Thursday, December 12, 2024
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்விவசாயியை வாழ விடு ! தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு !!

விவசாயியை வாழ விடு ! தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு !!

-

விவசாயியை வாழ விடு! – கருத்தரங்கம் – மாநாடு

நாள் : ஆகஸ்ட் – 5, 2017. சனி ,
இடம் : திருவள்ளுவர் திடல், தஞ்சை

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே!

வாழ்வதா சாவதா என்று தத்தளிக்கிறார்கள், டெல்டா விவசாயிகள். பிற பகுதி விவசாயிகளும்  அதேநிலைக்கு வேகமாகத் தள்ளப்படுகிறார்கள். இதைக் கண்டும் காணாமல் யாரும் இருந்துவிடமுடியுமா? விவசாயத்தின் அழிவு, மொத்த சமூகத்தின் பேரழிவு. இதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த அழிவை, இனியும் நாம் சகித்துக்கொள்ளலாமா?

விவசாயியின் சாவுக்கும் விவசாயத்தின் அழிவுக்கும் அவர்களின் தலைவிதியின் மீதோ, அறியாமையின் மீதோ,  இயற்கையின் மீதோ சிலர் பழிபோடுவது கொஞ்சமும் நியாயமில்லை. விவசாயியின் கோவணத்தையும் உருவிக்கொண்டு, உயிரையும் பறிப்பதற்கு வரிசைகட்டி நிற்கும் எதிரிகளைப் பட்டியலிட்டுப் பாருங்கள். விவசாயிகளின் எதிரிகள் அனைத்து மக்களின் எதிரிகளாக நிற்கிறார்கள்.

காவிரியில், முல்லைப்பெரியாறில் நமது உரிமையை மறுப்பவர்கள்; நமது ஆறுகளின் மணலைக் கொள்ளையடித்தும், கழிவுகளைக்கொட்டியும், ஏரி-குளம்-கண்மாய்ளை ஆக்கிரமித்தும் காடுகளை அழித்தும் நீர்நிலைகளை நாசமடையச் செய்தவர்கள். நமது உரிமைகளையும் இயற்கை வளங்களையும் காத்திடத்  தவறியதோடு, அவற்றை காத்திடப் போராடும் மக்களை மத்திய-மாநில அரசியல்வாதிகள் முதல் பொதுப் பணித்துறை, பாசனத்துறை, வனத்துறை நிர்வாக அதிகாரிகள், எல்லா மட்டப் போலீஸ் – நீதிமன்றங்கள் என அனைத்தும் ஒடுக்குகிறது.

அரசுடைமை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் முதல் கந்துவட்டிக்காரர்கள் வரை எல்லோருமே ஏதோ பிழைத்துப்போகட்டும் என்று விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து உதவி செய்யவில்லை. ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் ஒருபோதும் அழுவதில்லை. டிராக்டர்கள் முதல் விதை, உரம், பூச்சி மருந்து அறுவடை இயந்திரங்கள் வரை வியாபாரமாகவும் வட்டியாகவும், விளைபொருளாகவும் கொள்ளையடிக்கவே கூவிக்கூவிக் கடன் கொடுக்கிறார்கள். அந்திய நாட்டுப் மூலதனத்தை அதிகவட்டிக்குக் கொடுத்து முழுமையாக வசூலிக்கமுடியாமல் போனால்கூட அவர்களுக்கு நட்டமில்லை. வியாபார இலாபத்தோடு வட்டிகிடைக்கும்வரை ஆதாயம்தான். ஆகவே கடன்காரர்கள் யாரானாலும் விவசாயிகளுக்கு எமனாக நிற்கிறார்கள்.

என்ன பயிரிட வேண்டும்? எப்படி பயிரிட வேண்டும்? என்று வேளாண் பல்கலை முதல் வேளாண் துறை அதிகாரிகள் வரை சொன்ன அறிவுரைகளைத்தான்  விவசாயிகள் அமுல்படுத்தினார்கள் பசுமைபுரட்சி அதிக விளைச்சல் தரும் என்று ரசாயண உரம் போட்டு மண்ணை நாசமாக்கினார்கள். பாராம்பரிய விதைகளை அழித்தார்கள். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் நீர்நிலைகளை பராமரித்து தூர்வாராமல் சீர்குலைத்தார்கள். விளை நிலங்களை ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றினார்கள். வரன்முறையற்று ஆற்று மணலை கொள்ளையடித்தார்கள். நிலத்தடி நீரை உறிஞ்சும் மரங்களைப் பயிரிடச் சொன்னார்கள். இவ்வாறு விவசாயத்தின் அழிவிற்கு காரணமான எந்த துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் தண்டிக்கப்படாத போது விவசாயி மட்டும் ஏன்  சாக வேண்டும்?

