Sunday, December 1, 2024
முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைஒகேனக்கல் வறட்சி : எங்க அப்பா அம்மா கூட இது மாதிரி பாத்ததில்லை !

ஒகேனக்கல் வறட்சி : எங்க அப்பா அம்மா கூட இது மாதிரி பாத்ததில்லை !

-

கேனக்கல் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஊட்டமலை எனும் சிற்றூர். கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட இந்த ஊரில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பரிசல் ஓட்டுவது, மீன்பிடிப்பது, ஆடு, மாடுகள் மேய்ப்பது/வளர்ப்பது போன்றவைகள்தான் இவர்களில் பெரும்பாலானோரின் முதன்மையான தொழிலாகும். போலீசின் அடக்குமுறை கடுமையாக உள்ளதால், மக்கள் நம்மிடம் பேசவே பெரிதும் தயங்கினர்.

மதிய வேளை சுமார் 2:30 மணியளவில் ரேசன் பொருட்களை வாங்குவதற்காக கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பெண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசிய போது….

“வாங்கப்பா எங்க துக்கத்தை கேட்க நீங்களாச்சு வந்தீங்களே. இங்க மொத்தமா 700 குடும்பமிருக்குப்பா, எங்க பொழப்பே இங்க வர்ற டூரிஸ்ட்ங்கள நம்பிதாம்பா. நாங்க இங்க வந்து 70 வருஷமிருக்கும்பா, மேட்டூர் டாம் கட்டுனப்போ அங்கருந்து இந்த ஊருக்கு தொரத்தி விட்டாங்க. ஆறுதான் எங்க தொழிலே. அதான் இந்த இடம் எங்களுக்கு செட்டாச்சு. எட்டு மாசத்துக்கு முன்னாடி பரிசல்காரங்க மேல  போலீசுகாரங்க பொய் கேஸ் போட்டாங்க அதுக்காக நாங்க போராடுனோம். அப்பருந்தே எங்க வாழ்வாதாரத்த திட்டமிட்டு அழிக்கிறாங்கப்பா. சுற்றுலாக்காரங்கள அப்பப்போ விடமாட்றாங்க, பரிசல் ஓட்ட விட மாட்றாங்க கேட்டா  நாங்கதா தண்ணியை அழுக்கு பண்ணீருவோம்ன்றாங்க.

அப்ப நடந்த போராட்டத்துல கடுமையான அடக்குமுறைப்பா, பொம்பளங்களெல்லாம் அசிங்கசிங்கமா கேட்டாங்க, எங்க மேல பொய் கேசா போட்டு தள்ளுனாங்க. அதுலருந்தே எங்களை துரத்தனும்னு குறியா இருக்கானுங்க. ரெண்டு  வருஷமா இந்த நெலமதாம்பா. முதல்ல தண்ணீல சாக்கடை கலந்து வந்துச்சு, வேற வழியில்லாம அதயும் குடுச்சோம் இப்பத்திக்கு அந்த பிரச்சனை தீந்துடுச்சு. ஆனா நாங்க எத நம்பி இங்க வந்தோமோ அந்த வாழ்க்கையே இப்போ எங்களுக்கு இல்லன்னு ஆயிட்டிருக்கு…குடிக்க தண்ணி கெடச்சுருச்சு ஆனா ஊட்டுல பொங்க வெக்க வழியில்லாம போயிடுச்சுப்பா… இந்த ரேசன் அரிசிய நம்பித்தான் எங்க எல்லாரோட வாழ்க்கையுமே ஓடிக்கிட்டிருக்குப்பா…

இங்கருந்து எங்களுக்கு தேவையான பொருள் ஏதாவது வாங்கனும்னா பென்னாகரம் போவேண்டியிருக்குப்பா. தண்ணியில்லாதனால டூரிஸ்ட்ங்க இல்லை,  மீனில்லை பரிசல் இல்லை போட்ட கடைகளும் ஓடலை. எங்க வீட்டு ஆம்பளைங்க எல்லாம் ஊரை விட்டு கல் ஒடைக்க போறாங்கப்பா. இப்புடியே போனா நாங்க பூரா ஊரை காலி பண்ணீட்டு போக வேண்டியதுதான். தண்ணி ஓடுனப்ப எத்தனை பேர் வந்து எங்களை அத தொடாத, இங்க போகாதன்னு ஆர்டர் போட்டானுங்க. இப்ப ஒன்னுத்துக்கு வழியில்லாம நிக்கிறோம் எந்த நாயும் எட்டி பாக்கல. 70 வருஷத்துல இப்புடி ஒரு வறட்சிய பாக்கலப்பா நாங்க….இந்த ஊருல நூறு நாள் வேலையுமில்லை ஒன்னுமில்லை.

