தமிழகம்! எழுச்சித் தமிழகம்!! ஆண்கள் உதவியின்றி பெண்களே போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் வலிமை பெற்ற, எழுச்சியின் தமிழகம்! என்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக இந்திரா காலனி மக்களும் மக்கள் அதிகாரத்தின் தோழர்களை அழைத்துக் கொண்டு சென்று போராடி கடையை அடைத்தார்கள். அடுத்து கல்லூத்து கிராமப்பெண்கள் 10பேர் நம் தோழர்களைத் தேடி வந்து அழைத்திருக்கிறார்கள்.

பரவட்டும் போராட்டம்! இணையட்டும் மக்களின் தனித்தனிப் போராட்டங்கள்!! ஒன்றுபடட்டும் மக்களும் மக்கள் அதிகாரமும்!!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உசிலை பகுதி.


நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், அக்கடைகளை எல்லா விதிமுறைகளை மீறி மக்கள் குடியிருப்புகளில் வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வரும் வேளையில் மதுரை ஒத்தக்கடையில் இருந்த டாஸ்மாக் கடையை, ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் கிராமத்தில் அமைத்து டாஸ்மாக் நிர்வாகம் கல்லா கட்டிக்கொண்டிருந்தது.

இதனால் பெண்கள், மாணவிகள் ரோட்டில் நடமாட முடியாமலும், குழந்தைகள் வாசலில் விளையாடக் கூட முடியாமலும்  நரசிங்கம் மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 07.05.2017 அன்று காலை  “டாஸ்மாக் கடைகளை மூடும் மக்கள் போராட்டம் பற்றிப் பரவட்டும், தமிழகத்தை பூரண மதுவிலக்கு மாநிலமாக மாற்றுவோம். உங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவோம் வாருங்கள்” என்று அப்பகுதி மக்களிடம் அழைப்பு விடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

காய்ந்த சருகுகள் தீப்பட்டவுடன் எரிவதை போல், நமது போராட்ட அறைகூவலை கேட்டவுடன் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள், இளைஞர்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிடச்சென்றனர். முற்றிகையிட வரும் மக்களை பார்த்தவுடன் விற்பனையாளர் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டார்.

முற்றுகையிட்டு போராடி வரும் மக்களை பார்த்தவுடன் பதறி அடித்து ஓடி வந்தார்கள் போலீசும், வருவாய்த்துறையும். “கடையை உடனே அகற்ற  வேண்டும், அதுவரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம்” என மக்கள் உறுதியாக நின்றார்கள்.

மக்களின் உறுதியான போராட்டத்தை கண்ட அதிகார வர்க்கம் கடையை மூடுவதாக வாக்குறுதி அளித்தனர். “உங்கள்  வாக்குறுதியை எல்லாம் நாங்கள் நம்பவில்லை, நாளையில் இருந்து கடையை திறக்க கூடாது, திறந்தால் கடையை அடித்து நொறுக்குவோம்” என அதிகாரிகளுக்கு சவால் விடும் வகையில் எச்சரிக்கை செய்து கலைந்தனர். இப்போராட்டம் பகுதி மக்களிடம் உறுதியான நம்பிக்கையையும், போராட்டம் தான் தீர்வு என்ற உணர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க