வேலையின்றி இருப்பதைவிட சுரண்டப்படுவது மேலானது – லண்டன் வாழ்க்கை !

21
22

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 முதல் 11:00 மணி வரை, ரமோனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லண்டனின் வணிக இதயமான ஃபின்ஸ்பரி சதுக்கத்திற்கு அருகிலுள்ள அலுவலக கட்டிடத்தில் வேலை செய்கிறார். கடைசி ஊழியர் சுழற்கண்ணாடிக் கதவுகள் வழியே வெளியேறும் போது அவர் தமது சீருடையை அணிகிறார்.

மாதிரிப் படம்

பின்னர் அவர் சுத்தம் செய்யத் தொடங்குகிறார். ஐந்து மாடிகளை மற்றொரு பணியாளருடன் தூசுறிஞ்சியைக் (Vacuum Cleaner) கொண்டு எல்லா குப்பைகளையும் அகற்றுகிறார். மேலும், சமையலைறைகளில் பெரும்பாலும் அவர் வரும் நேரத்தில் அசுத்தமும் அருவருப்புமாக இருக்கும் தட்டுகள் கருவிகளை கழுவி உலர்த்துகிறார். அவருடைய வேலையை முடிக்க இரண்டு மணிநேரம் மட்டுமே இருக்கிறது.

கழிப்பறைகளை சுத்தம் செய்வது அவருக்கு விருப்பக்குறைவான வேலை என குறிப்பிடுகிறார். “மனிதக் கழிவுகளின் நாற்றத்தை விட வெளுப்பான்கள் (Bleach) நெடி உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்” என்று 36 வயதான அவர் விளக்குகிறார். மதிய நேரத்தில் மற்றொரு சுத்தம் செய்யும் வேலையும் இருப்பதால், இது களைப்பூட்டக்கூடியதாக இருக்கிறது. ஆயினும் ரமோனா காது கேட்பொறியில் (earphones) சல்சா இசையைக் கேட்பதன் மூலம் தனது மனநிலையை சமப்படுத்த முயல்கிறார். அவரைக் கடந்து அலுவலகத்திலிருந்து வெளியேறி செல்வோரின் விகாரமான வாழ்த்துக்களை தவிர, ரமோனா அரிதாகவே யாருடனும் பேசுகிறார். ஆனால் அவர் அதுபற்றி கவலைப்படவில்லை என்கிறார். “என் வாழ்க்கை இப்போது நன்றாக இல்லை, ஆனால் நான் லண்டனில் முதன்முதலாக வந்தபோது இருந்ததை விட மிகவும் நன்றாக இருக்கிறது” என்கிறார் அவர்.

இளஞ்சிவப்பு கன்னங்களையும் பொன்னிற பின்னப்பட்ட கூந்தலையும் கொண்ட மகிழ்ச்சியான பெண்ணான ரமோனா, சிறந்த வேலைவாய்ப்புகளைத் தேடி லண்டனுக்கு வந்தார். அவர் தனது தாய்நாடான பொலிவியாவை விட்டு, 2006-ம் ஆண்டில் எவா மொராலஸ் அதிபராவதற்கு சிறிது முன்னர், நாட்டின் வறுமை விகிதம் 38.2 சதவீதமாக உயர்ந்திருந்த போது வெளியேறினார். அவர் தனது சகோதரி மற்றும் உறவினருடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் குடியிருப்பைப் பகிர்ந்து கொண்டு, முறைசாரா அடிப்படையில் பல்வேறு அலுவலகங்களில் இரவில் சுத்தம் செய்யும் வேலைகளை செய்துவந்தார். அவர் சக லத்தீன் அமெரிக்கர்களிடமிருந்து வாய்மொழியாக வேலை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டார்.

“நான் முதலில் துவங்கிய போது சீருடைகள் இல்லை, ஒப்பந்தங்கள் இல்லை, எதுவுமே இல்லை” என ரொக்கப் பணமாக ஊதியம் பெற்றதையும் ரமோனா நினைவு கூர்கிறார். “  சில சமயங்களில், ஒரு வாரத்திற்கு மேல் வேலை செய்தபின்  ஊதியம் எப்போது கொடுக்கப்படும் என்பதை அறிய நான் மேலாளரை அழைத்தபோது, அவர் ‘அப்படியானால் உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?’ என்று கேட்டிருக்கிறார்”. அவர் தனது கணவரைக் கூட இன்னும் சந்திக்கவில்லை. மேலும், ஆளரவமற்ற வேளையில் பணிபுரிவதால் அவர் எவருடனும் பேசாமல் நாட்கள் அல்லது வாரங்கள் கூட கடந்து போகும்.