கிருஷ்ணா – ஊட்டமலை

சார்! ஒரு காலத்துல நாங்கெல்லாம் குடிக்கிற தண்ணிக்கு கஷ்டப்பட்டுட்டிருந்தோம் இப்ப ஆடு மாடுங்க கஷ்டப்படுதுங்க. மாடுங்கெல்லாம் தொடர்ந்து செத்துப்போயிட்டே இருக்குது. எங்கேயுமே தண்ணி இல்ல. முன்னெல்லாம் மேச்சலுக்கு நெறையா எடமிருக்கும்; அங்கங்க குட்டையில தண்ணி கெடக்கும்; மேவுக்குப் போற மாடுங்க வயிறார தண்ணி குடுச்சுக்கும்; ஆனா இப்ப ரெண்டு வருசமா தண்ணியே இல்ல; அதனால காட்டுக்குள்ள போற மாடுங்கல்லாம் செத்துப் போகுது; மாடுங்க மட்டுமில்ல; யானைங்களும் சேந்து தான் செத்து போகுது…

காட்டுக்குள்ள போற மாடுங்கல்லாம் செத்துப் போகுது; மாடுங்க மட்டுமில்ல; யானைங்களும் சேந்து தான் செத்து போகுது…

நமக்கு ஏதோ தண்ணி ரெடி பண்ணிட்டாங்க சார்…முன்னெல்லாம் நாங்களும் இந்த ஆத்துத் தண்ணிய தான் குடிச்சிட்டுருந்தோம்; இப்போ கூட்டுக்குடிநீர் திட்டம் வந்ததுனால குடிக்க தண்ணி கெடைக்குது; ஆனா எங்க வாழ்க்கையே போச்சு; நாங்க பொழைக்கிறதுக்கான ஆதாரமான தண்ணியே இல்ல ரெண்டு வருசமா…இருக்குற தண்ணியில ஏதோ போட்டிங் விட்டு பொழச்சுக்குலாம்னு பாத்தா இந்த கலெக்டரும் போலீசும் விடமாட்றாங்க….

தண்ணி இருக்கப்ப போட்டிங் விட்டா அவுங்களுக்கு என்ன பிரச்சினை?

2015-ல நடந்த ஆக்சிடெண்டு-க்கு அப்புறமா எங்களுக்கு ஏக கெடுபிடி சார்….ஒரு படக ஆறு மாசம் வரைக்கும் தான் ஓட்டனும்; அப்புறம் ஏதேதோ வாங்கி போட்டுக்கனும்; இப்புடியா ஒரே கெடுபிடியா போயிட்டிருந்துச்சு…இவுங்க கெடுபிடிகள சமாளிக்க முடியாம நாங்கெல்லாம் ஒன்னு சேந்து கெடுபிடிகள தளர்த்தனும்னு 2016-ல பென்னாகரத்துல ஒரு போராட்டம் நடத்துனோம். அதுலேருந்து தர்மபுரி கலெக்டருக்கும், போலிசுக்கும் எங்களக் கண்டாலே ஆகமாட்டேங்குது… கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒரு சின்ன விபத்து ஒன்னு நடந்துச்சு அதுல எங்க மேல பொய் கேசு போட்டு உள்ள தள்ளிட்டாங்க! இதனால எங்க மக்கள் எல்லாரும் சேந்து போராட்டம் பண்ணாங்க! இதுல போலீசுக்கு எங்க மேல இருந்த கோவம் இன்னும் கூடிப்போச்சு….மீடியாக்காரங்கள வெச்சு ஒகேனக்கல்-ல தண்ணியே இல்லன்னு சொல்லி டூரிஸ்ட் காரங்கள வரவுடாம பண்ணுறாங்க!

