Tuesday, April 13, 2021
முகப்பு செய்தி ஆயிரம் குடும்பத்துக்கு ஒரு பைப்பு போட்டா எப்புடிப்பா ?

ஆயிரம் குடும்பத்துக்கு ஒரு பைப்பு போட்டா எப்புடிப்பா ?

-

 தருமபுரி அரூர் பகுதியில் உள்ள முத்தானூர் என்ற கிராமத்திற்க்கு சென்றோம். அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊரில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் திருப்பூர், கோவை, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றுவிட்டனர். மாலை 6 மணியானாலும் பெண்கள் தண்ணீர் பிடித்த வண்ணம் இருந்தனர். ஊர் முக்கியஸ்தரான முனிய கவுண்டர்(வயது 80) வறட்சி குறித்து தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

எங்க அம்மா காலத்துலல்லாம் ரெண்டு ஜாதி ஆடுங்களும் (வெள்ளாடு, செம்மறியாடு) வாங்கி வளத்தாங்க…எங்க அம்மா ஆம்பள மாதிரி வேல செய்யும். அதுவே மேவுக்கு (மேய்ச்சலுக்கு) ஓட்டிட்டு போயி, திரும்ப வர்றப்ப எல  தலையெல்லாம் பிச்சுட்டு வந்து பட்டியில அடைச்சுட்டு வீட்டு வேலயும் பாத்துக்கும்! பட்டிக்காவலும் அம்மாவே பாத்துக்கும்!

முனிய கவுண்டர்

இப்ப ஆடுகளுக்கு மேவு இல்லாததுனால ஒன்னு ரெண்டு ஆடுகளக்கூட வெச்சு சமாளிக்க முடியல. தண்ணிப் பிரச்சினை வந்ததுனால இப்ப இன்னும் செரமந்தான் கூடிருச்சு.

எனக்கு 3 ஆம்பளப் பசங்க, 12 ஏக்கர் நிலமிருக்குங்க! மொத மவன் 3 ஏக்கர் நெலத்த பங்கு பிரிச்சி வித்துட்டு ஊர விட்டு போயிட்டான். கடைசி மவன் மிலிட்டரில இருக்கான். நடுவுல உள்ளவனோட தான் இப்போ இருக்கேன். மாடு வாங்கி விக்கிற வியாபாரம் பண்றேன். இப்ப கூட இந்த வறட்சியெல்லாம் பாத்து போகப்போக நெலம இன்னும் ரொம்ப மோசமாகப் போகுதுன்னு நெனச்சு வீட்ல வெச்சுருந்த 2 கறவை மாடுகளையும் கிருஷ்ணகிரியாண்ட உள்ள ஒரு சந்தையில வித்துடலாமுன்னு ஓட்டிட்டு போனேன். அங்க போனா நமக்கு பழக்கமான ஒருத்தரு, சந்தைக்குப் போனா வெல கம்மியாத்தான் வரும் அதனால இங்கயே நல்ல வெலைக்கு வித்துடலாமுன்னு சொன்னாரு. 2 கறவ மாடுகளயும் 41,000 -க்கு வித்துட்டேன். 50,000 -ரூவாக்கி வாங்கிருந்தாலும் 9,000/-ரூவா நட்டத்த பாக்காம அன்னக்கி நான் வித்ததுனால தப்புச்சேன். இன்னய நெலமையில ஒரு  நல்ல கறவ மாடு 10,000 -ரூவாய்க்கு கூட போக மாட்டேங்குது. கையில் 11,000 -த்த வாங்கிட்டி மீதிய அப்பறமா தர்றேன்னாங்க, சரின்னு வந்துட்டேன்.

ஏற்கனவே மோடி கொண்டாந்த நடவடிக்கையினால மாட்டு வியாபாரம் சுத்தமா மொடங்கிப் போச்சு, இப்ப வறட்சி வேற. எனக்கு வெவரம் தெரிஞ்சி இது மாதிரி வறட்சிய பாத்ததேயில்ல. மழ பேஞ்சு ஆறு, குளம்-லாம் நொம்புனாத் தான் நாங்க தொடர்ந்து இங்க வாழ முடியும்.

உங்க ஊர்ல தண்ணி பிரச்சினை இல்லையா?

நீ வேற தம்பி, 25 நாளக்கி முன்னாடி வந்துருந்தன்னா இங்க மக்கள் பட்ட பாடு தெரிஞ்சிருக்கும். போன மாசத்துக்கு (ஏப்ரல் 2017) முன்னாடி வரைக்கும் இங்க 5 போரு போட்டு அதுல கெடக்கிற தண்ணிய வெச்சு டேங்குல ஏத்தி சமாளிச்சிட்டிருந்தோம். போன மாசத்தோட போரு தண்ணியெல்லாம் போச்சு, கெணறும் வத்திப்போச்சு; தண்ணிப்பிரச்சினை ஆரம்பிச்சிருச்சு..