லண்டனில் கண்ணுக்குத் தெரியாத மற்றும் பாதிப்படைய ஏதுவான நிலையிலுள்ள நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளில் ரமோனாவும் ஒருவர். அவரது பிரிட்டன் பயணம், அத்தொழிலிலுள்ள மற்ற அனைவரின் வகைமாதிரியாகும். அவர்கள் பெரும்பாலும் வறுமையிலிருந்து விடுபடும் வழியைத் தேடி சுற்றுலாப் பயணிகளாக பிரிட்டனுக்குள் நுழைகின்றனர். முதலில் முறைசாரா ஏற்பாடுகளில் சட்டவிரோதமாக வேலை செய்கின்றனர். அது அவர்களை பணிப்பாதுகாப்பற்ற மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்படும் நிலைக்குத் தள்ளுகிறது. ஆவணங்களின்றி புலம்பெயர்ந்தோர் தங்களுக்கான சட்ட ஆலோசனைக்கு சில வழிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்திற்கு வழக்கை எடுத்துச் செல்வது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

ஈக்வாடர் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்பானிய குடிமகனான தனது கணவரை திருமணம் செய்து கொண்ட பின் இங்கிலாந்தில் குடியுரிமை பெற தகுதிபெற்றார், ரமோனா. ஆனால் இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக நுழையும் அந்த தொழிலாளர்களுக்கும் வாழ்க்கை மிகவும் கடினமானதாகவே இருக்கும். அல் ஜசீராவுடன் பேசிய சுத்தப்படுத்தும் தொழிலாளிகள் பலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தை கொள்கையின் அடிப்படையில் இங்கிலாந்திற்குள் நுழையும் உரிமையைப் பெறுவதற்காக மற்ற ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகவும், சட்டபூர்வமாகவும் சில ஆண்டுகள் வேலைசெய்து சில பிரச்சினைகளுக்கு உட்படுகின்றனர். இந்த பத்திரிக்கையாளர் பேசிய ஒன்பது சுத்தப்படுத்தும் தொழிலாளிகளும் இந்த நேர்காணலின் போது இங்கிலாந்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தனர்.

ஆங்கில வகுப்புகள்

ரமோனா எதிர்கொள்ளும் நிச்சயமற்ற ஆபத்தான நிலை குளோரியா(43) மற்றும் டெஸ்டெமோனா (47) ஆகிய கொலம்பிய சகோதரிகள் எதிர்கொள்வதை ஒத்திருக்கிறது. ஆனால் அவர்கள் லண்டனை வந்தடைந்த பாதை மிகவும் கடினமானது. 2001-ல் அவர்கள் ஸ்பெயினுக்கு தங்களை கடத்திக் கொண்டனர். அங்கு மூன்றாண்டுகள் முன்புவரை ஆவணங்களின்றி சட்டவிரோதமாக பழம் சேகரிப்பவர்களாகவும், வீட்டை சுத்தப்படுத்துபவர்களாகவும் வேலை செய்தனர்.

மாதிரிப்படம்

ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமையைப் பெற்ற பின் லண்டனில் உள்ள மைத்துனர் ஒருவர் அவர்களை இங்கிலாந்திற்கு அழைத்துள்ளார். அவர்கள் சிறிது காலத்திற்கு அவருடன் தங்கியிருந்து, வர்த்தக சுத்தப்படுத்துபவர்களாக பணியாற்றத் தொடங்கினர்.

“வாழ்க்கை கடினமானது,” குளோரியா ஸ்பானிய மொழியில் கூறுகிறார். “புனித பால் தேவாலயத்திற்கு அருகிலிருக்கும் எனது பணியிடத்திற்கு செல்ல பேருந்தைப் பிடிக்க தினமும் அதிகாலை 1 மணிக்கு எழுகிறேன். எனது தினசரி வேலை நேரங்கள் 2-லிருந்து 4 மணிக்குள் மற்றும்  5-லிருந்து 7 மணி வரை”.