ஊட்டமலையில் தண்ணீர் இருந்தும் பரிசல் செலுத்த அனுமதிக்காமல் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசு.

முன்னெல்லாம் 30 பஸ்ஸுக்கு மேல ஓடிக்கிட்டிருந்துச்சு ஆனா இப்ப அத பாதிக்கும் மேல கொறச்சுட்டாங்க! ஒருநாளு நாங்கெல்லாம் சேந்து போயி ஒகேனக்கல்ல தானே தண்ணியில்ல, ஊட்டமலையில இருக்க தண்ணியில பரிசல் ஓட்டி பொழப்ப நடத்துறோம்-னு கேட்டோம்…ஆனா நாங்கல்லாம் இங்க போட்டிங் விட்டா தண்ணி கலீஜ் ஆயிருதாம்! அதனால கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கப்படும்னு சொல்லி அனுமதி தரவேயில்ல! ஒகேனக்கல் அருவிக்கு ஊட்டமலை வழியாத் தான் தண்ணி போகுது; இங்கேயிருந்து போற தண்ணியெல்லாத்தையும் அருவிக்குப் போக விடாம, குடிநீர் திட்டத்துக்குத் திருப்பி விடுறாங்க; அதனால அருவியில சுத்தமா தண்ணியில்ல. கொஞ்சம் வெவரம் தெரிஞ்சவங்க தான் இங்க வர்றாங்க; ஆனா அவுங்களயும் வரவிடாம பண்ணிடுறாங்க.

அந்தப் பக்கமா நாங்க வண்டியில போனாலே எஸ்.ஐ-யும் ஏட்டும் மடக்குறாங்க, அன்னக்கி கூட வண்டியில போயிக்கிட்டு இருந்த என்ன மொடக்கி, கால்ல சைலன்சர் சுட்டு காயமாயிடுச்சு. மொடக்குனா கேசெல்லாம் போடுறதுல்ல…அன்னக்கி புல்லா அடிமை மாதிரி தான்..எடுபிடி வேல அப்புறம் வேற எதாவது வேல இருந்துச்சுன்னா அதையெல்லாம் செய்ய வெச்சுட்டு சாயங்காலம் தான் வெளியில விடுவாங்க! மொடக்கிருவாங்கன்னு பயந்துகிட்டே போட்டிங்கே போறதுல்ல.

இப்படியே தொடர்ந்து நடந்துகிட்டிருந்துச்சு…ஒரு நாள் சாயந்திரம் நான் ஏட்டையாகிட்ட போயி, நீங்க எதுக்குய்யா எப்ப பாத்தாலும் என்னய மொடக்குறீங்கன்னு கேட்டப்ப! அதுக்கு அந்த  ஏட்டய்யா “ நீங்கெல்லாம் போட்டிங் ஓட்டுறீங்க, அதனால தான் மொடக்குறோம்” னாரு. போட்டிங் போறப்ப புடிச்சு மொடக்குங்க சார்! ஆனா சும்மா வந்தாலே மொடக்குறீங்க! புடிச்சிகிட்டு நாளு முழுசா வேல வாங்குறீங்க! இனிமே வேலயெல்லாம் பாக்க முடியாது. வேணும்னா சம்பளம் கொடுங்க வேல செஞ்சு தர்றோம்னு சொன்னேன் பாருங்க, உடனே அவருக்கு கோபம் வந்துருச்ச…உள்ளே தள்ளிடுவேன், கேசு போட்ருவேன்னு மெரட்டுனாரு…ஒடனே நான் ‘சார்! நீங்க வேல நேரத்துல யூனிபார்மோட ஒக்காந்து தண்ணியடிச்சது, அப்பறமா எங்கள வேல வாங்குனதுன்னு ஒன்னு வுடாம போட்டோ வீடியோ எடுத்து வெச்சுருக்கேன்! எஸ்.பி ஆபிஸ்-கு போனுச்சுன்னா அவ்ளோதான்னு மெரட்டுனப்புறம்தான் இப்ப மொடக்குறதுல்ல…

சரி, எப்படி வாழ்க்கைய ஓட்டுறீங்க?

