‘வளர்ச்சியின்’ நாயகன் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட தமது முதல் பயணத்தின்போது, இந்தியப் பெருமுதலாளிகளில் ஒருவரும், தன்னைப் பிரதமராக்கியவருமான கவுதம் அதானியை உடன் அழைத்துச் சென்றார். சரியாகச் சொல்வதென்றால், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கலீலி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்களில் ஒன்றான சார்மிக்கேல் சுரங்கத்தைப் பேரம் பேசி முடித்துக் கொடுப்பதுதான் அப்பயணத்தின் பிரதான நோக்கம்.
அந்தச் சுரங்கத்தின் நிலக்கரி தரம் குறைந்தது என்றும், அதனை எரிப்பதால் கடுமையான சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சர்வதேசத் தரத்திற்கு உகந்ததல்ல என்பதனால் விற்பனை செய்ய முடியாது என்றும் கூறி, அதானியின் இத்திட்டதிற்கு கடன் கொடுக்க எந்தத் தனியார் வங்கியும் முன்வரவில்லை. அதைவிட முக்கிய காரணம், அதானி குழுமம் ஏற்கெனவே பல்வேறு வங்கிகளில் சுமார் 72,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கிறது. ஆகையால், ஆஸ்திரேலிய பயணத்தின் போது பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவையும் கையோடு அழைத்துச் சென்று, அதானிக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் கடன் தருவதற்கும் ஏற்பாடு செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு வந்தார் மோடி.
ஆஸ்திரேலியாவில் அதானியின் நிலக்கரிச் சுரங்கம் அமையவுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் இச்சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலக்கரிச் சுரங்கத்தால் அருகில் உள்ள பவளப்பாறைகளுக்கும், நிலத்தடி நீருக்கும், சுற்றுச்சூழலுக்கும், அருகில் உள்ள விவசாயப் பகுதிகளுக்கும் ஏற்படவிருக்கும் பாதிப்பைக் கணக்கில் கொண்டு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், எதிர்ப்புகளையெல்லாம் மீறி இச்சுரங்கத்தைத் தொடங்கிவிடத் துடிக்கிறார் அதானி.
ஆஸ்திரேலிய அரசின் மீது அதானி செலுத்துகின்ற செல்வாக்கைப் பார்த்து அதிர்ச்சியுற்ற ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், சுரங்கம் வரவிருக்கும் பகுதியைச் சேர்ந்த கால்நடை விவசாயியுமான ப்ரூஸ் க்யூரி என்பவர், நாம் எதிர்கொண்டிருப்பது என்ன மாதிரியான கம்பெனி என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும், அதானிக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவைதானா என்று தெரிந்து கொள்வதற்காகவும் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இங்கு குஜராத் மாநிலத்தில் உள்ள அதானியின் துறைமுகம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள முந்த்ரா, ஹசீரா ஆகிய கிராமங்களைப் பார்வையிட்டு அங்குள்ள உள்ளூர் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துமிருக்கிறார்.
நான் கண்ட காட்சிகள், என் முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தன. முந்த்ராவிலும் ஹசீராவிலும் உள்ள சிறு கிராமங்களுக்குச் சென்றேன். விவசாயிகளையும் மீனவர்களையும் சந்தித்தேன். எல்லாம் எங்கள் கதையைப் போலவே இருந்தது. வேலை தருகிறோம், உள்ளூர்ப் பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, பெரிய நிறுவனங்கள் உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்ற வழக்கமான கதைதான். கடைசியில் உள்ளூர் மக்களின் அழிவுதான் மிச்சமாக இருக்கும்.
- நிலத்தடி நீரை மாசுபடுத்தியது, சட்டவிரோதமாக நிலத்தைப் பறித்துக் கொண்டது, சதுப்புநிலக் காடுகளை அழித்தது என அதானியின் அட்டூழியங்களால் அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அதானி குழுமம் துறைமுகம் கட்டத்தொடங்கியதிலிருந்து அப்பகுதியில் கிடைக்கும் மீன்களின் அளவு 90% வரைக் குறைந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கிடைக்கும் மீன்களும் துர்நாற்றம் அடிப்பவையாகவும், மோசமான சுவை கொண்டவையாக இருப்பதாகவும் மீனவர்கள் கூறிகின்றனர்.
- முந்த்ரா பகுதியில் அதானியின் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வரும் கரித்துகள்களால் அப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழக்கமாகப் பயிரிடும் ஆமணக்கு, பருத்தி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கிருக்கும் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் தங்களது வாழ்வாதாரமான நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதையும், நீர்நிலைகள் தடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
- அதானியின் நிலக்கரி திட்டப் பகுதியின் அருகாமையில் வசித்தவர்கள் அத்திட்டத்தால் இழந்ததே அதிகம். பலரும் அவர்களது வாழ்வாதாரங்களை இழந்திருக்கின்றனர். சிலர் நான் ஆஸ்திரேலியாவில் செய்து கொண்டிருப்பதைப் போல, இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்று அதானிக்கு எதிராக சட்டரீதியாகப் போராடியிருக்கிறார்கள். எனினும், சிறிய அளவு நட்டஈடே கிடைத்திருக்கிறது, இன்னும் சிலரோ அப்பகுதிகளில் இருந்து வலிந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதானியின் இந்திய ஆக்கிரமிப்பையும், அதன் மூலமான சீரழிவையும் பார்க்கும் போது அதானியின் நிலக்கரிச் சுரங்கத்தால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஏற்படவிருக்கும் விதிமீறல்களையும், நிலத்தடி நீர் அழிவையும் எதிர்பார்த்து தாம் அஞ்சுவதாகக் குறிப்பிடுகிறார் ப்ரூஸ் க்யூரி.