“நாங்கள் முதலில் இங்கு வந்தபோது, நீலக் கண்களும் பொன்னிறமுடைய கைநிறையப் பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள் நிறைந்த நகரம் லண்டன் என்று எண்ணியிருந்தோம். எங்களைப் போன்ற மற்ற ஏழை மக்களும் இங்கிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.” சொல்லிவிட்டு டெஸ்டெமோனா சிரிக்கிறார். இரு சகோதரிகளுக்கும் ஆங்கிலம் பேச தெரியவில்லை.

ஒரு பல்பொருள் அங்காடியில் மளிகை சாமான்களை வாங்கச் செல்வதுகூட மிகக்கடினமாக இருக்கிறது, ஏனென்றால் உதவி கேட்க எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என்று குளோரியா கூறுகிறார்.

2016, செப்டம்பரில் கொலம்பியாவின் காலி நகரில் இவர்களது மூத்த சகோதரி இறந்துவிட்டார். ஆனால் பணமின்மையால் இவர்களால் சவ அடக்கத்திற்கு செல்ல முடியவில்லை. மேலும், ஊருக்கு சென்றால் இங்கிலாந்திற்கு திரும்ப முடியாது என்ற அச்சமும் குளோரியாவுக்கு இருந்தது. பெரும்பாலான நேரம், எங்கு வேலை செய்யப்போகிறோம் என்பது முதல்நாள் வரை தெரியாது என்கின்றனர் சுத்தப்படுத்தும் தொழிலாளிகள்.

“நான் உண்மையாகவே ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினேன், ஒரு வருடத்திற்கும் மேலாக சேமித்து வைத்த பிறகு, இறுதியாக 1,400 பவுண்டுகள் செலுத்தி (சுமார் 1,17,041 ரூபாய்) கட்டணம் செலுத்தி ஒரு மொழி மையத்தில் காலை வகுப்புகளுக்குச் சென்றேன்” என்று ராமோனா கூறுகிறார். அவர் படிப்பை முடிக்கத் தவறிய காரணத்தினால் தான் செலுத்திய கட்டணத்தை மிகச்சரியாக நினைவில் வைத்துள்ளார்.

“நான் ஒவ்வொரு பாடத்தோடும் தூங்கினேன். இரவில் 14 மணி நேரம் நான் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கவனம் செலுத்த கடினமாக இருந்தது.” அதன் பின் ரமோனாவின் முதலாளிகளில் ஒருவன் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஊதியமளிக்காத துன்பம் மிகுந்த காலம் வந்தது.

ஒப்பந்த நிறுவனத்திற்கு அழைத்த போது எந்த பதிலுமில்லை. இறுதியாக மேலாளரை பிடித்துக் கேட்ட போது, அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அவருக்கு சொல்லப்பட்டது.

“உன் ஒப்பந்தம் முடிந்துவிட்டது இனி அழைக்காதே என்று அவர் சொன்னார்” வருத்தத்துடன் சொல்கிறார் ரமோனா. அந்த நேரத்தில் சட்டவிரோதமாக வேலை செய்து கொண்டிருந்த காரணத்தினால் பொலிவியாவுக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

அவரது சேமிப்பு ஒரு ஆபத்தான வீதத்தில் குறைந்து கொண்டிருந்தது. மேலும், பஸ் கட்டணங்களை சேமிப்பதற்காக ஒரு அலுவலகத்திலிருந்து  மற்றொரு அலுவலகத்திற்கு ஒரு மணிநேரமானாலும் கூட நடந்தே சென்றார். சட்ட உதவி பெறுவதையோ அல்லது பணியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அம்பலப்படுத்துவதையோ பற்றி அவர் சிந்திக்கவேயில்லை. “வேலையின்றி இருப்பதைவிட சுரண்டப்படுவது மேலானது” என்று அவர் கூறுகிறார்.

டெஸ்டெமோனாவும் குளோரியாவும் தங்களது வேலையை ஒரு பொறியாக (Trap) பார்க்கிறார்கள்.  “எங்களது வீட்டில் தொலைக்காட்சி இல்லை, இணையம் இல்லை. எங்களது ஓய்வு நேரத்தில் தூக்கம் பிடிக்கவில்லையென்றால், பூங்காவிற்கு சென்று வெளியே குளிரில் உணவருந்துவோம்” என்கிறார் டெஸ்டெமோனா.  “இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?” கேட்கிறார்.

– தொடரும்

நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம்: ஜான்சன்

சந்தா