அண்ணா பல்கலைக் கழகத்தில் மோசடியாக பட்டம் வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி!
மாணவர்கள் நலனுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி – கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் – கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா – பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் வித்யாசாகர் ராவ் – உயர்நீதிமன்றம் கூட்டு சதி!
இதை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
பல்கலைக் கழகங்களின் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கும் இந்த நீதிமன்ற தீர்ப்பை வழங்குவதற்கு நீதிபதிகள் சொன்ன காரணம் அதன் யோக்கியதை என்ன என்பதை மீண்டும் நிரூபித்து விட்டது. அதாவது, ‘துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் கையெழுத்திடக் கூடாது என்று பல்கலைக் கழக விதியில் இல்லையாம்’ அதனால் துணைவேந்தர் இல்லை என்பதால் பட்டமளிப்பு விழாவை நிறுத்த முடியாதாம்.
மாணவ சமுதாயத்தின் நலனில் அக்கறையுள்ள நீதிபதியாக இருந்திருந்தால் என்ன கேட்டிருக்க வேண்டும், துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டத்தில் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கையெழுத்திடலாம் என்று இருக்கிறதா? என்று கேட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நீதிமன்றம் மாணவர்களுக்கு எதிரானது. அரசின் ஊழல் முறைகேடுகளுக்கு துணை நிற்பது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
அதே போல், பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தர். அந்த வகையில் பட்டமளிப்பு விழாவில் நடைபெறும் இந்த மோசடியை தடுத்த நிறுத்தும் பொறுப்பு ஆளுநருக்கும் உண்டு. ஆனால், துணைவேந்தர் இல்லாமல் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்தான் சிறப்பு விருந்தினர். இப்படிப்பட்ட கேடுகெட்ட கிரிமினல் கூட்டத்திடம், கல்வித்துறையும், மாணவ சமூகமும் சிக்கி இருக்கிறது. இதைக் கண்டித்து எமது பு.மா.இ.மு சார்பில் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தோம். தொடர் போராட்டத்தால் பீதியானது போலீசு. எனவே சைதை நீதிமன்ற வாயிலில் இருந்து ஆளுநர் மாளிகை வரை 500-க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
சரியாக மாலை 5:00 மணியளவில் பு.மா.இ.மு தோழர்கள், மாணவர்கள் காம்பீரமாக முழக்கமிட்டபடி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை முன்னேற விடாமல் சைதாப்பேட்டை நீதிமன்ற வாயிலேயே சுற்றி வளைத்து கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.