ப்ரூஸ் க்யூரியைப் போன்றே, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்களான கிரெக் சாப்பல், ஐயன் சேப்பல் சகோதரர்களும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக அதானிக்கு எழுதியுள்ள திறந்த மடலில், ’லான்செட்’ எனப்படும் முன்னணி மருத்துவ இதழ் தனது அறிக்கையில் அதானியின் சார்மிக்கேல் சுரங்கத்தால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும் என எச்சரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய மக்களின் விருப்பத்தை மீறி அரசின் துணையோடு அங்கு நிலக்கரிச் சுரங்கத்தை நிர்மாணித்தால், அது ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பைக் குலைப்பதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்ச்சிக்கு கிரிக்கெட் ஒரு காரணமாக இருப்பதால், இந்த முதலீட்டைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தாங்கள் மிகுந்த மரியாதையுடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடுகிறார்கள் சாப்பல் சகோதரர்கள்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத, புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளில் முதலீடு செய்யுமாறும் அதானிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் சாப்பல் சகோதரர்கள். இராமநாதபுரம் சூரியஒளி மின் திட்டத்தில் அதானி முதலீடு செய்திருப்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதானி அத்தகையதொரு முதலீடு செய்ய வேண்டுமானால், ஜெயலலிதாவைப் போல ஒன்றுக்கு இரண்டு விலை தரக்கூடிய ஒரு முதல்வரோ, அல்லக்கை வேலை பார்க்கின்ற ஒரு பிரதமரோ அங்கே இருப்பது அவசியம்.
-அழகு
Modi & Co not only ruining INDIA but foreign countries too. People of foreign countries are well informed and are aware of the environmental impacts. But take case of India no-one bothers to ask question to this DICTATOR. If someone does they will be in JAIL
இதுல என்ன அம்பலப்படுத்துதல் இருக்கு ?
மோடி மட்டும் அல்ல மற்ற நாட்டு அதிபர்களும் பிரதமர்களும் வேறு நாடுகளுக்கு போகும் போது கூடவே தொழில் அதிபர்களையும் அழைத்து செல்வார்கள்…
இதில் நீங்கள் சொல்லாத விஷயம் ஆஸ்திரேலியா அரசு அதானிக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்கி இருக்கிறது, ஆஸ்திரேலியா அரசு வெளிநாட்டு கம்பெனிக்கு இப்படி கடன் கொடுக்க கூடாது என்று அங்கே எதிர்க்கிறார்கள். அடுத்தது அதானி குழுமத்தினர் சுத்தமான நிலக்கரியை தான் அங்கே இருந்து எடுக்க போகிறார்கள்.
http://www.theaustralian.com.au/opinion/columnists/peter-van-onselen/why-shorten-opposes-adani-coalmine-and-palaszczuk-backs-it/news-story/b89c741f99b3129df5ef3747d89c9543
சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத அணு உலைகளை தான் நம் நாடு முழுவதும் நிறுவ வேண்டும்… நிலக்கரி மூலம் செயல்படும் மின் நிலையங்கள் பெரும் கேடு விளைவிப்பவை.
மனிகண்டன் அவர்களே, அதானிக்கு வக்காலத்து வாங்க, எல்லா நாட்டு பிரதமர்களையும் வம்புக்கு இலுக்குறீர்கள் பரவாயில்லை. இந்தியாவுக்கு வருவோம். போலி சுதந்திரத்துக்கு பின் இந்தியாவில் நம்ம நேருகாலம் தொட்டே குரோனி கேப்பிட்டலிசம் இயங்கி வந்திள்ளது. அவருக்கு பிர்லா என்றால் மோடிக்கு அதானி அவ்வளவுதான் வித்தியாசம்.
ஆரோக்கியா பால் விளம்பரத்துக்கும், தாங்கள் கூறும் சுத்தமான நிலக்கரியின் பொருளுக்கும் வேறுபாடுகள் குறைவுதான்.
அதானி-யின் சுரங்கம் மற்றும் அதற்காக போடப்படும் ரயில் பாதை அவற்றின் environmental impact-ஐ பரிசலீத்த “Climate Council”இதன் பின் விளைவுகல் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறியுள்ளதோடல்லாமல் இதை உடனடியாக நிறுத்த வலியுருத்தியுள்ளது. மேலும், வேலைவாய்ப்பை பற்றி பீத்திக்கொள்ளும் அளவு ஒன்னுமில்லை. இந்த கேடுகெட்ட சுரங்கத்தின் சீர்கேட்டால் மீன்பிடி, சுற்றுலாத்துறையில் சுமார் 70,000 பேர் வேலை பரிபோகும் நிலையும் உருவாகுமாம். வேலைவாய்ப்பு போனால் போகட்டும், அது கஞ்சிக்கில்லாதவன் கவலை. அந்த பவளப்பாறை அழிப்பு ஆஸ்திரேலியாவுக்கான சீர்கேடு மட்டுமல்ல, உலகத்துக்கானதும் கூடத்தான் என்று செருப்பால் அடிக்கிறது.
வினவின் கருத்தில் தவரேதும் இல்லை.
http://www.huffingtonpost.com.au/2017/04/10/climate-council-decries-massive-adani-mine-as-the-great-barrier_a_22033625/