மோடி அரசு காவிரி நீர் உரிமையை மறுத்ததுடன் டெல்டா விவிசாயிகளை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன்,ஷேல் கேஸ் என அழிவுத்திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வருகிறது. வாழவிடு என விவசாயிகள் போராடினால் தேச துரோகி, பிரிவினைவாதி. நக்சலைட் என அவதூறு பேசுகிறது. போராடுபவர்களை கண்காணிக்கிறது, கைது செய் ஒடுக்குகிறது தமிழகப் போலீசு. கார்ப்பரேட் வளர்ச்சிக்கு தமிழர்களை தியாகம் செய்ய சொல்கிறது பி.ஜே.பி. அரசு.

120 கோடி இந்திய மக்களுக்கு எவ்வளவு உணவு தேவை. அதை எவ்வாறு உற்பத்தி செய்வது? என்ன விலை கொடுத்தால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும், என்ன விலைக்கு விற்றால் மக்கள் வாங்குவார்கள் என்ற மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டமும், கொள்கையும், அக்கறையும், மத்திய – மாநில அரசுகளிடம் இல்லை.

விவசாயிகளுக்கு தீர்வாக மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மூங்கில், பருத்தி பயிரிடுதல், எலுமிச்சையை ஊறுகாயாக மாற்றுதல், மாம்பழத்தை பழச்சாறாக்கிசந்தையில் போய் விற்பனை செய்தல் என புண்ணுக்கு புணுகு தடவும் ஆலோசனைகள்தான் முன் வைக்கப்படுகிறது.

இடு பொருள் மான்யம் ரத்து. விளைபொருளுக்கு ஆதார விலை இல்லை. தப்பிக்க வழி தெரியாமல், அரசும் கைவிட்ட நிலையில் விவசாயிகள் தற்கொலைக்கு செல்கின்றனர். ஊரில் இருந்தால் சிக்கி கொள்வோம் என இளைய தலைமுறை கிராமத்தை விட்டு ஓடுகிறது. நாடு முழுவதும் கடந்த 16 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் 47 விவசாயிகள் சாகிறார்கள். விவசாயிகளை சாகடிக்காதே என டெல்லியில் தமிழக விவசாயிகள் கதறினார்கள். நாடே பதறியது. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என வாக்குறுதி கொடுத்த மோடிக்கு அவர்களைப் பார்க்கவும் மனமில்லை. அவரது கட்சியோ விவசாயிகள் போராட்டத்தை கொச்சைபடுத்தியது. மத்திய, மாநில அரசுகளோ நா கூசாமல் புளுகுகின்றன.

அம்பானி அதானிகளுக்கு, மல்லையாவுக்கு ஏழு லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மத்திய அரசு. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் மொத்த வாராக்கடனில் விவசாயிகள் வாங்கிய கடன் 1% மட்டுமே. ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளின் வாராக்கடன் சுமார் 70%. பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் தொகை வெறும் மூன்று சதவீதம்தான். அதிலும் 75 சதவீதம் வேளான் துறை நிறுவனங்களுக்குதான் செல்கிறது. விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

இந்தியத் தரகு முதலாளிகள் சங்கம் 2025ஆம் ஆண்டுக்குள் தமிழகம் என்ற அறிக்கையில் நாட்டை 75% நகரமயமாக்க வேண்டும்; கிராமபுற மக்களை அதிவேகமாக வெளியேற்ற வேண்டும் என கூறுகிறது. அப்போதுதான் அடிமாட்டு கூலிக்கு ஆள் கிடைப்பார்கள். மலிவு விலையில் நிலம் கிடைக்கும்.

