Tuesday, April 13, 2021
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் திருப்பூரில் மது ஒழிந்தது - தர்மபுரியில் குடிநீர் வந்தது

திருப்பூரில் மது ஒழிந்தது – தர்மபுரியில் குடிநீர் வந்தது

-

திருப்பூர் ராதா நகர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகாலமாக 21-வது வார்டில் டாஸ்மாக் கடை (எண் : 1937) ஊரின் முக்கிய தெருவில் அமைந்துள்ளது. மக்கள் குறிப்பாக பெண்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை மக்களிடையே நீறு பூத்த நெருப்பாக உள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டார். அதனடிப்படையில் 07.05.2017 அன்று அப்பகுதி மக்கள் மத்தியில் டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும்! என்ற முழக்க பிரசுரத்தை வீடு வீடாக வினியோகித்து தோழர்கள் மக்கள் உதவியோடு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதன் பின்னர் மக்கள் அனைவரையும் வீதி வீதியாகச் சென்று அழைப்பு விடுத்து, அணிதிரட்டி டாஸ்மாக் கடை முற்றுகையிடப்பட்டது. கடைக்கு முன்பாக மக்கள் சென்ற போது காலை 12:00 மணிக்கு முன்பாகவே மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதை கண்டு அந்த மது பாட்டில்களை உடைத்தெறிந்தனர். மக்கள் அதிகாரத்தின் முழக்கங்களை தங்கள் முழக்கமாக மாற்றி போர்க்குணத்தோடு போராட்டத்தினை தொடர்ந்தனர்.

சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது கைக்குழந்தைகளுடன் பெண்கள் சாலையில் 4-மணி நேரத்திற்கும் மேலாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கடையை இன்றே மூடினால் தான் கலைந்து செல்வோம் என உறுதியாக அறிவித்தனர். மாவட்ட ஆட்சியர் இங்கு வரவேண்டும் என்று மக்கள் முழக்கங்கள் எழுப்ப ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ பதறியடித்து மக்களைச் சந்திக்க வந்தார். அவர் 15 நாட்களில் கடை அகற்றப்படும் என பேச்சுவார்த்தையில் அறிவித்தார்.

ஆனால் இதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. இன்றே கடையை மூடி சீல் வைக்கச் சொல்லி பேச ஆரம்பித்தனர். இந்த நிலையில் போலீசு மக்கள் அதிகாரம் தோழர்களைக் குறிவைத்து அவர்களை மக்களிடம் இருந்து பிரிக்கப் பார்த்தது. ஆனால் அதனை மக்களே முறியடித்தனர். ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே மக்களை கலைப்பதற்காக அதிரடிப்படை, வஜ்ரா வாகனம், பிளாஸ்டிக் லத்திகள், கவசங்கள், கேமரா வாகனம் என அனைத்தையும் கொண்டு வந்து இறக்கியது போலீசார்.

பின்னர் டி.எஸ்.பி கடை கட்டாயம் மூடப்படும் நீங்கள் கலைந்து செல்லுங்கள் என அறிவித்தார். மக்கள் ஆர்.டி.ஓ –வை சொல்லச் சொல்லி முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து கடை ஆர்.டி.ஓ-வால் சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் வெற்றி ஆரவாரத்தோடு முழக்கமிட்டனர்.

சில மணி நேரங்களில் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டி இந்த அரசின் அதிகாரத்தை செல்லாக் காசாக்கினர். அது மட்டுமல்ல போராட்டத்தில் பெண்கள் தங்கள் போர்க்குணத்தால் எதையும் சாதிக்க முடியும் என உணர்ந்துள்ளனர். போராட்டத்தின் போது ஒரு பெண்ணின் கணவர் அதிகார தோரணையில் வீட்டுக்கு அழைத்தார். ஆனால் அப்பெண் விடாமல் போராட்டத்தில் மீண்டும் வந்து கலந்து கொண்டு கடையை சீல் வைத்த பின்னர் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர் – 97885 58526


ருமபுரி மாவட்டம், பென்னாகரம் நகரத்தை ஒட்டியவாறு உள்ள பகுதி அண்ணாநகர், இங்கு வசிக்கும் கல் உடைக்கும் தொழிலாளிகள் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. மக்கள் கடும் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். கடந்த ஓராண்டாக குடி தண்ணீர் கிடைக்காமல் தெருவிட்டு தெரு செல்வது,  ஊர் விட்டு ஊர்செல்வது, இரண்டு கிலோ மீட்டர் மேல் சென்றால் தான் உப்பு தண்ணீர் கிடைக்கும். குடிநீர் என்றால் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். அப்போதும் கூட இரண்டு  குடம் தண்ணீர் பிடிக்கவே போட்டி போட வேண்டும்.