மொத்தமா பரிசல் ஓட்டுறவங்க 400 பேரு கிட்ட இருக்கோம்…ஒன்னு ரெண்டு பேரத்தவிர யாரும் போட்டிங் போறதுல்ல! அதனால எங்கள்ல நெறையா பேரு கல்லு ஒடக்க போறோம். பெங்களூரு பக்கம் வாரம் முழுசா போயிட்டு வாரக்கடைசியில வருவோம். வேல எதாவது கெடைக்குமான்னு அலையுறதுக்கே 50, 100 செலவாகுது! வேல கெடச்சா தான் உறுதி

பரிசல் தொழிலும் இல்லாமல் போனதால் ஆண்கள் பெரும்பாலும் கல் உடைக்கும் வேலைக்குப் போகின்றனர்.

இந்த மாதிரி வறட்சிய பாத்துருக்கீங்களா?

எங்க அப்பா அம்மா கூட இது மாதிரி வறட்சிய பாத்ததில்லங்குறாங்க… ஆறும், தண்ணியுந்தான் எங்க வாழ்க்கையே….மீனெல்லாம் புடிச்சோமுன்னா ஒரு மீனு மட்டும் ஒன்னரை கிலோ, ரெண்டு கிலோ தேறும்…வீட்டாளுகிட்ட கொடுத்தா, அத வறுத்து டூரிஸ்ட் வர்றவுங்க கிட்ட வித்து கொஞ்சம் செலவுக்குக் காசு கெடைக்கும். இப்ப ஒகேனக்கல்ல பாத்தீங்கன்னா, வளர்ப்பு கெண்ட மீன வெச்சு விக்க வேண்டிய நெலமயாயிடுச்சு.

வறண்டு போன ஒக்கேனக்கல் மெயின் அருவி

நிவாரணமெல்லாம் கொடுத்தாங்களா?

சார்! நம்மகிட்டேருந்து காசு புடுங்காமயிருந்தா போதும்…நம்மல்லாம் இருந்தாலும் நிவாரணம் கெடையாது, செத்தாலும் நிவாரணம் கெடையாது…போட்டிங் போறதுக்கு லைசென்ஸ் வாங்கி வெச்சுருக்கோம்; ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி சொந்த செலவுல போட்டு செஞ்சுக்குறோம்.. நம்மள போட்டிங் ஓட்ட விட்டா பொழச்சுக்குவோம், ஆனா அதுக்குத்தான் அனுமதி தர மாட்டேங்குறாங்க…ரேசன்-ல பகுதிக்குப் பகுதியாத் தான் தர்றாங்க, கொடுக்குற பொருளும் தரமாயில்ல. கோதுமையே இருப்பு இல்லங்குறாங்க! களி தின்னாலும்னு பாத்தா வெல ரொம்ப ஏறிப்போச்சு.

திருவிழா நடத்தி முடிச்சிட்டீங்களா?

இந்த மாச கடைசியில தான் இருக்குது…கையில யாருகிட்டயும் காசு இல்ல…அதான் என்ன பண்ணலாம்னு முழிச்சிகிட்டிருக்கோம்.

புள்ளங்க படிப்புக்கெல்லாம் என்ன பண்ணுறீங்க?

பத்தாம் கிளாஸ் வரைக்கும் இங்க இருக்குது. 12-ம் வகுப்புக்குன்னா பென்னாகரம் போகணும். காலேஜின்னா தர்மபுரிக்குத் தான் போகணும்.

ஒரு கிலோ மீட்டருக்கு தண்ணீர் இருக்கும் ஊட்டமலை
மேய பச்சையின்றி தரையை மேயும் மாடு
ஒக்கேனக்கல் கழிவு நீரேற்றும் நிலையம்
ஒக்கேனக்கல் கழிவு நீரேற்றும் நிலையம்
காட்டில் பட்டி மாடு
சின்னாற்றங்கரையில் பட்டுபோயுள்ள மரங்கள்
நீர் இல்லாததால் கவிழ்க்கப்பட்டுள்ள பரிசல்கள்

செய்தி, படங்கள் – வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க