கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியான புதுப்பேட்டைக்கு அருகில் உள்ள, திருத்துறையூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாயிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் உள்ளனர். எப்போது விடியும் விதைக்கலாம் அறுக்கலாம் என்று இருந்த, இந்த உழைக்கும் மக்களின் சிந்தனையை, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் எப்போது விடியும் பணமுடிச்சை அவிழ்க்கலாம் குடிக்கலாம் என்று சிந்திக்க வைத்து தன்னுடைய நிர்வாகத் திறனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தது.
விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த மக்கள் இன்று அரசால் உருவாக்கப்பட்ட குடிமகன்களுக்கு வாட்டர்பாக்கெட் விற்பது, வேர்க்கடலை விற்பது, கருவாடு வறுப்பது, மீன்வருவல், ஆட்டுக்கறி மற்றும் குடல் வறுவல், மாட்டுக்கறி வருவல் மற்றும் சூப், பன்றிக்கறி வறுவல், பானிபூரி, சிலர் முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைத்து இரவு பத்துமணிக்குமேல் மன்டைகாய்ந்து ஓடி வருபவர்களுக்கு அதிக விலைவைத்து விற்பது, காலிபாட்டில்களை பொறுக்குவது, பாட்டில்களில் உள்ள மூடிகளை பொறுக்குவது என மக்களின் தொழில்முறையாக மாற்றப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அமைந்துள்ள தெருக்காரர்கள் மட்டுமே மேற்கண்ட தொழிலை நடத்த இடம் பிடித்துக் கொண்டனர், மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை என்ற ஏக்கமும் அப்பகுதி மக்களிடம் வெளிப்படுகின்றன.
சுமார் இரண்டான்டிற்கு முன் இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து அலுத்துபோய், அனைத்து மக்களையும் திரட்டி மதுக்கடை எதிராக முற்றுகையிடப்பட்டது. அப்போது புதுப்பேட்டைக் காவல் துறையினர் மூர்க்கமான முறையில் தாக்கி, போராடிய மக்களை கலைத்தனர், அஞ்சி ஓடிய மக்களை வீடு வீடாக நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடுமையாக தாக்கி கைது செய்தனர். இப்பகுதியில் டாஸ்மாக்கிற்கு இடமளித்து அப்பாவிகளான கூலி விவசாயிகளையும் மாணவர்களையும் சீரழித்தவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள இராதாகிருஷ்ணன், இவர் அதிமுக-வை சார்ந்தவர். டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய திமுக-வை சார்ந்த ஒருவரின் கரும்பை வெட்டி வெளியே எடுத்துவர வழிவிடாமல் தடுத்துள்ளார் இந்த வழக்கறிஞர். இந்த நடவடிக்கைகளினால் மிரண்டுபோன மக்கள் பிளவுபட்டு தங்களுக்குள்ளே மோதிக்கொண்டது டாஸ்மாக்கிற்கு ரானாட்டா முறுக்குக் கம்பியால் அடித்தளம் போட்டதாய் அமைந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் குடிவெறிகொண்டு அரசே ஆடுகிறது தாய்மார்களே டாஸ்மாக் கடையை விளக்குமாற்றால் அடித்துவிரட்டுங்கள் என்ற சுவரொட்டியை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் சத்தியக்குமார், தோழர் செந்தமிழ் மூலமாக இப்பகுதியில் ஒட்டப்பட்டது. அப்போது மிகுந்த வரவேற்பு இருந்தது, பெண்களே இவர்களை அழைத்து அங்கு ஒட்டுபா இங்கு ஒட்டுபா என உரிமையோடு கேட்டுக்கொண்டனர். CPI கட்சியை சார்ந்த ஆதவன் எங்களால் முடிய வில்லை நீங்கள் செய்தால் சந்தோஷம் தான் என்றார்
இரண்டு வாரம் கடந்த பின்னர் இதே பகுதிக்கு சென்று பார்த்ததில் நாம் ஒட்டிய சுவரொட்டிகள் எதுவும் கிழிக்கப்படவில்லை. இந்த ஊரில் இவ்வளவு நாட்களாக ஒரு போஸ்ட்டர் கிழிக்காமல் இருக்கிறது என்றால் அது உங்கள் போஸ்டர்தான் என மகிழ்ச்சியோடு கூறினர். தொடர்பு எண் கொடுத்த அப்பகுதி இளைஞர்களை சந்தித்து நாங்கள் ஒட்டிய சுவரொட்டி எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, வாசகம் எதுவும் சரியில்லை, படித்தால் வீரம் பீய்ச்சி அடிக்கவேண்டாமா, மொக்கையாக இருக்கிறது என்றும், நாங்கள் கொடுக்கும் வாசகத்தைப் போட்டுப் பாருங்கள் என அவர்கள் பேசியது தோழர்களையே சற்று திணர வைப்பதாக இருந்தது.