இந்த நிலையை கண்டு கொதித்து போன மக்கள், அரசு நமக்கு குடிநீரை கூட தீர்த்துக்கொடுக்காது என்று தங்கள் சொந்த அனுபவத்தில் புரிந்துக்கொண்டு, இனி போராடமல் தண்ணீர் பெற முடியாது என்று மக்கள் அதிகாரம் அமைப்பை நாடினர். குடிநீர் பிரச்சனையை தீர்த்து கொடுங்கள் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்க்கு பலமுறை மனுகொடுத்து பாத்துள்ளனர் அண்ணாநகர் மக்கள். இருந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அரசோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கிறதே தவிர தண்ணீர் பிரச்சனையை தீர்த்த பாடில்லை.

வேறு வழியில்லாமல் கடந்த 5 -ம் தேதி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்கள் உடன் வந்து பெண்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த அரசு அதிகாரிகள், போலீசாரும் சாமதனாம் செய்து, போராடிய பெண்களை அனுப்பி வைத்தனர். தலைமை தாங்கிய பெண் தோழர்களிடத்தில் உத்திரவாதம் கொடுத்தனர். உத்திரவாதம் கொடுத்து மூன்று நாட்கள் கடந்தும் குடிநீரை வழங்காமல் உதாசீனம் செய்து வந்தனர் அதிகாரிகள்.

தட்டினால் அரசு கதவு திறக்காது நாம் தான் திறக்க வைக்க வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரத்தை செய்தது மக்கள் அதிகாரம். அடுத்த கட்டமாக மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 08.05.2017 திங்கள் அன்று பெண்கள் குழந்தைகள் அனைவரும் காலி குடங்களுடன் சென்று அலுவலத்தை முற்றுக்கையிட்டு முழக்கமிட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக எந்த அதிகாரிகளும் போராடும் மக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. உடனே மக்கள் அதிகாரம் தோழர்கள் நாம் முழக்கமிடுவது அதிகாரிகளுக்கு கேட்கவில்லை, அதனால் அதிகாரியின் காதில் போய் முழக்கமிடுவோம் என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உள்ளே சென்று முழக்கமிட்டனர்.

சில ஊழியர்கள் இது என்ன முறை வெளியே போய் செய்யுங்க இது ஆபிஸ் என்றனர். பி.டி.ஓ- வை வர சொல்லுங்க இல்லையின்னா? தண்ணீர் கொடுங்க என்று பேசியவுடன் ஒதுங்கி கொண்டனர். அலுவலகத்திற்குள்ளும் முழக்கமிட்டு கொண்டே இருந்தும், எந்த அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை. அப்போது மக்கள் அதிகாரம் தோழர்கள் அலுவலகத்திற்குள்ளே பேரணி சென்று அலுவலகத்தின் மைய பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனை கண்டு அருகில் இருந்த நூற்றுக்கானக்கான மக்கள் அலுவலகத்திற்கு வந்து என்ன நடக்கும் என்று கவனித்து கொண்டிருந்தனர். இறுதியாக அவசர அவசரமாக வந்தார், பெண் வட்டார வளர்ச்சி அலுவலர்.

போராட்டத்தின் தீவிரத்தை கண்டு உங்கள் பிரச்சனை உடனே தீர்க்கப்படும் வாருங்கள் என்று அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களும் தமது பிரச்சினையான குடிநீர் கிடைக்காததை விளக்கினர். அதன் பிறகு அதிகாரிகள் உடனே குடிநீர் ஏற்பாடு செய்வதற்கான ஆயத்தப் பணிகளை செய்தனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்  தண்ணீர் கேட்டு அதிகாரியிடம் மனுகொடுத்து கேட்கலாம் ஆனால் இப்படி எல்லாம் போராட கூடாது இது ரவுடித்தனம் என்றார். இதற்கு மக்கள் அதிகாரம் தோழர் ஒருவர் ‘சுதந்திரம்’ கிடைத்து 70 ஆண்டுக்கு மேலாகிவிட்டது, குடிநீர் கூட கொடுக்க முடியவில்லை இதற்கு பெயர் என்ன என்றார். தண்ணீர் கேட்டு போராடினால் ரவுடித்தனம், தண்ணீர் பிரச்சனையை கூட தீர்க்க முடியாத அதிகாரிகளும், அரசும் செய்வற்கு பெயர் என்ன? என்றவுடன், பேசுவதை நிறுத்திக்கொண்டார், அந்த அதிகாரி. அரசு கதவை தட்டுவதை விட்டு உடைப்பதுதான் பிரச்சனை தீர்க்கும் என்பதை மக்கள் உணர்ந்துக்கொண்டனர். நாம் வீதிக்கு வந்தால் தான் விடிவு பிறக்கும் என்பதை உணர்ந்து போராடுவதே ஒரே வழி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு – 81485 73417


டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ஓலையூர் கிளை. 96591 94257

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க