வற்றிப்போயுள்ள கிணறு

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர்த்திட்டக் குழாய் எங்களுக்கு அடுத்த ஊர்ல உள்ள தலித் காலனி கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குது. அப்ப நாங்க கேட்டிருந்தா எங்க ஊருக்கும் கனெக்‌ஷன் குடுத்துருப்பாங்க. அவிங்ககிட்ட போயி கேட்டா பிரச்சினையாயிடும்னு சொல்லிட்டு ஊர்க்காரங்க கேக்க யோசிச்சாங்க. இந்த நெலமையில வறட்சியும் வெயிலும் அதிகரிச்சதுனால மக்களுக்கு ரோட்ட மறிக்கிறத தவிர வேற வழியில்ல. அதிகாரிங்க வந்து ஒங்க தண்ணி பிரச்சினைய தீத்துடுறோம்னு சொன்னாங்க. மக்கள் மசிஞ்சு கொடுக்காம அதெல்லாம் முடியாது உடனடியா பைப் கனெச்சன கொடுங்க, டேங்க்ல ஏத்துறத பத்தி அப்பறமா யோசிப்போம்னு சொன்னவுடனேயே தண்ணி பைப் கனெக்சன் கொடுத்துட்டாங்க. இப்ப குடி தண்ணி பிரச்சினை கொஞ்சம் தணிஞ்சிருச்சு. பகல்ல புல்லா பொம்பளங்க புடிச்சிக்குவாங்க, ஆம்பளங்கல்லாம் ராத்திரி நேரத்துல வந்து புடிச்சிட்டு போவாங்க.

உங்க ஊர்ல என்ன விவசாயம் பண்ணுவீங்க?

இப்ப நெல்லு, கரும்பு, குச்சி(மரவள்ளிக்கிழங்கு), மஞ்சள் பயிரிடுறோம். முன்னல்லாம் கேவூர் (கேழ்வரகு), சோளம், சாமை தாங்க பயிரிட்டோம். இப்பல்லாம் அதுக்கு எடமில்லாம போச்சு. எங்க ஊர சுத்தி 4 ஏரி இருக்கு, அதுல ரெண்டு ஏரி நொம்பிட்டாலே ரெண்டு போகம் வெளச்சல் இருக்கும். இந்த ஊர்லயே இப்ப ஒன்னு ரெண்டு கெணத்துல தான் ஊத்து இருக்கு, அதுவும் குடிக்கிற அளவுக்குத் தான் தண்ணி கெடக்கு. ஊத்தே சொரக்க மாட்டேங்குது. இந்நேரம் ரெண்டு ஒழவு மழை பெஞ்சிருந்தா கரும்பு, மத்த பயிரெல்லாம் காப்பாத்திருக்கலாம். இப்பல்லாம் திடீர் திடீர்-னு ஒரே மழையா பெய்யுது அப்பறமா காஞ்சு போயிருது.

வறண்டு போயுள்ள முதானூர் ஏரி

வறட்சி நிவாரணமெல்லாம் கெடைக்கலையா?

வெளங்கிடும் இந்த கெவர்மெண்டுகிட்ட.. முன்னெல்லாம் வறட்சின்னா வயக்காட்டுக்கு அதிகாரிங்கல்லாம் வந்து என்ன வெவசாயம் பண்ணிருக்கோம்னு கணக்கெடுத்துட்டு போவாங்க, இப்பல்லாம் ஒரு பயலும் வர்றதில்ல. நாட்டுல தான் வறட்சியே இல்லன்னு சொல்றாங்களே. புலிப்படைங்கள்லாம் ஒன்னா சேந்து ஒரு கட்டுப்பாட்ல நின்னா தான் இவிங்கள எதுக்க முடியும், நம்ம தான் ஆளுக்கொரு திசையில அடிச்சிக்கிட்டிருக்கோமே அப்பறம் என்னத்த பண்றது.

80 வயசாயும் இன்னும் அலைஞ்சு திருஞ்சி வேலபாக்க முடியுதா?

நான் சின்ன புள்ளயா இருக்கப்ப சாமச்சோறு, ஆரிமாவு கஞ்சி, சோளக்கூழ், கம்மங்கூழ்-னு தான் சாப்புட்டு வளந்தேன். சோறு-ங்குறது எப்பன்னா திருவிழா காலத்துல மட்டும்தான். ஒருவேளை அதான் ஒடம்ப இப்படி கெட்டியா வெச்சுருக்கான்னு தெரியல. கூடவே நிம்மதியான வாழ்க்கையும் இருந்துச்சு. அதனால தான் இன்னும் நடை ஒடையா இருக்கேன். என்னோட சின்னப் புள்ளங்களாம் குச்சி ஊனி நடக்குறத பாத்தா மனசுக்குக் கவலையா இருக்கு. என்ன பண்ண எல்லாமே மாறிப்போச்சு

காலைல எழுந்திருச்சா ஆடு,மாடுக்கு புல்லு வாங்கிபோடுறது, மேவுக்கு விட்டு தண்ணி காட்டுறதுன்னு வேலயெல்லாம் முடிச்சிட்டு இந்தப் பக்கமா வந்துருவேன். வீடு ஒட்டு வீடுங்குறதுனால வீட்டுக்குள்ள இருக்க முடியுறதில்ல. சாயந்தரமாத்தான் திரும்பிப்போவேன்.