அரசு இந்த கிராமத்தை சுமார் 70 கிராமங்களுக்கு ஊத்திக்கொடுக்கும் மதுக்குடமாக வைத்துள்ளது. ஆதலால் மொத்த மக்களையும் திரட்டி டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் முன்வந்தால் மொத்த மக்களையும் ஒன்று திரட்டி உங்களிடம் ஒப்படைக்கிறோம். அதுமட்டும் அல்லாமல் இந்த மதுக்கடையை மூடிய பின்னரே நாங்கள் இந்த ஊரைவிட்டுப் போகிறோம் என்று தோழர் சத்தியகுமார் தலைமையில் சென்ற தோழர்கள் பேசியதைக் கேட்டதும், அவர்கள் நாங்கள் பாமக-வில் உள்ளோம், மனுகொடுத்தும் மூடவில்லை, வழக்குபோட்டும் மூட முடிய வில்லை, நாங்கள் படித்துள்ளோம் எங்களுக்கு சென்னையில் வேலை உள்ளது, எங்கள் மீது வழக்கு வந்தால் என்ன செய்வது என்று கூறி வீர முழக்கம் தருகிறோம் என்றவர்கள் ஒவ்வொருவராக அம்மா கூப்பிடுறாங்க அப்பா கூப்பிடுறாங்க என்று கூறி இடத்தைக் காலிசெய்து கொண்டனர்.
பிறகு அடுத்த கட்டமாக சத்தியகுமார் தலைமையில் அன்குசெட்டிப்பாளையம் மாணவர்கள் தோழர் ஆகாஷ், தோழர் செந்தமிழ், தோழர் கலைமணி, தோழர் ஹரி, தோழர் தரணி, தோழர் விஜயராஜ் இவர்கள் குழுவாக சென்று
மூடு டாஸ்மாக்கை !
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே
அடிக்கவரும் போலிசுக்கு அஞ்சாதே
மூடுகடையை எவன் வருவான் பார்ப்போம்
நம்ம ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது, அடிச்சி தூக்கு!! – என்ற முழக்கத்தின் அடிப்படையில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
அப்போது மாணவர்களாகிய நாங்கள் எங்கள் ஊரில் இருந்த டாஸ்மாக்கை அடித்து விரட்டிவிட்டோம், நீங்களும் வாருங்கள் மாணவர்கள் நாங்கள் இருக்கிறோம் எங்களின் தலைமையில் திரளுங்கள் யாராலும் மூடமுடியாத கடையை நாங்கள் மூடுகிறோம். எங்களைப்போன்ற மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர் என வீச்சாக கடுமையான வெய்யலிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது ஏராளமானவர்கள் மாணவர்களாகிய நீங்கள் வந்துவிட்டீர்கள் கண்டிப்பாக நாங்கள் வருவோம் என்று மக்கள் உற்சாகமாக கூறினர். சிலர் போராட்டத் தேதியே இல்லாமல் உள்ளது, என்று போராட்டம் என்று ஆர்வமாக கேட்டனர். ஒருபெண் அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்து உங்களைப் பார்த்தால் எனக்கு பெருமையாக உள்ளது என பெருமிதமாக கூறினார்.
கடந்த 21 05 2017 அன்று மாலை சுமார் 500 பேர், மக்கள் அதிகாரத்தின் துண்டு பிரசுரத்தாலும் மாணவர்களின் பிரச்சாரத்தாலும் உந்தப்பட்டு, எந்த கட்சிகளின் தலைமையும் வேண்டாம் மக்களே ஒன்றிணைந்து போராடுவோம் என முடிவெடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர். அப்போது அங்குவந்த தாசில்தார் 15 நாட்களுக்குள் மூடிவிடுவதாக கூறினார், அதற்கு மக்கள் மூடுவது என முடிவு செய்த பிறகு அதை இப்போதே மூடுங்கள் என உறுதியாக நின்றனர். மக்களின் உறுதியையும் தமிழகத்தின் நிலையையும் கண்டுகொண்டிருக்கும் அரசு அப்போதே டாஸ்மாக் கடையை மூடுவதாய் மனமில்லாமல் அறிவித்து மூடியது.
தகவல்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
கடலூர்