Wednesday, January 19, 2022
முகப்பு சமூகம் வாழ்க்கை தண்ணீர் இல்லாமல் துவைக்கிறார்கள் நெருப்பு மேடு மக்கள்

தண்ணீர் இல்லாமல் துவைக்கிறார்கள் நெருப்பு மேடு மக்கள்

-

“சொர்க்கம் – நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார்” – என்றார் 75 வயது மதிக்கத்தக்க பெரியவர்.

சென்னை – சைதாப்பேட்டை ஐந்துவிளக்குப் பகுதியில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள எளிய மக்கள் வாழும் நெருக்கமான குடியிருப்புப் பகுதி நெருப்புமேடு. மாலை 5 மணி இருக்கும். பத்து பதினைந்து குழந்தைகள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அரைத் துணியோடும் அம்மனக்குண்டியோடும் ஓடித்திரியும் அந்த அழகைப் பார்க்கும்போது பலருக்கும் சொந்த கிராமத்தை நினைவூட்டுவது உறுதி.

வயதான ஒரு பெரியம்மா வாசலில் உட்கார்ந்து துணி துவைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு பக்கெட்டில் பாதியளவு தண்ணீர். அதுவும் கண்ணங்கரேலென நிறத்தில். சுற்றிலும் அழுக்கு துணி மூட்டை சிதறிக் கிடக்கிறது. அவரது எண்ணமும் எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்த்து போலும்! “என்னம்மா இது… தண்ணியே இல்லாம துணி தொவைச்சிகிட்டிருக்கீங்க?” – என்றதும் திடுக்கிட்டு திரும்பினார்.

நிதானத்துடன் “என்னப்பா செய்யிறது? வீட்டுக்கார்ரு செத்து நாளாச்சு. ஒரே ஒரு பொண்ணு. அத கட்டிக் கொடுத்தாச்சு. காசி தியேட்டருக்கு பக்கத்துல திடீர் நகருலதான் குடியிருக்காங்க. எப்பவாவது வந்தா உதவியா இருக்கும். இப்ப நான் தனியாத்தான் இருக்கேன். ஓட்டல்ல பாத்திரம் தேச்சி வயித்த கழுவிக்கிட்டிருக்கேன். வீட்டுக்கு வந்ததும் தண்ணிப்பாடு பெரும்பாடா இருக்கு. வயசான காலத்துல க்யூவுல நின்னு தண்ணி புடிக்க முடியல. ஏதோ என்னால முடிஞ்சளவுக்கு நாலு கொடம் தண்ணி புடிச்சி அதுலதான் நாள கடத்திகிட்டிருக்கேன்” – என்றார் சோகத்துடன்.

  • “சார், எங்க வீட்டுல 6 பேர் இருக்கோம். கொறஞ்சது எங்க வீட்டுக்கு 20 கொடம் தண்ணி தேவைப்படுது. மெட்ரோ வாட்டர் தண்ணி ஒரு நாள் விட்டு ஒரு நாள் லாரில கொண்டுவந்து விடுறாங்க. ஒரு குடும்பத்துக்கு 6 கொடம்தான். அதையும் குடிக்க முடியாது. இங்கே பாருங்க சார் – என்று டிரம்மிலுள்ள சேறு போன்ற தண்ணீரை காட்டுகிறார்.

எங்களால என்ன செய்ய முடியும் சொல்லுங்க? குடிக்க கேன் தண்ணிதான் வாங்கிக்கிறோம். பொழங்குறதுக்கு இந்த 6 கொடமும் போதாது, அதனால் சைக்கிள்ல கொடத்த எடுத்துகிட்டு கிண்டிக்கு போயிடுவோம். ஏன்னா கெவர்னர் மாளிகைக்கு தண்ணி போர ரூட்டு. அந்த லைன்ல பெரிய பெரிய அதிகாரிங்க இருக்குறதுனால அங்கே எப்போதுமே தண்ணி வரும். எங்களுக்கும் வீட்டுக்கு வீடு பம்ப் இருக்கு. தண்ணி வரி கட்டுறோம். ஆனா தண்ணி மட்டும் வராது என வெதும்புகிறார், தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் விஜயகுமார்.

  • கருகிய ஆட்டுக்கால்கள் குவிந்து கிடந்தன. பெரியவர், மனைவி, மகள், பேரக்குழந்தைகளுடன் – குடும்பமே ஆட்டுக்கால்களை பொசுக்கி, அவற்றை தண்ணீரில் அமிழ்த்தி தோலை நீக்கிக்கொண்டிருந்தனர்.

“அய்யா… நீங்க சூப் கடை வச்சிருக்கீங்களா?” – என்றதும், இல்ல சார். வெளி ஊருங்கலேர்ந்து கால்களை வாங்கி வந்து காண்ட்ராக்ட்காரங்க கொடுப்பாங்க. அத பொசுக்கி, தோலை எடுத்துட்டு திரும்ப அவங்களுக்கே கொடுப்போம். கூலி தருவாங்க. அதுதான் சார் எங்க வேலை. எங்கள மாதிரி பல குடும்பங்கள் இத செய்யிறாங்க – என்றார்.

“இத வச்சி குடும்பத்த ஓட்ட முடியுதா?”

“நான் கசாயி (கசாப்பு கடை) வேலை செய்யிறேன். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், ஆட்டுக்கால் பொசுக்கும் வேலையை செய்வோம். எங்கே சார் இப்ப அதுக்கும் நேரமே கெடக்கலே. இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவும் பொண்ணும் கொடத்து எடுத்துகிட்டு கௌம்பிடுவாங்க. தண்ணிக்கா அலையவேண்டியதாயிருக்கு. சொர்க்கம் – நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார். ஒரு குடும்பத்துக்கு 6 கொடம் விடுறாங்க. அத வெச்சிகிட்டு என்ன செய்ய முடியும்?  இன்னும் சொச்ச நாளைக்கு என்ன செய்யப்போறோமுன்னே தெரியல.” – என்றார்.

  • மாலை மங்கியது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் – பெண்கள் என அனைவரும் பரபரப்பாகக் காணப்பட்டார்கள். வீட்டிற்குள் செல்வதும், வெளியில் வருவதும், பொருள்களை ஒழுங்குபடுத்துவதுமாய் இருந்தார்கள். துவைத்த துணிமணிகளை அலசி சுவற்றில் குவிக்கிறார்கள். ஆட்டுக்காலை பொசுக்கிக் அதன் தோலை நீவிக்கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களது வேலைகளை வேகமாக முடித்துக்கொண்டிருக்கிறார்கள். வேலைக்குச் சென்ற பெண்கள், இளைஞர்கள் வேகமாக வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“டேய் முத்து… ஏ… ராமய்யா….” – என்று வெளியில் திரியும் தங்களது பிள்ளைகளை அழைக்கிறார்கள். பதினைந்து இருபது நிமிடத்திற்குள் எல்லோர் வீட்டு முன்பும், அண்டா குண்டாவிலிருந்து சிறிய பாத்திரங்கள் வரை வாசலில் குவிந்துவிட்டன. ஒரு போருக்கான சூழல் அங்கு நிலவியது. ஆம், தண்ணீர் லாரி வரப்போகிறது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் வரலாம்; இரண்டு நாட்கள்கூட ஆகலாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

  • வினவு செய்தியாளர்கள்
  1. மூன்றாம் உலகப்போருக்கான அறிகுறி தெரிகிறது….
    சமகாலத்தில் போரை பார்க்காத குறையைநிவர்த்தி செய்கிறது சென்னை வாசிகளின் வாழ்க்கை…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க