குஜராத்தில் தேசாய் பார்தி என்ற நிறுவனம் 7000 ஏக்கரில் மாம்பழம் வாழை சாகுபடி செய்கிறது. மெக்னொல்ட் என்ற நிறுவனம் பல ஆயிரம் ஏக்கரில் உருளை கிழங்கு பயிரிடுகிறது. ஏ.சி.ஐ.எல். பருத்தி பயிரிடுகிறது. ஜெயின் என்ற சொட்டு நீர்பாசன நிறுவனம், வெங்காய உற்பத்தி செய்கிறது. இவ்வாறு ஒற்றை பயிர் சாகுபடியால் மண்வளம் சூறையாடபட்டு, நீர்வளம் அழிந்து போகும். இதேபோல் நாடு முழுவதும் உலக வங்கி உத்திரவை, காட் ஒப்பந்தத்தை அமல் படுத்துவதுதான் மத்திய அரசின் விவசாயக்கொள்கை. ரேசன் கடை, இலவச கல்வி, அரசு மருத்துவமனை, விவசாயம் ஆகியவற்றிற்கு ஒதுக்கும் மான்யத்தை ரத்து செய்து மொத்த மக்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சந்தையில் தள்ளி நம்மை பணைய கைதியாக மாற்றியிருக்கிறது மத்திய அரசின் கொள்கை.

விவசாயம் என்பது இயற்கை பொருளாதாரம், சுய தேவைக்கான உற்பத்தி என விவசாயிகள் தனக்குள் சுருங்கி பார்க்க கூடாது. மழை பெய்தால், கடன் தள்ளுபடி கிடைத்தால் தீர்வு கிடைக்கும் என்ற சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். விவசாயம், தொழில் என அனைத்தையும் அரசே கட்டுப்படுத்தும் வகையில், கார்ப்பரேட் நலன்களுக்காகவே யோசிக்கும் அரசியல் பொருளாதாரமாக விவசாய பொருளாதாரத்தை மாற்றிவிட்டது, அரசு.

‘மக்கள் நல அரசு’ என்பது கைவிடப்பட்டதுடன், மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வளிக்க முடியாமல் ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் ஊழலுடன் கிரிமினல்மயமாக மாறி நிற்கிறது. மக்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்ளட்டும் அவர்கள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தை வங்கியில் போட வைத்து வட்டி, வரி வசூலிக்கலாம் என்ற காலனிய கொள்கைதான் இன்று அமல்படுத்த படுகிறது. அனைவருக்கும் வேலை என்பதை கேள்விகுறியாக்கி தீர்வு காணமுடியாத அரசு, தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க என்ன அருகதை இருக்கிறது?

விவசாயிகள் சிலந்தி வலையில் ஈ -யாக சிக்கித் தவிக்கிறார்கள். சிலந்தியிடமே கோரிக்கை வைக்க முடியுமா? அதன் பிடியிலிருந்து அறுத்த கொண்டு வெளியேறினால்தான் விடிவு பிறக்கும். விவசாயிகள் செத்தால் என்ன நட்டம்? என்பதுதான் மோடி அரசின் கொள்கை.

இரக்கமற்ற பேயாக மாறிய இந்த அரசிடம் வாழவிடு என கெஞ்சி பயினில்லை. விவசாயிகள் வாழ்வை தீர்மானிக்கும் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். செய் அல்லது செத்துமடி என ஆள்பவர்களை எச்சரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல. போராடும் அனைத்து பிரிவு மக்களுக்கும் இதுதான் தீர்வு.

விவசாயிகள் மற்றும் நாட்டுமக்களின் நலன்களுக்கானதாக விவசாய உற்பத்தியை விரிந்த பார்வையுடன் அணுக வேண்டும். உணவு உற்பத்தியில் சுயசார்பு. தன்னிறைவு. அனைவருக்கும் வேலை உத்திரவாதம். சுற்று சூழல் பாதுகாப்பு, இறையாண்மை உடைய விவசாயம் என்ற மாற்று தீர்வை உருவாக்க வேண்டும். அதற்கு மக்களுக்கே அதிகாரம் வேண்டும்.

விவசாயத்தின் அழிவு, மொத்த சமூகத்தின் பேரழிவு. அனைத்து மக்களும் ஒன்று திரளுவோம் . விவசாயியை வாழ விடு… என்ற குரல் ஓங்கட்டும்,

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம் – 91768 01656.

  1. மாநாடு தேதி மாற்றி அமைத்தால் பாட்டதாரி இளைஞர்கள் கலந்து கொள்ள முடியும். மறு நாள் (6-05-17) TNPSC Exam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க