இன்னும் நாலஞ்சு ஆடுகள வாங்கிப்போடலாம்னு பாத்தா மேவு இல்ல, அதான் யோசிக்கிறேன்.

விவசாயம் இல்லன்னு ஆச்சு, உங்க ஊர் மக்களுங்க பொழப்புக்கு என்ன பண்றாங்க?

வாலிப பசங்க பாதிபேரு வேல தேடி வெளியூறு போயிட்டாங்க, மத்தவங்க இங்க இருக்குற அம்மன் கிரானைட் கம்பெனில வேலைக்குப் போறாங்க. அங்க ஒரு 200 , 300 பேருக்கு வேல கெடக்கிது. அத வெச்சு பொழப்ப நடத்திக்கிறோம்.

ராஜேஸ்வரி(50) – முத்தானூர்

வயசான காலத்துல இந்த தண்ணிய தூக்கியார ரொம்ப சிரமமா இருக்குப்பா. குழாய் பைப்ல நிக்கிர கூட்டத்துல மல்லாடி தண்ணி புடிக்க முடியுமா, 1000 குடும்பத்துக்கு ஒரு பைப்பு போட்டா எப்புடிப்பா, அதுனால அந்த குட்டைல கெடக்குற கொஞ்ச தண்ணிய கைல அள்ளி மோந்தாந்தேப்பா இந்த தண்ணிய. தண்ணிக்கு ரொம்ப கஷ்டம்பா, கரும்பு 1 ஏக்கருக்கு போட்டு ஒன்னுமேயில்லாம போயிடுச்சு. அதுதா மாட்டுக்கு இப்போ தீவனம்.

ராஜேஸ்வரி

நிவாரணமெல்லாம் தர்றோன்னு வந்து சொல்லிட்டு போனாங்க அதிகாரிங்கெல்லாம். வந்தாத்தான் நிச்சியம். கரும்பு சக்க காலியானா என்ன பண்ணப்போரோம்னு தெரியலைப்பா.  பெரியவன் திருப்பூர்ல வேல பாக்குறான் அவன் அனுப்புற காசுல தாம்பா குடும்பம் ஓடுது. சின்னவன் இப்பதான் பாலிடெக்னிக்கு படிச்சிட்டிருக்கான். ரேசன் அரிசிய வெச்சுதான் பொழப்ப ஓட்டிகிட்டிருக்கோம். கரும்ப நம்பி வீட்டு வேலைய ஆரம்புச்சோ இப்போ அதை பாதீல நிறுத்திட்டோம். மழை கைகொடுக்கலப்பா, கவர்மெண்ட்டா பாத்து எதாவது பன்னாதான்பா உண்டு. ஒங்களுக்கு கொடுக்குறதுக்கு ஒன்னுமே இல்லயேன்னு தான் எனக்கு இப்ப கவலையாருக்கு என்று வருத்தப்பட்டார்.

கருகிப் போய் மடுகளுக்கு கடைசித் தீனியாக மிஞ்சியுள்ள கரும்பு

இலட்சுமணன் – T.அம்மாபேட்டை

பேருந்தில் அமர்ந்திருந்த போது அருகில் இருந்த சகபயணி ஒருவரிடம் விசாரிக்கையில் அவர் பெயர் லட்சுமணன் என்றும் சொந்த ஊர் T.அம்மாபேட்டை என்றும் கூறினார்.

நீர் இன்றி வற்றிப்போயுள்ள கிணறு

மேலும் அவர் பேசுகையில் “எங்க ஊருக்கப்பால உள்ள ஆறத்தாண்டுனா திருவண்ணாமலை மாவட்டம். எங்க ஊருதான் தருமபுரியிலேயே கடைசி ஊரு. நான் சின்னப்புள்ளயா இருந்தப்ப ஆத்துல தெனமும் குளிப்போம், மீன் புடிச்சி தின்னுவோம், இப்ப என் புள்ளங்களுக்கு அந்த வெவரமே தெரிய வாய்ப்பிலாம போயிடும் போல. நான் 15 வருசமா மெட்ராஸ், பெங்களுரூன்னு பொழைக்க போயிருந்தேன். போர்வெல்ஸ் கம்பெனில வேல பாத்தேன். ஊர்ல் 3 ஏக்கர் நெலமிருக்கு; எல்லாம் வானம்பாத்த பூமியா, அதனால ஒன்னும் பெருசா வெவசாயமில்ல.

ஒரு நாலஞ்சு வருசமா பொட்டிக்கடை வெச்சு யாவாரம் பண்ணிட்டிருக்கேன். தண்ணி பிரச்சினை தான் பெரிய பிரச்சினையாயிருக்கு. இருந்த மாடெல்லாத்தயும் வித்துப்புட்டோம். கடையில வர்ற காச வெச்சு ஏதோ ஓட்டிக்கிட்டிருக்கோம்.

-வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க